மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போன எங்கள் நண்பனுக்கு அந்த இரண்டு திருக்குறள்கள் மட்டும் நன்றாகத் தெரியும்.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்- அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு'

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

Advertisment

மெய்வருத்தக் கூ- தரும்'

இவையிரண்டும் நண்பனின் மனதில் பதிந்ததற்கு காரணம், "பல்லாண்டு வாழ்க'' படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் புலவர் புலமைப்பித்தன் எழுதிய "ஒன்றே குலம் என்று பாடுவோம்' பாடலின் தொடக்கத்தில் தொகையறாவாக இரு குறள்களும் அமைந்திருந்ததுதான்.

என்னைப் போலவே எம்.ஜி.ஆர் படங்களின் ரசிகனான அந்த நண்பனுக்கு அவை திருக்குறள் என்பதுகூட தெரியாது. "எம்.ஜி.ஆர். பாட்டு' என்ற அளவில்தான் மனதில் பதிந்திருந்தது. நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போது அந்த நண்பன் சினிமா தியேட்டருக்குப் போவது வழக்கமாகிவிட்டது.

Advertisment

எம்.எஸ்.வி. இசையில் "அன்றொரு நாள் இதே நிலவில் அவள் இருந்தாள் என் அருகே'' என்று "நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் தோன்றும் பாடல் காட்சி, "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்..' என்கிற சங்க இலக்கிய வரிகளி-ருந்து பாமர ரசிகனுக்காக கவிஞர் கண்ணதாசன் பிழிந்தெடுத்த சாறு என்பதை நண்பனின் மனது அறியாது.

cc

சினிமா போஸ்டர்களை மெல்ல மெல்ல எழுத்துக்கூட்டிப் படித்துப் பழகி, படத்தின் பெயரைத் தெரிந்துகொண்டு தியேட்டருக்குப் போன நண்பனுக்கு, மேலும் பல இலக்கிய வரிகள் மனதில் பதிந்தன. சிவாஜி நடித்த திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற திருஞானசம்பந்தரின் "காதலாகி கசிந்து.. கண்ணீர் மல்கி.. ஓதுவார் தம்மை நன்னெறி உய்ப்பது..,' திருநாவுக்கரசரின் "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்...' ஆகிய தேவாரப் பதிகங்களும் அந்த நண்பனுக்கு மனப்பாடம்தான்.

காலம்தோறும் மாணவப் பருவத்தினருக்கு திரை வழியே மனப்பாடம் ஆன பாடல்களின் வரலாறு தொடர்கிறது. ரஜினியின் "தளபதி' படம் ரிலீசான கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்க உதவியது, இளையராஜா இசையில் அதிர்ந்து கலக்கிய "ராக்கம்மா கையத் தட்டு' பாட்டு. ஆம்.. அதன் நடுவில் இடம்பெற்ற திருநாவுக்கரசரின் "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்' என்கிற திருவிருத்தம், மாணவர்கள் மனதில் எளிதாகப் பதிந்து தேர்வு அறையில் "பிட்' இல்லாமல் எழுதச் செய்தது.

"தளபதி'யுடன் தீபாவளிக்கு ரிலீசான கமலின் "குணா' படத்தில், அதே இளையராஜா இசையில் "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க' பாடலின் நடுவில், "இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி..' என்கிற அபிராமி அந்தாதியும் மாணவர்கள் மண்டையை உடைத்துக் கொள்ளாமல் மனப்பாடம் செய்த பாடலாகும்.

"மெல்லப் பேசுங்கள்' படத்திலிருந்து தீபன் சக்ரவர்த்தி- உமா ரமணன் பாடிய பாடல் என்ற வானொலி அறிவிப்புக்குப் பின் தொடங்கிய பாடலைக் கேட்டபோது, "இது நம்ம பெரிய கோவிலில் காலையில் கேட்குற பாட்டாச்சே என்றது மனது. "கூவின பூங்குயில்.. கூவின கோழி.. குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்.. யாவரும் அறிவரியாய்.. எமக்கெளியாய்.. எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே' என்கிற மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிகுப் பிறகே, "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு..வெண் பஞ்சு மேகமே கோலம் போடு' என்ற அருமையான பல்லவியுடன் பாடல் தொடங்கும்.

பக்தி இலக்கியங்கள் பலவற்றை இதுபோல இளையராஜா தன் பாடல்களின் வழியே செவிக்குள் நுழைத்து, சிந்தைக்குள் இறக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சங்க இலக்கியங்கள் 90 ந்ண்க்ள், 2ந் ந்ண்க்ள் நெஞ்சங்களில் பதியம் போட்டன. அவரது இசையில் வெளியான "என் சுவாசக் காற்றே' படத்தில் "தீண்டாய்.. மெய் தீண்டாய்' பாடலின் தொடக்கத்தில், "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது..' என்கிற வெள்ளிவீதியாரின் குறுந்தொகை பாடல் இடம் பெற்றது.

cc

இருவர் படத்தின் "நறுமுகையே..நறுமுகையே..' என்ற இலக்கியச் செழுமையான பாடலின் இடையில் கவிஞர் வைரமுத்து, "அற்றைத் திங்கள் அந்நிலவில்', "யாயும் ஞாயும் யாராகியரோ' என சங்க வரிகளைக் கோத்துக் கொடுத்திருப்பார்.

"காதலன்' படத்தில் வரும் "இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ..மனம் முந்தியேதோ.. விழி முந்தியதோ.. கரம் முந்தியதோ..' என்ற குற்றாலக் குறவஞ்சி வரிகள் ரஹ்மான் இசையில் இதயத்தை இனிக்கச் செய்தது. சங்கமம் படத்தில் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்...' என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளின் திருப்பாவையைத் தொகையறாவாக வைத்து, "மார்கழித் திங்கள் அல்லவா..' எனத் தொடரும் எஸ்.ஜானகியின் குரலில்தான் எத்தனை கோடி இன்பம்.

"விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் "மன்னிப்பாயா..' பாடலின் இடையில் "அன்பிற்குண்டோ அடைக்குந்தாழும்', "புலம்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம்' என்கிற வள்ளுவர் வரிகளும் நெஞ்சத்தை என்னென்னவோ செய்துவிட்டுப் போகும்.

cc

எந்தவொரு திரைப்படத்திற்கானப் பாடலாகவும் இல்லாமல், அதேநேரத்தில் எல்லாத் திரையரங்குகளிலும் வெளியிடப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் செம்மொழிப் பாடலில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்' என இலக்கிய வரிகளில் தொடங்கி தொல்காப்பியர், கம்பர், அவ்வையார் என தமிழின் சிறப்பனைத்தையும் இனிய இசைப் பெட்டகமாக மில்லினியம் தலைமுறைக்குத் தந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சகா படத்தில், "யாயும் ஞாயும் யாராகியரோ.. எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்.. செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற குறுந்தொகையே பல்லவியாய் அமைந்த பாடலை ஷபீர் இசையில் கேட்டபோது, இதற்கு மேல் வாழ்க்கையில் அனுபவிக்க என்ன இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தின சங்கத் தமிழ் வரிகள்.

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை யானதும் மக்கள் காப்பியமுமான சிலப்பதிகாரத்தை "பூம்புகார்' திரைக் காவியமாகத் தந்தார் கலைஞர். அதில் டி.சுதர்சனம் இசையில், "பொன்னாள் இதுபோலே..' என்ற பாடல் ஒலிக்கும்.

அதன் நடுவில் இனிக்கும், "மாசறு பொன்னே.. வலம்புரி முத்தே.. காசறு விரையே.. கரும்பே.. தேனே.. மலையிடை பிறவா மணியே என்கோ.. அலை யிடை பிறவா அமிழ்தே என்கோ' என்கிற இளங்கோவடிகள் வரிகள்.

வங்காள இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி தமிழில் இசைத்த "கரும்பு' படத்தில், "திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி..' என சிலப் பதிகாரத்தில் போற்றப்படும் "நடந்தாய் வாழி காவேரி' திரைப்பாடலானது.

மகாகவி பாரதியாரின் பாடல்கள் திரையிசைக்கு எல்லாக் காலத்திலும் பொருந்தக் கூடியவை. கப்பலோட்டிய தமிழன் படத்தின் ஜி.ராமநாதன் இசையில், "காற்று வெளியிடைக் கண்ணம்மா'வும், ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலான "காக்கைச் சிறகினிலே நந்தலாலா'வும் எப்போதும் சுகம்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் "சங்கே முழங்கு' பாடல், தமிழ் போற்றும் கலை மேடைகள்தோறும் ஒளிவீசும் "கலங்கரை விளக்கம்'. "பஞ்சவர்ணக்கிளி' படத்தில் இடம்பெற்ற, "தமிழுக்கும் அமுதென்று பேர்..' - திகட்டாத அமுதம்.

எம்.ஜி.ஆர் நடித்த "சந்திரோதயம்' படத்தின் தொடக்கத்திலும், "பல்லாண்டு வாழ்க' படத்தின் நடுவிலும் "புதியதோர் உலகம் செய்வோம்' என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் இருவிதமான மெட்டுகளிலும் கட்டுக் குலையாமல் கம்பீரமாய் ஒலிக்கும்.

"சிவப்பதிகாரம்' படத்தில் "கொலைவாளினை எடடா' என்ற பாட்டு, தமிழச்சியின் கத்தி. "அச்சம் என்பது மடமையடா' படத்தில் "அவளும் நானும் அமுதும் தமிழும்' என்பது எதிர்பாராத முத்தம். தலைமுறைகள் கடந்தும் திரைஇசைக்கேற்ப பொருந்துகிற அந்தப் புதுவைக் குயிலின் பாடல்களில் என்னை எப்போதும் கவர்ந்தது, "நான் ஏன் பிறந்தேன்' படத்தில் சங்கர்கணேஷ் இசையில் ஒலித்த, "சித்திரச் சோலைகளே.. உமை திருத்த இப்பாரினிலே.. முன்பு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே..'

அந்தப் பாடலில், "தாமரைப் பூத்த தடாகங்களே உம்மை தந்த அக்காலத்திலே.. எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததை சொல்லவோ ஞாலத்திலே' என்று இன்றைய அரசியல் ஆபத்தையும் சேர்த்தே பாடியிருப்பார் பாவேந்தர்.

இலக்கியம் ஒரு பெருங்கடல். கடலின் ஆழம் அறியாதவர்கள் கரையில் நின்று அலை வழியே கடலை ரசிப்பது உண்டு. அலையை, "திரை' என்கிறது செந்தமிழ். அந்த "திரை'த் தழுவும் கரை நின்று, கடல் ரசித்த பொழுதுகளில் பாடல்கள் கூட பாடங்களாயின.

"திருவிளையாடல்' படத்தில் சிவனுக்கும் நக்கீரனுக்குமான வாதப்போரில், "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி' என நடிகர் திலகம் சிவாஜியின் சிம்மக்குரலில் ஒலித்த குறுந்தொகை செய்யுளும் பாடப்புத்தகத்தைப் படிக்காமலேயே மனப் பாடமானது.

மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போன எங்கள் நண்பன், திரைப்பாடல்களைக் கேட்டும், சுவரொட்டிகளை எழுத்துக் கூட்டிப் படித்தும் தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டு, வாழ்க்கைப் பாய்மரப் படகை கச்சிதமாகக் கையாண்டான். ஏட்டுக் கல்வி கிடைக்காமல் போனவன், பாட்டுக் கல்வியால் மேம்பட்டு இன்று ஒரு புத்தகக் கடையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறான்.