அம்மாவின் தாயான பாட்டி கால்களையும் முகத்தையும் கழுவிவிட்டு, தானியப் பெட்டியின்மீது விரிப்பை விரித்துப் படுத்தாள்.
ராதாவும் ராஜனும் ஆடைகளை மாற்றிவிட்டு படுக்க ஆரம்பித்தபோது அம்மா கூறினாள்:
"குளிச்சு... தேநீர் குடிச்சிட்டுப் படுத்தா போதும்.''
சுவரில் சாய்ந்து நின்றவாறு கொட்டாவி விட்டான் தினேஷன். கண்கள் மிகவும் சிவந்து காணப்பட்டன. தானியப் பெட்டியின் மேலே இருந்தவாறு பாட்டி கூறினாள்:
"சீக்கிரமா தூங்குங்க... மதியம் பலி கொடுக்கறதைப் பார்க்கப் போகவேணாமா?''
ராதா குளியலறைக்குச் சென்றாள். தினேஷன் எண்ணெய்யுடன் கிணற்றின் கரையை நோக்கி நடந்தான். யார் கூறியதையும் ராஜன் கேட்கவில்லை. கட்டிலில் ஏறிப் படுத்தான். உறங்கினான். குறட்டைவிட்டான்.
குளித்து முடித்து சூடான கஞ்சியைக் குடித்தபோது கண்களைத் திறக்க முடியவில்லை. அரைத்துக்கொண்டிருந்த ஜானகியின் தலை இடையே அவ்வப்போது அம்மியை நோக்கித் தாழ்ந்தது... ஆடியது.
தானியப் பெட்டியின் மேலேயிருந்து பாட்டியின் குறட்டைச் சத்தம் கேட்டது. இரவு முழுவதும் குடித்து சுய உணர்வை இழந்த அப்பாவும் குட்டிக் கிருஷ்ணன் மாமாவும் மேலே தூங்கிக் கொண்டிருந்தார்கள். சமையலறையிலிருந்து அபூர்வ வாசனை கள் கிளம்பிவந்தன. தேங்காயின்... மசாலாவின் வாசனைகள் சுழற்றியடித்தன. மாமிசத்தின் வாசனை தூங்கிக்கொண்டிருந்த வர்களின் நாசித் துவாரங்களுக்குள் வலிய நுழைந்தது. பொரித்த அப்பளத்தின் வாசனை வெறிபிடிக்கச் செய்தது.
வெளியே காரித்துப்பும் சத்தம் கேட்டது. உரத்த குரல்...
"குஞ்ஞுண்ணி மாமாதானே?''
அம்மா வெளியே வந்தாள். குஞ்ஞுண்ணி மாமாவேதான். சலவை செய்து தேய்க்கப்பட்ட வெண்ணிற அரைக்கை சட்டையில் வெற்றிலைச் சாறு... கண்கள் சிவந்திருந்தன. முகம் சிவந்து வீங்கியிருந்தது.
"வந்தது எப்போ?''
"இப்போதான் வந்தேன்.''
வந்து சிறிதுநேரம் ஆகிவிட்டதென்பது பார்க்கும்போதே தெரிந்தது. தலசேரி வடகரை பேருந்து, ஒன்றாம் எண் கள்ளுக் கடைக்கு முன்னால்தான் செல்கிறது. அங்கு இறங்கியிருப்பார்... அதற்குள் நுழைந்திருப்பார்.
"வாங்கிக்கோங்க பிள்ளைகளா...''
மடிக்குள்ளிருந்தது பொட்டலத்தை வெளியே எடுத்தார்.
ராஜன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தான். தினேஷன் கண்களைத் திறந்துவைத்தவாறு கூரையைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.
"குஞ்ஞுண்ணி மாமா வந்திருக்காரு. தூங்கினது போதும்.''
தினேஷன் எழுந்து அம்மாவுடன் சேர்ந்து வாசலுக்குச் சென்றான்.
"வா... இங்க வா...''
மடியிலிருந்து வெளியே எடுத்த பொட்டலத்தை தினேஷனின் கையில் கொடுத்தார். சுவாசத்திற்கு கள்ளின் வாசனை இருந்தது.
"எத்தனைப் பேர் பலி கொடுக்கப் போறாங்க இந்த வருஷம்?''
"மூணு...''
"நாம போகவேணாமா?''
அவன் தலையை ஆட்டினான்.
"குட்டிக் கிருஷ்ணனும் சதியும் வந்திருக்காங்க.'' பாட்டி கூறினாள்.
"குட்டிக் கிருஷ்ணன் எங்க?''
"மேலே தூக்கத்தில... இன்னும் எழுந்திரிக்கல. எழறது மாதிரி தெரியல.''
"எங்கே சதி?''
சதி அத்தை இறங்கிவந்தாள். தூக்கக் கலக்கத்தால் முகம் வாடிக் காணப்பட்டது. வயிறு மேலும் சற்று பெரிதானதைப்போல தோன்றியது. ஜானகியும் வெளியே வந்தாள். அவள் கேட்டாள்...
தினேஷனின் கையிலிருந்த பொட்டலத்தைப் பார்த்துக் கொண்டே...
"மாமா... எனக்கு எதுவும் கொண்டு வரலையா?''
"ஃபூ...!'' குஞ்ஞுண்ணி மாமா காரித் துப்பினார்: "நீ குழந்தையாடீ?''
கள்ளின் வாசனை உயர்ந்து மேலே வந்தது.
"குஞ்ஞுண்ணீ... தேநீர் வேணுமா, கஞ்சி வேணுமா? கையையும் முகத்தையும் கழுவிட்டு வா..''
"இப்போ எதுவும் வேண்டாம்கா...''
குஞ்ஞுண்ணி மாமா தோளில் போட்டிருந்த மேல்துண்டை எடுத்து தலையில் கட்டினார். வேட்டியை மடித்துக் கட்டினார்.
"நான் வெளியே போறேன்.''
"எங்க?''
பதில் கூறாமல் நடந்தார். கள்ளின் வாசனையைப் பரப்பியவாறு ஸ்டேஷன் சாலையிலிருக்கும் மூன்றாம் எண் கள்ளுக் கடையை நோக்கி நடந்தார்.
"பொட்டலத்துல என்ன இருக்கு?''
தூக்கத்திலிருந்து கண் விழித்த ராஜனும் ராதாவும் சுற்றி நின்றார்கள்.
"தினேஷா... நீ போய் அப்பாவை எழுப்பு. தூங்குனது போதும்னு சொல்லு. மணி பத்தாயிருச்சு...''
அம்மா கூறினாள்.
"அவங்க தூங்கட்டும்டீ லட்சுமி. பத்து மணிதானே ஆகுது? பலி நிகழ்ச்சி நடக்கறப்போ பன்னிரண்டரை ஆயிடும்...''
"இங்க யாருமில்லியா?''
வாசலில் காலடிச் சத்தம் கேட்டது.
"அது யாரு தினேஷா?''
தினேஷன் சென்று பார்ப்பதற்கு முன்பே ஆள் உள்ளே வந்தாகிவிட்டது. வசந்தாவின் அம்மா...
"பலி கொடுக்கறதைப் பார்க்கறதுக்குப் போகலியா?''
"பாட்டியும் ஒரு பலி கொடுக்கறதும்..!" ராதா கூறினாள்.
"குழந்தைகளைவிட ஆர்வம் பாட்டிக்குதான்..." பாட்டி கேட்காமலிருக்க வேண்டும் என்பதற்காக ஜானகி குரலைத் தாழ்த்திக்கொண்டு கூறினாள்.
"சதி வந்திருக்காள்ல? கொஞ்சம் பார்க்கணும்னு நினைச்சேன். குட்டிக் கிருஷ்ணனும் உண்டுல்ல?''
"குட்டிக் கிருஷ்ணன் உண்டு...''
பாட்டியின் குரல் வேறுபாடு ஜானகியையும் ராதாவையும் சிரிக்கச் செய்தது. சதி அத்தை வெளியே இறங்கி வந்தாள்.
"ரொம்பவும் மெலிஞ்சிட்டியே?''
"வசந்தா எங்கே?''
"உட்காரு... மாதவீ.''
அம்மா நாற்காலியை நகர்த்திப் போட்டாள்.
"இது எத்தனை?''
குரலைத் தாழ்த்திக்கொண்டு வசந்தாவின் அம்மா கேட்டாள்.
"நாலு மாசம்தான் ஆகியிருக்கு. வயிறைப் பார்த்தா தோணும்... ஒன்பது ஆகிருச்சுன்னு...''
கொதித்துக்கொண்டிருந்த பானையை இறக்கிவைத்து விட்டு, தேநீருக்கு நீரை வைத்தாள். பானையிலிருந்து வெந்த அரிசியின் வாசனை வெளியேறி சமையலறையை நிறைத்து விட்டு, வெளியே பயணித்தது. வெந்த தேயிலையின் வாசனை பரவியது.
ஜானகி தேநீர் கொண்டு வந்தாள். இரண்டு குவளை தேநீர்...
"குடி மாதவி...''
"பாட்டி... நீங்க குடிக்கலையா?''
"எனக்கு வேணாம். குழந்தைங்களுக்குக் கொடு...''
ஜானகி தேநீரை எடுத்து வாசலி-ருந்த தினேஷனுக்குக் கொடுத்தாள். ஊதி ஊதி... சூடான தேநீரை அவன் குடித்தான்.
"ஆத்தித் தரணுமா?''
வேண்டாமென அவன் தலையசைத்துக் காட்டினான்.
படிகளில் இறங்கிவரும் ஓசை கேட்டது. அப்பாவும் குட்டிக் கிருஷ்ணன் மாமாவும் இறங்கி வந்துகொண்டிருந்தார்கள். இருவருமே சட்டை அணிந்திருக்கவில்லை. தொப்புளுக்குக் கீழே வேட்டியை அணிந்திருந்தார்கள்.
"குட்டிக் கிருஷ்ணனைப் பார்க்கறதுக்கு ஒரு ஆள் வந்திருக்கு...''
யாரென அவர் கண்களை உயர்த்திக் கேட்டார்.
"மாதவி...''
"என்ன... குட்டிக் கிருஷ்ணா... எங்களையெல்லாம் தெரியுதா?''
போதை சரியாக இறங்கியிராத கண்களை உயர்த்திப் பார்த்தார்.
"சுகமா இருக்கீங்களா?''
"குடிச்சிருக்காரு. ராத்திரி முழுக்க குடிச்சிக்கிட்டே இருந்தாரு.'' ராதா குரலைத் தாழ்த்திக்கொண்டு கூறினாள்.
"குளிச்சிட்டு வா. சாப்பாடு ஆயிருச்சு. பன்னிரண்டுக்கு முன்னால கோவிலுக்குப் போகலைன்னா உட்கார்றதுக்கு இடமிருக்காது.''
"குஞ்ஞுண்ணி மாமா வர்றாரு.''
பச்சடியின் புளிப்பு சமையலறையிலிருந்து வெளியேறி வந்தது. அப்பளத்தின் ஓசை எழுந்தது.
"நான் வரட்டுமா?''
"பலி குடுக்குறதைப் பார்க்கப் போகலையா?''
"நான் போகல... வசந்தாவும் அப்பாவும் போறாங்க.''
"ஆட்டக்காரங்க எண்ணிக்கை மூணுன்னு கேள்விப் பட்டேன் மாதவி.''
வசந்தாவின் அம்மா விடைபெற்றுக் கிளம்பினாள்.
குஞ்ஞுண்ணி மாமா வந்து வாசலி-ருந்த பெஞ்ச்சில் அமர்ந்தார். காரித் துப்பினார். குசு விட்டார். பாட்டு பாடினார்.
"குஞ்ஞுண்ணி... நீ குளிக்கலையா?''
"அக்கா... நீங்க போய்க் குளிங்க...''
"சாப்பிட வேணாமா?''
பதில் இல்லை. ஏப்பம் விட்டார். வாய்க்குள்ளிருந்து கள்ளின் ஆவி வெளியே வந்தது. பெஞ்சில் சாய்ந்தார். கண்கள் மூடின.
அப்பாவும் குட்டிக் கிருஷ்ணன் மாமாவும் குளித்துவிட்டு வந்தார்கள். பிள்ளைகள் குளித்தார்கள். திண்ணையில் புல்லா லான பாய் போடப்பட்டது. ஆட்கள் அமர்ந்தார்கள்.
குஞ்ஞுண்ணி மாமாவைத் தாங்கியெடுத்து புல் பாயில் அமர வைத்தார்கள். இலைகள் போடப்பட்டன. இலைகளிலிருந்து பலவகை வாசனைகளும் எழுந்து நாசிக்குள் நுழைந்தன.
மாமிசத்தின்... மீனின் பலமான வாசனைகள் தோல், சதை...
அனைத்தையும் தாண்டி நுழைந்தன. வயிற்றில் சுழற்றியடித்தன.
"கலக்கிட்டீங்க லட்சுமி அக்கா... கலக்கிட்டீங்க.'' குட்டிக் கிருஷ்ணன் மாமா கூறினார்.
"குஞ்ஞுண்ணி... உனக்கு என்ன வேணும்? சோறு வேணுமா? சாம்பார் ஊத்தட்டுமா?''
சத்தமாக ஏப்பம் விட்டார். சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார். கண்கள் மூடின. நிறைந்த இலைக்கு முன்னால் அமர்ந்து குஞ்ஞுண்ணி மாமா தூங்கினார். சாய்ந்தமர்ந்து உறங்கினார்.
"என்ன குஞ்ஞுண்ணி இது? சோத்துக்கு முன்னால உட்கார்ந்து தூங்கறயா?''
ஆண்டி கையில் ஒரு கோழியுடன் சென்றுகொண்டிருந்தான். பாட்டி அழைத்துக் கேட்டாள்:
"ஆண்டியும் கோழியை நேர்ந்திருக்கானா?''
"ஆண்டியோட இளைய மகளுக்கு உடல்நலம் சரியில்லாம இருந்தது.'' அம்மா கூறினாள்.
மஞ்சள் காமாலை... இறந்துவிட்டாள்- இறக்கவில்லை என்ற நிலை. அப்போது குட்டிச்சாத்தானுக்கு சேவலை நேர்ந்தான். பகவதியின் மகனும் குளிகனின் மருமகனுமான குட்டிச்சாத்தான் பலமானவன். இரக்க குணம் படைத்தவன். ஆண்டியின் இளைய மகளை குட்டிச்சாத்தான் காப்பாற்றிவிட்டான். ஆண்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறான்.
"சுமார் இருநூறு கோழிகளைக் கொல்வாங்கன்னு தோணுது.''
பாட்டி யாரிடம் என்றில்லாமல் கூறினாள்.
ஆண்டிக்குப் பின்னால் அனந்தனும் குடும்பத்தினரும் வந்தார்கள். மனைவி புதிய புடவை அணிந்திருந்தாள். பிள்ளைகள் புதிய ஆடைகளை அணிந்திருந்தார்கள். அனந்த னின் கையில் கால்கள் கட்டப்பட்ட சாத்தான் கோழி... கோழியின் சிவந்த சிறகுகள் வெயில்பட்டு மின்னி ஒளிர்ந்தன. கண்களில் பக்திப் பரவசம்...
ராதா புதிய தாவணியை அணிந்தாள். ராஜனும் தினேஷனும் புதிய சட்டையையும் அரைக்கால் சட்டையையும் அணிந்தார்கள். ஜானகி பச்சை நிற ரவிக்கையை அணிந்தாள். பாட்டி ஜரிகைத் துணியைப் போர்த்தினாள்.
குஞ்ஞுண்ணி மாமா இப்போதும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். பாட்டி அழைத்தாள்.
"குஞ்ஞுண்ணீ... குஞ்ஞுண்ணீ!''
உணவுக்கு முன்னால் அமர்ந்து தூங்குவதென்பது கெட்ட சகுனம். அசைவே இல்லை.
"குஞ்ஞுண்ணீ... நீ பலி கொடுக்கறதைப் பார்க்க வரலையா?''
"க்ரூம்...''
உறக்கத்தில் முனகினார். கள்ளின் வாசனை வந்தது. வேகவைத்த மரவள்ளிக் கிழங்கின் வாசனையும் வந்தது. வறுத்த மீனின் வாசனையும் வந்தது.
"மணி பன்னிரண்டு ஆயிருச்சே... கடவுளே!"
அப்பா அருகில் சென்றார். குஞ்ஞுண்ணி மாமாவைத் தாங்கி எழச் செய்தார். தொடர்ந்து கூறினார்:
"கதவை அடைச்சிட்டு உள்ள படுத்திரு.''
"பிள்ளைங்களே... வெளியேறுங்க. குட்டிக் கிருஷ்ணா... வா. உட்கார்றதுக்கும் நிற்கறதுக்கும் இடமிருக்காது... கடவுளே!''
பாட்டி முன்னால் வெளியேறி நடந்தாள். பிள்ளைகள் அவளுடன் சேர்ந்து வெளியேறினார்கள்.
ஜானகி கூறினாள்:
"வா... தினேஷா. என் கையைப் பிடிச்சிக்கோ...''
ஜானகியின் கையைப் பிடித்துக்கொண்டு தினேஷன் நடந்தான்.
நடு உச்சிப் பொழுது. தெருவுக்கு மேலே வெயில் குவிந்து கிடந்தது.வெயிலுக்கு மத்தியில் விருந்து சாப்பிட்டு வீங்கிப்போன வயிற்றுடன் மக்கள் புத்தாடைகள் அணிந்து கிழக்குதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள். ஆண்கள் சாராயத்தின், கள்ளின் வாசனையைப் பரப்பியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் பவுடரின், சாமந்திப் பூக்களின் வாசனையைப் பரப்பியவாறு போய்க்கொண்டிருந்தார்கள். பலரின் கைகளிலும் கோழிகள் இருந்தன. கோழிகளின் வாசனையைப் பரப்பியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். கோழிகள் கிழக்கு நோக்கிப் பறந்தன. மரணத்தின் வாய்க்குள்...
"பாவம் கோழிங்க! சாகப்போற விஷயம் கோழிங்களுக்குத் தெரியுமா?''
"தேவையில்லாததைப் பேசாதே மகளே ராதா.'' பாட்டி கூறினாள்: "தெய்வத்துக்காக விதிக்கப்பட்ட கோழிங்க அதிர்ஷ்டம் செய்தவை.''
கோழிகள் ஒருநாள் எப்படியானாலும் இறக்கும். பெட்டைக் கோழிகள் முட்டையிட்டு இட்டு... பித்தம் வந்து வயதாகி இறக் கும். சேவல்கள் அப்துல் ரஹிமான் முதலாளியின்... ரஸிடன்ட் முதலாளியின் குடலில் செரிமானமாகும்.தெய்வத்தின் கையில் கிடந்து இறப்பது அதிர்ஷ்டகரமானது. பரம அதிர்ஷ்டம் வாய்ந்தது! தெய்வத்தின் தாகத்தைத் தன் குருதியைக்கொண்டு தீர்ப்பதென்பது பாக்கியம்... பரம பாக்கியம்!
கடுமையான வெயிலில் புத்தலத்து ஆலயம் மூழ்கிக் கிடந்தது. நெய்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. வியர்த்துக் குளித்த... காய்ந்த முகத்துடன் மக்கள் கோவிலின் வாசலில் திரண்டு நின்றிருந்தார்கள். மரக்கிளைகளையும் மண்டபங்களையும் தரையையும் மக்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
வெயிலின் வெப்பத்தால் வியர்வை ஆவியாக வெளியே வந்தது. பீடிப்புகை ஆலயத்தின் வாசலில் நிறைந்திருந்தது. கோவில் வளாகத்தில் கள்ளையும் சாராயத்தையும் வாந்தியெடுத்து சுய உணர்வை இழந்து ஜடங்கள் கிடந்தன.
முன்னாலிருந்த அறையில் மூன்று மலைவாழ் மனிதர்கள் சுய உணர்வற்றுப் படுத்திருந்தார்கள். அவர்கள் கண் விழித் தார்கள். மஞ்சள்நிறப் பட்டுத்துணியை அணிந்து மஞ்சளைப் பூசினார்கள். சாமந்திப்பூ மாலையை அணிந்தார்கள்.
அறையின் மூலையிலிருந்து சாராய புட்டியை எடுத்து உள் நாக்கிற்குள் ஊற்றிவிட்டு, முடியை அவிழ்த்துவிட்டு, வாளை எடுத்துக்கொண்டு வெளியே வேகமாக வந்தார்கள். மூங்கில் விளக்குகளுடன் மலைவாழ் இனக் குழந்தைகள் பின்னால் வேகமாகச் சென்றார்கள். செண்டை அடிப்பவர்களும் குழல் வாசிப்பவர்களும் வேகமாக வந்தனர்.
தெய்வங்களாக மாறிய மலைவாழ் மனிதர்கள் உரத்து சத்தமிட்டவாறு கோவிலின் வாசலுக்கு வந்தார்கள். மேடையில் ஏறி சத்தம் எழுப்பினார்கள்.
வாணங்கள் சீறின... பட்டாசுகள் அலறின... சரவெடிகள் இரைச்சல் உண்டாக்கின... வெடிமருந்தின் வாசனையும் புகையும் சுழற்றியடித்தன.
"வெள்ளாட்டுகள்' என்ற அந்த மனிதர்கள் மண்டபங்களுக்குப் பாய்ந்துசென்று, அனைத்து கடவுள்களையும் வணங்கினார்கள்.
பலி கொடுக்கப்படும் இடத்திற்கு முன்னாலிருந்த கூட்டத்திற்கு மத்தியில் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த மனிதர்களைப் பார்த்தான்.
"எப்போ கோழிங்களைக் கொல்லுவாங்க?'' ராஜன் கேட்டான்.
"இப்போ கொல்லுவாங்க. இதோ... செண்டை அடிக்கிறவங்க வர்றாங்க.''
"இருபத்து நாலு செண்டைக்காரங்க இருக்காங்க...''
ராதா எண்ணி முடித்துவிட்டாள்.
மக்களைப் பிரித்து விலக்கியவாறு... நடு மண்டபத்திற்கு முன்னால் செண்டை அடிப்பவர்கள் வரிசையாக நின்றார்கள்.
குழல் வாசிப்பவர்கள் வரிசையாக நின்றார்கள். மண்டபங்களைச் சுற்றி வந்துவிட்டு, வாள்களை உயர்த்தி கர்ஜித்தவாறு "வெள்ளாட்டுகள்' என்று அழைக்கப்படும் அந்த மனிதர்கள் பீடத்தின்மீது பாய்ந்து ஏறினார்கள். செண்டைகள் ஒன்றாக அதிர்ந்தன. குழல்கள் முழங்கின. பற்றி எரிந்துகொண்டிருந்த வெயிலில்... பீடத்திற்கு மேலே. "வெள்ளாட்டுகள்' ஆடினார்கள்.
வாள்கள் காற்றில் நெளிந்தன. வெள்ளாட்டுகளான அந்த மனிதர்கள் கூவினார்கள்.
பக்தர்கள் முன்னோக்கி வந்தார்கள். கைகளில் கோழி களுடன்... முன்னால் வந்தார்கள். கோழியின் குருதிக்காக வெள்ளாட்டுகள் தாகமெடுத்து சத்தமெழுப்பினார்கள். பக்தர்களின் கைகளிலிருந்து கோழிகளைத் தட்டிப் பறித்தார்கள்.
"பாரு தினேஷா... பாரு.''
விழித்த கண்களுடன் ஜானகி கூறினாள்.
கோழிகள் ஆடிக்கொண்டிருந்த அந்த மனிதர்களின் கைகளில் வந்து விழுந்தன. இறகுகளைப் பறித்து எறிந்தார்கள். கழுத்தைக் கடித்து ஒடித்தார்கள்.தாகமெடுத்த தொண்டைக்குள் ரத்தத்தை ஊற்றினார்கள். செண்டைகள் சத்தமாக ஒலித்தன. "வெள்ளாட்டுகள்' என்ற அந்த சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர்கள் வாளை எடுத்து கோழிகளின் தலைகளை வெட்டினார்கள். கோழியின் குருதி வாயின் வழியாக ஒழுகியது. பீடத்திலிருந்து வழிந்தது. கோவிலின் வாசலில் ஒழுகி ஓடியது. வெயிலுக்கு ரத்தத்தின் நிறம் உண்டானது. கோவிலின் வாசல் பகுதியும் மக்களும் ரத்தத்தில் குளியல்... குருதியின் வாசனை சுழற்றியடித்தது.
"வெள்ளாட்டுகள்' கர்ஜித்தார்கள். செண்டைகள் அதிர்ந்தன. மக்கள் சத்தமெழுப்பினார்கள். கோழிகள் அலறின.
கோழிகளின் சிறகுகளும் கழுத்தும் காற்றில் பறந்தன. கோழிகளின் வேதனைக் குரல் நாலா பக்கங்களிலும் எழுந்தது.
பாட்டியின் கையை விடுவித்துக்கொண்டு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வெளியே ஓடினான். கோழிகளின் இறந்த உடல்கள் கால்களில் பட்டன. ரத்தத்தின் வாசனை மூக்கிற்குள் வலிய நுழைந்தது. ரத்தத்தின் நிறம் கண்களுக்குள் வலிய நுழைந்தது.
ஆலமரத்திற்குக் கீழே குஞ்ஞுண்ணி மாமா நின்றுகொண்டி ருந்தார். பக்திப் பரவசத்துடன்... மாமாவைப் பார்க்கவில்லை. மக்கள் கோவிலின் வாசலில்... பாதை காலியாகக் கிடந்தது. ஆள் அரவமற்ற பாதையின் வழியாக நடந்தான்.
வீட்டைநோக்கி நடந்தான். வியர்த்து, குளித்து மேலும் கீழும் மூச்சு விட்டவாறு வாசலுக்கு வந்தான். கதவில் பெரிய உருக்குப் பூட்டு தொங்கிக் கிடந்தது. வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் சென்று படுத்தான்.
கண்கள் நிறைகின்றனவோ?