புரட்சிக் கவிஞரைப் போல் எழுதுகிறார் என்று அண்ணாவால் பாராட்டப்பட்டு, திரையில் எம்.ஜி.ஆரால் ஆதரிக்கப்பட்டு, அரசவைக் கவிஞராக்கப்பட்டவர் புலமைப்பித்தன். அதே நேரம் கலைஞர் வசனம் எழுதிய படத்துக்கும் பாடல் எழுதி, ஜெயலலிதா காலத்திலும் செல்வாக்குடன் இருந்தவர் அவர். இப்படித் தமிழ்நாட்டு அரசியலின் இரு துருவ எல்லைகளையும் தொட்டுத் தனது தமிழால் உறவாடியவர் புலவர்.

திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது.

கதை ,சூழல், பாத்திரம், மெட்டு, சந்தம், எளிமை, தரம், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக எழுதப்பட வேண்டும். அது விரும்பிய வண்ணத்தில் வரையும் ஓவியமல்ல, கேட்கும் அனைத்து வண்ணங்களையும் கலந்து உருவாக்கும் ஓவியம் . இத்தனை நிபந்தனைகள், நிர்ப்பந்தங்களுக்கும் உட்பட்டுப் பாடல் எழுதும்போதும் புலமைப்பித்தனால் மட்டும்தான் இவை அனைத்தையும் தாண்டி அழகுணர்வையும் தமிழுணர்வையும் ஓசைப்படாமல் உள்ளீடாகக் கலந்து வைக்க முடிந்தது.

dd

Advertisment

'குடியிருந்த கோயில்' படத்தில் மூலம் 1966 -ல் நான் யார் என்று எழுத ஆரம்பித்தவர், கடைசிவரை தான் யார் என்று தனது தமிழால் நிரூபித்தவர்.அன்றைய எம்.ஜி.ஆர் முதல் இன்றைய விஜய் வரை எழுதியவர்.காகிதக் காலம் முதல் கணினிக் காலம் வரை நீண்டு நெடியது அவரது பயணம்.

அத்திக்காய் காய் காய் ,வான் நிலா நிலா அல்ல தந்த கவியரசரின் பாடல் வரிசையில் இவரது இனங்களிலே என்ன இனம் பெண்ணினம், பாவை நீ மல்லிகை, கல்யாண தேன் நிலா உள்ளிட்ட பாடல்கள் கண்டிப்பாக இடம்பெறும். காதல், வீரம், சிருங்காரம், அவலம், துயரம், ஆவேசம், எழுச்சி என்று எந்த வகைமை உணர்விலும் அதில் அவர் தனது ஒளிர் தமிழை ஒளித்து வைத்திருப்பார்.

புலமைப்பித்தன் பிரபல கதாநாயகர்கள் பலருக்கும் நல்ல பாடல்கள் எழுதியவர். எம்ஜிஆருக்காக சிறப்பான பாடல்கள் நிறையவே எழுதியவர். 'நான் யார் நீயார்’ என்ற முதல் பாடலில் 'வருவார் இருப்பார், போவார் நிலையாய், வாழ்வார் யார் யாரோ?'-என்று நிலையாமையை நிறுத்தி, 'உள்ளார் ரசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ?'என்று எளியவர்களுக்கு இரக்கம் காட்டி 'அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார், தடுப்பார் யார் யாரோ?' என்று குரலற்றவர்களுக்கும் குரல் கொடுத்துச் சொற்சிலம்பமும் ஆடி இருப்பார்.

Advertisment

பெரும்பாலும் திரைப்பாடல்களில் ஒலிப்பது பாத்திரத்தின் குரல்தான் என்றாலும், நடிக்கும் எம்ஜிஆரின் பிம்பத்துக்காகவும் எழுதினார். எம்ஜிஆரால் ஆதரித்து ஆராதிக்கப் பட்டதால், 'நாளை உலகை ஆள வேண்டும் 'என்று அவருக்குப் பீடம் அமைத்து விசுவாசம் காட்டியிருப்பார்.

'நல்ல நேரம்’ படத்தில்,'ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி பாடி நடக்கணும் அன்பை நாலும் வளர்க்கணும்', என்று எம்ஜிஆரின் மனமொழியில் எழுதியவர்.

ddd

’உழைக்கும் கரங்களி’ல் 'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே.. இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே’ என எம்ஜிஆரின் கொள்கைகளைத் தன் தமிழ் வழியே அடுக்கினார்.

'இதயக்கனி' யில் 'இன்பமே உந்தன் பேர் பெண்மையோ?’ என்றும்' இன்பமே உந்தன் பேர் வள்ளலோ?' எனத் தற்குறிப்பேற்றி எழுதியவர். அதே படத்தில் 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற;நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்றும் ’நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே; நீங்க நினைச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே' என்றும், அரசியல் கனவுக்கு அச்சாரம் போட்டார்.

புலமைப்பித்தன், இடதுசாரி மனநிலையும் பெரியாரிய குணநிலையும் கொண்டவர். பொதுவாக நாத்திகம் பேசுபவர்கள் எழுதும்போது சில சொற்கள் மீது தீண்டாமை காட்டுவதால் கலையின் ஈரம் காய்ந்துவிடுவதாக ஒரு புகார் உண்டு. அதற்கு இவர் விதிவிலக்கு.

தெய்வீகம், தீபாவளி, ஏகாதசி, மோகினி, ஆகாய கங்கை, மன்மதன், சங்கீதம், தீர்த்தம், மங்கல நீராடல், மோகன மயக்கம், உற்சவம், என்றெல்லாம் ஆத்திக அடையாளங்கள் இவரது பாடல்களில் ஏராளமாய் மிதக்கும்.

'காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இருவிழியில் ' என்று 'அழகெனும் ஓவியம் இங்கே' பாடலில் எழுதியவர், 'ஆயிரம் வாசல் இதயம்' படத்தில் 'தென்றல் தேரில் வருவான், அந்த காமன் விடுவான் கணை இவள் விழி' என்றும் 'அக்கினி பிரவேசம்' படத்தில் 'கல்யாண பெண் போல வந்தாலே ' பாடலில் 'பெண் என்பதோ காமனின் சீதனம்; கண் என்பதோ கம்பனின் காவியம்' என்பார்.

'தீபம்' படத்தில் 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி ’ பாடலில் ‘காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்' என்றும் எழுதியிருப்பார்.

'நாயகன்' படத்தில் வரும் 'தென்பாண்டிச் சீமையிலே', 'நீ ஒரு காதல் சங்கீதம்' உள்ளிட்டவை சூழல் சொல்லும் சுகமானவை. படத்துக்குக் காவியச்சுவை அளித்தவை 'அழகன்' படத்தில் 'ஜாதி மல்லி பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே' பாடலில் 'காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் ; கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று' என்றும் காதலனுக்கும் கடமை வலியுறுத்தியவர்.

dd

சிருங்கார ரசத்தை சிங்காரமாகச் சொல்வதிலும் இவர் கைதேர்ந்தவர் . முதல் உறவு பாடலைக் கூட ’சொர்க்கத்தின் திறப்பு விழா இன்று சோலைக்கு வசந்தவிழா’ வாக்கி, பருவ நிலா, இனிய பலா, இன்ப உலா’ என்று தமிழ் செய்தவர்.

’கன்னிப்பருவத்திலே’யின் ’பட்டுவண்ண ரோசாவாம்’ பாடலில் வழிகிற துயரம் இன்றும் ஈரம் உலராமல் உணர வைக்கிறதே?

தமிழ் திரையின் பேரவலம் எவ்வளவு தமிழறிவும் கவிதைச் செறிவும் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமா குடிகாரனுக்குப் பாட்டு எழுதாமல் கவிஞனை விடாது. இவரும் எழுதினார் ’வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட ஊத்திக்கிட்டு கேட்டுக்கோடா என்னோட பாட்ட' பாடல் பெரிய வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்,சிவாஜிக்கு எழுதிய அதே கவிஞர் நான்காம் தலைமுறையாக 'ஈரமான ரோஜாவே' நாயகன் சிவாவுக்கும் எழுதினார் இப்படி, 'அதோ மேக ஊர்வலம், அதோ மின்னல் தோரணம் அங்கே; இதோ காதல் பூவனம் இதோ காமன் உற்சவம் இங்கே'.. . தொடர்ந்து, 'குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்,முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்’ என்பார்.

'கை கொடுக்கும் கை' படத்தில் 'தாழம்பூவே வாசம் வீசு' பாடலில் 'நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும் சிரிச்சா கோயில் மணி அடிக்கும்' என்கிறார் . புலமைப்பித்தன் புலவருக்குப் படித்தவர்தான். தமிழ் பாண்டித்தியம் நிறைந்தவர் தான் இருந்தாலும் சமகால மொழியிலும் எழுத முடியும் என்பதற்கு பாக்யராஜுக்காக ஜனரஞ்சகமாக எழுதும்போது புரிய வைத்தார். 'முந்தானை முடிச்சு' படத்தில் 'நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் நாடறிஞ்ச மன்மதன் தான்' என்பார்.

’நேற்று இன்று நாளை' யில் 'பாடும் போது நான் தென்றல் காற்று, பருவ மங்கையோ தென்னங் கீற்று' என்று தொடங்கி 'மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியை கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து, ஒரு இன்ப நாடகம் நடித்து' என்று காதலர் வழியே நம்மை தமிழ்ச்சோலைக்குள் அழைத்துச் செல்வார்.

'மனிதனின் மறுபக்கம் ' படத்தில் 'நீ என்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்' என்பதும் 'நான் ஏன் பிறந்தேன்' படத்தில் 'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது' என்பதும் கவிதைக் கூறல்லவா?

'நீங்கள் கேட்டவை ' யில் 'ஓ வசந்த ராஜா பாடலில் 'உன் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்' என்பார்.

கமல்ஹாசனுக்கு 'நீயா' வில் எழுதும்போது 'உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை, என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை' என்று தொடங்கி 'கலைகள் பயிலும் மாலைப் பொழுது ,விடியும் வரையில் நீயும் தழுவு' என்று மன்மத மகரந்தம் தூவுவார்.

இப்படி திரைத்தொழிற்சாலைக்குள் ளேயும் மலர்ச்சோலை அமைத்தவர்.

பாலச்சந்தரின் "உன்னால் முடியும் தம்பி' யில் "அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா' பாடலில் "கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே, கஞ்சிப் பானை தெருவில் இங்கே ' என்று ஆவேசப்பட்டார். அதே படத்தில் வரும் ’புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல, எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்ல’ என்று ஆதங்கப்பட்டு,’வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?’ என்றும் ’ ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ, வீடின்றி வாசல் இன்றித் தவிக்குது?' எனக் கொதித்தவர்,' கங்கை தெற்கே பாயாதா? காவிரி யோடு சேராதா?’என்றும் கேள்வி கேட்கிறார்.

'கோவில் புறா' வில் 'அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ மற்றும் ’வேதம் நீ பாடல்' இசையும் தமிழும் இணைந்த விருந்தல்லவா? 'மதன மாளிகை 'யின் 'ஒரு சின்னப் பறவை’ பாடலில் ’ அன்னை என்பது மானுடம் அல்ல அது தான் உலகத்தில் தெய்வீகம்; அன்று அவள் சொன்னது தாலாட்டல்ல ஆன்மா பாடிய சங்கீதம்; வேதம் என்பது வேறெதுமல்ல, தாய் அவள் கூறிய உபதேசம்’ என்று தாய்மை உணர்த்தியவர்,’ விண்ணிலிருந்து இருப்பது சொர்க்கமும் அல்ல ,அதுதான் அன்னையின் மலர்ப் பாதம்' என்று நபி வழியில் தாயின் பெருமையை உயர்த்துகிறார்.

’சிவா’ வில் ரஜினிக்கு 'அடி வான்மதி என் பார்வதி' பாடலில் 'கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம், தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்’ என்பார். இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்!

அத்தனையிலும் அழகுணர்வும் தமிழுணர்வும் பின்னிப் பிணைந்து இழையோடி மின்னும். கவிஞர் புலமைப்பித்தன் எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தாமல் தமிழை முன்னிலைப்படுத்தியவர்.

எந்தச் சூழலில் எழுதினாலும் எந்த நடிகருக்கு எழுதினாலும் பாடலில் ஜரிகை போல் தன் தமிழினை மினுக்கம் கொள்ள வைப்பார்.

எந்த வகைமையிலும் மேற்கோள் காட்டப்படும் பாடல்களை எழுதி இருப்பதால் புலமைப்பித்தன் தன் தமிழ்ப்புலமையால் தன்னிகரற்ற திறமையால் என்றும் ஓர் ஆசானாக உயர்ந்து நிற்பார். திரைத்தமிழ் மேடையில் அவர், தானே தயாரித்து அமர்ந்திருந்த அந்த கம்பீர நாற்காலி என்றும் காலியாகவே இருக்கும்.

புலமைப்பித்தன் மறையவில்லை. பாடல்களாய் காற்றெங்கும் விரவிப் பரவிக் கிடக்கிறார்.