துரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 38 ஆண்டுக்காலக் கல்விப்பணி, த.மு.எ.க.ச.லிவின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராகப் பல்லாண்டுகள் இலக்கியப் பணி, இலக்கிய மேடைகளில், கலை இரவுகளில் எண்ணற்ற உரைகள், தொலைக்காட்சி விவாத அரங்குகளில் அறிவார்ந்த சிந்தனைப் பகிர்வுகள், தமிழிலக்கியத்திற்கான சொத்தாக 70 நூல்கள் எழுதியுள்ளமை… என தொடர்ந்து களமாடி வருபவர் பேராசிரியர் அருணன். தான் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மார்க்சிய சித்தாந்தத்தின் வழிநின்று, உழைக்கும் பாட்டாளி மக்களின் உயர்வுக்காகவே எழுத்தும் பேச்சுமாக இயங்கிவரும் அருணனுக்கு கடந்த 2025 பிப்ரவரி 2 அன்று 75-ஆவது பிறந்த நாள். 2024-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் பொற்கிழி விருது’ பெற்றமைக்கான வாழ்த்தோடு, அவரது பிறந்த நாளுக்கான பவள விழா வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டு, ‘இனிய உதயம்’ வாசகர்களுக்காக அவரோடு நிகழ்த்திய உரையாடல்…

நீங்கள் பிறந்தது, படித்தது எல்லாமே மதுரையில்தானா?

பிறந்தது மதுரை. படித்தது மதுரை, சிதம்பரம், விருதுநகர். விரிவுரையாளராக - இணைப் பேராசிரியராக 38 ஆண்டுகள் பணியாற்றியது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில். எனது இணையர் முனைவர் லீலாவதி பிறந்தது, படித்தது, பணியாற்றியதும் மதுரை. அதன் தெருப் புழுதியைச் சுவாசித்தே என் வாழ்வு நடந்தது. மதுரையைச் சுற்றிய கழுதையும் போகலாம். எனது வாழ்வைவிட்டு இந்த ஊர் போகாது.

Advertisment

ar

தங்களின் சிறுபிராயத்துப் பொழுதுகள் எப்படிக் கழிந்தன?

கபடி விளையாட்டில் கிறுக்காய்த் திரிந்தேன். அந்த விளையாட்டில் திளைத்ததற்குக் காரணம் அதற்குத்தான் நெட்டு, பந்து என்று எதுவும் தேவைப்படாது. சில பேர் சேர்ந்தால்போதும்; காலால் கோடு போட்டுவிட்டு, ‘கபடி… கபடி…’ என்று கிளம்பிவிடலாம். குண்டு விளையாடி அப்பாவிடம் முதுகில் வசமாய் அடி வாங்கிய அனுபவமும் உண்டு.

புத்தக வாசிப்பில் ஆர்வம் உண்டானது குறித்து..?

எனது பக்கத்து வீட்டில் இரு சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் தொடர்கதைளைச் சேர்த்துவைத்துப் படிப்பார்கள். அவர்களிடம் கதை கேட்டவன், பிறகு நானே படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான் எனக்கு ஒரு புது உலகம் கிடைத்தது.

கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்த சாரதி, கொத்தமங்கலம் சுப்பு போன்றோரின் படைப்புகளை வாசித்து மயங்கிப்போனேன். அதில் வரும் கதாபாத்திரங்கள் என்னிடத்தில் தங்கிப் போனார்கள். சரித்திரக் கதைகள் மூலம் நான் இறந்த காலத்தில் வாழ்ந்தேன். நடப்பு காலத்தைவிடக் கடந்த காலம் எனக்குப் பிடித்துப்போனது. பள்ளியில் நான் வெறுத்த வரலாறு இப்போது மிகப் பிரியமானது. தற்காலத்தோடு மிகவும் ஒட்டிய பழைய காலத்தைச் சொன்ன ‘தில்லானா மோகனாம்பாள்’ எனது சிந்தனையின் ஒரு நித்திய அம்சமானது.

நாவல்கள் வாசிப்பின் காரணமாக அவை பற்றி எனக்குள் சிந்தனைகள் பிறந்தன. அவற்றை ‘செம்மலர்’ ஆசிரியர் தோழர் கே.முத்தையா அவர்களோடு அவ்வப்போது பகிர்ந்துவந்தேன்.

"அவற்றை எழுதேன்" என்று அவர் சொல்ல, நானும் எழுத ஆரம்பித்தேன்.

அவர் இப்படியாக எடுத்துக் கொடுத்தார். முதலடியை ஆண்டவன் எடுத்துக் கொடுத்தான் என்று புராணங்களில் சொல்வார்கள். எனக்கு ஒரு மனிதரே தூண்டுதலாக இருந்தார்.

இடதுசாரி இயக்கக் கொள்கைகளின்மேல் ஈடுபாடும் பற்றும் கொள்ள எது காரணமாக இருந்தது?

எனது கல்லூரி நாட்களில் நான் நாத்திகவாதியானேன். அதை ஏற்றுக்கொண்ட ஓர் அரசியல் கோட்பாடாக மார்க்சியம் இருந்தது கண்டு அதிசயித்து இடதுசாரி இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டேன். அதிலும் அதனது நாத்திகம் முரட்டுத்தனமாக இல்லாமல் யதார்த்தமாக இருந்தது என்னை மேலும் ஈர்த்தது. கடவுள் இல்லை எனச் சொல்வது எளிது, இல்லாத கடவுள் மக்களின் இதயத்தில் இருப்பது எப்படி என்று அறிவது கடினம். அதற்கான விடையைச் சொன்னது மார்க்சியமே.

மதுரையில் 1975ஆம் ஆண்டில் த.மு.எ.ச. எனும் இடதுசாரி இலக்கிய அமைப்பினைத் தொடங்கிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். அந்த நாட்களின் நினைவுகளைப் பகிருங்களேன்..?

செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் கூடி ஓர் இலக்கிய அமைப்பைத் துவங்குவது என்றும், அதன் முதல் மாநாட்டை மதுரையில் நடத்துவது என்றும் முடிவுசெய்தோம்.

அந்தச் சமயத்தில் அவசரநிலை ஆட்சி பிரகடனமானது. கே.முத்தையா தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். அவரை ரகசியமாகச் சந்தித்து ஆலோசனைகள் பெற்று மாநாட்டை நடத்தினோம்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்ததால் மாநாட்டை நடத்த முடிந்தது. இல்லையெனில் தடை செய்திருப்பார்கள். எழுத்தில் முற்போக்கு, பிற்போக்கு உண்டு எனச் சுட்டியதோடு முற்போக்கு என்பதற்கு விரிந்த பொருளைக்கொண்டு அமைப்பின் கொள்கைப் பிரகடனம் அமைந்தது. அதனால்தான் அது இப்போதும் வெற்றிகரமாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு (2025) அதற்குப் பொன்விழா ஆண்டு.

வணிகவியல் துறைப் பேராசிரியராக இருந்த உங்களை இலக்கியத்தின் பக்கமாக அழைத்து வந்தது எது?

வணிகவியல் துறை பேராசிரியராக நான் இருந்தாலும் அதிலும் கணக்கியல் சொல்லித் தருவேன். மனித இயல்பு பன்மைத் தன்மை நாடுவது. அந்தக் கோடி கணக்கியலில் இருந்ததாலோ என்னவோ இந்தக் கோடி இலக்கியத்தில் ஆசை வந்தது. ஏற்கெனவே நாவல்கள் படித்திருந்த எனக்கு அந்த வாசிப்பு தொடர்ந்தது. முப்பெருங் கவிஞர்களாம் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை மீது பெரும் பற்று வந்தது. அவர்கள் வழி ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை, பாட்டாளிகளின் உரிமை என வாழ்வின் மெய்யியல் எனக்குள் படிந்தது. ஆச்சரியமான விஷயம் கவிதை எனக்குள் தத்துவத்தை விதைத்தது. அது வெறும் உணர்ச்சிமயமானது அல்ல; அறிவும் அழகும் கலந்தது. அழகியல் வாயிலாக நான் சமூக அறிவியலின் வாசலுக்குள் நுழைந்தேன்.

செம்மலர் இதழில் நீங்கள் எழுதிய 'இளமதி' பதில்கள் பலராலும் பாராட்டப்பெற்ற பகுதி. அது குறித்துச் சொல்லலாமே..?

ஏடு என்றால் அதில் கேள்வி - பதில் பகுதி ஓர் அம்சமாக இருந்தது. அதை ஏன் துவங்கக்கூடாது என அதன் ஆசிரியர் குழுவில் முடிவுசெய்து, அதற்கான பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. பதில்களை ஆசிரியருடன் கலந்துபேசி எழுத வேண்டியிருந்ததால் ‘இளமதி’ எனும் பொதுப் பெயர் பூண்டேன். தபாலட்டையில் கேள்விகள் வரும். சிக்கலான கேள்விகளுக்கு ஆசிரியரைக் கலந்துகொண்டு எழுதினேன். மாத இதழ் என்பதால் அந்த மாதத்தில் இலக்கிய - சமூக - அரசியல் வாழ்வில் நடந்த காத்திரமான கூறுகளை இப்பகுதியில் எதிரொலிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவை பற்றிக் கேள்விகள் வராது. எனவே நானே கேள்விகளைத் தயார் செய்தேன். கேள்வியும் நானே, பதிலும் நானே என்றானது. அதனால்தான் அது சுவையானதாக, விறுவிறுப்பானதாக மாறியது.

கட்டுரை, ஆய்வு, நாவல், கவிதை, பயண இலக்கியம் என எல்லாத் தளங்களிலும் எழுதிவருகிறீர்கள். இதில் உங்கள் மனசுக்கு மிகவும் பிடித்தமான வடிவமாக எது இருக்கிறது?

எடுத்த பத்து அவதாரங்களில் உங்கள் மனசுக்கு மிகவும் பிடித்தமானது எது என்று கேட்டால் விஷ்ணு என்ன பதில் சொல்லுவார்? அந்தந்த வடிவத்திற்குள் நுழைந்தபோது அந்தந்த வடிவம் பிடித்திருந்தது. அழகியல் உணர்வும் ஆய்வு அறிவும் பொதுவானவை. அவற்றை பாடுபொருளுக்கு ஏற்ப எந்தவொரு குறிப்பிட்ட வடிவாகவும் மாற்றலாம். அங்கே படைப்பாளியின் அப்போதைய மனோ நிலை பங்கு வகிக்கும்.

dd

Advertisment

எல்லா வகைகளிலும் எழுதிய நீங்கள் சிறுகதை மட்டும் எழுதாதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?

எனது முதல் படைப்பிலக்கியமே சிறுகதைதான். அது ஆனந்த விகடனில் வெளிவந்தது. எனக்கு ஒரே பூரிப்பு. மகாபாரத மறுவாசிப்பாக நான் எழுதிய ‘பூரு வம்சம்’ சிறுகதைகளின் தொகுப்பே.

அவற்றுள் ஒரு தொடர்ச்சி இருந்ததால் நாவலாகவும் கருதப்படுகிறது. நான் பொதுவாக அகலக்கால் வைப்பவன். அதனால் சிறுகதைகள் எழுதுவது நின்றுபோனது.

மிகத் தாமதமாகத்தான் இரு கவிதை நூல்களை (ஞானக்கோலங்கள், நிறைமொழி) வெளியிட்டீர்கள். உங்களுக்குள் இருக்கும் கவிஞரை எப்போது அடையாளம் கண்டீர்கள்?

முகநூலில் எழுதும்போது. அங்குதான் குறைந்த வார்த்தைகளில் நிறைந்த கருத்தைச் சொல்லவேண்டியிருந்தது. அதையே கவிதையாக்கி னால் என்னவென்று பட்டது. புதுக்கவிதை யுகம் இது. இங்கே இலக்கணம் அல்ல, எழுப்பும் பரபரப்பே முக்கியம். உவமை, உருவகம்கூட இரண்டாம்பட்சமே. சற்றே ஓசைநயத்தையும் சேர்த்துப் பார்த்தேன்; கவிதை பிறந்தது. ஆனால் அதுவும் விரைவில் உலர்ந்து உதிர்ந்தது. பழந்தமிழ் இலக்கிய ஆய்வில் புகுந்தேன். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவுவதே எனது பிழைப்பாகிப் போனது.

பேராசிரியர் இரா.கதிரேசனாக இருந்த நீங்கள் அருணன் எனும் புனைபெயருக்குள் புகுந்தது ஏன்?

எனது எழுத்துலக வாழ்வு அவசரநிலை ஆட்சி காலத்தில் நிலைகொண்டது. அங்கே புனைபெயர் தேவைப்பட்டது. கதிரேசன் என்பதிலிருந்து அருணன் என்பதை எடுத்துக் கொடுத்தார் எனது ஆசான் கே.முத்தையா. அதுவே நிலைத்துப் போனது.

இப்போதெல்லாம் என்னைக் கதிரேசன் என அழைத்தால் வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உள்ளது.

பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், இயக்கவாதி, ஊடக விவாத கருத்தாளர்- இதில் எந்த அருணனை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?

இதில் சந்தேகம் இல்லை - ஆய்வாளரைத்தான். எனது ஆய்வு நூல்களே எனது மெய்யான அடையாளம். ஆனால் என்னை டி.வி. விவாதக்காரனா கவே பலரும் அறிவார்கள். வெளிஉலகம் என்னை எப்படி அறிந்தாலும் எனது உள்உலகத்திற்கு நான் மார்க்சிய ஆய்வாளனே.

இந்திய அளவில் இடதுசாரி இயக்கத்தின் சார்பில் தேர்தலில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத் திற்குச் செல்லும் மக்களின் பிரதிநிதிகள் குறைந்து போனதன் பின்னணி என்ன?

வெளிப்படையாகத் தெரிவது மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தேர்தல் சரிவு. அதிர்ச்சியான விஷயம் கேரளத்தில் ஆட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் தோற்றது. அப்புறம் இந்தி பிரதேசத்தில் முன்னேற்றம் இல்லாதது. பொதுவாகக் கேரளம் தவிர வேறு எங்கும் தனித்து நின்றால் இடதுசாரிகளால் வெல்ல முடியாது எனும் நிலை. ஒரு நூற்றாண்டைக் கடந்த பிறகும் இந்த தேக்க நிலைக்குப் புற மற்றும் அகக் காரணங்கள் பல. புறக் காரணங்களில் அதிமுக்கியமானது சோவியத்தின் வீழ்ச்சி. ஆனால் இடதுசாரிச் சிந்தனை என்பது வெகுமக்களிடமும் பல கட்சிகளிலும் அழுத்தமாக ஊடுருவி நிற்கிறது. கருத்தியல் களத்தில் அதை எதிர்த்தே ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் போராடுவதிலிருந்து இதைத் தெளிவாக உணரலாம். பிற கட்சிகளுடன் சேர்ந்து நின்றால், "நீங்கள் எல்லாம் இந்தக் கட்சிகளோடு சேரலாமா?" என்று கேட்கிறார்கள். ஆனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். தனித்து நின்றால், "உங்க கட்சி நல்ல கட்சிதான், ஆனா ஜெயிக்க மாட்டீங்களே…" எனச் சொல்லியபடியே வேறு கட்சிகளுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்! இந்த மக்களை வென்றெடுக்கும் வித்தைதான் இன்னும் தெரியவில்லை.

மதவாதக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் இக்காலச் சூழலில் மாற்று அரசியல் கட்சிகள் செய்யவேண்டிய உடனடி செயல்பாடு குறித்து..?

மதவெறிக் கட்சியின் கைகளில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் சென்றுவிட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துவிட்டார்கள். ஒரே நல்ல விஷயம் தனிப்பெரும்பான்மையை இழந்தது. இதைச் சாதித்ததில் மாற்றுக் கட்சிகளின் பங்கு மகத்தானது.

இந்த ஒற்றுமையும் செயல்திறனும் தொடர வேண்டும். தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் மதவெறி ஆட்சியை வீழ்த்தமுடியும்... வீழ்த்தியாக வேண்டும். இல்லையெனில் நாடு நாசமாகும். ஆனால் சோகமான விஷயம் மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் சிவில் சமூகம் ஆர்வம் காட்டாதது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளில் எத்தனை பேர் வெளிப்படையாக மதவெறியை எதிர்த்து நிற்கிறார்கள்? பலரும் பம்முகிறார்கள், பதுங்குகிறார்கள். இங்கேயே இப்படி என்றால் வடக்கே எப்படி இருக்கும்? மதவெறியர்களின் அரசியல் அதிகாரத்தை மட்டுமல்ல, சிவில் அதிகாரத்தையும் பிடுங்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் இருண்ட காலமே.

கடந்த 50 ஆண்டுக்கால எழுத்துப் பயணத்தில் இதுவரை 70 நூல்களைப் படைத்திருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் எழுத நினைத்தும் எழுதமுடியாமல் இருப்பது ஏதாவது உண்டா?

எழுத நினைத்துவிட்டால் எழுதாமல் விட்டது இல்லை. சங்க கால வாழ்வு, களப்பிரர் கால வாழ்வு என எழுதிமுடித்ததும் பேரரசுகள் காலத்தைப் பற்றி எழுத வேண்டும், அதுவே முத்தாய்ப்பு என நினைத்தேன். அதற்காக சரித்திர வெளியில் இறங்கியபோது பல்லவப் பேரரசு காலமே அதன் சாரத்தைக் கொண்டிருப்பது புரிபட்டது. அதற்காகப் பட்டயங்களை, கல்வெட்டுகளைப் படித்தேன். அக்கால இலக்கியங்களாகிய மூவர் தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் படித்தேன். பனிரெண்டாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை வாசிக்கவேண்டியதாயிற்று. அடிமைச் சமூகக் கூறுகளைக் கொண்ட நிலப்பிரபுத்துவ சமுதாயம் இக்காலத்தில்தான் உருவானது. கூடவே, அது வேத சமயம் ஊடுருவியிருந்த சைவ - வைணவ சமயங்கள் மூலமாக வருணாசிரமம் மற்றும் சமஸ்கிருத ஆதிக்கம் நிலைபெற்ற காலமாகவும் இருந்தது. இதையே சோழப் பேரரசு தனது மரபுவழிச் சொத்தாகப் பெற்றது, அதைக் கட்டிக் காத்தது. இந்த உண்மைகளை என்னால் சொல்ல முடிந்தது. ‘பல்லவப் பேரரசு - தமிழர் வாழ்வு’ எனும் அந்த நூலை எழுதி முடித்ததும் எனக்குள் ஒரு நிறைவு வந்துவிட்டது. இனி பெரிய ஆய்வு நூல் எழுதுவேனா என்பது சந்தேகமே.

சமூக ஆய்வு, வரலாற்று ஆய்வு, தத்துவ ஆய்வு, மார்க்சிய ஆய்வு, இலக்கிய ஆய்வு, பழந்தமிழ் இலக்கிய ஆய்வு என ஆய்வுத்தடத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறீர்கள். இதில் எவ்வகை ஆய்வினை எழுதுவது மிகவும் சிரமமானது?

பழந்தமிழ் இலக்கிய ஆய்வுதான். அது மார்க்சிய வழியிலான வரலாற்று ஆய்வாகவும் இருந்தது. பொதுமை - தனித்துவம், அகண்டம் - ஒரு கூறு என்று இரு முனைகளையும் ஒன்று சேர்க்கும் பெரும்பாடாக இருந்தது. முந்திய ஆய்வுகள் எல்லாம் அதற்கான அடியுரம் என்பது விளங்கியது.

‘கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு’ எனும் சுயசரிதை நூலை எழுதும்போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

வினோதமாக இருந்தது. இப்போதே இதை எழுத வேண்டுமா எனும் எண்ணமும், வாழ்வு நித்தியமற்றது எனும் எண்ணமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

எனது வாழ்வில் பிறருக்கு - குறிப்பாக இடதுசாரிகளுக்கு - சொல்லும் ஒரு செய்தி இருப்பதாக நம்பினேன், அதை உடனே சொல்லிவிடுவது நல்லது என நினைத்தேன். இடதுசாரிக் கட்சியில் இல்லாத இடதுசாரியாக இருப்பது எளிது. அங்கு இருந்துகொண்டே அப்படியாக இருப்பதில் வரும் பிரச்சினைகள், அவற்றை எதிர்கொள்ளும் விதம், அப்படி எதிர்கொண்டு நீடிப்பதில் உள்ள சுகம் - அவற்றின் கலவையே அந்த நூலிலுள்ள செய்தி.

தற்போதைய ஊடக விவாதங்கள் வெறும் சண்டைக் களங்களாக மாறிவருவது குறித்து உங்கள் கருத்து..?

சில அப்படி மாறிவிடுகின்றன; எல்லாம் அல்ல. என்னுடைய அனுபவம், முன்பைவிட அதிகமாக மக்கள் டி.வி. விவாதங்களைப் பார்க்கிறார் கள். முன்பு நடுவயது ஆண்கள் பார்த்தார்கள்; இப்போது அந்த வயது பெண்களும் பார்க்கிறார் கள். அவற்றின் வழியேதான் அவர்கள் அரசியலை எளிதில் அறிகிறார்கள். பத்திரிகைகள் சாதிக்காததை தொலைக்காட்சிகள் சாதித்துள்ளன. இன்னும் இளைஞர்கள் அதிகம் பார்ப்பதில்லை. சில இளைஞர்களும் இப்போது விவாதங்களுக்கு வருவதால் அவர்களும் இனி பார்ப்பார்கள். பட்டிமன்றங்கள் கொண்டு போகாத அரசியலை டி.வி. விவாதங்கள் கொண்டுபோயுள்ளன.

இன்றைய இளைய படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

நிறைய எழுதுங்கள், குறைவாக அச்சிடுங்கள், ஏமாற்றம் இருக்காது. இது கேட்கிற காலம், படிக்கிற காலமாக இல்லை.

‘இனிய உதயம்’ இதழைப்பற்றிய உங்களின் பார்வை..?

அருமையான கலவை - பஞ்சாமிர்தம். மாதம் இரண்டு என்றால் அதிக வாசகர்களைப் பெறலாம். தொடர்ந்து வெளிவர வாழ்த்துகள்.