1910-ல் வெளிவந்த 'அபிதான சிந்தாமணி' என்ற நூலில் - தமிழ்நாட்டில் சைவமும் தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்ட மடங்கள் 18 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதீனங்களின் சொத்து விவரம் பற்றி "சைவ ஆதீனங்கள்" என்ற தலைப்பில் ஊரன் அடிகள் எழுதிய நூலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"முற்காலத்தில் முடியுடை மூவேந்தர்கள் தமிழையும் கலைகளையும் வளர்த்தார்கள். பிற்காலத்தில் குறுநில மன்னர்களும் ஆதீன கர்த்தர்களும் வளர்த்தார்கள். ஆதீனங்களுக்கு அரசர்கள் ஏராளமான நிலக்கொடைகளை அளித்ததே அறம் வளர்ப்பதற்காகத்தான். அறம் வளர்ப்பதோடு மொழி, கலை, பண்பாடுகளையும் ஆதீனங்கள் வளர்த்தன! ஆதீனங்கள் பெரிய சமஸ்தானங்கள் போன்றவை. இராமநாதபுரம், புதுக்கோட்டை சமஸ்தானங்கள் போன்று திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்கள் மிகப்பெரிய சமய நிறுவனங்கள்.

திருவாவடுதுறைக்குத் தென் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 20 பெரிய கோயில்கள், தருமபுரத்துக்கு 27 கோயில்கள்; மடத்துச் சொத்தை 12 ஆயிரம் வேலி நிலங்கள் என்று குறிப்பிடுவதுண்டு.

ss

Advertisment

ஒரு வேலி ஏறத் தாழ 6 ஏக்கர். 12 ஆயிரம் வேலி 72,000 ஏக்கர் ஆகும். தருமபுர ஆதீனத்துக்குக் கோயில் சொத்து மிகுதி; திருவாடுதுறை ஆதீனத்துக்கு மடத்துச் சொத்து மிகுதி" -என்கிறார் ஊரன் அடிகள்.

அபிதான சிந்தா மணியை அடியொற்றி -ஊரன் அடிகள் சைவத் திருமடங்கள் 18 என்று பட்டியலிட்டுக் காட்டி யிருக்கிறார். இந்த 18 மடங்களில் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகளின் - திருக்கோவலூர் மடத்தின் பெயர் இல்லை. எனினும் என்ன? சைவத் திருமடங்கள் 18 என்று அபிதான சிந்தாமணி பட்டியலிட்டுக் காட்டுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு திருக் கோவலூர் மடத்தின் ஆதீன கர்த்தராகப் பட்டம் சூட்டப்பட்ட ஞானியாரடிகள், ஓர் அரை நூற்றாண்டுக் காலத்துக்கு -நிலங் களும் - கோவில்களும் சொத்துக்களும் ஏராள மாய்க் கொண்ட மடங்களின் ஆதீன கர்த்தர்கள் எல்லாம் சைவத்துக் கும்-தமிழுக் கும் செய்யமுடியாத அளவுக்கு ஏராளமான பணிகளை செய்துமுடித் தார்!

மற்ற மடாபதிகள் எல்லாம் மடம் - மடம் சார்ந்த கோயில்கள்-திருத்தல யாத்திரைகள் மட்டுமே திருமடங்களின் பணிகள் என்று நினைத்து மடத்துக்குள்ளேயே அமர்ந்து சைவம் வளர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் ஒருவர்தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சமயத் தொண்டாற்றியதோடு நில்லாமல் சைவம்-தமிழ் ஆகிய இரண்டின் வளர்ச்சிக்காகவும் ஏராளமான சமாசங்களையும் -தமிழ்ச் சங்கங்களையும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் உருவாக்கினார்.

Advertisment

அக்கால கட்டத்தில் தமிழ்கூறும் நல்லுலகினர் அனைவராலும் போற்றி மதிக்கப்பட்ட தமிழறிஞர் கள், புலவர் பெருமக்கள் அனைவரும் ஞானியாரடி களை அழைத்து சைவ சித்தாந்தப் பெருவிழாக்கள், தமிழிலக்கியம் போற்றும் மாநாடுகளை எல்லாம் நடத்தினார்கள். ஞானியாரடிகள் தலைமையில் ஆய்வுச் சொற்பொழிவு நடத்துவதைப் பெரும் பேறாகக் கருதினார்கள் அவர்கள்.

திரு.வி.க., மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி, மு. கதிரேசன் செட்டியார், கா.நமச்சிவாய முதலியார், த.வே. உமாமகேசுவரம் பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற பேரறிஞர்கள் எல்லாம் ஞானியாரடிகள் தலைமையில் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தி- ஞானியாரடிகள் முடிவுரை மூலம் பாராட்டுப் பெற்றவர்கள் ஆனார்கள்.

cc

ஏனைய மடங்கள் போல திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளின் மடம் ஏராளமான கோயில் களையும், சொத்துக்களையும் கொண்ட மடமல்ல; ஆனால் ஞானியாரடிகள் அவர்களே விலைமதிக்க முடியாத சைவ சிந்தாந்தப் பொக்கிஷமாகவும்- தமிழ்க் கருவூலமாகவும் விளங்கினார்கள்.

திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் போன்றவர்களுக்கெல்லாம் கூட பாடம் சொல்லித் தரும் அளவுக்கு பெரும் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது அவரது பெருமைமிக்க வரலாறு!

ஞானியாரடிகளோ இதிலேயும் வித்தியாசமானவர். பகல் பொழுதுகளில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், புலவருக்குப் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மடத்தில் வைத்துப் பாடம் சொல்லித் தருவதை ஒரு அன்றாடப் பணியாகவே கருதி செயல்பட்டு வந்தார் அவர்! இன்றும்கூட இந்துமதத் துறவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பல மடாதிபதிகள் முஸ்லீம்கள் : கிறிஸ்தவர்கள் மீது துவேஷம் கொண்டவர்களாகவும், இந்து சமயத்தின ரைப் பிற மதத்தினர் மீது துவேஷம் கொள்ளத் தூண்டுபவர்களாகவும் செயல்படுவதைக் காண்கிறோம்!

ஞானியாரடிகளுக்கு இத்தகைய சமயம் சார்ந்த காழ்ப்புணர்ச்சிகள் எதுவும் எள் முனையளவுகூட இருந்ததில்லை. ஞானியாரடிகளிடம் பாடம் கேட்டுப் பயின்ற எத்தனை எத்தனையோ மாணவர்களில் ஒருவரான ஆராய்ச்சி அறிஞர், முனைவர் சுந்தர சண்முகனார். ஞானியாரடிகளின் வாழ்க்கை வரலாற்றினை மிகச் சிறந்ததோர் நூலாக எழுதியிருக்கிறார்! அதிலே ஒரு நிகழ்ச்சி; அது சைவ சமயம் தழைக்கப் பாடுபட்ட ஞானியாரடிகள், தமிழ் வளர்ப்பது என்று வந்தால், எந்தச் சமயத்தினரானாலும் அவர்கள் தமிழறிந்தவர்களாக - தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினார் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

"கடலூரில் இருந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் (ந.ந.க.ஈ.) தமிழ் தவிர்த்த மற்ற பாடங்களில் நிரம்ப மதிப்பெண் பெற்றும் தமிழ்ப் பாடத்தில் பதினாறு மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தோல்வியடைந்து விட்டான். அவன், தனக்குத் தெரிந்த திருஞான சம்பந்தம் பிள்ளை என்பவரிடம் போய் தனக்குத் தமிழ்ப் பாடம் (டழ்ண்ஸ்ஹற்ங்-பன்ற்ண்ர்ய்) கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டினான். அவர் ஞானியாரடிகளின் கல்விச் சிறப்பை விளக்கி, அவரிடம் சென்றால், உனக்குத் தமிழ் கற்பிப்பார் என்று கூறி அவனை அடிகளாரி டம் அனுப்பி வைத்தார்.

அவன் ஒருநாள், புலிசை (திருப்பாதிரிப்புலியூர்) அடி களாரின் அருளகத்துக்குச் சென்றான்.

அங்கே-முன் கட்டில் ஒரு சாமியார், எளிய உடையுடன் எளிமையாய்க் காணப்பட்டார். இளைஞன் அவரை அணுகி, நான் ஞானியார் அடிகளாரைக் காணவேண்டும் என்றான்.

எதற்கு என்று அந்தச் சாமியார் கேட்டார். அவன் வந்த காரணத்தைத் தெரிவித்தான். உடனே அந்தச் சாமியார் 'நான் சொல்லித் தருகிறேன்" என்று கூறி, அவனது பாட நூலிலுள்ள சில பாடல்களை விளக்கிக் கற்பித்துவிட்டு 'நாளைக்கு இதே நேரத்தில் வா' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இளைஞனுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஞானியார் சுவாமிகளிடம் பாடம் கேட்கலாம் என்று வந்தோமே இவர் யாரோ ஒரு சாதாரண சாமியார் நம்மை மடக்கி அனுப்பிவிட்டாரே என்று ஏமாற்றத்துடன் சென்று, திருஞானசம்பந்தம் பிள்ளையிடம் நடந்ததைத் தெரிவித்தான். அவர், சாமியாரின் உருவத் தோற்றத்தைப் பற்றி அவனிடம் விசாரித்துக்கொண்டு, அவர்தான் ஞானியார் சுவாமிகள்- நீ நாளைக்கும் செல்வாயாக என்று கூறி அனுப்பினார்.

இளைஞர் மறுநாள் குறித்த நோத்தில் ஞானி யாரின் அருளகத்தை அடைந்தார். அடிகளாரைக் கண்டதும், உங்களை இன்னார் என்று யான் நேற்று அறியவில்லை. மடாதிபதிகள் என்றால் ஆடம்பரத் தோற்றத்துடன் இருப்பார்கள். அவர்களை எளிதில் பார்க்கமுடியாது என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் எளிமை என்னைக் கவர்ந்துவிட்டது என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதான். அடிகளார் அவனுக்கு ஆறுதல் கூறிப் பாடம் கற்பித்தார்.

திருஞான சம்பந்தர்க்கு உமாதேவியார் ஞானப்பால் ஊட்டியதுபோல, திருஞான சம்பந்தம் (பிள்ளை) அனுப்பிய முஸ்லிம் இளைஞனுக்கு அடிகளார் தமிழ்ப்பால் ஊட்டினார். ஞானப்பால் உண்டதும் ஞானசம்பந்தர் 'தோடுடைய செவியன்' எனப் பாடல் பாடியதுபோல, அடிகளாரின் தமிழ்ப்பால் அருந்தியதால் இளைஞன் அடுத்த தேர்வில் வெற்றி பெற்றான்" என்று தமது ஞானாசிரியர் அடிகளாரைப் பற்றி எழுதி யிருக்கிறார் சுந்தர சண்முகனார்.

இப்படி மடத்தில் தங்கியிருக்கும் போது மட்டும்தான் பாடம் சொல்லித் தருவார் இலவசமாக என்பதல்ல; சென்ற ஊர்களில் எல்லாம் பொருள் பெறாமல், தம்மை நாடி வருவோர் யாவருக்கும் அன்புடன் இலவசமாக பாடம் கற்பிப்பார் அவர்! மடத்தோடு-சைவப்பணியும் தமிழ்ப்பணியும் முடிந்து விட்டது என்று திருப்தியடைந்துவிடவில்லை அவர். கார்வசதிகள்லிரயில் வசதிகள்- பஸ் வசதிகள் இன்றுபோல இல்லாத அந்தக் காலத்தில் - பல்லக்கில் அமர்ந்தே பயணம் செய்து தமிழ் வளர்த்தார் அவர்; சைவம் தழைத் தோங்கப் பாடுபட்டார்.

இந்த விஷயத்தில் தந்தை பெரியார் அவர்களும் ஞானியாரடி களும் ஒன்று!

தமது வாழ்நாள் முழுவதும் சுற்றுப்பயணம். சுற்றுப் பயணம் என்று - தமிழகத்தின் சின்னஞ்சிறு குக்கிராமங்களைக்கூட விட்டுவைக்காமல் -ஒரே நாளில் இரண்டு ஊர்கள், மூன்று ஊர்கள் என்று கூட ஊர் ஊராகச் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த பெரியார் போலவே ஞானியாரடிகளும் சிவிகை (பல்லக்கு) மூலமே தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தமிழ்ப்பணியும் சமயப் பணியும் ஆற்றிவந்தார். பல்லக்கு மூலமே பயணித்து தமிழுக்காகவும் சைவ சமய வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை சுந்தர சண்முகனார் தமது நூலில் பட்டியலிட்டுக் காட்டி இருக்கிறார்.

1901-இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் ஒன்று ஆரம்பிக்கிறது. ஞானியாரடிகளால் உருவாக்கப் பட்ட அல்லது அவரது பணியினைப் பெற்ற அமைப்பு களின் பட்டியல் வாணி விலாச சபை (திருப்பாதிரிப் புலியூர்), சைவ சித்தாந்த மகா சமாசம், ஞானியார் மாணவர் கழகம் (திருக்கோவலூர்), பக்த பால சமாசம்(மணம் பூண்டி), கம்பர் கானாமிர்த சங்கம் (திருவெண்ணெய் நல்லூர்), வாகீச பக்த சனசபை (நெல்லிக்குப்பம்), கலைமகள் கழகம் (புதுச்சேரி), புதுவைச் செந்தமிழ்ப் பிரகாச சபை, ஞானியார் சங்கம் (காஞ்சிபுரம்), சன்மார்க்க சபை (கடலூர்), சைவ சித்தாந்த சபை (உத்திரமேரூர்), சமய அபிவிருத்தி சங்கம் (செங்கல்பட்டு), சக்தி விலாச சபை (திருவண்ணாமலை) என்று அடிகளாரால் உருவாக்கப்பட்ட அல்லது அடிகளாரின் பங்கும் பணியும் பெற்ற அமைப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

இன்று மடாதிபதிகள் இந்து சமயத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிலர் இந்து மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் தமிழ் என்று வந்தால் அது ஆலயத்துக்குகந்த மொழியல்ல; இசை மேடைகளுக்குரிய மொழி அல்ல என்றும், ஆலயத்துக் குள்ளே மட்டுமல்ல; வெளியே குடமுழுக்கு செய்யும் இடத்தில்கூட தமிழ் வரக்கூடாது என்று வடமொழி வெறியோடு செயல்படுவதைக் காண்கிறோம்!

ஞானியாரடிகள் சைவ சமயம் வளர்க்க உருவாக்கப்பட்ட மடத்தின் ஆதீனகர்த்தர்தான். ஆனால் அவர் வைணவத் திருத்தலங்கள் - திவ்வியப் பிரபந்தங்கள், இராமாயணத்திலுள்ள சிறப்புகள் என்றெல்லாம் மதபேதத்துக்கு சிறிதும் இடம் தராத வகையில் சமய வளர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுடன் பேசினார்; எழுதினார்; உதவிகள் செய்தார். அதே சமயம் தமிழ் மீது தணியாத காதல் கொண்டவராக தமிழ்ச் சங்கம், தமிழ்க் கல்லூரி என்று தமிழ் வளர்க்கும் அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார்.

1900மாவது ஆண்டு பாலவநத்தம் குறுநில (ஜமீன்தார்) மன்னரான பாண்டித்துரைத் தேவர் சென்னையிலிருந்து ஊர் திரும்பும் வழியில் திருப்பாதிரிப்புலியூர் சென்று ஞானியாரடிகளை தரிசித்தார். தேவர் தலைமையில் அடிகளார் 'தமிழின் தற்கால நிலை' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழி வின்போது "மதுரை மாநகரில் தேவரும் மற்ற செல்வர்களும் சேர்ந்து ஒரு தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். தலைமை வகித்த பாண்டித்துரை தேவர் - தமது முடிவுரையில் தமது தமையன் பாஸ்கர சேதுபதி மன்னரிடம் கூறி, மதுரையில் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்த ஆவன புரிவதாக அங்கேயே அறிவித்தார்!

பின்னர் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு வந்த பாஸ்கரசேதுபதி மன்னர் திருப் பாதிரிப்புலியூர் வந்தார். அடிகளார் அவர்கள் ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தி...

அதனிடையே மறவாமல் மதுரைத் தமிழ்ச் சங்கம் அமையவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

பாண்டித்துரைத் தேவர் போலவே மன்னர் சேதுபதியும், தமிழ்ச் சங்கம் அமைத்துத் தருவதாக ஒப்புதல் அளித்தார். இப்படி 'இதனை - இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மதுரையில் தமிழ்ச் சங்கம் என்று இடைவிடாது அடிகளார் செய்த முயற்சியே மதுரைத் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. அது நான்காம் தமிழ்ச் சங்கம் என்று அனைவரும் போற்றும் வகையில் புகழ் பெற்றது!

மதுரை தமிழ்ச் சங்கம் மாதந்தோறும் கூட்டம் நடத்து வதற்காக அமைக்கப்பட்ட சங்கமல்ல; தமிழ் வளர்க்க சேதுபதி கலாசாலையை உருவாக்கி, பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று பாடம், பட்டப் படிப்புகள் மூலம் தமிழ்ப் புலவர்களை உருவாக்கியது அது. 'தமிழ் படிக்க வாருங்கள்; உண்டியும், உறையுளும் (ஹாஸ்டல்) இலவசம்; கட்டணம் இல்லை" என்று அழைத்து தமிழ் அறிவு புகட்டிடும் சங்கமாகச் செயல்பட்டது அது!

'செந்தமிழ்' என்ற பெயரில் திங்கள் இதழ் தொடங்கி -அதன் மூலமும் என்றுமுள தென்றமிழின் சிறப்புகளைத் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டி தமிழ் வளர்ப்பதிலும் சங்கம் தீவிரம் காட்டியது!

ஞானியாரடிகள் தமிழ் வளர்த்த காலகட்டத்தில் ... தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி எதுவும் இருந்ததில்லை. தஞ்சையை அடுத்த திருவையாற்றில் வடமொழிக் கல்லூரி - சமஸ்கிருதக் கல்லூரி ஒன்று இருந்தது. அது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் அது தஞ்சை மாவட்ட ஆளுகைக் கழகத்தில் (உஒநபதஒஈப இஞஆதஉ) மேற்பார்வையில் நடத்தப்பட்டது. அடிகளார் திருவை யாற்றுக்குச் சென்றபோது, அடிகளாரின் வடமொழிப் புலமையை அறிந்திருந்த அக்கல்லூரியினர் அடிகளாரின் வடமொழிப் புலமையைப் பாராட்டி - வடமொழியிலேயே எழுதப் பெற்ற ஒரு பாராட்டுப் பத்திரம் படித்து வரவேற்றனர். அக் கல்லூரியின் தோற்றம், வளர்ச்சி, அதன் பணிகள் பற்றியெல்லாம் அடிகளார் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

அவரது உள்ளத்தில் ... அதே கல்லூரியில் தமிழுக்கு ஏற்றம் அளிக்கவேண்டும் என்று அப்போதே தோன்றிவிட்டது. திருப்பாதிரிப்புலியூர் திரும்பியதும் வடமொழி மட்டும் கற்பிக்கப்படும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி மிகுந்தது அவருக்கு.

எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்ணிய ரான அவர் அன்று முதலே எடுத்த காரியத்தை முடிக்க முயற்சிகளை முடுக்கிவிடலானார்.

திருவையாறு கல்லூரியை இயக்கி வந்த தஞ்சை மாவட்டக் கழக (உஒநபதஒஈப இஞஆதஉ)த்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளை - அடிகளார் பால் அன்புமிகக் கொண்டவர். அவரை அடிகளார் தம் இருப்பிடத் துக்கு அழைத்து திருவையாறு கல்லூரி தொடர்பான அறக்கட்டளை பற்றி ஆராயச் சொன்னார். மாவட்டக் கழகத்தின் தலைவராக இருந்தவரோ - தமிழர் குலம் உயரப் பாடுபட்ட சர்.ஏ.டி. பன்னீர் செல்வம்!

உமாமகேசுவரனார் தஞ்சை சென்றார். திருவையாறு கல்லூரி தொடங்கப்பட்ட காலத்து அதை உருவாக்கிய அறக்கட்டளையின் செப்புப் பட்டயத்தை எடுத்துக் கொண்டு, பன்னீர் செல்வம் அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வந்தார்.

அந்த அறக்கட்டளையின் பட்டயத்தில் பொதுவாக "கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்ற" என்றே அதன் குறிக்கோள் பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது.

எனவே தமிழையும் அக்கல்லூரியில் கற்பிக்கலாம் என்பதை அடிகளார் முன்னிலையில் மற்ற இருவரும் தீர்மானித்தர்கள்.

தஞ்சை திரும்பியதும் அவர்களிருவரும் அக்கல்லூரியில் தமிழ்வித்துவான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்! வடமொழிக் கல்லூரி என்னும் பெயரையும் பொதுவாக அரசர் கல்லூரி (தஆஓஆ'ந ஈஞககஊஏஊ) என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது. அக்கல்லூரியில் பயின்ற தமிழ்ப் புலவர் பதினாயிரக் கணக்கானவர் என்று பெருமை பொங்கிட அடிகளாரின் தமிழ்ப் பணி பற்றி 'ஞானியார் அடிகளார்' நூலில் குறிப்பிட்டிருக்கிறார் சுந்தர சண்முகனார். அதுமட்டுமின்றி, "அடிகளார் தாமே தமிழ்க் கல்வி நிறுவனம் தொடங்கி நடத்தியதல்லாமல், தமது முயற்சியால், நமது மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையச் செய்தது மாபெரும் தமிழ்த் தொண்டாகும். அடிகளாரின் தமிழ்ப் பற்றுக்கு இன்னொரு இமாலயச்சான்று உண்டு. 1938-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக்கப் பட்டபோது, அடிகளார் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட் டார்கள்; அந்த அறிக்கையை யானே -பல இடங்களில் -பல சுவர்களில் ஒட்டியுள்ளேன்" என்று கூறும் சுந்தரசண்முகனார், "தமிழ் கற்பதும், தமிழில் பேசுவதும் தாழ்வென்றும், தமக்குத் தமிழ் தெரியாது என்று சொல்வதைப் பெருமை என்றும் கருதிய கோடாரிக்காம்புகள் மிகுதியாக இருந்த காலத்தில், அடிகளார் இவ்வாறு தமிழ் இயக்கம் தொடங்கி நடத்தியது மிகவும் போற்றத்தக்கதாகும்" என்கிறார் தமது நூலில்!" தமிழை நீசபாஷை என்று கருதி ஆலயங்களிலிருந்தும் கூட விரட்டத் துடிக்கின்ற அயல் இன மடாதிபதிகளின் வடமொழி வெறியையும், தமிழ்த் துவேஷத்தையும் இன்று கண்கூடாகக் காணும் போது தமிழ்வளர்த்த ஞானியாரடிகளின் பெருமை இமய உச்சியையும் தாண்டிய எல்லை காணமுடியாத பெருமையாகவே தோன்றுவதில் வியப்பென்ன? இன்று மடாதிபதிகள் என்போர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்; மடத்துக்கு அருகிலேயே விமான தளம் அமைத்துக் கொள்கிறார்கள். விஞ்ஞான யுகத்தில் அப்படிப்பட்ட பயணங்களை அவர்கள் மேற்கொள்வதை யாரும் குறை சொல்வதற்கு இல்லை.

ஆனால், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை தமிழில் குடமுழுக்கு என்றால் "பழமை விட்டுவிடக்கூடாது; மரபைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்" என்று அப்போது மட்டும் பழைய பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி தமிழுக்கு இடமில்லை என்கிறார்கள்; ஆனால் பக்தர்கள் மூலம் பழைமை வாய்ந்த தங்களது மடத்தை இடித்து நாலுகோடி ருபாய் செலவில் புதிய -குளுகுளு வசதி செய்யப்பட்ட மாளிகையை சுட்டிக் கொள்கிறார்கள்! விமானப் பயணத்துக்காக - தனி விமானம் -விமான தளம் என்று புதுமையில் புகுந்து விளையாடுகிறார்கள்.

அப்போதுதான் இவர்கள் பழைமை - மரபு ஆகமம் -சாஸ்திரம் என்று பேசுவதெல்லாம் எவ்வளவு பாரபட்சமானது ஓரவஞ்சனை மிகுந்தது என்பது தெளிவாகிறது.

ஞானியாரடிகள் தலைமையில் புதுவையில் நடந்த கலைமகள் கழக ஆண்டுவிழாவில் பேசிய தமிழ் முனிவர் திரு.வி.க. "அடிகளார் மோட்டார் காரையோ - புகைவண்டியையோ பயன்படுத்தாமல் சிவிகையில் (பல்லக்கில்) மட்டுமே செல்லுதல் என்ற பழைய மரபைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் எண்ணற்ற மக்கள் அடிகளாரின் சொல்லமிழ்தத்தை அருந்தும் வாய்ப்பு இல்லாதவராயுள்ளனர். என்போன்றோரும் சில ஊர் மக்களும் அடிகளாரின் உரையை விரும்பிக் கேட்டதுபோலவே பல ஊர்மக்களும் கேட்டு மகிழ விரும்புவார்கள் அல்லவா? அடிகளார் சிவிகையிலேயே செல்லுவதால், தொலையில் உள்ள ஊர்கட்கெல்லாம் வேண்டியபோதேல்லாம் விரைந்து செல்லமுடிவில்லையே. அடிகளாரின் சொல் உணவை மாந்தித் திளைக்க சென்னை மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

பழைய மரபை விட முடியாது பழைய மரபுப்படி சிவிகையை விடமுடியாது என்றால் யாங்கள் பெரிய மோட்டார் கார் அமைத்து அதன் மேல் சிவிகையை வைக்க ஏற்பாடு செய்வோம். அடிகளார் சிவிகையில் அமர்ந்தபடியே மோட்டார் வண்டிமூலம் இடம் விட்டு இடம் போகலாம். இந்த வேண்டுகோளை அருள்கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்"என்று கோரினார்.

அதற்கு அடிகளார், ”நான் இத்தனையாண்டு காலம் மேனா என வழங்கப் பெறும் சிவிகையிலேயே சென்று வந்தேன். இது எங்கள் ஆதீனத்தின் மரபு. இப்போது போய் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தினால் இவ்வளவு நாளாய்க் காத்துவந்த மரபுப் பெருமை கெட்டுவிடும். மற்றும் யான்சிவிகையில் செல்வதால், வழியில் உள்ள சிற்றூர்களையெல்லாம் பார்க்கவும், அங்கங்கே தங்கிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் அவ்வூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடிகிறதன்றோ?" - என்று பதிலளித்தார்; திரு.வி.க. அதனையேற் றார்!

மோட்டார் காரில் வர மறுத்தார்; சிவிகை யிலேயே பயணம் செய்வேன் என்பது மட்டுமல்ல ஞானியாரடிகளின் சிறப்பு!

தந்தை பெரியார் போலவே இவரும் தாம் ஏற்றுக் கொண்ட சைவமும் தமிழும் பரப்பும் கொள்கைக்காக இறுதி மூச்சடங்கும் வரையில் பயணித்துக்கொண்டே இருந்தார். 1941இல் அவர் இயற்கை எய்துவதற்கு முன்புகூட திருவண்ணாமலையில் தொடங்கி திருக்கோவலூர், பெண்ணாடகம் போன்ற பல ஊர்களில் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருச்சியில் மூன்று நாட்கள் நடந்த சைவ சித்தாந்த மகா சமாசத்தினரின் மாநாட்டில் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

அங்கிருந்து மணப்பாறை வழியாக பழநி சென்றார். அங்கேயும் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார். அங்கிருந்து திருச்சி புறப்பட்டார். ஒரு திருமண விழாவுக்கு முன்னிலையேற்க! பழனியிலிருந்து திருச்சி செல்லும் வழியில் ஆய்குடி அருகே சிந்தலவாடன்பட்டி என்ற ஊரில் அவருக்கு உடல் நிலை சீர்கெட்டது. அப்போதே அவர் தமிழன்னையையும் - தமிழ் அன்பர்களையும், சமய நம்பிக்கை கொண்டவர்களையும் கண் கலங்க வைத்துவிட்டு தமது வாழ்க்கைப் பயணத்தை வழி நடைப்பயணத்திலேயே முடித்துக் கொண்டவர்போல் இயற்கை எய்திவிட்டார்! இந்த விஷயத்தில் பெரியாரும் இப்படித்தான் என்பதாலோ என்னவோ' காங்கிரசை விட்டு விலகி - சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் அவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக குடிஅரசு இதழ் அலுவலகத்தைத் திறந்து வைக்க திருப்பாதிரிப் புலியூர் மகாசந்நிதானம் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாரிய சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ஞானியாரடிகளை அழைத்தார். அங்கே - வாழ்த்துரை வழங்கிய ஞானியாரடிகள் குடிஅரசு ஏட்டையும் பெரியார் அவர்களையும் வாழ்த்தியதோடு நில்லாமல் "எங்கள் சமயத்துறையில் நிலவிவரும் குறைபாடுகளையும் கேடுகளையும் போக்கி - குடியரசு மூலம் நாயக்கர் அவர்கள் சமயத்துறையையும் சீர்திருத்திட முன்வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்!

இன்று- இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீது பாய்ந்து - அவர்கள் மீது புழுதி வாரி இறைக்கிற நவீன இந்துக்கள் சாதி வெறிக்குத் தீனி போட்டு கலவரத்துக்கு வழிசெய்யும் மடாதிபதிகள் பலரை பார்க்கும்போது "தமிழ்மட்டுமல்ல; தமிழர்களின் ஆதி சமயம் என்று கூறப்படும் சைவ சமயமும் குறையற்றதாக கேடு விளைவிக்காததாக இருக்கவேண்டும் என்ற பரந்த பார்வையின் பாற்பட்டு பெரியாரிடம் ''சமய சீர்திருத்தப் பணியையும் நீங்களே செய்யவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்த ஞானியாரடிகளின் தமிழ்ப்பற்றையும் சமயப்பற்றையும் என்னென்பது? திரு.வி.க. நடையில் சொல்வதானால் உன்ன உன்ன உள்ளம் குழைகிறது; உவகை பெருக்கெடுக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்!

(வல்லிக்கண்ணன் தொகுத்த ‘தமிழ்வளர்த்த ஞானியார் அடிகள்’நூலில் இருந்து)