ம் பக்கத்து வீட்டுப் பெண்ணோடு பேசுவது போன்றதொரு நெருக்கம், அன்றாட வாழ்வின் நிகழ்வு களை மேற்கோளாகச் சொல்லும் அழகு, வட்டார வழக்கு மொழியிலமைந்த கணீர்க் குரல் என இன்றைக்கு பட்டிமன்ற மேடைகளை வலம்வரும் நட்சத்திரப் பேச்சாளர் களுள் ஒருவர் கவிதா ஜவகர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய தோழமைக்குச் சொந்தக்காரர். மேடையேறிவிட்டால் தன் கருத்தை வலுவாகச் சொல்வதில் மிகவும் உறுதியானவர். இனி‘இனிய உதயம்’ வாசகர்களுக்காக அவரோடு நடத்திய உரையாடலிலிருந்து...

பிறந்த ஊரான இராஜபாளையத்திலேயே இன்னமும் இருக்கிற பாக்கியம் பெற்றவர் நீங்கள். உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுங்களேன்…

dd

மனிதராய்ப் பிறந்த எல்லோருக்குமே அவரவர் சொந்த ஊர் அச்சுவெல்லம். அந்த வகையில் இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்தமான ஊர் என்றால் அது நான் பிறந்த ஊரான இராஜபாளையம்தான். திருவாரூர் தேர் அழகு; திருவிடைமருதூர் தெரு அழகு; மன்னார்குடி மதில் அழகு; வேதாரண்யம் விளக்கு அழகு; ராமேஸ்வரம் பிரகாரம் அழகு என்று சொல்வார்கள். அதுபோல இராஜபாளையத்தின் அழகு, ஊரைச்சுற்றி பார்டர் போட்ட மாதிரி காவல் நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைதான்.

குற்றாலச்சாரலின் கருணைக் காற்று இராஜபாளையம் வரை வருவது எங்கள் ஊருக்குக் கிடைத்த வரம். நன்றிக்கு அடையாளமான நாய்க்கும் பேர் பெற்றது எங்கள் ஊர். தனித்துவமான ருசி நிறைந்த சப்பட்டை மாம்பழம் எங்கள் ஊரில் விளைவது தனிச்சிறப்பு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் தெருவெங்கும் தேசிய எழுச்சி இருந்ததால் இந்த ஊருக்கு சுயராஜ் பாளையம் என்று பட்டம் சூட்டினார் எஸ்.சீனிவாச ஐயங்கார். மராட்டியத்தில் வார்தா, ஆந்திராவில் பீமாவரம், தமிழ்நாட்டில் இராஜபாளையம் ஆகிய மூன்றும் அனைத்துப் போராட்டங்களும் நடைபெற்ற நகரங்களாக ஜவஹர்லால் நேரு சொல்லியிருக்கிறார்.

Advertisment

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடும், மாநில மலரான செங்காந்தளும், மாநில மரமான பனையும் எங்கள் ஊரின் சுற்றுவட்டாரத்தில் காணமுடியும். தேசப்பிதா மகாத்மா காந்தி இரண்டு முறை வருகைதந்த பெருமைக்கு உரியது. இராஜபாளையம் கதர் துணியைப் பார்த்த பிறகுதான் அகில இந்திய கதர் வாரியத்தை அண்ணல் காந்தியடிகள் தொடங்கியதாகச் சொல்லுவார்கள். 1927லிஆம் ஆண்டு இராஜபாளையத்தில் காந்தி கதர் வஸ்திராலயம் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே காந்தி பெயரால் திறக்கப்பட்ட முதல் கதர் வஸ்திராலயம் இதுதான்.

காட்டன் சிட்டி என்று மில்களுக்கு பெயர்போன ஊர் இராஜபாளையம். இப்போது கொஞ்சம் பொலிவிழந்துவிட்டது. தமிழகத்திற்கு பி.எஸ்.குமாரசாமி ராஜா என்ற ஒரு முதல்வரைத் தந்த ஊர். ஆண்டாள் பிறந்த திருவில்லிபுத்தூர் பக்கத்தில் இருப்பதால் பக்தி நிறைந்த ஊர். பத்துக்கும் மேற்பட்ட சித்தர்கள் சமாதி அமைந்த ஊர்.

2002-இல் திருமணமான பின் கணவர் ஊரான கோவிலூரில் 14 ஆண்டுகள் கூட்டுக்குடித்தன வாழ்க்கை எங்களுடையது. ஆனாலும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய காரணத்தினால் ஏறத்தாழ பத்தாண்டுகள் தினமும் இராஜபாளையம் வந்துபோய்க்கொண்டிருந்தோம். அதற்குப் பின் பிள்ளைகளின் படிப்புக்காகக் கடந்த பத்தாண்டுகளாக இராஜபாளையத்திலேயே வசித்துவருகிறோம். உள்ளூரில் இருப்பதால் முப்பதாண்டுகளுக்கு முன் உடன்படித்த பள்ளித் தோழிகளை நினைத்த மாத்திரத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Advertisment

என்னுடன் பணியாற்றிய வெளியூர் நண்பர்கள் என் ஊரைப்பற்றி சொல்லும்போது வாழ்வதற்கேற்ற ஊர்; யாரையும் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் ஊர் என்று சொல்வார்கள். என் கருத்தும் அதே.

பள்ளிக்காலத்தின் பசுமையான நினைவுகளேதுமுண்டா..?

பள்ளி நினைவுகள் என்பதே பசுமையான நினைவு கள் தானே! ஒவ்வொரு குணங்களுக்குமே ஒரு நிறம் உண்டு என்று சொல்வார்கள். அந்த விதத்தில் நினைவு களின் நிறம் பச்சை. எப்போது நினைத்தாலும் மனசுக்குள் பசுமையைப் போர்த்தி எனக்கு ஆறுதலைத் தருவது என் பள்ளிக்கூட நினைவுகளும், கல்லூரி நினைவுகளும்தான். இராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். பாம்பே ஸ்டோர் கடையின் மஞ்சப்பையில் கல் சிலேட்டும் மதிய சத்துணவுக்காகத் தட்டும் வைத்துக்கொண்டு ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்து சென்ற அழகிய நிலாக்காலம் அது. செல்லும் வழியில் மிகப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவர்களின் வீட்டு வாசலில் இருக்கும் சிறிய போஸ்ட்பாக்ஸில், அசோக மர இலையில் எதையாவது எழுதிப் போட்டுவிட்டு வருவோம். பெட்டியைத் திறந்து பார்ப்பவருக்குத் தினமும் குவிந்துகிடக்கும் இலைகளையும் அதில் எழுதப்பட்ட பிழைமிகுந்த உரையாடல்களையும் பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும்?

பின்னாளில் -

"தினசரி வழக்கமாகிவிட்டது

தபால் பெட்டியைத் திறந்து

பார்த்துவிட்டு

வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே

எந்த கடிதமும் இல்லாத

ஏமாற்றம்.

இன்று எப்படியோ

என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்.

எந்த பறவை எழுதியிருக்கும்

இந்த கடிதத்தை?"

-என்ற வண்ணதாசனின் கவிதையை வாசிக்கும்போதெல் லாம் பழைய நினைவு வரும். பள்ளி வாசலில் நெல்லிக்காய், கிளாச்சிக்காய், மக்காச்சோளம் விற்று வாழ்ந்த பாட்டிகள். அவித்த புளியங்கொட்டைகளையும் பலாக்கொட்டைகளையும் மட்டுமே விற்றுவந்த இன்னொரு பாட்டி, ஜவ்வு மிட்டாயை குச்சியில் மாட்டித் தின்ற காலங்கள்,

அதிகாலை கண்ட கனவாக

எல்லாம் காணாமல் போய் விட்டன.

முதல் இரண்டு வகுப்பெடுத்த வீரம்மாள் டீச்சர், மூன்றாம் வகுப்பு எடுத்த ஜீவா டீச்சர், அந்த வருட இறுதியில் போட்ட பெரியம்மையால் பரீட்சை எழுதாமலேயே பாஸானது, நான்காம் வகுப்பு விக்டோரியா டீச்சரின் அதட்டல், ஐந்தாம் வகுப்பில் தலைமை ஆசிரியர் சஞ்சீவி பாண்டியன், ஆறாம் வகுப்பிற்குப் புதிதாகச் சேர்ந்தாலும் அடி பின்னியெடுத்த இராஜேஸ்வரி டீச்சர், ஏழாம் வகுப்பில் தோழமையாய்ப் பழகிய ஜோதிமணி சார் என அந்தப் பள்ளி கொடுத்த அனுபவம் அதிகம்.

எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஏ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பத்மா டீச்சர் தொடங்கி, பட்டு டீச்சர் வரை எல்லோருமே தேவதைகள்தான். பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி என்பதால் கிடைத்த சுதந்திரம், செய்த சேட்டைகள், கற்றுக் கொண்ட வாழ்வியல் அனுபவம் என்று இந்தப் பள்ளி எனக்கு கிடைத்த இன்னொரு சொர்க்கம்.

நாமும் மேடையேறி பேச வேண்டுமென்கிற ஆர்வம் எப்போது, எதனால் உண்டானது?

நாடார் மேல்நிலைப்பள்ளி - மிகப் பெரிய மைதானத்தைக் கொண்டது. அதனாலோ என்னவோ எல்லா மேடைசார் போட்டிகளும் ஒட்டுமொத்த மாணவர்களின் முன்னிலையிலேயே நடக்கும். மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி என எல்லாப் போட்டிகளுக்கும் நாங்களும் அறிவிக்கப்படாத நடுவர்களாய் மண்ணில் மார்க் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்போம். மாறுவேடப் போட்டியில் வேடமிட்டு வருபவர் களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள் என்று? அதுவும் பிச்சைக்காரன் வேசமிடுபவர்கள் நடுவர்களிடமே பிச்சை கேட்பார்கள். சில தைரியமானவர்கள் தலைமை ஆசிரியரிடமே சென்று கைநீட்டுவார்கள்.

பாட்டுப் போட்டிக்கு வருபவர்கள் அதற்கென கலர் ட்ரெஸ் போட்டு புது செயின், மேக்கப்லாம் போட்டு வந்த நாபிக் கமலத்தில் இருந்து குரலெடுத்துக் கஷ்டப்படுவார்கள். ஆனால் பேச்சுப் போட்டிக்கு வரும் அண்ணன்கள் சீருடையோடு கையில் சுருட்டிய பேப்பரோடு மேடையேறி,“தாமரைத் தடாகத்தில் அமர்ந்திருக்கும் தலைமை ஆசிரியர் அவர்களே, தராசுக்கோல் போல நீதிவழங்கக் காத்திருக்கும் நடுவர்களே, மல்லிகை மொட்டுக்ககளாய் அமர்ந்திருக்கும் மாணவக் கண்மணிகளே” என்று ஓங்கிக் குரல் எழுப்பினால் வானமே அதிரும். மாணவர்களின் கைத்தட்டலில் ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் கேட்டுக்கு பக்கத்தில் வந்து எட்டிப்பார்ப்பார்கள்.

அப்போது முடிவெடுத்தேன், நாமளும் பேச்சாளராகி ரோட்டுல போறவங்கள கேட்டுக்கு வர வைக்கணும்னு. அது மட்டுமல்லாமல் எதுகையும் மோனையுமாய் காதுகளில் நுழையும் தமிழ் வார்த்தைகள் தந்த சுகம் வேறெதுவும் தரவில்லை.

மேலும் அன்று தெரு விழாக்களில் எங்கள் ஊரைச் சேர்ந்த தமிழாசிரியர் ஆதிமூலம், ‘திருவள்ளுவர் பாமரன் சந்திப்பு’ என்று ஒரு நிகழ்வை நடத்து வார். அதில் பாமரனாக அவர் கலந்துகொண்டு திருவள்ளு வரைக் கேட்கின்ற கேள்விகள் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றன. அதற்குத் திருவள்ளுவர் சொல்லுகிற பதிலும், குறளின் இனிமையும் என்னைத் தமிழின் பக்கம் வேகமாக இழுத்தது.

கல்லூரியில் எம்.காம்., படித்தவரான நீங்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்தது ஏன்?

வணிகவியல் மாணவியாக இருந்தாலும்கூட தமிழின்மீது ஆழ்ந்த பற்றும் காதலும் உண்டு. அதனால் தான் பட்டிமன்ற மேடைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். தமிழை முறையாகப் படிக்காத கவிதாவினால் எப்படி இலக்கிய மேடைகளையும், ஆன்மீக மேடைகளையும் கையாளமுடியும் என்று என் காதுபடவே சில விமர்சனங்கள் எழுந்தன. தமிழ் இலக்கியங்களை முழுமையாகப் படித்து அறிந்து, அந்தக் குறையையும் தீர்த்துவிட வேண்டும் என்கின்ற அக்கறை யோடு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக இளநிலைத் தமிழ் மற்றும் முதுகலை தமிழ் படித்தேன். தமிழில் முனைவர் பட்டம் பெற வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவு.

dd

‘கரிசல்காரி’ எனும் பெயரில் கவிதை நூலொன்றையும் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்குள்ளிருந்த கரிசல்காரியை எப்போது கண்டுகொண்டீர்கள்?

சிறுவயதிலேயே நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் இருந்த காரணத்தினால் கவிதைகள்மேல் அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. படித்ததைப் போலவே எழுதிப் பார்க்கும் ஆர்வம் வந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘பாக்யா’ இதழில் ஒருசில கவிதைகள் வெளிவந்தன. அதன்பின் என் மனதின் துயரங்களையும் சந்தோச தருணங்களையும் சிறுசிறு கவிதைகளாக்கி எழுதத் தொடங்கினேன். என் தோழியர் கொடுத்த உற்சாகமும் என்னுடைய 12-ஆம் வகுப்பு ஆசிரியை பட்டுலட்சுமி கொடுத்த 'குட்டிக்கவி பாரதி' என்ற பட்டமும் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டியது. சுமாராகவே இருந்தாலும் என்னைப் போன்றோருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. முகநூல் வந்த பிறகு மீண்டும் கவிதைகளைப் பதிவுசெய்ய ஆரம்பித்தேன். அப்போது என்னை மறைத்துக்கொள்ள ஏதாவது ஒரு புனைபெயர் தேவைப்பட்டது. தமிழச்சி தங்க பாண்டியன் எனக்கிட்ட கரிசல்காரி என்ற பெயரையே பயன்படுத்திக் கொண்டேன்.

"எனக்குப் பின்னால்

நீ தோண்டிய குழியில்தான்

நான் மரமாக முளைத்தேன்"

என்பது போன்ற சிறு சிறு கவிதைகள் என் மனதின் பெரும் சோகங்களுக்கு ஆறுதல் தந்தன. மற்றபடி கவிஞர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கில்லை என்பது எனக்கே தெரியும்.

முதலாவதாகப் பேசிய பட்டிமன்ற மேடை எது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

முதன்முதலாகப் பேசிய மேடை என்றால் நாடார் மேல் நிலைப் பள்ளியில் ஏழாவது படிக்கும்போது‘எனக்குப் பிடித்த தலைவர்’ என்ற தலைப்பில் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் பற்றி ஆற்றிய உரை. அந்த உரை பாதியிலேயே நின்றுபோனது.

முதல் பட்டிமன்ற மேடை என்றால் கல்லூரி இரண்டாம் ஆண்டு சுதந்திர தின விழாவில் நானே நடுவராகப் பங்கேற்று என்னுடைய சக மாணவியர் பங்களித்த பட்டிமன்றத்தைச் சொல்லலாம்.

ஆனால் முறையான பட்டிமன்றம் என்றால் தமிழ் ஆசிரியர் ஆதிமூலம் வழிகாட்டலில் குமரிக் கண்ணன் தலைமையில் இராஜபாளையத்தில் ஆவாரம்பட்டியில் பேசிய இன்னிசைப் பட்டிமன்றமே என்னுடைய முதல் பட்டிமன்றம்.

யாருடைய தலைமையின்கீழ் பட்டிமன்றம் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்?

என் நினைவு அறிந்தவரை கடந்த 24 ஆண்டுகளில் நான் நூற்றுக்கும் மேற்பட்ட நடுவர் களின் தலைமையில் பேசியுள்ளேன். பலபேர் காலத் தின் ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார்கள். சில பேருக்கு காலம் துணைநிற்கவில்லை. சில பேர் காலத்தின் அருமையை உணரவில்லை. ஆனாலும் அனைவருமே திறமை வாய்ந்தவர்கள்தான். அதில் பல நடுவர்கள் நான் வளர்வதற்கான வாய்ப்பினைத் தந்தார்கள். ஓரிருவர் எனக்கு வாழ்க்கையே தந்திருக்கி றார்கள். அந்த வகையில் தமிழறிஞர், பட்டிமன்றப் பிதாமகர் சாலமன் பாப்பையா அணியில் பேசுவதைப் பெருமையாகவும் எனக்கு கிடைத்த வரமாகவும் கருதுகிறேன்.

2000 ஆண்டுகாலப் பழமைமிக்கது பட்டிமன்றம் என்ற கலை வடிவம். "மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்" என்ற தொடர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. "பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்" என்று மணிமேகலை காவியத்தில் பட்டிமண்டபம் பற்றிய குறிப்புள்ளது. கம்பராமாயணத்தில், "பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்" என்று பேசப்படுகிறது. திருவாசகத்தில், "பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே" என்று பட்டிமண்டபம் குறித்து மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க பட்டிமன்றங் களைப் பல இலக்கிய அமைப்புகள் முன்னின்று நடத்தின. குறிப்பாக, கம்பன் அடிப்பொடி, சட்டையில்லாக் கம்பன் என்று கொண்டாடப்பட்ட கம்பன் கழகங்களின் தாய்க்கழகமான காரைக்குடி கம்பன் கழகத்தின் நிறுவனர் சா.கணேசன் பட்டி மன்றங்களை இலக்கிய வடிவமாக நடத்தினார். இலக்கிய அரங்கங்களில் பேசப்பட்ட பட்டிமன்ற வடிவத்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் சமூக இலக்கிய தலைப்புகளாக மாற்றி, எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சமூகப் பட்டிமன்றமாக மாற்றினார்.

அவர்வழி வந்த சாலமன் பாப்பையா இன்னும் எளிமையாக்கி, குடும்பத் தலைப்புகளாக மாற்றினார்.

இதன் வாயிலாக எல்லா வீட்டுக்குள்ளும் பட்டிமன்றத்தைக் கொண்டுசென்ற பெருமை ஐயா பாப்பையா அவர்களையே சாரும். ஐயா வந்தபின் பட்டிமன்றத்திலும் பெண்கள் இடம்பெற்றார்கள். பட்டிமன்றம் பார்ப்பதற்கும் பெண்கள் அதிக அளவில் வந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஸ்டாரோடு நடிக்கவேண்டும் என்ற கனவு இருப்பதுபோல ஐயா தலைமையில் ஒரு நிகழ்வு கிடைத்தாலே போதும் என்ற கனவு எல்லாப் பேச்சாளர்களைப் போலவே எனக்கும் உண்டு.

அந்த வகையில் எனக்கு கிடைத்த வாய்ப்பு இறையருள் தந்தது என்றே நம்புகிறேன். ஏறத்தாழ ஒரே துறையில் அறுபது வருடம் தாண்டிய அனுபவமும், தொடங்கிய நாள் முதல் நம்பர் ஒன்னாக இருக்கும் ஆளுமையும் அதே நேரத்தில் எல்லோரிடத்திலும் கருணையும் பரிவும் கொண்டவர். தன்னைப் பின்னிருந்து தாக்கியவர்களையும் முன்னின்று வாழ்த்தும் பெருந்தகையாளர். ஐயா பத்மஸ்ரீ விருது பெற்றபோது எடுக்கப்பட்ட தொலைக்காட்சி பேட்டியில், “அடுத்த தலைமுறை பேச்சாளர்களில் நம்பிக்கை தருபவர்கள் யார்? என்று கேட்டபோது, மிகப்பெரிய பேச்சாளர்களின் பெயர்களோடு என் பெயரையும் சொல்லியிருந்தார். அந்த கணம் மிக அற்புதமானது; என் வாழ்வின் பெருமைமிக்க தருணமாகக் கருதுகிறேன்.

யாருடைய மேடைப்பேச்சு உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?

பட்டிமன்ற மேடைகளைப் பொறுத்தவரை எல்லாருடைய பேச்சும் நன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. ஆன்மிகம், இலக்கியம், நகைச்சுவை என்று ஒவ்வொரு பேச்சாளருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் அவர்கள் தனித்துவமாக நம்மைக் கவர்ந்து விடுவார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலத்தில் எனக்கு முதல் மேடை கொடுத்த தமிழாசிரியர் ஆதிமூலம் ஐயா, பேரா. இராமச்சந்திரன், பேரா. இராஜாராம், நாஞ்சில் சம்பத், கவிஞர் நீலம் மதுமயன், அவனி மாடசாமி, புலவர் காளியப்பன், புலவர் செ.பாலகிருஷ்ணன், முத்துமணி, பிச்சுமணி போன்ற தெற்கத்தி மண்ணைச் சேர்ந்த பேச்சாளர்களின் பேச்சு நடை பிடிக்கும்.

பெண் பேச்சாளர்களில் காந்திமதி அம்மா, இளம்பிறை மணிமாறன், சரஸ்வதி இராமநாதன், வாசுகி மனோகரன், இந்திரா ஜெயச்சந்திரன் உள்ளிட்ட எல்லாருடைய பேச்சு பாணியும் எனக்குப் பிடிக்கும். மிகக் குறிப்பாக தமிழருவி மணியன், சுகி சிவம், பாரதி கிருஷ்ணகுமார், இலங்கை ஜெயராஜ், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் பேச்சை விரும்பிக் கேட்பேன். பாரதி பாஸ்கர் அவர்களுடைய பேச்சு என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்.

. கிராமங்களில் குறைந்துபோன பட்டிமன்றங் களின் எண்ணிக்கை நகரங்களிலும் அரசு விழாக் களிலும் நிர்வாகங்களிலும் கல்லூரிகளிலும் சமூக அமைப்புகளிலும் இலக்கிய நிகழ்வுகளிலும் அதிகமாகி இருக்கிறது. அன்றைய தினங்களில் தமிழ் படித்தவர்கள் மட்டுமே பட்டிமன்றங்களில் பேசுவதில் ஆர்வம் காட்டிவந்தனர். ஆனால் இன்று ஐடி, ஊடகத்துறை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கூட பட்டிமன்றங்களில் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இளைஞர்கள் அதிகம் பங்குபெற ஆரம்பித்துள்ளார்கள்.

பேச்சரங்குகளில் வட்டார வழக்கில் பேசுவதையே உங்களது பாணியாகக் கொண்டதற்கு காரணமென்ன..?

நான் பிறந்தது வளர்ந்தது படித்தது பணி செய்தது எல்லாமே நான் பிறந்த இராஜபாளையத்தில்தான். அது மட்டுமல்ல; நான் திருமணமாகி சென்ற ஊரும் இராஜபாளையத்திற்கு மிக அருகில் உள்ள கோவிலூர் என்ற ஊர்.

நான் எங்கள் ஊரைத் தாண்டி எங்கேயும் சென்றதில்லை. நான் வட்டார வழக்கிலேயே ஊறிப் போய்விட்ட காரணத்தினால் எங்களுடைய மொழி எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் வட்டார வழக்கில் பேசும்போது அது ஆழமாக அர்த்தமுள்ளதாக அடுத்தவர் மனதில் இடம்பிடிப்பதாக அமைந்துவிடுகிறது. மேலும் வெற்றிபெற்ற முன்னணி பேச்சாளர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வட்டார வழக்கிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களாக இருப்பார்கள்.

தற்காலச் சூழலுக்கேற்ப பட்டிமன்ற அரங்குகளில் எப்படியான மாற்றங்களைச் செய்யவேண்டுமென்று நினைக்கிறீர்கள்..?

அன்றைய காலகட்டத்தில் இரவு 10 மணிக்குத் தொடங்குகிற பட்டிமன்றம் அதிகாலை 4 மணிக்குத்தான் முடியும். இன்றைக்கும் கூட மூன்று மணி, நான்கு மணி நேரம் பட்டிமன்றம் நடத்துகிற குழுக்களும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய மக்களுடைய வாழ்க்கை பரபரப்பான வாழ்க்கை. யாருக்கும் உட்கார்ந்து கேட்பதற்கோ யாரையும் பார்ப்பதற்கோ நேரமில்லை. இப்படியான சூழ்நிலையில் பட்டிமன்றங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென்றால் பட்டிமன்றத் தின் நேரத்தைக் குறைக்க வேண்டும். இன்றைய ஊடகத்துறை எதையும் சுருக்கமாகச் சொல்லி பழகிவிட்டது. 30 விநாடிகளில் ஓடக்கூடிய ரீல்ஸ் பார்த்து பழகிய தலைமுறையாக இன்றைய தலைமுறை ஆகிவிட்டது. எனவே பேச்சாளர்கள் தங்களுடைய பேச்சைப் புதுமையானதாகவும் கண்ணியமிக்கதாகவும் நாகரீகமான முறையிலும் பதிவுசெய்தல் நன்று.

பல வெளிநாடுகளுக்கும் பேசுவதற்காகச் சென்றுவந்துள்ளீர்கள். உங்களுக்குப் பிடித்த நாடு எது?

அமெரிக்கா, ஃபிரான்ஸ், சிங்கப்பூர் உட்பட ஏறக்குறைய 10 வெளிநாடுகளுக்குமேல் பயணம் செய்துள்ளேன். ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த நாடு ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா. எதிர்வரும் மனிதர்களை எந்த வேறுபாடும் பார்க்காமல் மனதார சிரித்து வணக்கம் சொல்லுகிற மனிதர்கள் கொண்ட நாடு ஜாம்பியா. எந்த அறிவியல் வளர்ச்சியாலும் ஜாம்பியாவின் பசுமையையும் அந்த மக்களின் நேசத்தையும் பண்பாட்டையும் அழிக்க முடியவில்லை. குறைந்த அளவிலேயே நம் தமிழ் மக்கள் அங்கே வாழ்ந்தாலும்கூட நிறைவான மனத்தோடு தமிழைத் தொலைக்காத குணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நயாகரா நீர்வீழ்ச்சியின் எந்த செயற்கைத்தனமும் இல்லாமல் இயற்கை அன்னையின் மடியாக நம்மை தழுவிக்கொள்கிற விக்டோரியா நீர்வீழ்ச்சி ஜாம்பியா நாட்டின் சிகரம். மிக ஆழமான பள்ளத்தாக்கில் வீழ்ந்து எழுந்து வந்து தெறிக்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சியின் சாரலில் நனைந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

மறக்கவே முடியாத மேடையனுபவம் ஏதுமுண்டா..?

பலமுறை சொல்லி இருக்கிறேன்; மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன். கரூரில் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தில் ஆண்டுவிழாவில் என்னுடைய தலைமையில்,‘மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கு தேவை அருளா? பொருளா?’ என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நிறைவில் அப்பா பற்றி பேசிய பேச்சைக்கேட்டு கூடியிருந்த மக்கள் மட்டுமல்லாமல் நன்றியுரை கூற வந்த அமைப்பாளரும் பக்கத்தில் நின்ற பேச்சாளர்களும் ஏங்கி ஏங்கி அழுத காட்சியை என்னால் மறக்கவே முடியாது. தந்தை என்பவர் உலகத்தில் இருந்து மறைந் தாலும் நம் உணர்வில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை நான் மீண்டும் அன்று உணர்ந்தேன்.

உங்கள் பேச்சிற்கு உங்கள் வீட்டில் எப்படியான வரவேற்பு கிடைக்கிறது..?

என்னுடைய திருமணமே பட்டிமன்ற மேடையில் தான் நிச்சயமானது என்பதால் புகுந்த வீட்டில் என்னுடைய பேச்சுப் பயணத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு இருக்கும். மிக முக்கியமான குடும்ப நிகழ்வுகளில் நான் பங்குகொள்ள இயலாவிட்டாலும் என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல் என் குடும்பம் என்னை அன்பாகப் பார்த்துக்கொள்ளும். என் கணவர் என் பட்டிமன்றப் பயணத் திற்கு கிடைத்த பெருந்துணை. திருமணத் திற்குமுன் என் எல்லாப் பட்டிமன்றங் களுக்கும் என் அம்மா துணையாக இருந்து இந்தத் துறையில் நான் கால் பதிப்பதற்கு காரணமாக இருந்தார். என் பிள்ளைகளோடு போதிய அளவு நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் அதைப் புரிந்துகொண்டு என் சூழலை ஏற்றுக் கொள்ளக்கூடிய பிள்ளைகள் வாய்த்தது ஒரு வரம்.

‘இனிய உதயம்’ இதழை வாசித்திருக் கிறீர்களா..?

எனக்குப் பிடித்தமான இதழ்களுள் ஒன்று ‘இனிய உதயம்’. நான் விரும்பிப் படிக்கும் பல படைப்புகளின் சங்கமமாக உள்ளது. அதில் நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். பல வெகுசன இதழ்களில் இல்லாத சிறப்பு ‘இனிய உதயம்’ இதழுக்கு உண்டு. வெளியுலகு அறியாத பல புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை வளர்த்தெடுக்கிற ஒரு பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறது. செறிவான கட்டுரைகள், அர்த்தமிக்க கவிதைகள், மலையாள மொழிபெயர்ப்புக் கதைகள் என தனக்கான தனித்துவத்தோடு வரும் ‘இனிய உதயம்’ இதழ், தமிழர்கள் வீடுதோறும் இருக்கவேண்டிய தரமான இதழ்.