விதை, இலக்கியம், தமிழ் மேடைகள், தொலைக் காட்சி அரங்குகள், திரைப் பாடல்கள் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா. பிரபலங்களின் காதலராகவும் மேடைகளின் நாயகராகவும் இருக்கும் அவரை, நம் இனிய உதயத்துக்காக சில கேள்விகளுடன் சந்தித்தபோது...

ஈன்று புறம் தந்தும், சான்றோனாக்கியும் உங்களை உயரவைத்த அன்னை, தந்தை பற்றிச் சொல்லுங்கள்?

என் தந்தை டி.ஆர்.சங்கரன், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். அலுவலக வேலையிலேயே அதிகம் கவனம் செலுத்திய அப்பாவிற்கு சினிமா மோகம் உண்டு. இலக்கிய ஈடுபாடு கிடையாது. ஆனால் என் அம்மா தீவிர வாசிப்பாளர், லெட்சுமி தொடங்கி நா.பா வரை அனைவரின் எழுத்துக்களையும் வரி விடாமல் வாசிப்பார். அதே சமயம் கல்கியின் பரம ரசிகை.

Advertisment

dd

அம்மாவிடமிருந்த வாசிப்பு எனக்கும் வலைவிரித்தது. பொன்னியின் செல்வனையும் புதுமைப்பித்தனையும் பள்ளி விடுமுறை நாட்களில் எனக்குள் பதியம் போட்டவள் என் அம்மாதான். கன்னித்தீவு - அம்பு-மாமா - தினத்தந்தி தொடர்கள் - குமுதம் - மர்ம நாவல்கள் - குடும்ப நாவல்கள் தான் என்னைப் படிப்பில் ஏற்றிய படிக்கட்டுகள்.

இலங்கை வானொலிக்குள் என்னை அடைத்து வைத்து ஏறக்குறைய ஆயுள் தண்டனையையே அனுபவிக்க வைத்த பெருமை அப்பாவிற்குத்தான் உண்டு. ரேசன் கார்டில்தான் சேர்க்க முடியவில்லையே தவிர மற்றபடி இலங்கை வானொலி எங்கள் குடும்ப உறுப்பினராகி சினிமா பாடல்களுக்குள் என்னை சிறைப்படுத்தியது. இப்படித்தான் அப்பா சினிமாவிற்கும், அம்மா இலக்கியத்திற்கும் அடித்தளமிட்டார்கள் எனக்குள்.

“திருநெல்வேலியின் மணலும் தமிழ் பேசும்” என்று உங்கள் ஊர் பற்றி வாரியார் சுவாமிகள் சொல்லி இருக்கிறாரே?

உண்மைதான். அதனால் தான் தமிழ்க் கண்டதோர் பொருனை நதி என்று பாரதி பாடினான். நான் அடிக்கடி சொல்லுவேன். முத்தமிழில் மூன்றாம் தமிழாம் நாடகத் தமிழை வளர்த்தது நான்மாடக் கூடலாம் மதுரை, இடைத்தமிழாம் இரண்டாம் தமிழை வளர்த்தது தஞ்சை, முதல் தமிழாம் இயல் தமிழை வளர்த்த பெருமை திருநெல்வேலிக்கே உண்டு.

பேச்சிற்கு - ரா.பி. சேதுப்பிள்ளை, கவிதைக்கு - பாரதி, கதைக்கு - புதுமைப்பித்தன் என்று படைப்பாளி களை எங்களுக்கு பரிசாய்க் கொடுத்தது மட்டுமல்ல, அந்த படைப்புகளை எப்படி ரசிப்பது என்று சொல்லிக்கொடுத்த ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரையும் கொடுத்தது. திருநெல்வேலிதானே. அதனால் வாரியார் சொன்னது உன்மை தான்.

Advertisment

dd

பதின் வயது அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்க ளேன்?

நான் பிறந்த தேவநல்லூர், குறிஞ்சியும் முல்லையும் கூட்டணி வைத்துள்ள ஒரு குட்டிக் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிற களக்காடு எனும் பேரூருக்கு அருகில் இருக்கிறது. எட்டாம் வகுப்புவரை தேவனூரில் படித்த நான், அதன்பின் படித்தது களக்காட்டில். தேவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் மன்றக் கூட்டம்தான் என்னை மேடைப் பேச்சாளனாய் மெருகேற்றியது. ஆசிரியர்கள் நம்பியும், விக்டரும் தான் எனக்கு வகுப்பறையில் கிடைத்த வளர்ப்புத் தாய்கள். அதன்பின் களக்காடு வட்டாரங்களில் நடந்த பேச்சுப் போட்டிகளுக்கு என்னை போட்டியாளராக அனுப்பிவைத்து அழகு பார்த்த, களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் சிவ.வைத்தியலிங்கம்- செல்வகணபதி என்ற இரட்டைக் காப்பியங்கள்தான் என்னை பதின் வயதில் பண்படுத்தியவர்கள்.

மேடைப்பேச்சுக்களில் - நாவல்களில் - திரை இசைப் பாடல்களில் தேங்கிக் கிடந்த தமிழை நான் தேடத் தொடங்கினேன்.

திரையுலகின் முன்னோடிப் பாடலாசிரியர் கள் பற்றி?

திரை இசைப் பாடல்களை தெய்வீகப் பாடல்களாக்கியவர் பாபநாசம் சிவனென் றால், திராவிடச் சிந்தனைகளோடு உலாவ விட்டவர் உடுமலைக் கவிராயர். அதையே ஜனரஞ்சகப் பாடல்களாக்கிப் பார்த்தவர் தஞ்சை ராமையாதாஸ் என்றால், பாத்திரங் களுக்கேற்ப பாடல்களின் கருத்தை பதிவு செய்தவர் மருதகாசி - ஊடே அதையே உழைப் பாளிகளின் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிக் காட்டியவர் பட்டுக்கோட்டை. நாற்பதுகளின் கடைசியில் வந்த கண்ணதாசனும், ஐம்பதுகளின் கடைசியில் வந்த வாலியும்தான் அறுபது எழுபதுகளில் கோடம்பாக்கத்தில் கொடிகட்டியவர்கள்.

மருதகாசியிடமிருந்த பாட்டுத் திறனோடு கவிதைத் திறனுமிருந்த கண்ணதாசனும் - தஞ்சை ராமையா தாசிடமிருந்த வார்த்தைத் திறனோடு இலக்கியத் திறனுமிருந்த வாலியும் அந்த இருபது ஆண்டுகளும் பாட்டுப் பகுதியை ஆண்டவர்கள்.

வரிகள்தோறும் வாழ்க்கையைப் பிழிந்து கொடுத்த கண்ணதாசன் ஒர் அகநானூறு. பாடல்கள் தோறும் பொதுநலக்கருத்துக்களை பொதிந்து கொடுத்த வாலி ஒரு புறநானூறு. அகவையில் மட்டுமல்ல அறிவில் - அனுபவத்தில் - ஆற்றலில் தன்னி லும் கண்ணதாசன் உயர்ந்தவர் என்பது வாலியின் கருத்து. வாலி தான், தன் வாரிசு என்பது கண்ணதாசனின் கருத்து.

கவியரசரைப் போல் மரபுக்கவிதையாய் காவியக் கவிஞராலும் - வாலியைப் போல புதுக் கவிதையாய் கண்ணதாசனாலும் பாடல்களை எழுத முடியாது என்பதே என் பணிவான கருத்து.

கலைஞரின் தொடர்பு பற்றி?

அது 2003 டிசம்பர் 10. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனை மின்னுபக் கோட்டத்தில் அமர்ந் திருந்தேன். அலைபேசி ஒன்று வந்தது எனக்கு. “நான் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் பேசுகிறேன். உங்களு டைய கவிதை ஒன்றை படித்து விட்டு தலைவர் ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். அதை கோபாலபுரம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்றது மறுமுனை.

எனக்கு நம்பவே முடியவில்லை. நான் கேட்டேன் “ஐயா நான் நெல்லை ஜெயந்தா. நீங்கள் எனக்குத் தான் பேச வேண்டுமா?” என்றேன். “நீங்க எழுதுன புத்தகம் தானே ’தென்றலோடு சில தினங்கள்’. அதப் படிச்சுட்டுதான் தலைவர் உங்களை பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அத வந்து வாங்கிக்கங்க” என்றார் சண்முகநாதன்.

மறுநாள் காலை கோபாலபுரம் சென்று சண்முகநாதனை சந்தித்தேன். கலைஞர் தன் கைப்பட எனக்கெழுதிய பாராட்டு கடிதமொன்றைக் கொடுத்தார். என் இதயத்தையே கைகளால் தொடுவதைப்போல் உணர்ந்தேன். வானவில் தடவிக் கொடுத்த வண்ணத்துப் பூச்சியாய் திக்குமுக்காடினேன்.

dd

எனக்குப் பாரட்டுக் கடிதமெழுதிய கலைஞருக்கு நன்றிக் கடிதமொன்றை கொடுத்துவிட்டு திரும்பினேன் நான். இரண்டாவது நாளும் இன்ப அதிர்ச்சி எனக்கு.

எனது நன்றி உணர்வு குறித்தும் அந்த நன்றிக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு கவிதைகள் குறித்தும் மறுநாள் முரசொலி உடன்பிறப்பு மடல் முழுதும் எழுதி, என்னை ஏவுகணையில் ஏறிய மனநிலைக்கே மாற்றிவிட்டார் கலைஞர்.

என்னை நேரில் பார்க்க ஆசைப்பட்டு வீட்டிற்கு அழைத்தார். அடுத்த இரண்டு நாட்களில் நேரில் பார்த்தபோது தலைவரின் தாயன்பால் தத்தளித்துக் கொண்டிருந்த நான், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் கலைஞரின் கால்களில் விழுந்து கதறி அழுதேன். என்னையும் என் கவிதைத் திறனையும் ஒரு பக்கம் எழுதி உச்சி முகர்ந்ததற்காக இன்னொரு நன்றிக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். அடுத்த சில நாட்களிலேயே தனக்கு வந்த கடிதங்களில் தனக்குப் பிடித்த கடிதங்களாக சில கடிதங்களை முரசொலியின் உடன்பிறப்பு மடலில் குறிப்பிட்டிருந்த கலைஞர் அவற்றுள் ஒன்றாக நான் அவருக்கு எழுதிய இரண்டா வது நன்றிக் கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தார். கவிதைக்கும் கடிதத்திற்கும் இப்படி ஒரு பாராட்டு யாருக்குமே கிடைத்ததில்லை என்றார் கலைஞரின் வீட்டிலிருந்த செயல்மணி.

இன்னும், ஒரு ஆலமரமே அத்தனை விழுது களாலும் என்னை அணைத்துக்கொண்ட வினாடி களிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.

என்னைப் பாதி கவிஞன் ஆக்கியது கலைஞர். மீதி கவிஞன் ஆகியது மேத்தாவும் வைரமுத்துவும் என்று அடிக்கடி கூறியிருக்கிறீர்களே?

தமிழின்பால் ஆசிரியர் எனக்குள் ஏற்படுத்தியிருந்த ஆவலை காதலாக மாற்றியவர் கலைஞர்தான். அதன் பிறகு எனக்கு வலை விரித்தது வைரமுத்துவின் தமிழ்.

நிழல்கள் - அலைகள் ஓய்வதில்லை - சிவப்பு மல்லி, பாடல் களெல்லாம் வயதுக்கு வந்துகொண்டிருந்த என்னை வளைத்துப் பிடித்தன. திரை இசைப்பாடல்களால் தத்தளித்துக் கொண்டிருந்த மனசு, புதுக்கவிதைகளின் பக்கம் புரண்டது. கண்ணீர்ப்பூக்கள் வழியாக என்னை கடத்திப்போனார் மு.மேத்தா. ’இதுவரையில் நான்’ வழியாக வைரமுத்துவும் கண்ணீர்ப்பூக்கள் வழியாக மேத்தாவும் புதுக்கவிதை எப்படி எழுதுவது என்பதற்கு எனக்கு கிடைத்த துரோணர்கள் ஆனார் கள். அங்கிருந்து தொடங்கியது என் புதுக்கவிதை பயணம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?

2005 -ல் ஈரோடு புத்தகக்காட்சி. அன்று கவிக்கோ தலைமையில் கவியரங்கம். தங்கியிருந்த விடுதியிலிருந்து கவிக்கோவுடன் சிற்றுந்தில் புறப்பட்டோம். கவிஞர் பழனிபாரதியும் நானும் போகும்போதே கவியரங்கில் எந்த வரிசையில் கவிஞர்களைப் பாட அழைப்பது என்பது பற்றி பழநிபாரதியிடம் விவாதித்தார் கவிக்கோ. பழநிபாரதி “ஜெயந்தாவை கடைசியாக அழைக்கலாம்” என்று சொல்ல, “இல்லை இல்லை இந்தத் தம்பி, முதலில் பாடட்டும்” என்ற கவிக்கோ கவிஞர்களின் வரிசையைச் சொன்னார். பொதுவாக சுமாராக பாடுகிறவர்களை முதலிலும் நன்றாக பாடுபவர்களை நிறைவிலும் பாடச்சொல்லுவார்கள்.

ஏற்கனவே ஒரு சம்பவத்தில் கோபத்தில் இருந்த என்னை இது மேலும் கோபப்படுத்தியது. கவியரங்கில் நின்று விளையாடினேன். அரங்கம் கைதட்டி கை தட்டி ஆரவாரம் செய்தது. நான் பழனிபாரதி -

யுகபாரதி - விவேகா - ரேவதி என அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து உணவு அருந்துகிறநேரம். கவிக்கோ சொன்னார் ஜெயந்தா இன்னைக்கு கவியரங்கில் கோல் அடித்து விட்டீர்கள். இது என் வார்த்தை இல்லை. 50 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசன் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தை. அதைத்தான் இன்று நான் உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.

கவியரங்கம் என்றாலே கவிக்கோதான் என்கிறது கணக்கு. அந்தக் கவிக்கோவே இப்படி என்னைப் பாராட்டியபின் வேறென்ன பாராட்டு வேண்டும் எனக்கு.

வாலிபக்கவிஞர் வாலி என்ற தலைப்பில், 82 வாரங்கள் அவரைப்பற்றி நிகழ்ச்சி தந்த அனுபவம் எப்படி இருந்தது?

கவிஞர் வாலியோடு ஏற்பட்ட நட்பு என்பது எனக்கு கடவுளும் தமிழும் கலந்து கொடுத்த வரம்.

அவருடைய பழுத்த அனுபவங்கள் எனக்குப் பாடமாகக் கிடைத்ததால், அவர் வீட்டு வரவேற்புரையே எனக்கு வகுப்பறை ஆகிவிட்டது. அவருடைய நினைவாற்றலும் சொல்லாற்றலும் எனக்குள் படிமங்களாக விழுந்தன என்றால் அவருடைய நேர நிர்வாகமும், வாசிப்புத்திறனும் படிகளாக அமைந்தன. கவிஞர் வாலி இருக்கிற இடம் கலகலப்பாக இருக்கும் என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. அவருடைய நகைச்சுவை உணர்வு அவர் இருக்கும் இடங்களை எல்லாம் பற்றிக்கொள்ளும். எப்போதாவது கோபப்படுவார். ஆனாலும் அந்தக் கோபம் அடுத்த சில மணி நேரங்களில் ஆவியாகி விடும்.

என் அரசுப் பணியை மிகவும் போற்றினார். “நீயும் நானும் பச்சை பச்சையாதாய்யா எழுத முடியும், இவருதாய்யா பச்சையில் எழுத முடியும்” என்று, நான் கெஸட்டட் ஆபிசர் என்பதை தனது பாணியிலேயே பழனிபாரதியிடம் இப்படிச் சொன்னார்.

வாலியோடு இருந்த நாட்களில் கிடைத்த வாழ்க்கை அனுபவம் என்பது கரைந்து போகும் மணல் திட்டுகள் அல்ல. பதிந்து போன கல்வெட்டுகள்!

வைரமுத்துவோடு உள்ள அனுபவம்?

கவிஞர் கலைமதி ஆனந்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொள்ளும் அந்த விழாவின் தொகுப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். வழக்கம்போல் என் தொகுப்புரைக்கு வரவேற்பு. சிறப்புரை ஆற்ற வந்த கவிஞர் தன் உரைக்கு இடையில் அப்படி ஒரு பூமாலையை எனக்கு அணிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தனது சிறப்புரையின் நடுவில் “இங்கே தமிழ் மணக்க மணக்க தம்பி நெல்லை ஜெயந்தா விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இங்கே தொகுப்புரை ஆற்றுகிற கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு சாதாரண கவிஞரில்லை. ஜெயந்தாவைப் பற்றி ஒருநாள் தொலைபேசியில் கலைஞர் என்னிடம் தெரிவித்தார் “நெல்லை ஜெயந்தா என்றொரு கவிஞர் இப்படி எழுதியுள் ளார் படித்தீர்களா?” என்று கேட்டார்.

கலைஞருடைய கரங்களால் குட்டுப்பட்ட வர்கள் யாரும் தோற்றதாக சரித்திரமே கிடை யாது. அந்த வகையில் தம்பி ஜெயந்தாவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது” என்று கவிஞர் சொன்னதும் கோடி சிறகுகள் தேடி வந்து முளைத்தன என்னில். என் ஆதர்ஸக் கவிஞனே எனக்கு ஆரத்தி எடுப்பதைவிடவும் வேறு எந்த ஒரு வரவேற்பு மயக்கிவிடப்போகிறது என் மனதை.

அப்போது அரங்கத்தில் சுற்றிய விசிறியை விடவும் வேகமாகச் சுற்றியது என் உள்ளம் தான்.

மரபுக்கவிதையை விட புதுக்கவிதை பெருகி இருக்கிறதே?

மரபுக் கவிதைகளை விடவும் புதுக்கவிதைகளுக்கு வரவேற்பு அதிகமாகத் தொடங்கியது அனேக மாக எழுபதுகளில்தான். நான் எண்பதுகளின் தொடக்கத்தில்தான் கவிதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் மரபும் புதுசும் உரசிக்கொண்ட மணித்துளிகளை நான் அறியேன். அதேசமயம் நா. காமராசனின் கறுப்பு மலர்களை வாழ்த்தி இருந்தாலும் கண்ணதாசன் போன்ற மரபுக்கவிஞர்கட்கு புதுக்கவிதையின்பால் விருப்பமில்லை என்பதுதான் எனக்குக் கிடைத்த செய்தி.

தற்பொழுது தமிழ் திரை இசைப் பாடல்களை ஆங்கில வார்த்தைகள் அதிகமாக ஆக்கிரமிப்பு கொள்கிறதே?

எந்த ஒரு கலப்படமும் ஆரோக்கியமானதல்ல. உணவில் ஏற்படும் கலப்படம் உண்பவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் வாய்மொழியில் ஏற்படும் கலப்படம் வம்சங்களையே பாதித்துவிடும்.

எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் காலத்தில் இருந்த சினிமாவின் வேக ஓட்டத்தில், தளர்வு ஏற்பட்டுள்ளதாக தென்படுகிறதே!

உண்மைதான். இசை விற்பன்னர்கள் இருந்த இடத்தில் இசை அமைப்பாளர்கள் வந்தார்கள்.

அவர்கள் இருந்த இடத்தில் இன்று “ஒலிப்பதிவுப் பொறியாளர்கள்” உட்கார்ந்துவிட்டனர். அதே மாதிரி இசையறிவும் இலக்கணச் செறிவும் உள்ளவர் கள் இடத்தில் இலக்கிய அறிவு பெற்ற கவிஞர்கள் இருந்தனர். இன்று கவிஞர்கள் இருந்த இடத்தில் பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். இது மலர்ச்சி என்கிறார்கள் சிலர். தளர்ச்சி என்கிறார்கள் சிலர்.

ஒதுக்கி வைத்தாலும், ஒடுக்கி வைத்தாலும் பெண்மைதான் உலகத்தின் பேராளுமை கொண்டது. இது பற்றி உங்கள் அனுபவம் என்ன கூறுகிறது?

பெண்களுக்கு கல்வி வேண்டும் - சுதந்திரம் வேண்டும் - பாதுகாப்பு வேண்டும் - சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கும் இரண்டாவது கருத்தே கிடையாது.

பொருளாதார சுதந்திரம் கிடைக்கட்டும் என்று சொல்லி வேலைக்கு போகச் சொன்னார்கள்.

ஆனால் வீட்டுச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்குப் போகிற பெண்கள்தான் வேண்டுமென்கிற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வீட்டிலும் வேலை அலுவலகத்திலும் வேலை என்று மனஅழுத்தத்தில் தத்தளிக்கிற பெண்களும் கூடிக்கொண்டே போகிறார்கள்.

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை!

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை!- என்றார் கந்தர்வன்.

பெண்களுக்கென்ற இட ஒதுக்கீட்டை அதிகரித்துக் கொண்டே போவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால்.

காரணம் வேலை கிடைக்காத ஆண்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். திருமணமான பின்பு பெண்கள் வருமானம் புகுந்த குடும்பத்திற்கு போய்விடுவதால் ஆண் பிள்ளைகளின் வருமானமில்லாத அவள் பிறந்த வீடு பாதிக்கப்படுகிறது. இதற்காகவே வேலைக்குப்போகிற பெண் களின் திருமணத்தை தள்ளிப்போடுகிற தகப்பன்களையும் நான் பார்க்கிறேன்.

அரசு அலுவலகங்களில் பெண்களின் எண்ணிக்கை தான் இன்று அதிகம். எல்லோரும் நினைப்பது மாதிரி எல்லா அரசு அலுவலகங்களும் 10 மணி முதல் 5.45 மணி வரை மட்டுமே இயங்குவதில்லை. நிறைய அலுவலகங்கள் இரவு 8 மணிவரை இயங்க வேண்டியுள்ளது. தலைமை பொறுப்பிலுள்ளவர் அலு வலகத்தில் இருக்கும்வரை அடுத்த நிலையிலுள்ள வரும் அவசியம் இருக்க நேரிடுகிறது. அவர்கள் பெண் களாயிருந்துவிட்டால் சிக்கலாகிவிடுகிறது.

அதனால் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்றில்லாமல் பதவியின் அடிப்படையில் அது மாற்றப்பட வேண்டும். 8ம் வகுப்பு வரை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பணி இடங்களில் 50 சதவீதம் கூட ஏன் 100 சதவீதம் கூட பெண்களுக்குக் கொடுக்கலாம். அதே சமயம் காலநேரம் பாராமல் களப்பணி ஆற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிற பணியிடங்களில் பெண்களுக்கென்று இடஒதுக்கீடே இருக்கக்கூடாது. பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோம்!

பாடல் எழுதிய முதல் அனுபவம் எப்படி இருந்தது?

மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 99 அக்டோபரில் பணிமாறுதல் வாங்கி சென்னைக்கு சென்றேன். 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் அண்ணன் அறிவுமதிதான் என்னை வித்யாசாகரிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பின் அவ்வப்போது வித்யாசாகரை சந்திப்பேன். நான் சொல்லுகிற கவிதை களை நன்கு ரசிப்பார். ஒரு நாளும் நான் அவரிடம் வாய்ப்புக் கேட்கவில்லை. ஒரு நாள். அவர் 'என்ன ஜெயந்தா சினிமாவில் பாட்டு எழுதுவீர்களா" என்று கேட்கையில் 'நீங்கள் வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் எழுதுவேன்" என்றேன். 'நல்ல இயக்குநர் கிடைக்கட்டும் நானே அறிமுகப்படுத்துகிறேன்" என்றார்.

இதற்கிடையில் ஒருநாள் மதுரைக்கு வந்த கரு. பழநியப்பனை மதுரையில் சந்தித்தேன். அப்போது அவர் பிரிவோம்-சந்திப்போம் படம் பண்ணிக் கொண்டிருந்தார். படத்தின் எல்லா பாடல்களும் முடிந்துவிட்டன. அடுத்த படத்தில் சந்திப்போம் என்றார். திடீரென்று ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. படத்தில் ஒரு திருமணப்பாடல் வைக்க நானும் வித்யாசாகரும் முடிவுசெய்தோம். நீங்கள் எழுதலாம் என்பது எங்கள் இருவரின் விருப்பம். வாருங்கள் என்றார்.

இருவிழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும் என்ற என் முதல் பாடல் தொடங்கியது.

பட்டிமன்றம், கவியரங்கம் இவற்றையெல்லாம் தாண்டி உங்களின் அடுத்த கட்ட இலக்கியப் பணிக்கான திட்டமிடல் ஏதேனும் இருக்கிறதா?

வாணியம்பாடி கவியரங்கமொன்றில் கோவலன் - கண்ணகி பற்றி நான் வாசித்த வரிகளை கவிக்கோ அப்துல்ரகுமான் பாராட்டினார். அன்று முடிவு செய்தேன் சிலப்பதிகாரத்தை புதுக்கவிதையில் எழுத வேண்டுமென்று. அதற்கு முன்பு சில நூல்களை வெளியிட வேண்டியுள்ளது. இரண்டும்தான் என் எதிர்கால இலக்கியப் பணி.

இசையமைப்பாளர்களின் கூட்டுறவு, ஒரு வளர்ந்துவரும் திரைப்பட பாடலாசிரியருக்கு எவ்வளவு முக்கியம் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

திரைப்பாடல்களிள் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் ஓர் உண்மையை நாம் உணரலாம். ஜெயித்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளரோடு சேருகின்ற பாடலாசிரியர்கள்தான் ஜெயிக்க முடியுமென்ற உண்மைதான் அது. கே.வி. மகாதேவனோடும் மெல்லிசை மன்னர்களோடு சேர்ந்ததால் ஜெயித்த கண்ண தாசனும் -எம்.எஸ். விஸ்வநாதனுடனும் இளையராஜா வோடும் சேர்ந்த பின்பு ஜெயிக்க ஆரம்பித்த வாலியும் -

இளையராஜா - ரகுமானோடு சேர்ந்து ஜெயித்த வைரமுத்துவும் - சிற்பியுடன் சேர்ந்து ஜெயித்த - பழநி பாரதி - யுவன் சங்கர்ராஜாவோடு சேர்ந்து ஜெயித்த நா.முத்துக்குமாரும் - இமானோடு சேர்ந்து ஜெயிக்கும் யுகபாரதியும் அந்த உண்மைக்கான உதாரணங்கள்.

இவைதான் நமக்கு இசையமைப்பாளர் - பாடலாசிரியர் கூட்டணியின் இன்றியமையாமையை எடுத்துரைக்கும்.

மேடைகளில் லாவகமாக தமிழைக் கையாளும் ஆளுமை, உங்களுக்கு எப்படி கைவந்தது?

திறமை என்பது ரகசியப் பயிற்சி என்று சொன்னவர் மர்லின் மன்றோ. ஒரு கவியரங்கை எப்படிக் கையாள வேண்டுமென்ற கண்கட்டு வித்தையைக் கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மட்டுமல்ல கவிஞர் வாலி - கவிப்பேரரசு வைரமுத்து - கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றோர்களிடமும் கற்கலாம்.

உரையரங்கத்திற்கும் முன்னோடிகள் பலர் உள்ளனர். இலக்கியத்தையும் கவிதைகளையும் அருவிபோல் இயல் பான மொழியில் இடைஇடையே நகைச்சுவையோடு கொட்டினால் அரங்கமே நமக்கு அடிமையாகிவிடும் என்று அண்ணாச்சி தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் கற்றுக் கொடுத் தார். புதிது புதிதாகப் படித்துவிட்டு மேடைக்கு வரவேண்டுமென்று கற்றுக்கொடுக்கிறார் சொல்வேந்தர் சுகி சிவம்.

மேடைகளை எப்படி கோவிலாக்க வேண்டு மென்று தமிழருவி மணியனும் பேராசிரியர் இராசாராமும் எனக்கு பாடம் நடத்துகிறார்கள்.

நகைச்சுவை உணர்வே நமக்கு இதயங்களிலெல் லாம் இருக்கை தயாரிக்கும் என்று கு. ஞானசம்பந்த னும், திண்டுக்கல் லியோனியும், மா. ராமலிங்கமும் சொன்னால் அதுவே இயல்பாய் இருக்க வேண்டும் என்கிறார் திருவாரூர் சண்முகவடிவேல்.

பாரதி பாஸ்கர் - பர்வின் சுல்தானா - வழக்கறிஞர் சுமதி என்று எல்லோரும் எப்படி மேடைகளை கையாளுவது என்று ஏதேனும் சொல்லித் தருகிறார்கள்.

நீங்கள் எழுதிய படைப்புகள்?

இதுவரையில் நான் கவிதை நூல்கள் ஐந்தையும் உரைநடை நூல்கள் இரண்டையும் உயிர்ப்பித்திருக் கிறேன். எனது கவிதைத் தொகுப்பான “தென்றலோடு சில தினங்கள்” வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானின் அணிந்துரையோடு வந்தது.

அடுத்த தொகுப்பான “திணை மயக்கம்” முத்தமிழர் கலைஞரின் அணிந்துரை யோடு வந்திருக்கிறது.

இந்த இரண்டு தொகுப்புகளும் பாரத மாநில வங்கி கவிதைத் தொகுப்பிற்காக வழங்கும் முதற்பரிசை தொடர்ந்து இரண்டு வருடங்கள் பெற்றன. திணை மயக்கம் கவிதை நூல் தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்பிற்கு பாடநூலாக இருக்கிறது. இதிலுள்ள திணைமயக்கம் என்கிற கவிதைதான் ஆனந்த விகடன் நடத்திய முத்திரைக் கவிதைப் போட்டியில் இலட்சக்கணக்கான வாசகர்களால் தெரிவு செய்யப் பட்டு பரிசு பெற்ற கவிதையாகும். இத்தொகுப்பிலுள்ள “தஞ்சை” போன்ற கவிதைகள் பல கல்லூரி களில் பாடமாக இடம் பெற்றன.

மூன்றாவது தொகுப் பான “நீ நனைத்த பனித் துளிகள் கவிஞர் அறிவுமதியின் அணிந்துரை யோடு வந்த காதல் தொகுப்பு. நான்காவது தொகுப்பாக காவியக் கவிஞர் வாலியின் அணிந்துரை யோடு வந்த நிலாவனம்” திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு பாடநூலாக இருந்தது. இப்பொழுதும் அதிலுள்ள தொப்புள்கொடி என்கிற கவிதை அதே பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் அணிந்துரையோடு வந்த “தொட்டிலோசை” தாயைப் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. சமீபத்தில் “கவிதை உறவு” இதழ் நடத்தியக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது.

வாலிப வாலி, வாலி 100 ஆகிய இரண்டு நூல்களும் காவியக் கவிஞர் வாலியின் வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்பு.

உங்களின் குடும்பப் பின்னணி குறித்து?

எனக்கு கடவுள் கொடுத்த கல்யாணப் பரிசு என் மனைவி உமா. என்னை சிந்திக்க வைப்பதற்காகவே அவளை சந்திக்க வைத்திருக்கிறான் இறைவன். என் இதயம் அவளிடம் அமைதியாக இருப்பதால்தான் என் மூளை என்னிடம் பரபரப்பாக இருக்கிறது. அவள் குடும்பத்தை கவிதையாக வைத்துக்கொள்வதால்தான் நான் கவிதையையே குடும்பமாக வைத்துக்கொள்ள முடிகிறது.

மகன் பிரேம்சங்கர், மகள் லெட்சுமிப்பிரியா இருவருமே பொறியாளர்கள். மகன் அமெரிக்கன் நிறுவனமொன்றில் சென்னை அலுவலகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். அண்ணா பல்கலைக் கழத்தில் கோல்ட் மெடல் எடுத்த என் மகள் குடும்பத் தலைவியாகவே வலம் வருகிறாள். மருமகள் வித்யா லெட்சுமி தனியார் நிறுவன ஊழியர். மருமகன் பூர்ணலிங்கம் எல்&டி நிறுவனத்தில் மேலாளர். அவரும் பொறியாளர். தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதிய, தமிழறிஞர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளையின் கொள்ளுப் பேரன்தான் என் மருமகன். மகனின் மகள் மதியாழினியும் - மகளின் மகள் ஸ்ரீரக்சனாவும் என் கவிதையை விடவும் அழகானவர்கள்.

தொகுப்புரை - சிறப்புரை - கவியரங்கம் - பத்திரிகைக் கவிதைகள் - திரைப்படப் பாடல் என்று இப்படி எல்லாப் பிரிவுகளிலும் எப்படி இயங்க முடிகிறது உங்களால் இன்னொன்றை நீங்கள் இங்கே குறிப்பிட மறந்து விட்டீர்கள். தமிழக அரசின் முக்கியமான ஒரு பொறுப்பில் பொறியாளர் பணியிலிருந்து கொண்டு தான் இவற்றிலும் நான் ஈடுபடுகிறேன். இது எனக்கு பொருளாதாரத்தை நிலையாக கொடுத்திருக்கிறது. ஆனால் புகழைக் குறைவாகத்தான் கொடுத்திருக்கிறது. ஒரே திசையில் இயங்காமல் எல்லா திசைகளிலும் நான் இயங்கியது சரி இல்லை. ஒருமுறை பஞ்சு.

அருணாச்சலத்தை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் “என்னுடைய முதல் பாடலான “சாரதா படப்பாடலும்” சரி, அடுத்து எம்.ஜி.ஆர்.க்கு நான் எழுதிய “பொன் எழில் பூத்தது புதுவானில்” என்ற பாடலும் சரி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. நான் தொடர்ந்து பாடலாசிரியராக பயணம் செய்திருந்தால் இன்னும் புகழடைந்திருப்பேன்.

அப்போது வளர்ந்துகொண்டிருந்த கவிஞர் வாலி பாடலாசிரியராக மட்டும் வலம் வந்து பெரும் புகழ் பெற்றுவிட்டார். எல்லா திசைகளிலும் இயங்கியது தான் நான் செய்த தவறு”.

இயக்குநர் ஏ.எல். பாஸ்கர் ராஜ் (அகடவிகடம்) ராஜ் டிவியில் இயக்கிய “ஆறு மனமே ஆறு” தொடருக் கான தலைப்புப் பாடலை பரத்வாஜ் இசையில் எழுதி னேன். அண்ணன் தம்பி உறவைப் பற்றிய அந்தப் பாடலில் கர்ப்பப் பையில் வந்த உறவு காசில் பிரிவதா காட்டு யானை தந்தம் என்ன காற்றில் முறிவதா?”

என்னுடைய வரிகளைப் பார்த்துவிட்டு, “இவ்வளவு பிரமாதமாக எழுதுகிறீர்களே நீங்கள் ஏன் சினிமாவிற்குள் வரக்கூடாது?” என்று கேட்டார்.

வந்திருக்க வேண்டும். ஆனால் என் கனவுகள் என் குடும் பத்தின் கனவுகளை - என் குழந்தைகளின் கனவுகளை சிதைத்துவிடக்கூடாது என்றுதான் சேப்பாக்கத்தை விட்டுவிட்டு என்னால் கோடம்பாக்கத்திற்கு வர முடியவில்லை. நான் பங்குபெற்ற துறைகளிலெல்லாம் பாராட்டுக் கிடைத்தாலும் இசைத்தட்டுகளுக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கிற இடைவெளியை நிச்சயம் நான் நிரப்பத்தான் வேண்டும். கடவுளும் தமிழும் கைவிடமாட்டார்கள்.