அம்முக்குட்டி வாசலிருந்து வெளியே செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த படிகளில், இறுதிப்படியில் காலை எடுத்து வைத்தாள். தலையை உயர்த்திப் பார்த்தபோது, சுகுமாரன் நாயர் தூரத்திலிருந்து வருவதைப் பார்த்தாள்.
அதுவும்... அவள் செல்லவேண்டிய பாதையிலேயே... அவள் காலைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டாள்.
முன்னோக்கி நேராகச் செல்வதற்கான தைரியமில்லை. அந்த புகழ்பெற்ற குடும்பத்தில் மற்ற எல்லாரையும்போலதான் அந்த இளைஞனும் நலம் விசாரிப்பான்: "என்ன... ஊனக்கால் பொண்ணே..!'
இந்த அழைப்பைக் கேட்டுக்கேட்டு காதே மரத்துப் போனது. எனினும், சுகுமாரன் நாயர் இதுவரை அப்படி அழைத்ததில்லை. சூழல் உண்டாகவில்லை. எப்போதாவதுதான் பெரிய வீட்டிற்கே வருவான். வரும் வேளைகளில் அம்முக்குட்டி அவனுக்கு முன்னால் செல்வதும் பழக்கத்தில் இல்லை. இப்போது அதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டாம். அந்தப் பட்டப் பெயரைக்கூறி அழைக்காத ஒரு ஆளாவது அந்தக் குடும்பத்தில் இருக்கட்டும்...
அருகிலிருந்த மாமரத்திற்குக்கீழே அம்முக்குட்டி சென்று நின்றாள். தொடர்ந்து வேலியில் ஒட்டிப் படர்ந்துகிடந்த கொடிகளின் வழியாகப் பார்த்தாள். அழுத்தி மிதித்து நெஞ்சை நிமிர்த்தி வந்துகொண்டிருந்தான்.
அவன் எப்போதும் இப்படித்தான் நடக்கிறான் என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். என்ன ஒரு அவசரக்காரன்! அவன் ஏனிப்படி பரபரப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எப்போதும் ஏதாவதொரு சண்டையுடன்தான் சுகுமாரன் நாயர் வீட்டிற்குள் வருவான். பெரியவருடன் எப்போதுமே மல்லுக்கட்டுதான்.
சுகுமாரன் நாயரின் புதிய பழக்கங்கள் எதுவுமே பெரியவருக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய நறுக்கப்பட்ட மீசையையும் ஆங்கிலத்தையும் சிகரெட்டையும் பெரியவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தில் பெரியவரின் நிலைப்பாடு சரிதானென்று அம்முக்குட்டி நினைத்திருக்கிறாள்.
அவர் ஒரு பழமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மாங்கோலத்தெ குடும்பத்தின் புகழைக் கெடுக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். திருவளயங்காட்டு அம்மாவை குடியிருக்கச் செய்த குடும்பமது. இப்போதும் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் அழைத்தால், அழைப்பிற்கு அப்பால் பகவதி இருக்கி றாள் என்ற விஷயமும் அம்முக்குட்டிக்குத் தெரியும்.
அமாவாசையின்போது நடத்தப்படும் சக்திபூஜை முடிந்து, சிவந்த கண்களுடன் வாசலில் வந்து அமரும் பெரியவர் பகவதியைப் பற்றி கூறுவதை அவள் கேட்டிருக்கிறாள். "இந்த தேவிடியா மகள் இங்கே இல்லன்னா... நாங்க தொலைஞ்சோம்!'
குடும்பத்தின் செல்வச் செழிப்பைக் காப்பாற்றக் கூடிய பகவதியை மனதில் நினைக்காமல், பெரியவர் எதையுமே செய்யமாட்டார். மருமகனோ... இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதுகூட கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக குடும்பத்திற்குச் சொந்தமான களத்தில் சென்று வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
எப்போதாவது வீட்டைத்தேடி வருவதே சண்டைபோட்டு பெரியவரின் கையிலிருந்து கொஞ்சம் காசை வாங்குவதற்குதான். அது செலவழிந்து முடியும்வரை மீண்டும் இந்தப் பக்கம் வரமாட்டான்.
இன்றும்... சண்டை போடுவதற்குதான் வந்துகொண்டிருக்கிறான். "ஒ.... ஊர்சுத்தி வந்தாச்சா?'' என்ற பெரியவரின் கேள்வியும், "சும்மா வரல...'' என்ற மருமகனின் பதிலும் உடனே கேட்டன. "எது வேண்டுமானாலும் இருக்கட்டும். பொன்னை உருக்கக்கூடிய இடத்தில் பூனைக்கென்ன வேலை?' என்று நினைத்தவாறு, அம்முக்குட்டி மேலும் சற்று மாமரத்துடன் சேர்ந்து நின்றாள். சீக்கிரம் அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டால், அவள் படிகளில் இறங்கிச் செல்லலாம். அவள் மேலுமொரு முறை படர்ந்த செடிகளின் வழியாகப் பார்த்தாள். வெடிக்கப்போகும் வாணவெடியைப்போல வந்துகொண்டிருந்தான்.
அம்முக்குட்டிக்கு மிகுந்த வெறுப்பு உண்டானது.
தாய்மீதோ மாமாவின்மீதோ அவனுக்கு மரியாதை யில்லை.
வாழ்க்கையில் யார்மீதாவது மரியாதை இருக்கிறதா? மரியாதை! சுகுமாரன் நாயரைப் பற்றி எவ்வளவோ கதைகளை அவள் உரல் அறையில் கேட்டிருக்கிறாள்.
அவன் வந்து போய்விட்டால், பிறகு... நான்கு நாட்களுக்கு உரல் அறையிலிருக்கும் பெண்களுக்கு மத்தியில் அவனுடன் சம்பந்தப்பட்ட கதைகள்தான் இருக்கும். எப்படிப்பட்ட கதைகளையெல்லாம் கேட்டிருக்கிறாள்!
"பயப்படணும்...' குரலைத் தாழ்த்திக்கொண்டு உண்ணிச்சிரியம்மா பல நேரங்களில் கூறுவாள்: "ஒரு பெண்ணை மிதிச்சே கொன்னவன்...' பிறகு, "யாரிடமும் சொல்லிடாதீங்க!' என்ற முன்னறிவிப்புடன் அந்தக் கதையை அவள் எல்லோரிடமும் கூறுவாள். அது வொரு குஞ்ஞிக் காளியின் கதை...
நள்ளிரவு வேளையில் அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து, பூவைப்போல கையிலெடுத்துக் களத்திற்குக் கொண்டு சென்றான். இருக்கக்கூடிய பொய்கள் அனைத் தையும் கூறி, ஒன்றரை வருடம் அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான். இறுதியில் மிதித்துக்கொன்று ஆற்றில் போட்டுவிட்டான். "பெரிய அய்யா இருப்பதால, கையில விலங்கு மாட்டல. கணக்கே இல்லாம பணம் செலவழிச்சாங்க...' என்று உண்ணிச்சிரியம்மா கூறுவாள்.
சுகுமாரன் நாயர் அருகில் வந்தான். அந்த காற்பாதங் களைச் சற்று பார்த்தபோது, அம்முக்குட்டிக்கு ஒரு வெறுப்பு உண்டானது. அதற்குக்கீழே கிடந்து ஒரு பெண் மூச்சுவிட முடியாமல் துடிப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. கொலைகாரன்! செத்து வீங்கிய தவளைகளைப்போல அவனுடைய கால் விரல்கள் இருந்தன.
படிகளுக்கருகில் அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டதும், அம்முக்குட்டி மாமரத்திற்குக்கீழே மேலும் சற்று தள்ளி நின்றாள். அவளுடைய காலடிகளில் கிடந்து காய்ந்த இலைகள் ஓசை உண்டாக்கின. அதைக் கேட்டோ என்னவோ... சுகுமாரன் நாயர் திரும்பிநின்று கேட்கவும் செய்தான்:
"யார் அது?''
அம்முக்குட்டி நடுங்கிவிட்டாள். அவள் மூச்சை அடக்கிப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
"யாரு?'' மீண்டும் முரட்டுத்தனமான குரல்.
"நான்...'' மூச்சை அடைத்துக்கொண்டு அம்முக்குட்டி கூறினாள். "ஊனக்காலியா?' என்ற கேள்வி உடனே வரும் என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். அதைக் கேட்டுவிட்டுப்போனால் போதும். ஆனால், சுகுமாரன் நாயர் போகவில்லை. அவன் திரும்பி நின்றான்.
"யாரு? அம்முக்குட்டியா?''
"ஆமா...''
சுகுமாரன் நாயர் அவளை முழுமையாகப் பார்த்தான். தொடர்ந்து கூறினான்: "நீ ஒரு அழகியா இருக்கியே?''
அந்த இளம்பெண்ணின் இதயத்திலிருந்து ஒரு நெருப்பு ஜுவாலை பற்றி எரிந்தது. அவள் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.
"அழகியா இருக்கறது நல்லதாப் போச்சு... தெரியுதா?'' சுகுமாரன் நாயர் தொடர்ந்து கூறினான்: "இங்க சுகமா இருக்கேல்ல..?''
"ம்...''
எதற்கு என்றில்லாமல் அந்த இளைஞன் குலுங்கிச் சிரித்தவாறு கடந்துசென்றான்.
இனி அம்முக்குட்டி செல்லலாம். ஆனால், அசைய முடியவில்லை. மொத்தத்தில் நிலைகுலைந்து நின்றாள்.
நீண்டகாலமாக இருளடைந்து கிடந்த குகையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுகிறது. வெயிலின் கீற்றுகள் உள்ளே நுழைந்து வருகின்றன. அங்கு ஊர்ந்து கொண்டும், ஓடிக்கொண்டுமிருக்கும் எல்லா உயிரினங்களின் கண்களும் கூசிப் போகின்றன.
அவள் அழகி என்று... அவள் சுகமா என்று... அந்த முரட்டுத்தனமான சிரிப்பு அவளுடைய காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இளைஞன் கடந்துசென்ற பாதையையே கடைக்கண்களால் ஒருமுறை பார்க்காமல் அவளால் இருக்கமுடியவில்லை. பயங்கரமான மனிதன்!
அவள் படிகளில் இறங்கிநடந்தாள். இந்த உலகத்தில் இன்றுவரை ஒரு உயிர்கூட அவளிடம் இவ்வாறு பேசியதில்லை. அவளுடைய தாய் அவளின் பால்ய வயதிலேயே இறந்துவிட்டாள். தந்தை கேளுக்குறுப்புதான் அவளை வளர்த்தது. மரணம்வரை மாங்கோலத்தெ இல்லத்தின் பணியாளாக இருந்தார் அந்த மனிதர். கோலை ஊன்றியவாறு குனிந்து... குனிந்து அவர் நடந்து திரிந்தது அவளின் ஞாபகத்தில் வந்தது. அவளை நினைத்து மிகுந்த மன வேதனையை அனுபவித்தார் அவர். மகளை வீட்டுவேலைக்கு அனுப்பாமலிருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆசை தந்தைக்கு இருந்தது. "இவளை ஒருத்தனுக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டால் நான் மன அமைதியுடன் கண்களை மூடலாம்.' தந்தை அடிக்கடி கூறக்கூடிய அந்த வார்த்தைகள் தெளிவற்றிருந்தாலும், அம்முக்குட்டியின் செவிகளில் தங்கிநின்றிருந்தன.
அதற்காக எப்படிப்பட்ட மிகப்பெரிய முயற்சிகளையெல்லாம் அந்த மனிதர் செய்தார்! முதலில் அவர் அழைத்துக்கொண்டு வந்த அந்த இளைஞனின் முகம் இப்போதும் அவளுடைய மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அதற்குப்பிறகு வந்த பலரையும் மறந்துவிட்டாலும்...
வெற்றிலைத் தட்டைக் கொண்டுவரச் சொல்லும் பாவனையில் கேளுக்குறுப்பு அம்முக்குட்டியை வாசலுக்கு அழைத்தார். தலைமுடியைச் சீவிக்கட்டி, பொட்டு வைத்து, பக்கத்து வீட்டிலிருந்து முன்கூட்டியே கடனாக வாங்கிக்கொண்டு வைத்திருந்த வெள்ளித்தட்டில் வெற்றிலை பாக்குடன் வாசல் திண்ணைக்கு வந்த அந்த நிமிடத்தை எந்தச் சமயத்திலும் மறக்க முடியாது. அதிகாலைப் பொழுதின் முதல் பெருமூச்சுகளை இறுகத் தழுவி எழுப்புவதைப்போல மொட்டிட்டு இருக்கக்கூடிய ஆசைகள்! வெற்றிலைத் தட்டை முன்னால் வைத்துவிட்டு, அவள் ஓரக்கண்ணால் பார்த்தாள். உதட்டில் புன்சிரிப்புடனும் தலைநிறைய முடியுடனும் சிவப்புநிறக் கல் பதிக்கப்பட்ட கடுக்கனுடனும் அங்கு அமர்ந்திருந்த புது மாப்பிள்ளை கண்களால் தீபாராதனை நடத்தினான். ஒரு சிலிர்ப்பு! மொத்த உடலுமே குழைவதைப்போல இருந்தது. தன்னுடைய ஊனக்காலை இழுத்தவாறு உள்ளே போகும்போதும் அந்த இளைஞனின் கண்கள் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற விஷயம் அம்முக்குட்டிக்குத் தெரியும். எனினும், கூடத்திலிருந்த ஜன்னலின் மரத்துண்டைப் பிடித்தவாறு ஆர்வத்துடன் அவள் நின்றிருந்தாள்.
வாசலில் தந்தைக்கும் அந்த இளைஞனுக்குமிடையே உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
"என்ன..?' -தந்தை.
"மோசம் ஒண்ணுமில்லை கேளு மாமா. ஆனா...'
"ம்...?'
"ஒரு ஊனக்கால் பொண்ணை கல்யாணம் பண்ணுவேன்னு என் ஜாதகத்தில சொல்லப்படல.'
தந்தை அவன் முகத்தில் ஒரு அறை கொடுக்கவில்லை.
தொண்டை தடுமாற, இவ்வாறு கூறினார்:
"தெய்வம் எனக்கு ஒண்ணுதான் கொடுத்திருக்கு. அது இப்படி ஆயிருச்சு. என் முன்பிறவியோட செயல்கள் காரணமா இருக்கும்.'
அதற்கு பதில் வரவில்லை. அந்த இளைஞன் படிகளில் இறங்கிச் சென்றபோது, அம்முக்குட்டி ஜன்னலின் வழியாகப் பார்த்தாள். அவன் சற்று திரும்பிக்கூட பார்க்கவில்லை. தான் பாதத்தால் மிதித்து வீசியெறியப்பட்டதைப் போன்ற ஒரு அனுபவம் அம்முக்குட்டிக்கு உண்டானது. வாளை எடுத்து தன் ஊனக்காலை வெட்டியெறிந்தால் என்னவென்று அவள் நினைத்தாள். ஆனால், அசையவில்லை.
அதற்குப்பிறகும் இரண்டு மூன்று திருமண ஆலோசனைகள் வந்தன. ஒவ்வொருவனும் படிகளில் இறங்கிச்சென்றது, அவளுடைய ஆசை நிறைந்த புதிய தளிர்களை அழுத்தி மிதித்துதான். பல முயற்சிகளுக்குப்பிறகு ஒரு திருமணத்தைச் செய்யும்போது, அதில் ஒரு ஊனக்கால் பெண் தேவையா என்று அவர்கள் அனைவரும் நினைத் தார்கள். அவர்களைக் குறைகூறுவதற்கில்லை.
எனினும், "இது என் குற்றமா?' என்று கேட்காமலிருக்க அவளால் முடியவில்லை.
அவளைவிட மோசமான நிலையிலிருக்கும் பெண்கள் திருமணம் செய்துகொண்டும் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டும் இருந்தார்கள்.
"அம்முக்குட்டி... இது யாரு?' என்று கேட்கக்கூடிய பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்களிடம், "இது என் வீட்டுக்காரர்ல!' என்று வெட்கம் நிறைந்த முகத்துடன் கூறப்போகும் ஒரு நாளைப்பற்றி அவள் கனவு கண்டாள். திருமண ஆலோசனையுடன் ஒவ்வொருவனும் வரும்போது அவள் நினைப்பாள்: "இந்த ஆள் நல்ல மனிதர். என்னை ஊனக்காலின்னு சொல்லமாட்டார்!'
ஆனால், அவனும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அப்படித்தான் அழைத்தான்.
உலகத்தின் வாசற்படியிலேயே தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அம்முக்குட்டி புரிந்து கொண்டாள். அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். "கடவுளும் எனக்கு எதிராக இருக்கிறார்!'
மகளுக்கு ஆவல் குறைந்தது. தந்தைக்கு ஆவல் இல்லாமற் போனது. விதிக்கப்பட்டதுதான் நடக்குமென்று அந்தக் கிழவர் உறுதிப்படுத்திக் கொண்டார். அவளை மாங்கோலத்தெ இல்லத்தின் உரல் அறைக்குள் கொண்டுவந்து தள்ளிவிட்டார். கதியற்ற எல்லா பிணங்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு அபய இடம்தான் அந்த உரல் அறை. அங்கு பலமனித ஆன்மாக்கள் கிடந்து கஷ்டப்பட்டார்கள்.
உமியிலும் தவிட்டிலும் உலக்கைகளின் தாளத்திலும் இரண்டறக் கலந்து அந்த வாழ்க்கைகள் மூழ்கிக்கொண்டிருந்தன. நான்கு வருடங்களாக அம்முக் குட்டியும் அங்கிருக்கிறாள்.
அங்கு யாருக்கும் தனிப்பட்ட மேல் முகவரி இல்லை. அனைவரும் ஒரே பெயரில்தான் அழைக்கப் பட்டார்கள். உரல் பெண்... எனினும், அம்முக்குட்டி ஒரு பெயரைப் பெற்றாள். குறைபாடும் சில நேரங்களில் ஒரு நல்லதாகும். அனைவரையும் "பெண்ணே' என்று அழைக்கும் அந்த குடும்பத்தின் மரியாதைக்குரிய பெண்கள் அம்முக்குட்டியை "ஊனக்கா-' என்று அழைத்தார்கள். சராசரி மனிதப் பிறவியாக இல்லாமல் போனதால் கிடைத்த ஆதாயம்!
இந்த விசேஷத் தன்மை காரணமாக இருக்கலாம்- அந்த வீட்டிலிருந்த எல்லா பெண்களும் தொட்டதற் கெல்லாம் அம்முக்குட்டியை அழைத்தார்கள். குளித்து முடித்து, ஈரக்கூந்தலைப் பின்னியவாறு குடும்பத்தின் தலைவி கூறுவாள்: "அடியே ஊனக்காலி... கொஞ்சம் சந்தனம் அரைச்சுக் கொண்டு வா...'
"சரி...'
அப்போதே வேறொரு பெண்ணுக்கு சலவை செய்யப்பட்ட துணியை குளியலறையில் கொண்டுபோய் வைக்கவேண்டும். இன்னொருத்திக்கு முதுகில் எண்ணெய் தேய்த்துவிட வேண்டும்.
வேறொரு முதலாளியம்மாவுடன் அர்ச்சனை பாத்திரத்துடன் கோவிலுக்குத் துணையாகச் செல்லவேண்டும். சற்று திறமையுடன் காரியங்களைச் செய்த காரணத்தால், எல்லாருக்கும் ஊனக் காலியின் சேவை வேண்டும். படுக்கையறையை சுத்தம் செய்வதற்கு... படுக்கையை சரி செய்து விரிப்பதற்கு... தலைமுடியை வாரிப் பின்னிவிடுவதற்கு... பூச்சூடுவதற்கு... இவ்வாறு தொட்டதற்கெல்லாம்.
அங்குள்ள அமரும் இடங்களைப்போலவும் சாப்பிடும் இலைகளைப் போலவும் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருளாக இருந்தாள் அம்முக்குட்டி.
அவளோ... ஒரு இயந்திரத்தைப்போல பணியாற்றி னாள். அந்தவகையில் இடைவெளி விடாதிருந்த பணி, தன்னைத் தானே மறப்பதற்கு நல்லதுதான். எனினும், இளம்பெண்களாக இருக்கும் எஜமானிகளின் படுக்கையறையை சீர்படுத்தும்போது, அங்கு வாடி நசுங்கிக்கிடக்கும் பூக்களிலிருந்து வெளிவரும் வாசனை அவளுடைய இதயத்தில் ஒரு வேதனையை எழச் செய்யும். கசங்கிக்கிடக்கும் விரிப்புகளைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருப்பாள்.
கணவர்களின் தோள்களை உரசியவாறு திருவிழாவையும் பூரம் கொண்டாட்டத்தையும் பார்ப்பதற்காகச் செல்லும் அந்த வசதிபடைத்த பெண்களை சாளரத்தின் ஓட்டை வழியாக ஓரக் கண்களால் பார்ப்பாள். மொத்த சூழலும் அன்புமழை பொழிவதாலும் கட்டிப் பிடித்தல்களாலும் நிறைந் திருந்தது. ஒரு தேம்பல்... மூச்சு முட்டுதல்... எனினும், அம்முக்குட்டி அழவில்லை.
அம்முக்குட்டி படிகளில் இறங்கி நேராக தன் சிறிய வீட்டை நோக்கி நடந்தாள். இங்குமங்குமாக பறந்து கொண்டிருக்கும் வவ்வால்கள் மட்டுமே அங்கிருந்த தனிமையை விரட்டியடித்துக் கொண்டிருந்தன. தோளில் போட்டிருந்த துணியை எடுத்து கொடியில் எறிந்துவிட்டு, அவள் பாயில் சென்று படுத்தாள். சற்று நீண்ட பெருமூச்சை விட்டாள். ஒரு தளர்ச்சி... ஒரு மயக்கம்... உறக்கமில்லை... உணர்ச்சியுமில்லை... சிந்திக்க முடியவில்லை...
நினைவுகள் மனதிற்குள் அவ்வாறு பாய்ந்து பாய்ந்து சென்றன. "நீ அழகியா இருக்கியே!' அந்தக் குரல் எல்லாவற்றிற்கும் மேலே மனதில் முழங்கித் தங்கி நின்றது. சுகுமாரன் நாயரின் கத்தரிக்கப்பட்ட மீசையும் முரட்டுத்தனமான முகமும் மனதில் தோன்றிக்கொண்டிருந்தன.
"அவன் ஒரு மோசமான ஆள். ஒரு பெண்ணை மிதிச்சுக் கொன்னவன்.' அவள் தனக்குத் தானே கூறிக்கொண்டாள். ஆனால், அவனால் ஒரு பெண்ணை மிதித்துக் கொல்லமுடியுமா?
அதைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? நடக்காதிருந்திருக்காது என்றில்லை. ஒரே அடியில் ஒரு பணியாளின் இடது கண்ணைத் தெறிக்க வைத்தவன்தான்... ஒற்றைக் கண்ணன் குஞ்ஞன் நாயர் இப்போதும் மாங்கோலத்தெ இல்லத்தில் பணி செய்துகொண்டிருக்கிறான்.
சிறிய குழந்தைகளையும் சேர்த்து பதினோரு பேர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தின் வீட்டை நெருப்பைப் பற்றவைத்து அழித்தவன் என்ற விஷயமும் அவளுக்குத் தெரியும். ஆமாம்....
அவன் மோசமானவன்தான்.
அவனுடைய காலின் பெருவிரல் செத்து வீங்கிய தவளையைப் போலதான் இருக்கிறது. எனினும், அவன்தான் முதல்முறையாகக் கூறினான்... அவள் அழகி என்று.
புலர்காலைப் பொழுதில்தான் அம்முக்குட்டி தூங்கினாள். ஏதோவொரு குகைக்குள் அவள் பிடித்து இழுத்துச் செல்லப்படுவதைப்போல தோன்றியது. சிறிய கோல்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் பாதையின் வழியாக பிடித்து இழுத்துச் செல்லப் படுகிறாள். சரீரம் முழுவதும் காயங்கள்... ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது.
கூப்பாடு போடலாமென்றால், குரல் வெளியே வரவில்லை. அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்வது யார்? தெரியவில்லை. நெருப்பு பற்றியெரிந்து கொண்டிருக்கும் ஒரு மைதானப் பரப்பிற்கு அவள் இழுத்துச் செல்லப்படுகிறாள்.
அங்கு அடைந்தவுடன், அவள் சற்று திரும்பிப் பார்த்தாள். ஒரு ஒற்றைக் கண்ணன்! ஒரு கண் இருண்ட குழி... இன்னொரு கண் பளபளக்கிறது. யார் அது? சுகுமாரன் நாயர்! அவள் உரத்த குரலில் கத்தினாள். அத்துடன் உறக்கமும் முடிவுக்கு வந்தது. ஒளிரும் கிரணங்கள் சாளரத்தின் துளைகளின் வழியாக உள்ளே வந்து கொண்டிருந்தன. அவள் அதிர்ச்சியடைந்து எழுந்தாள்.
மறுநாள் இரவில் தனியாகப் படுத்துத் தூங்குவதற்கு அவளுக்கொரு பயம்... எனினும், அவள் தன்னுடன் படுப்பதற்கு ஒரு பெண்ணையும் அழைக்கவில்லை.
கெட்ட கனவுகளைக் காணாமலிருக்க வேண்டும் என்பதற்காக அவள் நாமத்தைக் கூறியவாறு படுத்திருந்தாள். எனினும், கனவுகள் வந்தன. மரக் கிளைகளின்மீது படத்தைச் சாய்த்து வைத்தவாறு பாம்புகள் பின்னிப் பிணைந்து கிடக்கக்கூடிய அடர்த்தியான காடுகள் நிலவொளியில் குளித்து நின்றுகொண்டிருக்கின்றன.
அதன் உள்ளேயிருந்து ஒரு சிரிப்பு இடையில் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் அவளுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். சிரிப்பு எழும்போது, பாம்புகள் படத்தை விரிக்கும். நின்றுவிட்டால் மீண்டும் மரக் கிளைகளின்மீது படத்தை சுருட்டிவைக்கும். தன் நெஞ்சிற்குள் ஏதோவொன்று... மூச்சை விடமுடியாத வகையில்...
அழுத்துவதைப்போல அவளுக்குத் தோன்றியது.
அதுவொரு காற்பாதம்... அவள் அதிர்ச்சியடைந்து எழுந்தாள். நேரம் வெளுத்திருக்கிறது. மூன்றா வது நாள் தூக்கத்திலிருந்து கண் விழித்தவுடன், அவள் வேகமாகச் சென்று குளித்தாள். கண்களுக்கு மையிட்டாள். நெற்றியில் குறி வைத்தாள். வீட்டிலிருந்து புறப்பட்டது மாங்கோலத்தெ இல்லத்திற்குத்தான். ஆனால், போய்ச்சேர்ந்தது களத்திலிருந்த வீட்டின் ஜன்னலுக்குக் கீழே... அது தெரிந்தபோது, அம்முக்குட்டி பதைபதைப்பு அடையவுமில்லை.
சூரியனின் கதிர்கள் மெதுவாக பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. மலர்கள் "சற்று புன்னகைத்தால் என்ன?' என்று நினைத்தன. ஒரு போக்கிரிக் காற்று மரக்குடில்களுக்கு நடுவில் யாரையோ தேடி நடந்துகொண்டிருந்தது. சுகுமாரன் நாயரின் கண்கள் ஜன்னலுக்கு உள்ளேயிருந்து வெளியே பயணித்தன. திடீரென... ஜன்னலுக்கருகில் அவள் தோன்றினாள்.
"யாரு? அம்முக்குட்டியா?''
"ம்...'' அவள் மெதுவாக முனகியவாறு அங்கேயே நின்றிருந்தாள். பிறகும் என்னவோ அவசர அவசர மாக பேசவேண்டும்போல இருந்தது. ஆனால் சத்தம் வெளியே வரவில்லை.
"என்ன அம்முக்குட்டி?''
"ஒண்ணுமில்ல...'' இப்படித்தான் கூறினாள். பிறகு... அங்கு நிற்கமுடியவில்லை. அவள் நடந்தாள். "விசேஷமா... ஒண்ணுமில்லையே?'' சுகுமாரன் நாயர் உரத்தகுரலில் கேட்டான். அது காதில் விழாததைப்போல காட்டியவாறு, நடப்பதற்கு மட்டுமே அவளால் முடிந்தது.
மாங்கோலத்தெ இல்லத்தை அடைந்தபோது, நேரம் சற்று கடந்துவிட்டிருந்தது.
"ஊனக்கா- எங்கே?'' பல தொண்டை களும் கேட்டன. அப்படி அழைத்தது அன்று ஏனென்றே தெரியாமல் அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியது.
"உங்களோட தலையில...' என்று அவள் பதில் கூறவில்லை.
பாத்திரங்களைக் கழுவும்போதும் சந்தனத்தை அரைக்கும்போதும் கைகள் சோர்ந்தன. அமைதி யற்ற ஒரு தாளம் நரம்புகளில் பயணித்துக் கொண்டிருந்தது.
அவளை அழகி என்று கூறிய ஒரு ஆண் இந்த பூமியில் இருக்கிறான்... ஒரு இளைஞன்... அவன் அவளிடம் பேசினான்! எனினும், அவனுடைய கால் பாதத்திற்கடியில் ஏதோவொன்று மூச்சை அடைத்து மரணிக்கிறது. ஒரு பெண்ணின் நெஞ்சு!
இரண்டு நாட்களுக்கு அம்முக்குட்டி மாங்கோலத்தெ இல்லத்திற்குக்கூட செல்லவில்லை. உடல்நலக்குறைவு என்று கூறிவிட்டு, அறையைமூடிப் படுத்து விட்டாள்.
மூன்றாவது நாளன்று அவள் சுகுமாரன் நாயரின் ஜன்னலுக்குக் கீழே தோன்றியபோது, அந்த இளைஞனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
"என்ன அம்முக்குட்டி... விசேஷம்?''
பதில் வரவில்லை
அவள் தேம்பியழுதாள். சுகுமாரன் நாயர் அவளையே சிறிதுநேரம் பார்த்தான். தொடர்ந்து கூறினான்: "அழாதே. தெரியுதா? அழக்கூடாது.''
அவளுக்கு மேலும்... மேலும் அழுகை வந்தது. அங்கிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு போகவும் செய்தாள். சுகுமாரன் நாயரோ... சிந்தனையில் மூழ்கிவிட்டான். இதற்கு அர்த்தமென்ன?
பிறகு... அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். பார்க்கவேண்டுமென்று நினைத்தல்ல. பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக மறைந்து... மறைந்து நடந்து... சந்தித்ததுதான் பொதுவாக நடந்தது.
"நீயா?''
"ம்...''
ஒரு விசாரித்தலும் ஒரு முனகலும்... இருவரும் விலகிச்செல்லவும் செய்தார்கள்.
முன்பைவிட அதிகமான முறை சுகுமாரன் நாயர் குடும்ப வீட்டிற்கு வந்தான். பெரியவரிடம் பணம் கேட்பான். கிடைத்தால் வாங்கிக்கொள்வான். இல்லாவிட்டால்...
பேசாமல் போய்விடுவான். சண்டையோ வாக்குவாதமோ இல்லை. அதுமட்டுமல்ல... பிறகு... பிறகு... பணம் கேட்பதும் இல்லாமற் போனது.
"சுகுமாரனுக்கு தன்னம்பிக்கை வந்திருச்சின்னு தோணுது' என்று பெரியவர் சமாதானப்படுத்திக் கொண்டார். அவர் தன் இல்லத்தரசியிடமும் கூறினார். அது அறையிலிருந்து அறைக்குப் பரவவும் செய்தது. பிறகு... பத்து நாட்களுக்கு சுகுமாரன் நாயருக்கு தன்னம்பிக்கை வந்து சேர்ந்ததுதான் அங்கு பேசப்படும் விஷயமாக ஆனது.
இந்த அபிப்பிராயம் அதிகரித்து வரவர... பெரியவருக்கு ஒரு சிந்தனை வந்தது. தன்னம்பிக்கையை ஆணியடித்து உறுதிப்படுத்துவதற்கு திருமணம் என்ற விஷயம் நல்லது... இல்லத்தரசியின்மூலம் சுகுமாரன் நாயரிடம் கேட்டார். அவன் எதிராக இல்லை.
"சுகுமாரா... எங்க கேட்போம்?'' -இல்லத்தரசி.
"எங்கும் கேட்கலாம்.''
அந்த அளவிற்குப் பெரிய மாறுதலை எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு சந்தோஷம்... பெரியவருக்கும்.... எல்லாருக்கும்...
இரண்டு தானிய அறைகளும், ஒரு தொழுவமும், எட்டு அறைகளைக் கொண்ட மாளிகையும், ஐந்து பாம்புப் புற்றுகளும், ஒரு பகவதி மண்டபமும் உள்ள ஒரு குடும்பத்திற்குத் திருமண ஆலோசனை சென்றது.
"பொண்ணைப் பார்க்கவேணாமா?'' பெரியவர் சுகுமாரன் நாயரிடம் கேட்டார்.
"வேணாம்...''
"அந்த குடும்பத்திற்கு ஒருமுறை போகவேணாமா?''
"வேணாம்...''
"பொண்ணோட பெரியவங்களோட கொஞ்சம் அறிமுகமாகிக்கொள்ள வேணாமா?''
"வேணாம் மாமா... அதையெல்லாம் நீங்க முடிவுசெஞ்சா போதும்.'' பெரியவர்களை மதிக்கக்கூடிய இளைஞன் என்பதை மனதிற்குள் நினைத்து, பெரியவர் திருமணத்தை உறுதிசெய்தார். நாட்கள் அந்த வகையில் நகர்ந்துசென்றன. இன்னும் இரண்டு நாட்கள் கடந்தால், அவன் ஒரு கணவனாவான். ஆகட்டும்...
சுகுமாரன் நாயர் அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. சிந்திக்க இருக்கும் வேறு விஷயங்கள் மூளையை நிறைத்துக் கொண்டிருக்கின்றன.
அன்று மாலையில் குளத்தின் மேற்கு வாசலில் கையைப் பின்னால் கட்டியபடி அவன் நடந்து கொண்டிருந்தான்.
சுற்றிலும் இருள் படர்ந்துகொண்டிருந்தது.
திடீரென... ஒரு காலடிச் சத்தத்தைக்கேட்டு அவன் திரும்பி நின்று கேட்டான்:
"யாரு?''
"நான்!'' அந்த பதில் தெளிவாக இருந்தது.
"என்ன... அம்முக்குட்டி?''
"சொல்லிட்டு போறதுக்காக வந்தேன்.''
சிறிது நேரத்திற்குப் பேரமைதி...
"எங்க போறே?''
மீண்டும் பேரமைதி...
"ஏன் போறே?''
"இருக்கணும்ன்ற நிலை இல்லாததால...''
சுகுமாரன் நாயர் மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்தான். பிறகு கேட்டான்:
"நான்தான் காரணமா?''
"ஆமா...''
"அப்படியா!'' அவளுடைய அந்த வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை.
அவளுடன் உண்மையிலேயே நான்கு வார்த்தைகள் பேசக்கூட செய்திராத தான் அவளுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறாளே! ஒரு நிமிடம் கழித்து அவன் கேட்டான்:
"நான் எந்த வகையில காரணமானேன்?''
"தெரியாத விஷயமில்லையே?''
"நான் எதுவுமே செய்யல.''
"எல்லாத்தையும் செஞ்சீங்க. அது இருக்கட்டும்... நான் போறேன்.''
"நில்லு... சொல்லிட்டுப் போ....''
"நான் ஒரு ஊனக்கா-... அப்படிதான் வாழ்ந்துகிட்டிருந்தேன். ஆனா... என்னை சொல்லி அழகியா ஆக்குனீங்க. பிறகு...''
அம்முக்குட்டியின் தொண்டை இடறியது. "எனக்கு ஆட்சேபணை இல்லை. நான் திருப்தியோட திரும்பிப் போறேன். எங்க வேணும்னாலும் செல்லலாம். என்னை மனிதப் பிறவியா நினைக்கக்கூடிய ஒரு ஆளாவது இந்த பூமியில இருக்கிறாரே என்பதை எண்ணி நான் சந்தோஷப்படலாமே! இருக்கட்டும்...''
அந்த மங்கலான சூழலில் அவளுடைய முகத்தைத் தெளிவாக பார்க்க இயலவில்லை என்றபோதும், அந்த கண்கள் நிறைந்து ததும்பி இருக்கின்றன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. இருவரும் எதுவும் பேசவில்லை. நொடிகள் முறிந்து... முறிந்து விழுந்தன. அவள் மீண்டும் விடைபெறுவதற்காகக் கேட்டாள்: "நான் போகட்டுமா?''
"நான் யார்னு தெரியுமா?''
"தெரியும்.''
"என்னால உனக்கு கெட்டது நடக்கும்.''
"அதனால பரவாயில்ல... என்னை மிதிச்சுக் கொல்லுங்க. அதுக்காகவாவது ஒரு ஆள்...''
அவள் வாக்கியத்தை முழுமை செய்யவில்லை. சுகுமாரன் நாயர் அதிர்ச்சியடைந்து விட்டான்.
"சரி... போ...''
ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் திரும்பி நடந்தாள். இரண்டடிகள் வைத்தவுடன், பின்னாலிருந்து அழைப்பது காதில் விழுந்தது.
"வண்டிக் கூலிக்கு காசு இருக்கா?''
"இருக்கு...''
"பணம் தர்றேன்.''
அதற்கு பதில் வரவில்லை.
காலடிகளுக்குக் கீழே காய்ந்த இலைகளின் அழுகைகள் விலகிவிலகி போய்க்கொண்டிருப்பதை அவன் கேட்டான். சுகுமாரன் நாயர் வீட்டிற்குள் நுழைந்தான். அறையில் இங்குமங்குமாக நடந்தான். எவ்வளவு நேரம் இவ்வாறு நடந்தோம் என்று அவனுக்கே தெரியாது. இறுதியில்... திடீரென ஒரு சட்டையை எடுத்து அணிந்தான். பணப்பையைத் தேடி எடுத்தான். வேட்டியை எடுத்து தலையில் கட்டினான். வெளியேறினான். கதவை வெளியே பூட்டினான். அவன் இருட்டிற்குள் இறங்கினான்.
அவனுடைய முரட்டுத்தனமான காற்பாதங்களில் கிடந்து காய்ந்த இலைகள் நொறுங்கின. அந்த நொறுங்கல் சத்தமும் விலகி... விலகிச் சென்றது.
மறுநாள் அந்த ஊரில் இரண்டு வீடுகள் பூட்டப் பட்டிருப்பதைப் பார்த்தார்கள்.