ங்கிலேயர்கள் இந்நாட்டை ஆள வந்ததிலிருந்து, ஆங்கில அதிகாரிகள் சர்க்கஸ் மாஸ்ட்டர்கள் மிருகங்களை அடிப்பதைப் போல, இந்தியர்களை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அதிகாரிகள் தாம் அப்படிப்பட்டவர்களே தவிர, அந்நாட்டிலிருந்து வந்த இறைத்தூதர்கள்- ஊழியக்காரர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்களாகவே இருந்தார்கள். கல்வியில்லாத மக்களுக்குப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டித் தந்தனர். நோயுற்ற மக்களுக்கு மருத்துவமனைகளைக் கட்டித் தந்தனர். அத்தகைய அருளாளர்களில் சிலர் தாம், இன்றைக்குச் சித்ரவதைக்கு உள்ளாகின்றனர். எடுத்துக்காட்டாக அருள் திரு. ஸ்டேன் சுவாமிகளைச் சொல்லலாம்.

அகராதி இல்லாத தமிழனுக்கு முதன் முதலில் "சதுரகராதி''யை எழுதித் தந்தவர், வீரமாமுனிவர் எனும் பெஸ்கி பாதிரியார் அல்லவா? அச்சு எழுத்து தெரியாத தமிழருக்கு அச்செழுத்தை அடித்துத்தந்தவர் சீகன்பால்கு பாதிரியார் ஆயிற்றே! திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதி, உலகப் பெரும்புகழை ஈட்டித் தந்தவர், எல்லிஸ் பாதிரியார்; திருவள்ளுவர் உருவத்தைத் தங்க நாணயத்தில் அச்சிட்டவரும் அவரே! திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன் பெருமையை உலகளவுக்குக் கொண்டு சென்றவர், போப் ஐயர் ஆவார். வரலாறு எழுதிப் பழக்கமில்லாத தமிழர்களுக்குத் "திருநெல்வேலி வரலாற்றை' எழுதி, வரலாறு எழுதும் முறையை நமக்கு அறிமுகப்படுத்தியவர், கால்டுவெல் ஐயர் ஆயிற்றே. மேலும், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளையும் ஏந்திப் பாதுகாத்து, அவர்களை மனிதர்களாக்கித் தந்தவர், அன்னை தெரேசா என்பதை உலகு அறியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக வந்த ஸ்டேன் சுவாமியாரை அநியாய மரணத்திற்கு ஆளாக்கலாமா? "கடையனுக்கும் கடைத்தேற்றம் தரவந்த ஸ்டேன் பாதிரியாரைக் கல்லறைக்கா அழைத்துச் செல்வது?'.

ஸ்டேன் சுவாமியினுடைய முழுப்பெயர்- முதல் பெயர், ஸ்டேனிஷ்லாஸ் லூர்துசுவாமி என்பதாகும். திருச்சி மாவட்டத்திலுள்ள "விரசலூர்' எனும் குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பட்டப்படிப்பு முடித்தவுடன், சமூக சேவை செய்ய எண்ணி, சர்வதேச இயேசு சபையில் தம்மை இணைத்துக் கொண்டார். அச்சபையினர் அவர் இறையியலில் (தியாலஜி) முதுகலைப்பட்டம் பெறுவதற்காகப் பிலிப்பைன்ஸ் தீவுக்கு அனுப்பி வைத்தனர். படிப்பை முடித்து வந்த அவரை ஏசு சபையினர் பெங்கஅரில் நடத்திய இண்டியன் சோசியல் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஆக்கினார்கள்.

இறையூழியம் செய்யும்போதே இந்த நாட்டில், ஆதிவாசிகள்- பழங்குடிமக்கள் படும் அல்லல்களைக் கண்டு, அவர்களுக்காக வருந்தி, அவர்களுடைய ஏற்றத் துக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகச் சூளுரை செய்தார்.

Advertisment

இந்திய நாட்டில் சுதந்திரத்தின் சுவாசத்தை முற்றிலுமாக அறியாதவர்கள், ஆதிவாசிகள்.

அவர்களின் ஈடேற்றத்திற்காக அவர்களுக்காக ஒரு மேலாண்மைக்குழு அமைக்கப்படவேண்டும் என்றும்; அந்த மேலாண்மைக்குழுவில் ஆதிவாசி களே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும், இந்திய அரசியல் சட்டத்தில் ஐந்தாவது பிரிவில், ஒரு விதியை உருவாக்கி வைத்திருந்தார்.

அண்ணல் அம்பேத்கார். 1986 வரை அதைப்பற்றி எந்த அரசியல்வாதியும், எந்த இடத்திலும் கேள்வி எழுப்பவில்லை. முதன் முதலாக ஸ்டேன்ஸ் பாதிரியார்தான் அந்த ஏவுகணையை ஏவினார்.

Advertisment

அரசாங்கத்தின் நெற்றிக்கண் பார்வை ஸ்டேன்ஸ் சுவாமிகள் மீது பதிந்தது.

கல்புர்கிஞூஞூ கோவிந்த பன்சாரே, தபோல்கர், கௌரி லங்கேஷ் பட்டியலில் ஸ்டேன்ஸ் பாதிரியாரின் பெயரும் எழுதப்பட்டது. பழங்குடி மக்கள் வாழும் மலைப்பகுதிகள் கனிமவளம் நிறைந்தவை. என்றா லும், அங்கு வாழும் ஆதிவாசிகள் ஏன் இன்னும் இருட்டறையிலே இருக்கிறார்கள் என்பதைத் தாம் முதலில் எண்ணிப் பின்னர் அந்த மக்களிடமும் பரப்பிவிட்டார்.

ஜார்கண்டில் ஆதிவாசி மக்களை எல்லாம் திரட்டி, அவர்களுடைய அடிப்படை தேவைகளுக்காகவும், தொழிலதிபர்களால் அவர்களுடைய வளம் சுரண்டப் படுவதையும் எதிர்த்து ஒரு பெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை உருவாக்கினார். ஆத்திரம் அடைந்த அதிகார வர்க்கம் தடியடிப் பிரயோகம் செய்து 3000 ஆதிவாசிகளைப் பிடித்து தலோஜா மத்திய சிறையில் அடைத்தது. சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஸ்டேன்ஸ் சுவாமியும் ஒருவர். அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மறியலில் கலந்து கொண்டவர்களைக் கொண்டு வந்து சிறையில் அடைத்ததால், அந்த அப்பாவி மக்களுக்கு ஏன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதற்கு முன்னர் குற்றப்பத்திரிகையே வழங்கப்படாமல், பல ஆதிவாசிகள் ஆண்டுக்கணக்காக தலோஜா மத்திய சிறையில் கிடக்கிறார்கள்; எந்த சட்ட உதவியும் வழங்கப்படாமல்! வேதனை தாங்க முடியாமல் ஸ்டேன்ஸ் சுவாமி தம்முடைய மற்றொரு பாதிரியாருக்கு ஒரு மடல் எழுதினர்.

"நாங்கள் கூண்டில் அடைக்கப்பட்ட குயில்கள் போல் கிடக்கின்றோம்; என்றாலும், எல்லோரும் ஒரே குரலில் பாடிக் கொண்டிருக்கிறோம்'' என்ற ஸ்டேன்ஸ் எழுதிய பதிலில், அவருடைய மனதிடமும் வைராக்கியமும் தெரிகிறது.

மேலும், ஸ்டேன்ஸ் தம்முடைய காட்சிப் பதிவில் (வீடியோ கவரேஜ்) "இன்றைக்கு இந்த நாட்டில் நடந்து கொண்டிருப்பவை புதுமையானவை அல்ல;

அது எனக்கு மட்டும் நடப்பதாகவும் நான் கருதவில்லை. எல்லைப்புறங்களில் வாழும் மனிதர்கள் அனைவரும் இதனை அனுபவிக்கிறார்கள். ஆதிக்க ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்டதால்ஞூஞூ அறிவுஜீவிகள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், போராளிகள், மாணவர்கள் எனப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம். நடப்பியலில் நாங்களும் பங்காளிகளாக இருக்கிறோம். சமூக நீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காமல்ஞூஞூ என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்'' எனப் பதிவு செய்தது, ஆதிவாசி மக்களிடையே பெரும் கிளர்ச்சி மனப்பான்மையை உருவாக்கியது.

சுதந்திர இந்தியாவில் மனித உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடுபவர்களை, கம்யூனிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், தேசத் துரோகிகள் எனச் சொல்லி சிறையில் அடைப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் ஆதிவாசி களுக்காகப் போராடிய ஸ்டேன்ஸ் சுவாமியை மாவோயிஸ்ட்டுகளின் அனுதாபி எனச் சொல்லி ஜுன், 2018 அன்று கைது செய்து, ராஞ்சி சிறையில் அடைத்தனர்.

stan

இந்தியாவில் பழங்குடி மக்கள் வாழும் பகுதியென 10 மாநிலங்களை, இந்திய அரசு பட்டியலிடுகிறது. 1996 ஆம் ஆண்டு "பெசா' என ஒரு சட்டம் இயற்றி, ஆதிவாசிகளுடைய நிலத்தை அவர்களுடைய பஞ்சாயத்துக்களின் அனுமதியன்றி யாரும் வாங்கக்கூடாது; அப்படி வாங்கினால், அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கண்டிப்பாக வரையறுத்தது. இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு பழங்குடிமக்கள் அவர்களுடைய நிலங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், ஜார்கண்ட் மாநில அரசு "வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தலாம்' என ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது.

சட்டத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேட் வர்க்கம் ஆதிவாசிகளின் நிலங்களை வரன்முறையின்றி ஆக்கிரமித்தனர். ஆதிவாசிகளுக்கும் ஆதிக்கவாதி களுக்கும் இடையில் வர்க்கப் போராட்டம் தொடங்கி யது. ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து பழங்குடிமக்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காகப் போர்க்குரல் எழுப்பிய ஸ்டேன்ஸ் பாதிரியாரைக் கைது செய்ய மத்திய - மாநில அரசுகள் சமயம் பார்த்திருந்தன.

பீமாகோரேகான் என்பது மராட்டிய மாநிலத்தில் புனே மாவட்டத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு சிற்றூர். 1818-ஆம் ஆண்டு அம்மாநிலத்திலிருந்த பேஷ்வா படைகளுக்கும் கிழக்கிந்திய கம்பெனி படையினருக்கும் ஆளும் உரிமை குறித்து ஒரு போர் நடந்தது.

அந்தப் போரில் கிழக்கிந்தியப் படையிலிருந்த 29 மஹர்- தலித்துகள் கொல்லப்பட்டனர். அதனை முன்னிட்டு சனவரி ஒன்றாம் நாளை தலித் மக்கள் நினைவு நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். 1927-ஆம் ஆண்டு நடைபெற்ற நினைவு நாளில் டாக்டர் அம்பேத்கார் கலந்து கொண்டார். 2018 சனவரி ஒன்று, 200-ஆம் ஆண்டு நினைவு நாள் என்பதால், மாநாடுபோல் கூட்டம் கூட்டிய தால், ஆதிக்கவர்க்கத்திற்கும் ஆதிவாசிகளுக்கும் இடையில் கட்டுக்கடங்காத வகையில் கலவரம் ஏற்படடது.

இப்போராட்டம் நடந்த போது, ஸ்டேன்ஸ் பாதிரியார் புனேவிலேயே இல்லை. ஆனால், அந்தக் கலவரத்துக்கு ஸ்டேன்ஸ் சுவாமியே காரணம் எனச் சொல்லி, "பகைச்சா'வில் ஏசு சபையினர் கூட்டத்திலிருந்த ஸ்டேன்ஸ் சுவாமியைக் கைது செய்து, ஜாமீனில் வெளியே வராதபடிக்கு "உபா சட்டத்தின்' கீழ் (சட்ட விரோத செயல்பாடுகள் சட்டம்) சிறையில் அடைத்தது. இயேசு சபையைச் சார்ந்தவர்கள், "அவர் இயேசு மார்க்கத்திற்கு எதிராகச்செல்லவில்லை' என வாதாடியும், ஜாமீனில்கூட வெளியிட மறுத்துவிட்டனர்.

ஸ்டேன்ஸ் சுவாமி எண்பதுகளில் "பார்க்கிசன்' நோயினால் பாதிக்கப்பட்டார். சிறைச்சாலையில் பலமுறை நடக்க முடியாமல் தடுக்கித் தடுக்கி விழுந்து உடல் முழுவதும் காயங்கள். அவரால் நீராடவோ, உணவை ஸ்ட்ரா கெண்டி இல்லாமல் உண்ணவோ முடியவில்லை. அதனைப் பலமுறை அவர் சிறையதி காரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. அவர் இரண்டு காதுகளாலும் கேட்கும் திறனை இழந்திருந்தார். இதற்கு முன் அறுவைச் சிகிச்சைகளுக்கும் உள்ளாகியிருந்தார். ஸ்டேன்ஸ் சுவாமியுடன்ஞூஞூ சட்டீஸ்கரின் பெயர் பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், நாக்பூரில் செல்வாக்கு பெற்ற வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேனி பாபு போன்ற 16 செயல் வீரர்கள் ராஞ்சி சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஸ்டேன்ஸ் பாதிரியாரின் பொறிபுலன்கள் செயலற்றுக்கொண்டு வந்த நிலையில் அவரைச் சிறந்த மருத்துவமனையில் சேர்க்காமல், மும்பையிலுள்ள "ஹோலி பேமிலி' மருத்துவமனையில் சேர்த்தனர்.

இடையில் கொரோனாவும் அவரைப் பாதித்திருந்தது.

இந்த நிலையில் இந்தியா விலுள்ள திருச்சபைகள் எல்லாம் அவரை விடுதலை செய்ய வேண்டின. மனித உரிமைக்கழகங்கள் எல்லாம் கருணை மனுவே போட்டன. இந்தியத் தலைவர்களாகிய சசி தரூர், சீதாராம் எச்சூரி, டி. ராஜா, சுப்ரியாசூல், கனிமொழி போன்றோர், பாதிரியாரை விடுதலை செய்ய வற்புறுத்தினர்.

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் டாக்டர் ஜீன் டிரெஸ், வழக்கறிஞர் மிஹிர் தேசாய் போன்றோரும் ஸ்டேன்ஸ் சுவாமியின் விடுதலையை வற்புறுத்தினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் அவர் கைது செய்யப்பட்டதையே கண்டித்து அறிக்கைவிட்டனர். கடைசியில் நீதியும் நேர்மையும் தோற்றன. 5-7-2021 அன்று இருதய வலியால், ஸ்டேன்ஸ் பாதிரியார் அமரத்துவம் அடைந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் ஜாரியா-

பன்சுட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள் பாதிரியாருக்கு சிறப்பான நிறைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.

ராஞ்சிநகரத்தில் பழங்குடி மக்களுக்காகப் பாடுபட்ட, போராடிய போராளிகளுக்கு நடுகல் நட்டிருக்கின்றனர். அந்த நடுகல்லில் இப்பொழுது ஸ்டேன்ஸ் பாதிரியாரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.