விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் எஸ்.எஸ்.எல்.சி.(1973-74)படித்த மாணவர்கள், தங்கள் பொன்விழா ஆண்டின் சந்திப்பை கடந்த 23-ஆம் தேதி அங்குள்ள ஏ.என்.யு.டி. மஹாலில் நடத்தினர். அதில் நம் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களும் ஒரே வகுப்பில் படித்த மாணவர் என்பதால் அவர்களோடு கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். அப்போது,தமிழக அரசின் ’கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற ஆசிரியருக்கு, பள்ளிக்கால நண்பர்கள் சக மாணவனுக்கு பாராட்டு விழாவையும் நடத்தி மகிழ்ந்தனர். ஆசிரியர் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டி, வீர வாளையும் நினைவுப் பரிசையும் வழங்கி மகிழ்ந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஆசிரியர் , “பள்ளி நாட்களை மனதால் மீண்டும் அனுபவிக்கிறது சுகமான போதை. இந்தநாள் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. அந்த பள்ளி வாழ்க்கை இப்ப இருக்காதான்னு எல்லாரும் ஏங்கறோம். இங்க வந்திருக்கும் எல்லாருமே அவங்கவங்க பங்குக்கு சாதிச்சிருக்கோம். இருந்தும் எனக்கு மட்டும் எதற்கு பாராட்டு விழான்னு தயங்கினேன். விருது வரும் போகும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நாள் நமக்குத் திரும்பி வராது. இப்படியொரு நாளை சேர்த்து வச்ச நண்பன் சம்பத்துக்கும் அவனுக்கு தோள் கொடுத்த மற்றவர்களுக்கும் தலைவணக்கம் என்றவர், தன் இதழியல் பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
நக்கீரனை ஆரம்பிக்கனும்ங்கிற எண்ணத் திலேயே நான் சென்னைக்குப் போகலை.போன இடத்தில் நக்கீரன் மாட்டுச்சு.நக்கீரன் மாட்னபிறகு நக்கீரனா வாழறதுக்கு கஷ்டப்படறோம்.
அவ்வளவுதான். ஆனா அதன் மூலமா சின்னச் சின்ன செயல்களை செய்யமுடிஞ்சிது. நம்மால் முடியிற அளவுக்குச் செய்யறோம். அந்த இடத்துக்கு நாம வர்றதுக்கு 37 வருசம் ஆச்சு. அதுக்கு நாம கொடுத்த விலை ஜாஸ்தி.
இப்ப இங்கே ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் எல்லாம் வந்திருக்காங்க.இதுக்காக அவங்க சீனியர்கள்ட்ட பேசினேன்.
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிச்ச நாங்க, 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கப் போறோம்.
கோல்டன் ஜூப்ளின்னு சந்தோஷமா சொன்னேன்.
இந்த நாள் ரொம்ப அற்புதமான நாள்” என்றவர், அங்கு பத்திரிகையாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதில்களைக் கொடுத்தார். அப்போது அருப்புக்கோட்டை சாப்பாட்டு ருசியையும் அவர் விவரிக்கத் தவறவில்லை.
அருப்புக்கோட்டை வரும்போது, சாப்பாட்டை நினைச்சிக்கிட்டே வந்தேன். காலைல ஈரல், ரத்தப் பொறியலோட கமகமன்னு முட்ட தோசை. வீட்ல கூட இந்த அருப்புக்கோட்டை டேஸ்ட் வராது.அதேபோல் மதியானம் மணக்க மணக்க சீரக சம்பாவுல மட்டன் பிரியாணி.இந்த டேஸ்டுக்காகவே, பிளைட்ல வீட்டுக்கும் கொண்டுபோறேன். நம்மோடு படிச்ச ஒண்ணா குப்பை கொட்டுனவய்ங்களோடு ஒண்ணா உக்காந்து சோறு தின்னதுல இருக்குற சந்தோஷம் இருக்கே- அது ஒரு வரம். அவிய்ங்களோடு சுக்காவையும் நாட்டுக்கோழி குழம்பையும் ரசிச்சி சுவைச்சி சாப்பிடறது இருக்குல்ல. அதில் மனசு நிறைஞ்சி போய் உட்கார்ந்திருக்கேன்.”சோத்து ஏற்பாடு திறமையா பண்ணுனவன் நம்மகூட படிச்ச தேவானந்த்.
அவனுக்கு ஒரு சபாஷ். என்றவரிடம், வீரப்பன் விசயத்தில் ஏதாவது புதிய தகவல் இருந்தால் எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கேள்வி எழுப்பினர்.
ஆசிரியரோ,“ரஜினி ஒருக்கா என் கூட காட்டுக்கு வர்றேன்னாரு. தாடியெல்லாம் வுட்டு தயாராயிட் டாரு. எங்கிட்ட நான் ஓகே வான்னாரு. அப்ப கலைஞர்ட்ட இருந்து போன்.என்ன கோபால், ரஜினியப் பாத்தீங்களான்னாரு. என்னண்ணேன்னு கேட்டேன். காட்டுக்கு வர்றேன் னாருன்னு சிரிச்சார்.ஏன்ணே சும்மாவே ஒரு சூப்பர் ஸ்டாரப் புடிச்சி வச்சிருக்கான்.இப்ப இன்னொரு சூப்பர் ஸ்டாரு நம்மளால மாட்டிக்கிட்டாருன்னா கதை கந்தல். யாரைக் கேட்டு அனுப்புனீங்க? யாரைக் கேட்டு கூட்டிப் போனீங்கன்னு ரெண்டு பேருக்குமே கேள்விகள் வரும் அப்படின்னேன்.
அப்ப ரஜினியை நீங்களே சமாளிங்கன்னாரு. பயணத்துக்கு ரஜினி பேக்க எல்லாம் ரெடி பண்ணிட்டாரு. நான் சிரிச்சேன்.என்னன்னு கேட்டாரு. நான் ரெடி பண்ணிட்டுக் கூப்பிட றேன்னு டேக்கா கொடுத்துட்டுப் போயிட்டேன். காடு என்பது நாம நினைச்சிப் போறது இல்லை.நாம நினைக்கிறோம். அவங்கிட்ட இருந்து அழைப்பு வரனும்ல. அவன் உங்களை ஒத்துக்கனும். அவன் ஒத்துக்கலைன்னா கதை கந்தல். சின்ன சந்தேகம் வந்தாலும் சுட்ருவான். இப்படி நிறைய பேரக் கொன்னுருக்கான். இதத் தெரிஞ்சும் நாம போயிருக்கோம். இப்படி நக்கீரன் வெளிப் படுத்தாத சம்பவங்கள் என்பதை விரல்விட்டுதான் எண்ண முடியும். என்றார் உற்சாகப் பெருக்கோடு.
__________
அது ரொம்ப அற்புதமான நாள்!
என்னுடன் எஸ்.எஸ்.எல்.சி. படித்த நண்பர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆசை என்னுள்ளே உறைந்து கிடந்தது. அவ்வாசை பொய்யாய், பழங்கதையாய் போய்விடுமோ? என்ற கவலை என்னைத் துளைத்துக்கொண்டே இருந்தது. பொன்விழா சந்திப்பு தினத்தில் என் கனவு நனவாகியது. கடந்த மாதம் என்னைக் கண்டறிந்து இக்குழுவில் சேர்க்கச் செய்த நண்பர்கள் ஜி.சந்திரசேகரன் (மெட்டுக்குண்டு), எம். சங்கரன் ஆகியோருக்கு என் முதல் நன்றி.
23-3-2025 அன்று பொன்விழா சந்திப்பு நடைபெற வுள்ளது என்ற தகவல் தெரிந்ததில் இருந்தே உற்சாகம் தொற்றிக் கொண்டது. அத்தோடு திருவிழாவுக்கான நாள் விரைவாக வராதா? என்ற ஏக்கம் கொண்ட குழந்தையின் மனநிலைக்கு ஆளாகிவிட்டேன். பொன்விழா சந்திப்பில் பேசிய நண்பன் நக்கீரன் கோபால், நான் திருவிழாவுக்கு செல்ல ஏங்கும் குழந்தைபோல ஆகி அந்த நாளுக்காக காத்திருந்தேன் என்று சொன்னதில் உள்ள உண்மையை ஏற்கெனவே அனுபவப் பூர்வமாக உணர்ந்திருந்தேன்.
அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த செயல்பட்டு வந்த நண்பன் சம்பத்குமாரை 14-3-2025 அன்று தொடர்பு கொண்டு இதற்கான நன்கொடை எதுவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கேட்டறிய அழைத்தேன். போட்டோவில் எல்லாரும் ஒரேமாதிரி இருக்க விழாக்குழு சார்பாக அங்கவஸ்திரமும் மற்ற பரிசுப் பொருள்களும் வாங்குவதற்காக மதுரை வந்து கொண்டிருக்கிறேன் என்றான். பொது நிகழ்ச்சிகளில் ஒருவரே சிரமப்படக்கூடாது; கூட்டுச் செயல்பாடு அவசியம் என்பதை மனிதில் கொண்டு மதுரையில் தான் என் வீடு; நானும் உன்னோடு வருகிறேன் என்று சொல்லி அவனுடன் சென்றேன். சம்பத் காட்டிய வேகமும் உற்சாகமும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. ஒரு பொருளை வாங்குவதற்குமுன் நண்பர்கள் பலரின் கருத்துக்களை கேட்டறிந்து உள்வாங்கி அவர்களின் ஒப்புதலோடு வாங்கியது கண்டேன். அது என்னை வெகுவாகக் கவர்ந்தது. பொன்விழா எல்லாருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தரவேண்டும். அதில் ஒரு சிறு குறைகூட ஏற்படக்கூடாது என்பற்காக பார்த்துப் பார்த்து வாங்குவது, திட்டமிடுவது கண்டு வியந்தேன். சம்பத்திடம் தொடர்ந்து பேசி ஏற்பாடுகள் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தேன். விழா ஏற்பாடுகளுக்காக சுறுசுறுப்புடன் பலமுறை அருப்புக்கோட்டை வந்து செல்வதை அறிந்தேன். பொன்விழா குறித்த என் ஆர்வத்தை அறிந்த நண்பன் நக்கீரன் கோபால் என்னை அழைத்து தொடர்ந்து பேசினான். அது எனக்கு பூஸ்ட் ஆக இருந்தது.
சனிக்கிழமை இரவே எல்லாம் எடுத்து வைத்து ரெடி ஆகிவிட்டேன். என் மனைவி இப்பவே ஸ்கூல் பையனா மாறியாச்சா என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்.
ஞாயிறு காலை எட்டு மணிக்கு முன்னரே அருப்புக் கோட்டை வந்து நம் பள்ளியைப் பார்த்து விட்டுத்தான் மகாலுக்கு வந்தேன். ஏற்கெனவே வந்துவிட்ட சம்பத்குமார் உள்ளிட்ட நண்பர்கள் அன்போடு வரவேற்றனர்.
காலை உணவு செம டேஸ்ட்டாக இருந்தது. ஆர்டர் பண்ணினால் போதும் விதவிதமாக தோசைகள் டேபிளுக்கு வந்தன. எனக்கு பலரின் பெயர்கள் நினைவில் இருந்ததால் பேட்ச்சில் உள்ள பெயரைப் பார்த்து அடையாளம் கண்டு பேச முடிந்தது. பெயரை பிரிண்ட் செய்து பேட்ச் போட யோசனை சொன்ன நண்பன் முத்துராஜனுக்கு நன்றி. ஐம்பது ஆண்டு களுக்கு பின் நண்பன் ஒருவனை கண்டறிந்து பேசுவதைவிட அளவற்ற மகிழ்ச்சி பிறிதொன்றுமில்லை.
நிகழ்ச்சி நிரல்படி எல்லாம் சிறப்பாக நடந்தன. அனைவரும் பள்ளி மாணவர்கள்போல் ஆகிவிட்டோம். படிக்கும்போது நண்பர்கள் யாராக இருந்தாலும் "டேய்' போட்டுப் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அதுதான் நட்பின் நெருக்கத்தை உணர்த்தும் சொல். அப்போது "மிஸ்டர் டேய்' என்று என்னை கிண்டல் பண்ணுவார்கள். சந்திப்பின்போது என் வேண்டுகோளை ஏற்று எல்லாரும் "டேய் சேர்முகா' என்று கோரசாக அழைத்தது கேட்டு மகிழ்ந்தேன். எனது சின்ன ஆசை நிறைவேறியதால் சிறுபிள்ளை போல் மனம் துள்ளியது. மைக் சொதப்பியதால் நண்பர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்தாலும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. விழாவின் திருஷ்டியாக அது அமைந்துவிட்டது.
மதிய உணவு சூப்பரோ சூப்பர். விதவிதமான அசைவ- சைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்த நண்பர் தேவானந்த் பாராட்டுக்குரிய வன். நான் அவனைப் பாராட்டியபோது தான் தெரிந்தது அவன் சைவம் என்று. ஆனால், அசைவ உணவு வகைகளையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தது நண்பர்கள் மீது அவன் கொண்ட அன்பையும் அக்கறையையும் வெளிக் காட்டியது.
புலனாய்வுப் பத்திரிகை துறையில் உச்சம் தொட்டவன் நண்பன் நக்கீரன் கோபால் என்பது நமக்கெல்லாம் பெருமை.
வீரவாள் பரிசு அவனுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. பள்ளி நண்பர்கள் அனைவர் மீதும் அவன் கொண்டுள்ள அன்பை அவனது பரிசுப்பொருள் தொகுப்பு வெளிப்படுத்தியது. இவ்வளவு பொருட்களா எனத் திகைப்பை உண்டாக்கியது. நட்புக்கு இலக்கணமான அவனை பாராட்டுவது நம்மை நாமே பாராட்டிக் கொள்வது போன்றதே விழாக்குழு சார்பில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அருமை! அருமை!! சௌந்தர் ராஜ் சினிமா பாடல்களை பாடி அசத்தினான். சங்கரன் லக்கி டிரா மூலம் பரிசுகள் தந்து நம்மை சிறுபிள்ளைகளாக்கி கலகலப்பாக்கினான்.
நண்பர்களை சந்திப்பதைவிட வாழ்வில் புத்தாக்கம் தருவது வேறொன்றும் இல்லை. அதிலும் வயதை குறைக்கும் சூட்சுமம் பள்ளி நண்பர்கள் சந்திப்பதில் மட்டுமே உள்ளது. எனவே நாம் எடுத்த முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் கூடுவோம்; உற்சாகம் பெறுவோம் வயதும் ஒரு நம்பர்தான் என்று உரக்க சொல்வோம்.
மன மகிழ்வு தந்த பொன்விழாவை முன்னெடுத்து விழாக்குழு சார்பில் சிறப்பாக நடத்திய நண்பர்கள் சம்பத்குமார், கணேசன் உள்ளிட்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.
நன்றி நண்பர்களே. பொன்விழாவில் கலந்துகொண்ட பள்ளி நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
விழா முடிந்ததும் சங்கரனும் நானும் பள்ளிக்கு உள்ளே சென்று சிறிது நேரம் பார்த்து பழைய நினைவுகளை கொஞ்ச நேரம் ஓடவிட்டோம்; புகைப்படம் எடுத்துக்கொண்டோம்; பொன் விழாவை முழுமைப்படுத்திக் கொண்டோம்.
ப. சேர்முக பாண்டியன், மதுரை- 3