சுய அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில், " நான் வெறும் குடும்பத் தலைவி தான்" என்று தன்னைத் தாழ்வாக எண்ணி சொல்லும் பெண்களைப் பார்க்கிறோம்.

அதென்ன "வெறும் குடும்பத் தலைவி "...

வெளியில் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தால் தான் பெண் உயர்ந்தவளா? குடும்பத்தலைவியின் அருமை புரியாமல் "வெறும்" என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தன் நலத்தையும் தாண்டி அன்பு, பாசம், அர்ப்பணிப்பு என்று அக்கறையுடன் இருக்கும் அவர்களின் உலகம் எவ்வளவு அழகானது, உயர்வானது என்று அறிய முனையவில்லை அவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெண்ணின் உயர்வு, சுதந்திரம் என்று எழுப்பப்படும் குரல் ஆணைப்போல் அவருக்கு சமமான நிலை வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பதைவிட, பெண்களின் நலன், வளர்ச்சி என்று மட்டுமே இருத்தல் சரியானதாக இருக்கும்.

Advertisment

ஆணுக்கு சமமாக, அவருக்கும் மேலே, ஆணாதிக்கம் ஒழிக்க என்பதைவிட பெண் வளர்ச்சிக்கான இயக்கங்கள், பெண்களின் திறமைகளை மேலும் உயர்த்துவது எப்படி, தற்காப்பு வழிகள், நேர்மறை சிந்தனைகள், கண்முன் விரிந்து கிடக்கும் வளர்ச்சிக்கான பாதைகள், சந்தர்ப்பங்கள், உதவிகள், குடும்பத் தலைவிகளுக்கு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க நிறைந்துகிடக்கும் நல்வழித்திட்டங்கள், மாணவிகளுக்கான தற்காப்பு, தன்னம்பிக்கை விழிப்புணர்வு எண்ணங்கள் போன்ற இவற்றை எடுத்தியம்ப வேண்டும். ஆணின் அடக்குமுறை, ஆணாதிக்கம் இவையல்ல பெண்மையின் தன்மை. இன்று பெண் அடக்குமுறையில் இருந்து ஓரளவு வெளிவந்தாயிற்று.

உண்மை என்னவெனில், இன்றைய சமூகச் சூழலில் ஆணுக்கும் வாழ்க்கை, குடும்பம் நடத்த பல சவால்கள், தடைகள், போராட்டங்கள் இருப்பதுபோல் தான், பெண்களுக்கும் அவர்களின் வாழ்க்கை, குடும்பம் நடத்த, வளர பல தடைகளும், சவால்களும், போராட்டங்களும் இருக்கின்றன. ஆணுக்கும், பெண்ணுக்கும் சவால்களும், போராட்டங்களும் வெவ்வேறு கோணங்களில் இருக்கின்றன, அவ்வளவே.

இதில் இன்றைய பெண்களின் நோக்கம், குறிக்கோள் தங்கள் வளர்ச்சிக்கான சவால்களை வெற்றிகொள்வதே தவிர ஆணை தோற்கடிப்பது என்பதல்ல. இன்றும் பெண்களுக்கு சவால்களும், போராட்டங்களும், பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற நிலையிலும் கூட இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

Advertisment

ஆணின் வளர்ச்சிக்கான இடையூறில் ஆண்களின் பங்களிப்பு அதிகம். சங்க காலம் போல் பெண்ணை அடக்கி தன் வெற்றி நிலைநாட்டும் ஆணாதிக்கத்தின் விழுக்காடு பெண்களால் கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டது.

இன்றைய பெண்களுக்கு அவர்களின் வளர்ச்சி, பாதுகாப்பிற்கு சவால் சமூகச் சூழல், பொருளாதாரம், கல்வி, ஆண் இவற்றோடு பெண்ணும் தான்.

பெண் பெண்ணாக இருப்பது, பெண்தன்மையோடு இருப்பது பலவீனமானது அல்ல. ஆணை எதிர்த்து குரல் எழுப்புவது மட்டுமே பெண்ணின் வீரம் அல்ல. இன்று கண் முன் விரிந்து கிடக்கும் நல்ல சந்தர்ப்பங்களை, எல்லாத் துறைகளிலும் இருக்கும்

பெண்ணுக்கான வாய்ப்புகளை கையிலெடுத்து சாதித்துக் காட்டுவதே வீரம்.

இன்று பெண்களுக்கு எதிரான தவறுகளும், வன்முறையும், பாதுகாப்பின்மையும் தினம் தினம் பார்க்கும்பொழுது அன்றைய காலத்தைவிட இன்று பெண்மை அதிகப்படியாக இழிவுபடுத்தப் படுவதாகத் தான் தெரிகிறது.

கூடவே, இன்றும் பால்ய விவாகங்களும், வீட்டிற்குள் கழிப்பறை பெண்ணுக்கு அவசியம் என்று கருதாத குடும்பங்களும், மாமியார், வரதட்சணைக் கொடுமைகளும், குழந்தையின்மையால் விவாகரத்துகளும், இதுபோல இன்னும் பல அவலங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

பெண்களுக்கு தவறு, வன்முறை, கொடுமை நடந்த பிறகு கடுமையான தண்டனைக்குப் போராடுகின்ற மனநிலை, இயக்கங்களின் செயல்பாடு இந்த அவலங்களுக்குத் தீர்வு அல்ல. குற்றம் நடந்த பிறகு தரப்படும் தண்டனை கடுமையானதோ, எளிதானதோ அது தீர்வாக முடியாது.

பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கப்பட்ட தலைமுறையிலிருந்து இன்று பெண்கள் வெளியில் இறங்கி ஆணுக்கு இணையாக, அதைவிட ஒருபடி மேல் சாதிக்கும் தலைமுறையாக மாறிக்கொண்டு இருக்கிறோம்.

இன்று பெண்கள் வீட்டுப் படி தாண்டிவிட்டதால், ஆணுக்கு இணையாக, ஆணையும் தாண்டி சாதிப்பதால் அவள் அடக்க மில்லாதவள், பெண் தன்மை குறைந்தவள் அல்ல என்றே சமுதாயத் தால் பார்க்கப்பட வேண்டும். பெண்கள் இன்று சமுதாயத்தில், நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் ஒரு பங்காக இருக்கிறார் கள் என்ற உண்மையை சாதாரணமாக, இயல்பாக நோக்கும் பார்வை அனைவர் மனங்களிலும் ஏற்படவேண்டும். நீயும் விமானம் ஓட்டுகிறாய் - நானும் விமானம் ஓட்டுகிறேன் என்பது போல் தான் சாதாரணமாக பார்க்கப்படவேண்டும்.

இன்றைய பெண்களுக்காக மேற்சொன்ன விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்போதைய அத்தியாவசியத் தேவை. இந்த விஷயத்தில் அனைவர் மனதிலும் ஒரு முதிர்ச்சி நிலை வரவேண்டும். இளைய சமுதாயத்தினரிடம்கூட இந்த முதிர்ச்சி ஏற்படுத்தும் விழிப்புணர்வு தேவை. பெண் வெளியில் இறங்கிவிட்டதால் அவளை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம், பயன்படுத்தலாம் என்ற அவர்களின் எண்ண ஓட்டத்தை உடனே நிறுத்தியாகவேண்டிய அவசியம் இருக்கிறது இன்றைய சூழ்நிலையில்.

இன்றிருப்பது போல், ஆணும் பெண்ணும், எந்த வயதினராக இருந்தாலும் ஒன்றாகப் படிக்கும், பணிபுரியும் நெருக்கம் அந்த காலத்தில் இருந்ததில்லை. பழக்கத்தில் இல்லாத மாற்றங்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு, ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு படிக்க, பணிபுரிய இடம் பெயரும் சூழல்கள்.

ww

இயற்கையான ஹார்மோன்களின் தாக்குதலால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அடிப்படையான பாலுணர்வுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்கள் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. இதைப்பற்றி சிந்திக்கக்கூட யாரும் தயாராக இல்லை.

மாறாக, தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் செயலாக, திரைப்படங்களும், ஊடகங்களும், இணையங்களும் தவறுகளுக்கு வழிமுறைகளையும், தூண்டுதலையும் அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இன்று திருமண வயது நீட்டிக்கப்பட்டுவிட்டது. சரியான திட்டம்தான், சட்டம்தான். இன்றைய பெண்களின் வளர்ச்சி எந்த வேகத்தில் இருக்கிறதோ அதைவிட அதிவேகமாக உள்ளன அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள். சட்டமும், தண்டனைகளும் மட்டும் இதை ஒழிக்க முடியாது. இந்த அவலங்களை சீர்செய்ய சமுதாயத்தின் பங்களிப்பு எந்த அளவில் கிடைக்கும் என்பதைப் பொறுத்தே, வளரும் வேகத்திலேயே இந்த அவலங்கள் தடுக்கப்படலாம்.

என் வீடு, என் குடும்பம் என்று வட்டத்தை சுருக்கிக்கொண்டு ஒவ்வொருவரும் சமூகத்திற்கும், நமக்கும் தொடர்பில்லாமல் வாழ்வது ஆரோக்கியமானதல்ல. சமுதாயத்தில் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வயது வித்தியாசமின்றி பங்களிப்பு இருக்கிறது.

ஒருவருக்கு மற்றொருவரைப் பிடித்திருக்கிறது, தடையில்லாத அன்பு செய்யமுடிகிறது என்றால் அதன் அடிப்படைக் காரணம் அந்த மற்றொருவரின் புரிதலும், விட்டுக்கொடுக்கும் தன்மையுமாகத் தான் இருக்கும். ஒரு மாணவன் உடன் பயிலும் மாணவியின்பால் வயதுக் கோளாறில் காதல்வயப்பட்டு அந்தப் பெண்ணுக்கு இவன்மேல் காதல் இல்லை என்ற பட்சத்தில் விட்டு விலகுதலே சரியாகும்.

அதைத்தவிர்த்து, இல்லாத ஒன்றைப் பலவந்தப்படுத்தி, அதுவும் அன்பு... தானாக உருவாகவேண்டிய உயர்ந்த ஒன்றை பலவந்தப்படுத்தி வரவைக்க முயல்வதும் இன்றைய தலைமுறை இளைஞனின் ஆணாதிக்கம்தானே. அதெல்லாம் தெரியாது...

எனக்கு உன் மேல் காதல்.. அதனால் நீயும் என்னைக் காதலித்தே ஆக வேண்டும்... மறுத்தால் ஆசிட் வீச்சு, கொலை. கொலை செய்துவிட்டு தவறு செய்துவிட்டோம் என்ற பயத்தில் தற்கொலையும் செய்து கொள்வது.. ஏனிந்த அவலங்கள்!

யாரோ ஒருவர் எழுதி வைத்த பாடங்களை, யாரோ ஒரு பேராசிரியர் வகுப்பில் சொல்லிக்கொடுப்பதை சரியாக புரிந்துகொண்டு மதிப்பெண் வாங்கும் இளைய சமுதாயமே... உன்னுள் உன்னால் மட்டுமே எழும் எண்ணங்களை, உணர்வுகளை.. அதிலுள்ள நல்லது, தீயதை, உயர்ந்தது, தாழ்ந்ததை, உன் செயலின் பாதகத்தை, உன்னை அது எவ்வளவு இழிவாக பிரதிபலிக்கும் என்பதை உன்னாலேயே புரிந்துகொள்ளமுடியாதது, வெற்றிகொள்ள இயலாதது எவ்வளவு அவலம்.. சிந்தியுங்கள்...

ஒரு கல்லூரி மாணவி கதறுகிறாள். இவள் படித்துக் கொண்டிருக்கும் வயதில் அப்பா இறந்துவிட அவளின் குடும்பத்திற்கு ஆண் துணையாக, பொருளாதார உதவியும் செய்துவரும் அவள் தாயின் அண்ணன், இந்தப் பெண்ணின் தாய்மாமன்.. தந்தையின் வயதொத்தவர்... பாலியல் துன்பம் கொடுக்கிறார்.

அம்மாவிடமோ, மாமனின் மனைவியிடமோ, அடுத்த வரிடமோ சொன்னால் தொடர்ந்து படிக்க செலவழிக்க மாட்டேன் என்று மிரட்டுகிறார். இந்த வேதனையுடன் படிப்பைத் தொடர்ந்தால், கல்லூரியில் ஒரு மாணவனின் காதல் தொல்லை. நிர்ப்பந்திக்கிறான். உன்னையும் கொன்று என்னையும் மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறான்.

அப்பா என்னும் உறவை இழந்து அவரை நினைத்து அழுது கொண்டிருந்த தனக்கு இப்பொழுதெல்லாம் ஆண்கள் என்றாலே பயமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது என்று கதறுகிறாள். செத்துப்போகலாம் என்றால் என்னையே நம்பியிருக்கும் அம்மா தாங்கமாட்டாளே என்று கலங்குகிறேன் என்கிறாள். அந்தப் பெண் மனதளவில் இவ்வளவு பாதிக்கப்பட யார் காரணம்? இவளின் எதிர்காலம் என்னவாகும்? இப்படி பல நிலைகளில் அவலம் பல பெண்களுக்கு இன்று. இதுதான் நாம் போராடிப் பெற்ற சுதந்திரமா? பெண்களின் வளர்ச்சியா?

ஏழைப் பெண். இது ஒரு வகை. இன்னொரு பெண்... அவளின் தந்தை பெரும் தொழிலதிபர். செல்வந்தர். கிராமத்து சூழ்நிலையில் வளர்ந்து, படிப்படியாக நகரத்திற்கு வந்து வாழத் தொடங்கியவர். இரண்டு பெண்கள் அவருக்கு. வெளியுலகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையை இளம்வயதிலேயே கிராமத்திலிருந்து நகரத்திற்கு புலம்பெயர்ந்த தன் வெளியுலக அனுபவங்களால் அறிந்தவர். ஒருபடி மேலே போய், தானே பெண்களுக்கு பள்ளிக்கும், கல்லூரிக்கும் காரோட்டியாய் பாதுகாப்பளித்தார்.

பண வசதியுள்ளவர். வீட்டுக்குள்ளேயே சினிமா பார்க்கவும், மற்ற கேளிக்கைகளுக்கான வசதியும் செய்துகொடுத்தார்.

துணிக்கடையும், நகைகடையும் வீட்டிற்கே வரும் அல்லது கடைக்கு போவதென்றால் பெற்றோருடன் மட்டுமே. பள்ளி, கல்லூரி நேரங்கள் தவிர, வெளியுலகத்திற்கு எந்த விதத்திலும் அனுமதிக்க வில்லை. மகள்கள் மேல் உயிரையே வைத்திருந்தார். மகள்களும் அவ்வாறே.

காலத்தின் விளையாட்டு. மூத்த பெண் கல்லூரி நண்பன் மூலம் போதை மருந்திற்கு அடிமையாக்கப்பட்டாள். பெற்றோர் கண்டறியும் முன், பழக்கம் தீவிரமாகிவிட்டது. இன்று

அந்தப் பெண்ணை உயிருடன், மானத்துடன் மீட்டெடுக்க நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்.

இத்தகைய அவலங்கள் ஏன் இன்றைய பெண் களுக்கு? வெற்றிகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் பெண்களும் உண்டு இன்று. ஆனால் அதன் பின்னால் எவ்வளவு வலிகள், போராட்டங்கள்... வீட்டில், பணிபுரியும் இடத்தில் ஆண்களாலும், பெண்களாலும்.

விவாகரத்துகள் சாதாரணமாகிவிட்ட காலம் இது. ஒரு வலியிலிருந்து மீள வைத்தியமாக விவாகரத்து செய்து வந்தப் பெண்ணுக்கு, அதன் பிறகு சமுதாயத்தினால் பல வலிகள். இந்த வலிக்கு மருந்திற்கு எங்கே போவாள்? பெரும்பாலும் பெண் விவாகரத்து பெற்றுவிட்டாலும் அவளுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் தாயுடன்தான் இருப்பார்கள். அந்த குழந்தைகள் சந்திக்கும் மன உளைச்சல் அவர்களின் தாயினுடையதைவிட அதிகம்.

அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். பால பருவத்திலேயே அந்தப் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் மனவேதனை.. அவள் தாய் எத்தனை மில்லியன் டன் அளவு அன்பும், பாசமும், அக்கறையும் கொடுத்து வளர்த்தாலும் அந்த மனவலிக்கும், ஏக்கத்திற்கும்,மன உளைச்சலுக்கும் மருந்தாக முடியாது.

பல இடங்களில் தன் வலி மறைத்து அந்தக் குழந்தைகள் அந்த "வாழாவெட்டி " கண்ணீரைத் துடைத்து விடுவதையும் காண்கிறோம். பெரும்பாலும், கணவனை இழந்த, பிரிந்த தாய்கள், குழந்தைகளுக்காக மறுமணம் செய்துகொள்ளத் துணிவதில்லை.

அப்படியே துணிந்த அனைத்துப் பெண்களின் வாழ்க்கையும் வெற்றியானது, அன்பானது என்று சொல்ல இயலாத நிலை. அவளின் சம்பளம், உடல் இவற்றையே மையமாகக் கொண்டுதான் பல மறுமணங்கள் அமைந்துவிடுகிறது.

அவளை மறுமணம் செய்யும் ஆணும் மனைவியைப் பிரிந்தவராகவோ, இழந்தவராகவோ, குழந்தைகள் உள்ளவராக தான் இருப்பார். ஆனால் கணவரை விவாகரத்து செய்த பெண், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண், மறுமணம் செய்த அந்தக் கணவருக்கு குறைவானவளாகத்தான் தெரிவாள். சிறிய தவறு நடந்தாலும் பழைய வாழ்க்கையை சொல்லிக்காட்டுவார். ஒருபோதும்

அந்தப் பெண் அந்த இரண்டாவது கணவனிடம் மனதில் தோன்றினாலும், வெளியில் அவன் முகத்திற்கு நேராக அவனுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி சொல்லி அவனை வேதனைப்படுத்தமாட்டாள். அது பெண்களின் இயற்கையான தன்மை.

இன்னொரு வகை.. முதிர்கன்னிகள்.. குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக திருமணம் தள்ளிப் போய்க்கொணடேயிருக்கும். அவளின் கனவுகளும், ஏக்கங்களும் பனித்துருவல்களாய் அவளுக்குள்ளேயே வலம் வந்து, அவளின் எதிர் காலத்தின் வறட்சியையும் தாண்டி, அவளின் இதயத்தை ஈரப்பதமாகவே வைத்திருக்கும். நாளடைவில் குடும்பத்தார், உறவினர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டு, சமுதாயத்தில் ராசியற்ற பெண்ணாய் முத்திரை குத்தப்பட்டு தனிமரமாய் நிற்கையில், பனித்துருவல் உருகி ஓட வழியில்லாமல், உள்ளேயே உறைந்து நின்று சொல்லொணா வலி கொடுத்துக்கொண்டிருக்கும்.

அன்று பெண்கள் கல்வியுரிமை, பொருளா தாரம், வேலைகளுக்கு செல்லும் சுதந்திரம், சதி, உடன்கட்டையேறுதல் போன்ற பல பிரச்னைகளுக்காக போராடினர். இவற்றை போராடி வென்ற அந்த தலைமுறையினரின் சந்ததிகள் இன்று குழந்தை முதல் முதியவள் வரை வயது வித்தியாசம் இன்றி பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாப்பு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் ஒவ்வொருவருக்கும் வலிக்கவில்லையா? ஒரு துளி கண்ணீர்கூட நம் விழிகளில் எட்டிப் பார்க்கவில்லையா? இந்த அவலநிலை மாற நம் மனதில் ஒரு பொறுப்புணர்ச்சி வரவில்லையா?

இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றவுடன் வரிசையாக வந்து விழும் கருத்துகள் - " நீ ஏன் அவன் கூப்பிட்டதும் போனாய்", இந்த வயசுல காதல் என்ன வேண்டிக் கிடக்கு" , "அரைகுறை ஆடை போட்டால் அப்படித்தான் நடக்கும்", "நேரம் கெட்ட நேரத்துல நீ ஏன் வெளியில சுத்தின " இப்படி பல கருத்துகள், கேள்விகள்.

இந்தக் கருத்துகளுக்கும், கேள்விகளுக்கும் கொதித்து எழாதீர்கள். ஒவ்வொரு கேள்வியும் சொல்லும் உனக்கான பாதுகாப்பு வழிகளை சரியான, நேர்மறையான எண்ணத்தோடு புரிந்துகொண்டு சரி செய்ய வேண்டியதை விழிப்புணர்வுடன் சரிசெய்ய தவறாதீர்கள். மாறாக, உள்ளுக்குள் அமிழ்ந்து சுருங்கிப் போய்விடாதீர்கள். அலட்சியமும் செய்யாதீர்கள்.

இந்த கருத்துகளையும், கேள்விகளையும் எழுப்பும் அன்புள்ளங்களே.... பாதிக்கப்படும் பெண்களுக்கான உங்களின் இந்த அறிவுரை, கருத்துப் பரிமாறல், இழிவான எண்ணத்தில், காமம், கொள்ளை, கொலை எனும் சேற்றில் புரண்டுகொண்டிருக்கும் மனிதர்களுக்கும், அவர்களைப் பாதுகாக்கும் அவர்களை சார்ந்தவருக்கும் ஓங்கி உரைக்கும் வகையில் கேட்பீர்களா? பெண்களை வதைக்கும் ஆண்களையும், பெண்களையும் கேள்விகேட்டு, கருத்து சொல்லி புரியவைப்பீர்களா?

ஆண்களே, உங்கள் பேத்திகளை, மகள்களை, சகோதரிகளை மொத்தத்தில் உங்களின் தாய்க்குச் சமமான பெண் என்னும் பாலினத்தை பாலியல் கண்கொண்டு மட்டுமே பார்ப்பதை என்றைக்கு நிறுத்துவீர்கள்?

அன்று ஆணாதிக்கம். அன்றைய ஆண்கள், உன் வீட்டு முதியவளையும், தாயையையும் அடக்கி வீட்டுக்குள் வைத்து துன்புறுத்தினர். அவளின் தனித்தன்மையை அழித்தனர். பல தலைமுறைகளாக, அம்பேத்கார், பெரியார், இராஜாராம் மோகன்ராய், பாரதியார் போன்ற பல ஆண்கள்கூட பெண்களுடன் தோள் கொடுத்து நின்று போராடி, இந்த நிலைக்கு வந்த பிறகு , இன்று பெண் அவளின் தனித்தன்மையை எத்தனை எத்தனை விதத்தில் ஆரோக்கியமாக வெளிப்படுத்தி மின்னுகிறாள்.

அந்தக் கால ஆண்கள் போல் அல்ல நான்.. இன்றைய ஆண் மகன், பெண் அவள் வளர்ச்சியில் நான் நிற்கிறேன் என்று உங்களைப் போன்ற எத்தனை ஆண்கள் நல்லொழுக்கத்தில் இன்று வாழ்கின்றனர். பெண்களை ஆரோக்கியமான எண்ணங்களுடன் கை கொடுத்து தூக்கிவிடுகிறார்கள். அவர்கள் மத்தியில், நற்பயிரிடை களையென ஏன் நீங்கள் மட்டும் மகள், சகோதரி, பேத்தி வயதொத்த பெண்களிடம் அத்து மீறி ஆண் இனத்தையே களங்கப்படுத்துகிறீர்கள் ?

உங்களால் செத்து மடிந்து எரியும் அந்தப் பெண்களின், பெண் குழந்தைகளின் சடலங்களின் வாடை சதா உங்களையே சுற்றிகொண்டிருக்கிறதே, பலவந்தமாக உங்கள் நாசிக்குள், காதுகளுக்குள் நுழையும் அந்த அழுகுரலின், சடலங்களின் வாடையை நுகரமுடியாமல் உங்கள் மூச்சுத் திணறுவதை எத்தனை காலம் உங்கள் மனசாட்சியிடமிருந்து மறைப்பீர்கள்?

பெண்ணை பராசக்தி என்று ஒரு ஆண் கவி பாரதி பாடினார். பராசக்தி அவளின் சக்தியறிய உங்களுக்கு சக்தி, அறிவாற்றல் இல்லை என்றாலும் பரவாயில்லை, சக மனுஷியாகப் பாருங்கள்.

சிதைத்து, சிதைந்து விடாதீர்கள்!