ரிசோனாவில் அறுபது நாட்கள் மேற்கொண்ட பயணத்தில் உள்ளடங்கும் ஒரு நாளில் மணிப்பாறை மலை (Bell Rock Mountain) ஏற்றத்தை நிறைவு செய்துவிட்டு, உள்ளூர் சிறிய ரக விமானங்களின் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட செடோனாவின் மேசா விமான நிலையத்திலிருந்து மற்றும் பிற சிவப்புப் பாறை மலைகளைக் கண்டு ரசித்தோம்.

பிறகு அங்கிருந்து ஸ்பானியர்களின் கலைப் பொருள்கள் பார்வைக்காகவும் விற்பனைக் காகவும் வைக்கப்பட்டிருந்த கடைத் தொகுதிக்குச் சென்றோம். பல்வேறு வகையான கடல் சங்குகள், ஓவியங்கள், பழுதான இயந்திரங்களின் பகுதிப் பொருள்களைக் கொண்டு வடிவமைத்த சிலைகள், இயந்திரங்களே இல்லாமல் இயற்பியல் விதிகளை மையமாகக் கொண்டு நில்லாமல் இயங்கும் பொம்மைகள், ஸ்பானியர்களின் உணவகங்களென இன்னும் பலவும் அங்கிருந்தன?. அந்தி சாயும் நேரம் வரை இவை யாவற்றையும் பார்வையிட்ட பிறகு அடுத்த சாகசத்திற்கு தயாரானோம்.

சூரியன் முற்றிலும் மறைந்து இருள் கவ்விய நேரத்தில் 0*ஈ வெப்ப நிலைக்கு கீழே நிலவும் ஃபிளாக் ஸ்டாஃப் லோவல் வானாய்வகத்திற்கு (lowell observatory) செல்ல அதற்கேற்ற ஆடை ஆயத்தங்களுடன் கிளம்பினோம். கடல் மட்டத்திலிருந்து ஏழாயிரம் அடி உயரமுள்ள இவ்விடத்திற்கு (Flagstaff# lowell observatory) இரவு எட்டு மணியளவில் வந்தடைந்தோம். அது தனியாரால் அமைக்கப்பட்டு, கல்வி ஸ்தாபனமாக இயங்கிவருகின்ற, லாப நோக்கமற்ற, விண்ணை ஆராய்கின்ற தொலைநோக்கி மையமாகும்.

ss

இருண்ட வானின் ரகசியங்களை அறிந்து கொள்ள எளிய மனிதனுக்கும் ஆர்வம் இருக்குமென் றாலும் அதற்கான வசதிகளைப் பெறும் முயற்சியை எல்லோரும் மேற்கொள்வதில்லை. ஆர்வமிகுதியால் க்ளைட் டோம்பாக் என்பவர் 1928-ல் கான்சாஸ் எனுமிடத்தில் தனது குடும்பத்தின் பண்ணையில் ஒரு தொலைநோக்கியை உருவாக்கியிருக்கிறார். தான் கண்ட கிரக வரைபடங்களை லோவல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்து அவர்களது தேடலுக்கும் உதவியிருக்கிறார். தனது ஒரு வருட முயற்சியில் புளூட்டோவைக் கண்டுபிடித்த அவர் பின்னர் மறைந்துவிட்டார். அப்போது பெயரிடப்படாத புளூட்டோவின் இருப்பு உலகிற்கு அறிவிக்கப்படவில்லை.

பிறகு டோம்பாக் குடும்பத்தினர் இந்த தொலை நோக்கியை லோவல் ஆய்வகத்திற்கே கொடையாகக் கொடுத்துவிட்டார்கள்.

Advertisment

கண்ணால் காண்பதை புகைப்படம் எடுக்கும் முயற்சிக்கு இந்தத் தொலைநோக்கி போதுமானதாக இல்லையென்பதால் மீண்டுமொரு புதிய ஐந்து அங்குல பிரேஷியர் கருவி இந்த ஆய்வகத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. புதிய கிரகத்தின் முதல் தேடலுக்கு உதவிய தொலைநோக்கியின் கேமராவில் புகைப்படத் தகடுகளை வைத்து படங்களை பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த முயற்சியில் மிகக் குறைவான பணியாளர்களே இருந்திருக்கிறார் கள். அவர்களது உதவியாளர்களுக்கு மட்டுமே இத்தேடலின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. பெர்சிவல் லோவல் என்பவர், பிளானட் எக்ஸின் (planet-x)) நிலை மற்றும் சுற்றுப்பாதை இரண்டிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்து அவற்றை வெளியிட்ட ஓராண்டுக்குப் பிறகு அவரும் மறைந்துவிட்டார். பிறகு அவரது குடும்பத்தினரே பிளானட் எக்ஸின் (planet-x)தேடலை மீண்டும் தொடங்கினார்கள். புகைப்படம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் ப்ளூட்டோவின் இருப்பிடம் கணக்கிடப்பட்டது. கணினிகள் உருவாவதற்கு முந்தைய காலங்களில் பெர்சிவல் லோவலின் கணக்கீடுகள் யாவும் தாள்களில் எழுதி மனதில் கணக்கிடப்பட்டவை.

தொலைதூர நட்சத்திரங்கள் நிலையானதாக இருக்கும்பட்சத்தில், அவற்றை ஒப்பீடாகக் கொண்டு அருகிலுள்ள கிரகங்களைக் கவனித்தால் அவை நட்சத்திரங்களுக்கு எதிராக நகருகின்றன. பிப்ரவரி 18, 1930 அன்று டோம்பாக் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத் தகடுகளிலிருந்து இந்த நகர்வைக் கண்டடைந்து புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு உலகின் பல்வேறு விஞ்ஞானிகள் அதன் மீதான ஆராய்ச்சிகளை விரைந்து மேற்கொண்டார்கள். அது வால்மீனின் இயல்புகளை வெளிப்படுத்தவில்லை என்றும் சிறுகோள் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்கிற ஆய்விலும் இருந்ததால் எதனையும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. லோவல் ஆய்வகம் ப்ளூட்டோவை, லோவலின் பிளானட் எக்ஸ் (planet-x) என்று கருதியது. ஆனால் உலகின் பிற பகுதிகளில் இதுவொரு “புதிய வகையான கிரகம்” என்று நம்பினார்கள். மார்ச் 13, 1930 அன்று பெர்சிவல் லோவலின் 75 ஆவது பிறந்த நாளில் இந்தக் கண்டுபிடிப்புப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த உற்சாகம் உலகம் முழுவதும் பரவியதில் இந்தப் புதிய கிரகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வெனிசியா பர்னி என்ற சிறுமி புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அக்கிரகத்திற்கு ப்ளூட்டோ என்ற பெயரை பரிந்துரைத்தாள். அவளது உறவினர் இந்த ஆலோசனையை ஆக்ஸ்போர்ட் பேராசிரியருக்கு தந்திமூலம் அனுப்பிவைத்திருக்கிறார். அவர் அதனை லோவல் ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கி றார். பூமியைத் தவிர மற்ற அனைத்து கிரகங் களுக்கும் வரலாற்றுரீதியாக கடவுள்களின் பெயரே சூட்டப்பட்டிருக்கின்றன. பாதாள உலகத்தின் கடவுளாக ப்ளூட்டோ கருதப்படுவதால் இந்தப் பெயர் இப்படியான பாரம்பரியத்துடன் ஒத்துப் போகிறது. தொலைதூரத்திலுள்ள குளிரான பகுதி யில் இருக்கின்ற இந்த கிரகத்திற்கு ப்ளூட்டோ என்கிற பெயர் மிகச்சிறப்பாக பொருந்திவந்ததால் அப் பெயரையே புதிய கிரகத்திற்கு சூட்டியிருக்கி றார்கள்.

Advertisment

ப்ளூட்டோவை எவ்வாறு வகைப்படுத்துவது என்பதில் உலகளாவிய உடன்பாடு எதுவுமில்லை. இப்பொழுது ப்ளூட்டோ ஒரு கிரகம் என்கிற இடத்திலிருந்து ஒரு குள்ள கிரகமாக மறுவகைப் படுத்தப்பட்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டில் வானியலில் அதிகாரப்பூர்வமாக ஆளும் குழுவான சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU), கிரகம் என்பதற் கான ஒரு வரையறையை உருவாக்கி அதற்கு வாக்களித்து நிறைவேற்றியிருக்கிறது. ப்ளூட்டோ அந்த எல்லைக்குள் வராததால் கிரகம் என்கிற அந்தஸ்தை இழந்தது. ஏரிஸ், செரிஸ், சௌமியா மற்றும் மேக்மேக் ஆகிய சிறு கோள்கள் “குள்ள கிரகம்”(dwarf planet)எனும் பட்டியலில் வருகின்றன. இவை கிரகங்களைப் போல அவற்றின் சுற்றுப்பாதைக்கு அருகிலுள்ள எவற்றையும் பாதிக்கும் அளவிற்கு ஈர்ப்புத் தன்மையைக் கொண்டி ருக்கவில்லை. அவை சிறுகோள் பெல்ட் அல்லது கைபர் பெல்ட் போன்றவற்றில் சூரியனைச் சுற்றி வருகின்றன.

பல விஞ்ஞானிகள் இந்தப் புதிய வரையறையுடன் உடன்படவில்லை. நியூ ஹொரைசன்ஸ் முதன்மை ஆய்வாளர் ஆலன் ஸ்டெர்ன் உட்பட IAUவரையறையை புறக்கணிப்பதற்கான மனுவை ஒருங்கமைத்தார்கள். இந்த விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கிரகம் என்பதற்கான வரையறை கடந்த காலத்தில் பலமுறை மாறியிருக்கிறது. இனியும் மாறாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. ப்ராக் எனுமிடத்தில், 24 ஆகஸ்ட் 2006 அன்று நடந்த சர்வதேச வானியல் ஒன்றியத்தின் 26-வது பொதுச் சபையில், டாக்டர். பிரையன் மேசன் (USNO)மற்றும் டாக்டர். ஜெரார்ட் வான் பெல்லி (கால்டெக்) ஆகியோர் IAU தீர்மானம் 5ஆ ("ஒரு கிரகத்தின் வரையறை")க்கு எதிராக வாக்களித்தனர். ஆயினும்கூட, வாக்களித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் ப்ளூட்டோவானது குள்ளக் கிரகம் எனும் வகைக்குள் தள்ளப்பட்டது.

ராபர்ட் பர்ன்ஹாம் ஜூனியர் 20 ஆம் நூற்றாண் டின் மத்தியில் லோவெல் ஆய்வகத்தில் பணி புரிந்து வந்தார். அப்போது அக்டோபர் 18, 1957 அன்றைய நாளின் மாலை நேரத்தில் ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகான அவரது வாழ்க்கை ஒரு வரலாறாக மாறிப்போனது.

இவரோடு இரண்டு பார்வையாளர்களும் இந்தப் புதிய வால் நட்சத்திரத்தை எதேச்சையாகக் கண்டதால், அவர் அதனை தனியாக முயன்றார் என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் இச்செய்தி வேகமாகப் பரவியதால் பர்ன்ஹாம் விரைவில் பிரபலமாகியிருக்கிறார். ப்ரெஸ்காட்டில் “சுய பயிற்சிபெற்ற அமெச்சூர் வானியலாளர்” என்றும் பாராட்டப்பட்டார்.

பர்ன்ஹாம் மற்றும் தாமஸ் இருவருமாக இணைந்து முழு வடக்கு அரைக்கோளத்தையும், தெற்கு அரைக்கோளத்தின் கால் பகுதியையும் புகைப்படம் எடுத்தார்கள். லோவெல் அப்சர்வேட் டரியின் அறிக்கைத் தொகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட பக்கங்களில் இந்தத் தரவுகள் வெளியிடப் பட்டன. 16,000-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் நிலைகளை அளப்பதற்கும் மேலாக, இவரது குழுவினர் ஐந்து வால்மீன்கள் மற்றும் 15,000-க்கும் மேற்பட்ட சிறுகோள்களைக் கண்டுபிடித்தனர்.

புளூட்டோவின் கண்டுபிடிப்பைப் போன்று, லோவெல் ஆய்வகத்தின் பிற ஆராய்ச்சிகள் பிரபலமாகவில்லை. பர்ன்ஹாம் எனும் வானியலாளர் “பர்ன்ஹாமின் வானியல் கையேடு” (Burnham's Celestial Handbook) எனும் வானியல் புத்தகங்களில் ஒன்றையும் எழுதினார். 88 விண்மீன் கூட்டங்களின் அறிவியல் மற்றும் புராணங்களை முழுமையாக உள்ளடக்கிய ஒரு வானியல் புத்தகத்தையும் தொகுத்தார். நூலின் ஆரம்ப வெளியீட்டிற்குப் பிறகு அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் பெரும்பாலான அறிவியல் தகவல்கள் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும், இப் புத்தகத்திலுள்ள பொக்கிஷமான வரலாற்றுத் தகவல்களுக்காகவும் பர்ன்ஹாமின் சொற்பொழிவு கள் யாவும் இந்நூலில் எழுத்தாக இடம்பெற்றிருப்ப தன் காரணமாகவும் பலரும் விரும்புகின்ற மதிப்பிற் குரிய புத்தகமாக இன்றும் இருக்கிறது.

“நாம் யார்? எங்கிருந்து வந்தோம்?” என்பதையும் புரிந்துகொள்ள வானியலாளர்கள் இரவு வானத்தை ஆராய்கின்றனர். விலங்குகள் உட்பட உயிரினங்கள் யாவும் உறங்கி ஓய்வெடுப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் இருளையே நம்பியுள்ளன. இருள் மற்றும் ஒளியின் இயற்கைச் சுழற்சியில் சீர்குலைவு ஏற்பட்டால், அது மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இரவு வானமென்பது மனித இனத்திற் கும், பிற உயிரினங்கள் அனைத்திற்கும், அடுத்த தலை முறைகளுக்கும் பாதுகாக்கப்பட வேண்டியதொரு பொக்கிஷமாகும்.

ஃப்ளாக்ஸ்டாஃபின்(Flagstaff) குடியிருப்பு வாசிகள், இரவு நேர மின்விளக்கை ஒளி மாசு என்கி றார்கள். இதனைக் குறைப்பதற்காக வானத்தைப் பார்த்து வீசும் மின்னொளிக் கதிர்களைத் தடுத்து, தரையை நோக்கி வீசுமாறு பார்த்துக்கொள்கிறார் கள். தேவையில்லாத செயற்கை ஒளியைத் தவிர்க்கிறார் கள். தேவையான இடத்திலும் வெள்ளை விளக்கு களுக்குப் பதிலாக அம்பர் அல்லது மஞ்சள் விளக்கு களைப் பயன்படுத்துகிறார்கள். ஃபிளாக்ஸ்டாஃப் (Flagstaff) நகரம் கடைப்பிடிக்கும் ஒளி மாசுபாட்டு நடைமுறைகளை முழு சமூகமும் ஏற்கும்போது, அதன் விளைவுகள் வியத்தகு மாற்றங்களைக் கொடுக்குமெனும் விருப்பத்தில், இவர்கள் யாவரிடமும் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.

அரசுப் பொதுச் சேவை நிறுவனங்களும் உள்ளூர் வங்கிகளும் இன்னும் பிற அறக்கட்டளை நிறுவனங் களும் ஃபிளாக்ஸ்டாஃபின் லோவல் அப்சர்வேட் டரிக்கு நிதியுதவி செய்கிறார்கள்.

இப்படியாக இயங்கும் இந்த வானாய்வகத்தின் இரவில், விண்மீன்களை ஒளித்து வைக்காத வானம் மின்னிக்கொண்டிருந்தது. நாங்கள் பயணம் செய்த வாகனத்தில் நமது உடலுக்கேற்ற வெப்ப நிலையைக் கட்டுபடுத்தி வைத்திருந்ததால் புற வெப்ப நிலையை கடுங்குளிராக உணர்ந்தோம். தரையோடு படர்ந்திருந்த ரேடியக் கதிர்களின் ஒளி உமிழ்வை அடையாளமாகக் கொண்டு, அங்கிருந்த பாதையில் நடந்து சென்று வரவேற்பறையை நெருங்கினோம்.

அடுத்ததாக நாங்கள் பார்க்கவிருக்கும் வியப்பிற்காகக் காத்திருந்தோம். கற்பனைக் கதைகளில் அறிந்த வற்றை கண்களில் காணப்போகிறோம் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. அதனை அடுத்த கட்டுரையில் காணலாம்.