1970-ல்,ஐம்பெரும் முழக்கம் அறிவித்த மாநாடு நடந்த போது தலைவரை தூரத்திலிருந்து முதன்முதலாகப் பார்த்தேன். எனக்கு வயது அப்போது 15. நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவாய், தேனருந்தும் வண்டுகளுக்கு நடுவே நறுமலராய், பொய்கையில் பூத்தது போல், அண்ணாவின் தம்பிகள் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகள், லட்சம் லட்சமாய் பார்த்திருக்க, தலைவர் மேடையில் அமர்ந்திருந்தார்.

அந்த ஆதவ அழகை, மாதவச் சிறப்பை நான் முதன்முதலாய் பார்த்தேன், ரசித்தேன்.

1975-ல் நான் பயின்றுகொண்டிருந்த கல்லூரியில் பகுத்தறிவுப் பகவலன்' ஐயா பெரியாரின் சிலை திறப்பு விழா. தலைவர் வந்திருந்தார். அந்தத் தங்கமயிலை மிக அருகில் இருந்து பார்க்கும் பொன்னான நேரம். நம் இனத் தின் மீட்சிக்கு போர்க்கோலம் கொள்ளும் தலைவனின் தமிழால் ஈர்க்கப்பட்டு, அதை எம் உயிர் மேனியின் தார்க்கோலமாக்கிக் கொண்டேன்.

1976-ல், தலைவரின் தலைமையிலான கழக அரசு கலைக்கப்பட்டது. தமிழகம் தணலாக மாறிக்கொண்டிருந்தது. பகுத்தறிவு, தன்மானம், சுயாட்சி, சுயமரியாதை, மொழி இன உணர்வு, கேள்விக் குறியாக்கப் பட்டது. அடக்குமுறை சுட்டவிழ்த்து விடப்பட்டது. மிசாவின் ராஜாங்கத்தில் 21 வயதான எம்.ஏ.படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவனான இந்த சிவாவும் கைதுசெய்யப்பட்டான். திருச்சி சிறையில் ஓராண்டு காலம் கழிந்தது.

1977-ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளர் அண்ணன் எம்.எஸ்.வி., இவர் அறிஞர் அண்ணாவின் ஹோம்லேன்டு பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர். அவர் தலைவர் சுலைஞர் அவர்களிடம் முதல் சந்திப்பாசு என்னை அழைத்துக்கொண்டு போய், தம்பி சிவா நம் இயக்கத்தின் நல்ல துடிப்பான மாணவர் எனச் சொல்லமுற்பட்டார். ஆனால் தலைவரோ, தம்பி சிவா வைப்பற்றி நிறைய கேள்விப்பட்டுவிட்டேன். எனக்கு இவரைப் பற்றி முன்னமே தெரியும் என்று எங்கள் இருவரையும் ஆச்சரியக் கடலில் ஆழ்த்தினார்.

அந்தளவுக்கு யார்? யார்? எப்படி? எங்கு? செயல்படுகிறார்கள் என்பதை யாரும் அறியாவண்ணம் அறிந்துவைத்திருப்பது என்பது, அவரின் உடன்பிறப்புகள் மீதும் கழக வளர்ச்சியிலும், செயலிலும், கொண்டிருந்த ஈடுபாட்டை, உழைப்பை, அவரது கூர்ந்த மதிநுட்பத்தை அடையாளப்படுத்தியது.

dd

1978-ல் மாணவரணி அமைப்பாளர், பிறகு பொதுக்குழு உறுப்பினர் என பொறுப்புகளை வழங்கி என் செயல்திறனை வளர்த்து, என் மேடைப் பேச்சுகளை, பொதுக்குழு உரைகளைக் கேட்டு, உற்சாகப்படுத்தியவண்ணம் இருந்தார். பாராட்டினார். "இளைஞர்களை கட்சிப்பணிகளில் அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களது பங்களிப்புக்கு வாய்ப்புத் தரவேண்டும்" என்ற எனது பொதுக்குழு உரையின் கோரிக்கையை தந்தையாயிருந்த தலைவர் கலைஞர் தாயுள்ளத் துடன் ஏற்றுக்கொண்டு, செயல் வடிவம் தர, நடைமுறைக்கு வந்தது.

1982-ல் இளைஞர் அணி உருவாக்கப்பட்டு, தலைவர் சுலைஞர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதில் எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை தளபதியாய் வழிநடத்தும் ஆற்றல் பெற்றவர் என்பதை 'மிசா' காலத்தின் கொடுமைகளைத் தாங்கி, புயல்களை எதிர் கொள்ளும் வலுவான மாலுமியாய் பக்குவப் பட்டிருந்த, நம் இன்றைய தலைவர், அன்றைக்கே தலைவர் கலைஞர் அவர்களால், நம் இனமான பேராசிரியர் அவர்களால், அண்ணன் சாதிக்பாட்சா, அண்ணன் நாஞ்சிலார், அண்ணன் ஆற்காட்டார், எம் நெஞ்சில் என்றும் வாழும் எங்கள் நாடாளுமன்ற வழிகாட்டி, மாநில சுயாட்சிக்கு தம் எழுத்தால் எழுச்சி தந்த அண்ணன் முரசொலி மாறன் உள்ளிட்ட கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவராலும் அடையாளம் காட்டப்பட்டார். இளைஞர் அணியின் முதல் தளகர்த்தராய், பொறுப்பாளராய் தளபதி மு.க.ஸ்டாலின் , அவரோடு இணைந்து இந்த அணியை வலுப்பெறச்செய்ய, கழகத்தின் அடிநாதமாய் முதுகெலும்பாய்த் திகழ, களப்பணி ஆற்ற, திருச்சி என். சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசைன், தாரை மணியன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டோம். இந்திய விடுதலையில் மாவீரன் பகத்சிங் உடன் இயங்கத் துவங்கிய இளைஞர்களாய்.

Advertisment

கியூபாவின் விடுதலையில் சேகுவாரா உடன் இணைந்து களமாடப் புறப்பட்ட தோழர்களாய், தமிழ் இனமீட்சியில் கழகத்தின் வரலாற்றில், தளபதியின் தலைமையில் இளைஞர் அணி என்ற பெருமிதத்தில் பயணம் துவக்கினோம். எனக்கு அப்போது வயது 26.

"தொடங்கினோம் தொடர்வோம்" என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும், அது இன்றும் தொடர்கிறது. தொடரும். அன்று நடந்த அந்த முதல் மாநாட்டில், நான் நன்றியுரையாக பேசினேன்.

'யாருக்கு நன்றி சொல்வேன்?

Advertisment

இரண்டு தினங்களுக்கு முன்பாக, நானும் நண்பர் பொய்யாமொழியும் மாநாட்டுப் பந்தலில் நடைபெறும் வேலைகளை உடனிருந்து கவனித்து, அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தோம்.

இரவுநேரம் திடீரென்று இரண்டு உருவங்கள் தலையில் முக்காடிட்டு யாரும் அறியாதவண்ணம் உள்ளே ஓரமாய் வந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ss

தி.மு.க.வின் மாநாடு என்றால் பழமைவாதிகள் ஏதேனும் இடை யூறு செய்ய முயற்சிப் பார்கள். அப்படி யாரோ மறைந்து வருகிறார்களோ? என எண்ணி, நானும், பொய்யாமொழியும் அருகில் போய் அவர்களைப் பார்த்தால்! அது வேறு யாருமல்ல.

திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணனும் அண்ணன் பாலகிருஷ்ணனும் அப்படி மாறுவேடம் தாங்கி அங்கே வந்திருக்கிறார்கள் 'எண்ணங் கண்ணே' என்று கேட்சு, சிறு பிள்ளைகள் கூடி பெரிய வேலையைச் செய்கிறீர்கள். இதில் சுமை அதிகம், கடினமான பணியாயிற்றே பிள்ளைகள் என்ன செய்கிறார் களோ? எப்படி கஷ்டப்படுவார்களோ என எண்ணி பார்க்கவந்தோம். ஏதேனும் உங்களுக்கு உடன் உதவி செய்திட என்றார்கள். எங்களை அவர்களின் பாசத்தால் ஆச்சரியப்படுத்திய அந்தப் பெரியவர்களுக்கு நன்றி சொல்லவா?

குழந்தைகளை பொத்திப் பாதுகாக்கிற தாய்ப்பறவை போல எங்களைப் பாதுகாத்து எங்கள் பணிகளை ஊக்கப்படுத்துகிற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நன்றி சொல்லவா? கலங்கரை விளக்கமாய் இருந்து வழிநடத்துகிற தலைவருக்கு நன்றி சொல்லவா? மேடையிலிருந்து பார்த்தால் எங்கும் இளைஞர்களின் தலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலையில் எப்படி அடுக்கடுக்காக குச்சிகள் காயவைத்திருப்பார்களோ அப்படி. தலையின் சக்தியே மூளை, அதன் சிந்தனைப் பொறிக்கு அப்படி ஒரு ஆற்றலை உருவாக்க வாய்ப்பளித்த தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்லவா? என நான் பேசி அமர்ந்தபின், தலைவர் குறிப்பிட்டார். அவரது நிறைவுரையில் 'தம்பி திருச்சி சிவா உங்களை தீக்குச்சிகள் என்றார். ஆம், நீங்கள் தி.மு.க. எனும் தீப்பெட்டியில் உள்ள தீக்குச்சிகள். இந்த தீக்குச்சிகள் ஊரைக் கொளுத்துகிறவர்கள் அல்ல. இருளை விலக்குகிறவர்கள்" என எனது உரை யைக் குறிப்பிட்டு, எனது பெயரை திருச்சி சிவா என்று அடையாளப்படுத் திப் பாராட்டியதை மறக்க முடியுமா?

பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கிப் பாராட்டுவதுபோல, என் வாழ்வின் பயணத்தில் தலைவர் தந்த இந்த மாநாட்டுப் பாராட்டை, என் ஞாபகத்தில் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.

பொதுக் கூட்டங்களில் பேசிவிட்டு வந்து திருச்சி வந்ததும் முதல் வேலையாக எப்பொழுதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம், நினைத்ததும் சென்னைக்கு வண்டியேறி விடுவேன். காலை இறங்கி நேராக தலைவரின் வீட்டுக்கோ, சுட்சி அலுவலகத்திற்கோ சென்றுவிடுவேன். அங்கே அண்ணன் சீதாபதி.

அண்ணன் டி.ஆர்.பாலு இருப்பார்கள்.

தலைவர் உள்ளே வரும்போதோ அல்லது கிளம்பும்போதோ பார்ப்பார். அந்தப் பார்வையில் கேள்வி. அன்பு, பாசம், எல்லாம் கலந்திட 'எப்ப வந்த? என்ன விசயம்' என்பார். 'சும்மா பார்க்க வந்தேன் தலைவரே' என்பேன். அவரது விழிகளில் அன்பும், பரிவும் சுரக்கும், அதைப் பார்க்கப் பார்க்க மனம், மகுடம் தரித்த குதூகலத்தில் உற்சாகம் அடையும். மானாகத் துள்ளும், வில் அம்பாக கழகப்பணி செல்லும்.

இப்படியே பலநாள் தலைவரின் பாசத்தின் பார்வையில், அன்பின் கதகதப்பான குரலில், என்னை நான் வளர்த்துக் கொண்டேன். தன் கண்முன் வைத்து தந்தையாய் இருந்து வளர்த்து அழகு பார்த்தார் தலைவர்.

1984-ல் தலைவர் தலைமையில் சட்டமன்றத் தேர்தலுக்கு நேர்காணல் நடை பெற்றுக்கொண்டிருந்தது. நானும் நண்பர் களும் இணைந்து இளைஞரணி யின் மாவட்டப் பொறுப்பாளர் களாக இருந்த 14 பேர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்து, தலைவர் அவர்களிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு வழங்கி னோம்.

அந்தப் பட்டியலை வாங்கி வாசித்தவர், நாளை காலையில் இளைஞர் அணியை கலைக்கப் போவதாக அறிவிக்கப் போகிறேன் என்றார். எங்களுக்கு வியர்த்துவிட்டது, மனதுக்குள் தூக்கிவாரிப் போட்டது.

எங்களின் முக இறுக்கத்தை பரிதவிப்பை இரக்கமாகப் பார்த்து 'யார் யார் சீட் கேட்டார்களோ அவர்களிடமே சீட் வேண்டாம் என எழுதி வாங்கிக்கொண்டு, சீட் கேட்ட பட்டியலும், வேண்டாம் என்ற பட்டியலும் எடுத்துக்கொண்டு "நீ தனியாக வா." என்றார்.

நான் மீண்டும் தலைவர் அறைக்குள் சென்றேன்.

இது மற்ற கட்சிகளைப்போல, "கோட்டா" முறைப்படி அவருக்கு இவ்வளவு, இவருக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுக்கும் கட்சியா! என்றவர், உங்க லிஸ்ட்ட எடு, என்றவர். அவரே அதை வாசித்தார்.

1.பாவாணன் இந்தப் பெயர் ஏற்கனவே எங்க பட்டியல்ல இருக்கு. வாய்ப்பு இருந்தா கொடுத்துடுவோம்.

2.பரிதிஇளம்வழுதி, இவங்க அப்பாவும் லிஸ்ட்ல இருக்காரு. அதுனால யாருக்குக் கொடுக்க?

3.முபாரக். அங்க மாவட்டச் செயலாளரே இருக்காரு போட்டியிட. 4.நாசர். இவருக்கு பூந்தமல்லி கொடுக்க முடியாது.

5.மு.க.ஸ்டாலின். ஆயிரம் விளக்கு.

அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அதுல நானும், அவுங்க மாமா பூங்காநகர்லயும் போட்டி யிடப்போறோம்.

6.திருச்சி 1ல, அல்லது 2ல சிவாவுக்கு. பார்க்கலாம் என்று அமைதியாகப் பதில் சொன்னார்.

பின்னர் நான் நிதானமாக பலமுறை இந்த நிகழ்வு பற்றி யோசிப்பதுண்டு நாம் யார்? ஒரு சாதாரண தொண்டன், ஒரு இளைஞன், அவர் யார்? இந்த இனத் தின், இந்த தேசத்தின் நீள, அகலம், ஆழம் என அனைத் தும் தன் அனுபவத்தால் தியாகப் பயணத்தால் கண்ட மகத்தான ஒப்பற்ற தலைவர், அவர் நமக்கு மதிப்புக் கொடுத்து பதில் சொல்வது, நம் கோரிக்கையைக் கேட்பது. அதற்கு அங்கீகாரம் அளிப்பது என்பது, அவரது எத்தகைய பெரிய உள்ளத்தை, பரந்த பார்வையை, விசால நோக்கை, நமக்குக் காட்டுகிறது என்று பலமுறை எண்ணியுள்ளேன்.

1986. அன்பகத்தில் தலைவர் இருந்தார்.

அப்போது உள்ளாட்சித் தேர்தல் நேரம். நான் தலைவரிடம் சென்று திருச்சி முனிசிபல் 'சேர்மன்' பதவிக்கு நான் போட்டியிட வாய்ப்புத்தர வேண்டும் என்றேன்.

"உனக்கு அட்வைஸர் யாரு ? என்றார்.

என்னங்க தலைவரே நான் கேட்கக்கூடாதா! என்றேன்.

முதலமைச்சர மாநிலம் முழுவதும் தெரியும், பிரதமர தேசம் முழுவதும் தெரியும், ஊர் தலைவர்னா ஒரு ஊருக்கு மட்டுமே தான் தெரியும். நீ ஊருக்கு மட்டும் தலைவர் கிடையாது. உன் பெயரச் சொன்னா எல்லா இடத்திலும் தெரியனும், அப்படி ஒரு வாய்ப்பு வரும். அப்பத்தான் உனக்கு சீட் தரணும்னு நினைச்சிருக்கேன்" என்றார் தலைவர் 'பதவி, பணம் இல்லைனா இங்க மதிப்பே கிடைக்கிறது இல்ல. உங்களுக்கு தெரியாததா தலைவரே' என்றேன்.

"நான் என்ன பணம் பதவி வச்சா வந்தேன். எனக்குத் தெரியும். யார் யாருக்கு பணத்தால பெருமை, பதவியால பெருமையினு. உனக்கு அதையும் தாண்டிய ஒரு மதிப்பு இருக்கு" என்று என்னை ஆற்றுப்படுத்தி, உற்சாகப்படுத்தி என் குறைகளை கோரிக்கைகளை, தந்தையாய் கேட்டு, தன் மனதால் அரவணைத்து, உரிய இடத்தில் உரிய நேரத்தில் என்னை நிறுத்தி எல்லோரும் வியக்க, பாராட்ட பேச வைத்தார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்ன அன்னை உள்ளம் தலைவர் உள்ளம்.

1996-ல் புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பளித்து அங்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், "என் சிவாவை புதுக்கோட்டையில் ஒப்படைக்கிறேன், அவரை டில்லி கோட்டைக்கு அனுப்புங்கள்" என்றார்.

அவரது வேண்டுகோளை ஏற்று புதுக்கோட்டையில் மகத்தான வரலாற்று வெற்றியைப் பெற்றேன். டில்லிக்குச் சென்றேன். எனது இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய தலைவர் கூறினார்.

”இனி சிவாவின் வருங்காலம் பொற்காலம்” என்றார். அவைகளை எல்லாம் என் இதயக் கல்வெட்டில் பொறித்து அவரது நினைவுகளால் வாழ்கிறேன். தேவகவுடா அரசு மீது நம்பிக்கைத் தீர்மானம் நாடாளுமன்றத் தில் கொண்டுவரப்பட்டு விவாத உரை நிகழ்ந்த நேரம். நான் அப்போது அங்கு நிகழ்த்திய உரையை தலைவரே இருந்து கேட்டு என்னை வெகுவாகப் பாராட்டினார். எனது நாடாளுமன்ற உரையை பலமுறை சொல்லிச் சொல்லி பாராட்டியுள்ளார்.

எனது மனைவி தேவிகா ராணியின் நினைவேந்தல் நிகழ்வில் படத்தை திறந்து வைத்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் , தமிழர் தலைவர் ஐயா. கி.வீரமணி, நம்முடைய இனமானப் பேராசிரியர். கழகப் பொதுச் செயலாளர் ஐயா அன்பழகன் ஆகியோர் உடனிருந்து நினைவேந்தல் உரை நிகழ்த்த, தலைவர் நிறைவுரையாற்றினார்.

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவையிலே மிகக் கவர்ச்சிகரமான பேச்சாளர் இன்னும் சொல்லப்போனால், நான் டெல்லிக்குச் சென்றிருக்கிற நேரத்தில், இன்றைக்கு மாநிலங்களவையிலே யார் பேசுகிறார்கள் என்று விசாரித்து, சிவா பேசுகிறார் என்றால், எத்தனை மணிக்கு என்று விவரம் கேட்டு.

அவர் பேசுவதை மண்டபத்திற்கு உள்ளே சென்று அல்ல. மண்டபத்திற்கு வெளியே இருக்கின்ற ஒலிபெருக்கிகளின் வாயிலாகக் கேட்டு, சுவைத்து, மனதார நான் தம்பி சிவாவை வாழ்த்திக் கொண்டிருப்பவன்."

"திருச்சி சிவா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு போர்க்கருவி, போர்த்தளபதி தன்னுடைய பேச்சின்மூலம், எழுத்தின்மூலம், செயலின்மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்துக்கொண்டிருக்கின்ற ஒரு போராளி, அந்தப் போராளியை ஊக்குவிப்பதுதான், இன்றைய தினம் நாம் அவருக்குத் தெரிவிக்கின்ற ஆறுதல், அவருக்குக் காட்டுகின்ற நன்றி என்பதை எடுத்துச்சொல்லி, அந்த நன்றிக்குரியவரை, நம்முடைய அருமைத் தம்பியை ஆறுதல் அடைக, அஞ்சற்க, என்று கூறி விடைபெறுகிறேன்".

என்றார் தலைவர்.

இன்று எண்ணிப் பார்க்கிறேன். இளைஞர் அணியின் முதல் மாநாட்டில் நான் தலைவருக்கு நன்றி சொன்னேன். அதே தலைவர் என்னை 'நன்றிக்குரியவர்' என்று உலகின் வசந்த வார்த்தை களால் என் உள்ளம் உருக. என்னைப் பாராட்டி, தேற்றி ஆறுதல்படுத்தினார். இன்று என்னை யாரால் ஆறுதல்படுத்த முடியும் அவரின்றி நானிருக்க ? ஆனாலும் அன்று சொன்னார்' அஞ்சற்க' என்று அதன் தேவை இன்று அதிகம், நம் கழகத் தலைவர், இன்றைய விடியல், இளையசூரியன், இனமானத் தளபதி அவர்கள் தலைமையில், சூழ்ந்து வரும் பகை, பூசல், மூடத் தனங்களை, பழமைவாதங்களை வென்று, இனம் மீட்க, தளபதியை தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி வென்று முடிக்க, தேவை தலைவர் சொன்ன 'அஞ்சற்க' என்ற, தாரக மந்திரமே எனப் பயணம் தொடர்கிறேன்.

மருத்துவமனை போவதற்கு ஒரு மாதத்திற்கு முன் தலைவரைப் பார்க்க கோபாலபுரம் இல்லம் சென்றேன், அவர் அருகில் சென்றதும், தன் விழிகளால் பேசினார். என் கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

" தலைவரே டில்லியில் உள்ள தலைவர்கள் உங்கள் நலம் விசாரித்தனர். எங்களின் செயல்களை, பேச்சுகளை மிகவும் கவனிக்கின்றனர். எல்லாம் தலைவரே நீங்கள் தந்த வீரம், நீங்கள் தந்த அறிவு, நீங்கள் தந்த அன்பு என்றேன்.

தன் தங்க அதரம் உதிரமாய் சிவந்திருக்க, உணர்ச்சியின் உந்தலாய், அன்பின் ஏந்தலாய், தாய் தன் குழந்தைக்கு ஈந்திடும் அன்பாய், அமுத சுரபியாய், அந்த தானைத்தலைவர் "என் கையைப் பிடித்து முத்தம் தந்தார்".

ஆம். என் வாழ்நாளிற்கான மொத்தப் பரிசு அன்று கிடைத்தது. அந்த நிமிடம் என் உயிரை உருக்கச் செய்தது. இந்த நிமிடமும் என் விழிகள் அந்நினைவில் நீர் சுரக்கிறது. என் மனம் தலைவரின் நினைவலைகளில் பறக்கிறது.