மூன்று... நான்கு வருடங்களுக்குமுன்பு...

ஒருநாள் காலையில் கோழிக்கோட்டிலிருந்து "பாறை' அழைத்துக் கூறினான்:

"நம்ம ஆவணப் படத்தோட "பேப்பர் ஒர்க்' முழுசா முடிஞ்சிடுச்சு.இங்க எல்லாரும் ரொம்ப உற்சாகத்தோட இருக்கோம். சில பகுதிகளை கண்ணூர்ல படமாக்கலாம். மீதியை... இங்க... ஸ்டுடியோவில. கண்ணூர்ல கடலுக்கருகில நின்னுக்கிட்டிருக்கும் ஒரு ரிஸார்ட் இருக்கில்லியா? ரொம்ப புகழ்பெற்ற ஒண்ணு... திரையுலகைச் சேர்ந்தவங்க வந்தா தங்கக்கூடிய ஒண்ணு... ஒருமுறை நான் அங்க போயிருக்கேன். மிகச் சிறந்த அனுபவமா இருந்தது. உங்ககிட்ட அதைப் பத்தி கூறவேண்டிய அவசியமில்லைங் கறது தெரியும். இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நாங்க அங்க வருவோம். என்னோட நாலு ஆளுங்களாவது இருப்பாங்க. நீங்க ரிஸார்ட்டோட மேனேஜரையோ அல்லது உரிமையாளரையோ பார்த்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும். உங்களுக்கு அவங்களைத் தெரிஞ்சிருக்குமில்லியா..?''

ஆனால், உண்மையிலேயே எனக்கு அவர்களை சிறிதும் தெரியாது. ஆனால், அந்த ரிஸார்ட்டைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா என்று கேட்டால், பார்த்திருக்கிறேன். கடற்கரைக்குச் செல்லும்போது, சாலையோரத்தில், நீளமாக கடலையொட்டி நின்றுகொண்டிருக்கும் மிகவும் அழகான ஒரு கட்டடம்! பிறகு... ரிஸார்ட்டைப் பற்றியும் அதன் நிர்வாகத்தைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

Advertisment

அனைத்தும் மிகவும் நல்லவையாகவே இருந்தன.

அங்குள்ள அருமையான உணவு... மிகச்சிறந்த சேவை... பிறகு... மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய அங்குள்ள சிறப்பு "ஆம்பியன்ஸ்...' ஆனால், ஒரு குற்றமும்... அது குற்றமாக இருந்தால்... ஆட்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

அங்கிருக்கும் உயர்ந்த "கட்டணம்'..! ஆனால் இன்றைய காலத்தில் இதையொரு குற்றமென கூறுவதற்கில்லையே! உயர்வான சுக சௌகர்யங்கள் வேண்டுமெனில், இயல்பாகவே காசை சற்று அதிகமாக செலவழிக்க வேண்டுமே!

Advertisment

ரிஸார்ட்டின் உரிமையாளரான பாஸ்கரனை இங்கு நடைபெற்ற ஓரிரண்டு பொது நிகழ்ச்சிகளில் நான் பார்த்திருக்கிறேன்.

ஒன்று... டவுன்ஹாலில். தொழில் துறையில் உண்டாக்கிய சாதனைகளைக் கணக்கிட்டு இந்திய அரசாங்கம் அளிக்கக்கூடிய ஒரு பெரிய விருது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அவரைப் பாராட்டுவதற்காக இங்கிருக்கும் பல அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்வு... நானும் மேடையில் இருந்தேன். அவரிடமிருந்து தூரத்தில் அல்ல நான் அமர்ந்திருந்தது. எனினும், அவருடன் அறிமுகமாக வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை. ஆட்களை அகற்றி நிறுத்தக்கூடிய ஏதோவொன்று.... ஆணவமோ திமிரோ... எதுவுமல்ல... அவரிடம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அவர் கம்பீரமான உடலமைப்பைக் கொண்டிருந்தார். குறையென்று எதுவுமே கூற இயலாத வகையில்.... அறியாமலே நான் ஆசானின் வரிகளை மனதிற்குள் உச்சரித்தேன்...

"உன்னதன்... சாந்த கம்பீர தர்ஸனன்...'

"இன்ஸெர்ட்' செய்து... சந்தன நிறத்திலிருந்த அரைக்கை சட்டையையும் வெண்ணிற பேன்ட்டும்... பிறகு... பளபளத்துக்கொண்டிருக்கும் கருப்புநிற ஷூக்களும்...

மைக்கிற்கு முன்னால் அவர் நெஞ்சை நிமிரித்தி நின்றிருந்தபோது, நான் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன்... மனதிற்குள் கூறிக்கொள்ளவும் செய்தேன்: "இப்படி இருக்கணும்...'

ஆனால், பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் அடுத்து வந்ததுதான்...

ஆங்கிலத்திலிருந்த அவருடைய சொற்பொழிவு... அது ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அருமையாகவும் சுருதி சுத்தமாகவும் இருந்தது.

பிறகு... விஷயங்களை ஒழுங்குடனும் நேர்த்தி யுடனும் கூறுவதில் அவர் காட்டிய திறமை...

அந்த அளவுக்கு கல்வித் தகுதிகள் எதுவுமற்ற ஒரு கிராமப் பகுதி மனிதரிடமிருந்து... முற்றிலும் ஆச்சரியப்படக்கூடிய விஷயமாகவே இருந்தது...

இவ்வாறு ஒவ்வொன்றையும் சிந்தித்தவாறு அமர்ந்திருந்துவிட்டு... இறுதியில் நான் தீர்மானித் தேன்: என்னை நானே அறிமுகப்படுத்திக்கொண்டு, நானே ரிஸார்ட்டின் மேனேஜரிடம் கூறவேண்டியது தான்... அப்படியில்லாமல்....

ஆனால், அப்போதுதான் ஒரு பெயர் மின்னலைப்போல மனதில் தோன்றி மறைந்தது.

சோமன்....

சோமன்- என் மருமகன்... ரோட்டரி கவர்னர்...

ஹேண்ட்லூம் ஏற்றுமதி செய்பவன்...

அவன் பழகுவது சமூகத்தில் இப்படிப்பட்ட ஆட்களுடன்தான் என்றிருக்கலாமே! நிச்சயமாக அவனுக்கு அறிமுகமில்லாமலிருக்க வாய்ப்பில்லை.

சோமனிடம் கூறியபோது, அவன் கூறினான்:

"எனக்குத் தெரியும். ஆனா அந்த அளவுக்கு நெருக்கமான பழக்கமில்லை. பிறகு... கடந்த சிறிது காலமாவே அவர் அனைத்து வர்த்தகங்களிலிருந்தும் விலகி, ஒரு வகையான ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்துகிட்டிருக்காரு. குறிப்பா... மனைவியோட மரணத்திற்குப்பிறகு... இப்போது செய்யுற ஒரே விஷயம்... எல்லா சாயங்கால நேரங்கள்லயும் ரிஸார்ட்டோட புல்வெளியில ஒரு குறிப்பிட்ட இடத்தில வந்து உட்கார்ந்து... அப்போ வெயில் முழுமையா மறைஞ்சிருக்காது. புல்வெளி காலியாவும் இருக்கும். அங்க அவருக்குன்னு ஒரு நாற்காலியும் மேஜையும் இருக்கு. அங்க உட்கார்ந்து கடலைப் பார்த்துக்கிட்டு... மேஜைமேலிருக்குற காப்பியையும் வெஜிட்டபிள் சேண்ட்விச்சையும் எப்போதாவது சுவைத்துக்கொண்டு... சூரியன் மறையுறவரை...

ஒரு "பெக்கூலியர்' மனிதர்..! இப்போ அவர் வர்த்தக விஷயங்களிலிருந்து முழுமையா விலகி, ஓய்வு வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்காருன்று சொன்னேன் இல்லியா? இருந்தாலும், ரிஸார்ட்டின்மேல அவருக்கு ஒரு தனி ஈடுபாடு எப்பவும் இருந்தது. அவர் வாழ்க்கையோட முதல் வெற்றி ஆரம்பமானது இங்கதான்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆரம்பிச்சப்போ, அதுக்கு இன்னிக்கு இருக்குற பரப்பளவோ புகழோ எதுவுமே இல்லை. கொஞ்சம்... கொஞ்சமா வளர்ச்சி உண்டானது.

இந்தியாவிலும் வெளியிலும் இருக்கக்கூடிய "ஸீ ஸைட் ரிஸார்ட்'களையெல்லாம் போய் பார்த்து, அங்கிருக்கற நல்ல விஷயங்களை உள்வாங்கிக்கிட்டு... இந்த ஆத்ம பந்தம்தான் காரணமா இருக்கணும்... எல்லா சாயங்கால வேளைகள்லயும் அங்கிருக்குற புல்வெளியில போய் உட்கார்ந்து வெயிலை வாங்கிக்கிட்டு....

இப்போ காரியங்களைப் பார்த்துக்கிறது... மூத்த மகன் சந்திரன்... ரிஸார்ட்டைத் தவிர. ரிஸார்ட்டை இரண்டாவது மகன் நடத்துகிறான்.

சந்திரனை எனக்கு நல்லா தெரியும். தந்தையைப்போலவே ரொம்ப நல்லவன். ஏற்றுமதியையும் மற்ற வர்த்தக விஷயங்களையும் மட்டுமில்ல... பாஸ்கரன் உண்டாக்கி வச்சிருக்கற அறக்கட்டளையையும் நடத்தி வர்றது சந்திரன்தான். அறக்கட்டளைன்னு சொல்றப்போ... பெரிய ஆரவாரமோ கொண்டாட்டமோ... எதுவுமே இல்லாம....

இவங்க உதவியால எவ்வளவு ஏழை மாணவர்கள் மேற்படிப்பை முடிச்சிருக்காங்கன்னு தெரியுமா?

அதேபோல நுழைஞ்சு படுக்க ஒரு கூரையில்லாத... ஒரு நேர பசியை அடக்க வழியில்லாத... ஒரு வேலையும் இல்லாத....''

சோமன் கூறிக்கொண்டிருக்க, நான் அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவையனைத் தும் எனக்குப் புதிய தகவல்களாக இருந்தன.

இறுதியாக சோமன் இதையும்கூட கூறினான்:

"நீங்க அவரோட ஆங்கிலத்தைப் பத்தி சொன்னீங் கள்ல... சிரமப்பட்டு பத்தாவது வகுப்புவரை மட்டுமே படிச்ச ஆள் என்பதை நினைச்சுப் பார்க்கணும். எல்லாமே சுய உழைப்பால சம்பாதிச்சவை... பணம் மட்டுமில்ல. அறிவும்... இங்க எத்தனையோ தொழிலதிபருங்க வெளிநாடுகளுக்குப் பயணம் செஞ்சிருக்காங்க. அவங்க செய்யவேண்டிய காரியங்களைச் செய்றாங்க.

இடங்களைப் பார்க்குறாங்க. பிறகு... சில சந்தோஷங்களை அனுபவிக்கிறாங்க. திரும்பி வர்றாங்க. ஆனால், பாஸ்கரனோட வெளிநாட்டுப் பயணங்கள் எல்லாமே அறிவைப் பெறுவதற்காகவும்கூட. இப்படிப்பட்ட ஒரு மனிதர் இப்போ நமக்கு மத்தியில இருக்கிறார்ங்கறதே...

பிறகு... நீங்க சொன்ன விஷயம்... ஒரு பிரச்சினையும் இருக்காது. எல்லா வசதிகளையும் அவங்கள செஞ்சு தருவாங்க. நான் இப்பவே சந்திரனோட பேசுறேன். தம்பிக்கிட்டயும் பேசுறேன்.''

எனக்கு நிம்மதி உண்டானது. நான் "பாறை'யிடம் விவரத்தைக் கூறவும் செய்தேன்.

ஞாயிற்றுக்கிழமை பகல்.

ஸீ ஸைட் ரிஸார்ட்டின் விசாலமான ஸூட்டில் நாங்கள் அனைவரும் இருந்தோம். ராமசந்திரன், நான், "பாறை', புகைப்படக் கலைஞர்கள், ஸ்க்ரிப்ட் ரைட்டர்- அனைவரும். புகைப்படக் கலைஞர்கள் ரிஸார்ட்டின் அழகான காட்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக- நீச்சல் குளத்தைப்பற்றி... குளத்திற்குப் பின்னால் பழங்களைக்கொண்ட மரங்கள்... நீச்சல் குளத்திலிருந்து சற்று தூரத்திலிருந்த பாறைகள்.... பாறைகளை எப்போதும் முத்தமிட்டுக்கொண்டிருக்கும் கடல்... இவையனைத்தும். காட்சியில் சேர்ந்து வரும் போது...

dd

ஆனால், நாங்கள் பேசிக்கொண்டிருந்தது மதிய உணவைப் பற்றி... அதன் தரத்தைப் பற்றி... மிகவும் அதிகமாகப் பேசியது "பாறை'தான்.

ஆனால், அப்போது நான் நினைத்துப் பார்த்தது "பாறை'யின் மனைவியைப் பற்றிதான். அவளுடைய கையால் தயாரிக்கப்பட்ட உணவை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சாப்பிடக்கூடிய அதிர்ஷ்டம் ராமச்சந்திரனுக்கும் எனக்கும் கிடைத்திருக்கிறது.

அப்போதெல்லாம் மிகுந்த நாடகத்தனத்துடன் நான் அவளிடம் கூறவும் செய்திருக்கிறேன்:

"ஸைபுன்னீஸே... ராஜகுமரியே... உங்களுடைய இந்த கைத்திறமைக்கு முன்னால் நான் தலை வணங்குகிறேன்.''

இந்த ஸைபு உண்டாக்கிய உணவை தினந்தோறும் சாப்பிடக்கூடிய ஆள்தான் இங்கு... இந்த ரிஸார்ட் டின் செம்மீனின்... அயக்கூறாவின் ருசியின் சிறப்பைப் பற்றி கூறி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பது...

ஆனால், நான் சிந்தித்துக்கொண்டிருந்தது அவியலையும் பாலடை பாயசத்தைப் பற்றியும் தான். பொதுவாகவே புளிரசத்தை எனக்குப் பிடிக்காது. அந்த நான்தான் அங்கு தயாரிக்கப்பட்ட அவியலை மனம் நிறைய, சந்தோஷத்துடன் சாப்பிட்டிருக்கிறேன். பாலடை பாயசமும் மிகவும் அருமையாக இருந்தது.

வெயில் மறைவதற்குமுன்பே நாங்கள் புறப் பட்டோம். தன்னுடைய வழக்கமான இடத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரின் ஓரத்தின் வழியாகத்தான் நீச்சல்குளம் இருக்கக்கூடிய இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். நாங்கள் கடந்துசெல்லும்போது, அவர் மெலிதாக சிரிக்கவும்... மிகவும் மெதுவாக..

அதேநேரத்தில்... எங்களுக்குத் தெளிவாகக் கேட்கக் கூடிய வகையில் கூறவும் செய்தார்:

"எல்லா வசதிங்களையும் செஞ்சுதருமாறு குறிப்பிட்டு சொல்லியிருக்கேன். எந்தவொரு பிரச்சினையும் இருக்காது.''

இது முற்றிலும் உண்மை. நீச்சல்குளப் பகுதியில் நாங்கள் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் எங்களு டைய தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கு ரிஸார்ட்டின் பணியாட்கள் மிகுந்த கடமையுணர்வுடன் நின்றிருந்தார்கள்.

இருட்டு விழ ஆரம்பிப்பதற்குமுன்பே நாங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பி வந்தோம்.

கடலுக்கு மேலே... ஆகாயத்தின் ஒரு மூலையில் ஒரு நட்சத்திரம்... ஒரேயொரு நட்சத்திரம். எங்களுக்கு வழிகாட்டித் தருவதைப்போல ஒளிர்ந்து நின்றுகொண்டிருந்தது. எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். குறிப்பாக... "பாறை'.

வரவேற்பு கவுன்டருக்கு முன்னால் சென்றபோது, "பாறை' கூறினான்:

"நீங்க இங்கயே நில்லுங்க. நான் போய் கணக்கை சரிபண்ணிட்டு வந்திடுறேன்.''

ஆனால், போன வேகத்திலேயே "பாறை' திரும்பிவரவும் செய்தான்.

"பாறை'யின் முகத்தில் பரபரப்பும் ஆச்சரியமும் சந்தோஷமும்... இவையனைத்தும் சேர்ந்து கலந்த ஒரு உணர்ச்சி தெரிந்தது.

"பாறை' கூறினான்:

"அவங்க பணத்தை வாங்கிக்கல.''

அப்போது நான் பார்த்தேன்- "பாறை'க்குப் பின்னால் ஒரு இளைஞன் கடமை உணர்வுடன் வந்துகொண்டிருந்தான். அது... சந்திரனின் தம்பி... பாஸ்கரனின் இரண்டாவது மகன்.

சந்திரனின் தம்பி எனக்கருகில் வந்து ஒரு மன்னிப்பு கேட்டலைப்போல கூறினான்:

"மன்னிக்கணும், சார். எனக்கு திடீர்னு சென்னைக் குப் போகவேண்டிய சூழல் உண்டாயிடுச்சு. அதனால் தான் உங்களையெல்லாம் நேர்ல வந்து வரவேற்க முடியாம போச்சு. நான் இங்க வந்துசேர்ந்து சில நிமிஷங்களே ஆகியிருக்கு. எல்லா ஏற்பாடுகளையும் செய்திட்டுத்தான் நான் போனேன். சோமன் அண்ணனும் தனிப்பட்ட முறையில சொல்லியிருந்தார் இல்லியா? உங்களுக்கு இங்க சிரமங்கள் எதுவும் உண்டாகியிருக்காதுன்னு நான் நினைக் கிறேன்...''

அப்போது இடையே புகுந்து "பாறை' காசு விஷயத்தைப் பற்றிக் கூறினான்.

இளைஞன் அப்போது கூறினான்:

"இல்ல சார்... இல்ல... அப்பா குறிப்பிட்டு சொல்லியிருக்கார். அதை கம்பெனியின் கணக்குல எழுதிக்கிட்டா போதும்னு...''

இவ்வாறு கூறிவிட்டு திரும்பி நடந்த அவன் சில அடிகள் போய்விட்டு, ஒரு இரண்டாவது சிந்தனை என்பதைப்போல திரும்பிவந்து "பாறை'யிடம் மிகுந்த பணிவுடன் கூறினான்:

"சார்... இனிமேலும் நீங்க வரணும். இந்த ரிஸார்ட்டின் கதவுகள் உங்களுக்காக எப்பவும் திறந் திருக்கும்.''

நான் அப்போது அறியாமல் கூறிளேன்:

"இது என்ன இலக்கியமா?''

இளைஞன் கூறினான்:

"சார்... நீங்க இருந்த காரணத்தால... வந்திடுச்சு. தவறா இருந்தா மன்னிச்சிடுங்க.'' அவன் புன்னகைத்துக்கொண்டே சென்றான்.

எங்களால் யாருக்கும் சிரிக்க முடியவில்லை.

தொடர்ந்து நாங்களும் பிரிந்தோம்.

போகும்போது "பாறை' கூறினான்: "இப்போ... கோழிக்கோடுக்கு... நான் கூப்பிடுறேன்...''

நான் தலையை ஆட்டமட்டும் செய்தேன்.

பொதுவாகவே எப்படிப்பட்ட கூட்டத்திலும் வேகமாக ஆட்டோ ஓட்டக்கூடிய ராமச்சந்திரன் அன்று மிகவும் மெதுவாகவே ஓட்டினான். அவன் எதுவும் பேசவில்லை.

இது... நான்கு வருடங்களுக்கு முன்னால் நடை பெற்றது.

இப்போது இவற்றையெல்லாம் எதற்காகக் கூறவேண்டுமென்று கேட்டால்....

இன்றைய பத்திரிகைகளில் அவரின் படங்கள் நிறைய வந்திருக்கின்றன. பிறகு... அவரை நெருக்கமாகத் தெரிந்தவர்களின் நினைவுக் குறிப்புகள்...

தகவல்கள்... இப்படி...

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அமர்ந்தி ருந்தபோது, நினைத்துப் பார்த்தேன்...

நமக்கெல்லாம் ஒரு பிறவிதானே இருக்கிறது...

அது...

_______________

மொழி பெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த் திற்காக மூன்று சிறந்த மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக் கிறேன்.

"பொம்மைக் கல்யாணம்' கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும்,

தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான உண்ணிகிருஷ்ணன் புதூர். சென்ற இதழில் நான் மொழிபெயர்த்த உண்ணி கிருஷ்ணன் புதூரின் "நட்சத்திரக் குழந்தை' கதையின் இன்னொரு பகுதிதான் இந்தக் கதை. பிறந்து எட்டு மாதங்களில் மரணத்தைத் தழுவிய தன் பிஞ்சு மகள் வேணுகாவை நினைவுகூர்ந்து உண்ணிகிருஷ்ணன் புதூர் எழுதியிருக்கும் கண்ணீர்க் கதை. இதை வாசிக்கும்போது, நம் இதயம் கனக்கும்... கண்கள் ஈரமாகும்.

"மாமனிதர்' என்னும் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தில் இளமை தவழும் கதைகளை எழுதுவதில் மன்னராக இருப்பவரும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான டி. பத்மநாபன். கடலையொட்டி இருக்கக்கூடிய ஒரு ரிஸார்ட்டையும், அதன் உரிமையாளரை யும், அவரின் மகன்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கதையை வாசித்து முடித்தபிறகும், நீச்சல் குளத்திற்குச் செல்லும் வழியில் கடலை ரசித்துக்கொண்டும், சாயங்கால வெயிலை சந்தோஷமாக வாங்கிக்கொண்டும் ஓய்வு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பாஸ்கரனின் புன்னகை ததும்பும் உருவம் நம் மனங்களில் நிரந்தரமாகத் தங்கி நிற்கும்.

"இறந்த சரீரங்கள்' என்னும் கதையை எழுதியவர் மலையாள பெண் எழுத்தாளர்களின் பேரரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. கலா ரசனை கொண்ட... நிர்வாண ஓவியங்களை வரையக்கூடிய... இப்போது தன் கணவரை இழந்து விதவையாக இருக்கும் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் நிறைந்த கதை... கதையின் ஒவ்வொரு வரியிலும் மாதவிக்குட்டியின் ஆழமான முத்திரையை நாம் உணரலாம்.

எனக்குப் பிடித்த முத்துக்கு நிகரான இந்த மூன்று கதைகளும் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்குமென்ற பலமான நம்பிக்கை எனக்கிருக்கிறது. மூன்று எழுத்தாளர்களின் படைப்புலகிற்குள் நுழைந்து, புதிய அனுபவங்களை அனைவரும் பெறுங்கள்.

"இனிய உதயம்' பிரசுரிக்கும் என் மொழிபெயர்ப்புப் படைப்பு களைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.

அன்புடன்,

-சுரா