பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறை அகம், புறம் என நோக்கப்படுகிறது.
புறத்தின் முதன்மைக் கூறு போர். தேவையின் பொருட்டோ, சுயநலம் சார்ந்தோ போர் நிகழ்தல் என்ற அடிப்படையில் போர் பற்றிய செய்திகளைத் தாங்கிய களஞ்சியமாகத் திகழ்கின்றன சங்க இலக்கியங்கள். பல்வேறு மன்னர்களின் போரியல் வாழ்வு சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளன. எதிரியின் தாக்குதலிருந்து தம்மைக் தற்காத்துக்கொள்ள அமைக்கப்படும் பாதுகாப்பே அரண் எனப் படும். வியக்க வைக்கும் தமிழர்களின் அரண்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தருவது இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கங்களாக அமைகின்றன.
பண்டைத்தமிழரின் போர் அறம்
தமிழருடைய பலவகைப் போர்களையும், அவற்றின் பல படிகளையும் தொல்காப்பியப் புறத்திணையியல் விளக்கிக் கூறுகின்றது. புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் போர்த்துறை பற்றிய பாக்கள் பல உள்ளன. ஒரு நாட்டின்மீது படையெடுக்க விரும்பும் மன்னன், ஆநிரைகளையும், அந்தணரையும், பெண்டிரையும், பிணியாளரையும், குழந்தைகளையும், மகப்பேறு இல்லாதவரையும் அப்புறப்படுத்தல் கருதிப் பறை அறைவிப்பான்.
‘இருபெரு வேந்தர் பொருவது கருதியக் கால் ஒருவர், ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருக எனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாம் என்றும், ‘'மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத் துறையினும் அறமே நிகழும்'’ என்றும் நச்சினார்க்கினியர் (தொல். புறத்திணை. 2, உரை) எழுதுகிறார். திருவள்ளுவர் மறத்துறையிலும் இத்தகைய அன்புச் செயல்கள் இருத்தலை எண்ணியே கீழ்க்காணும் குறளை வடித்துள்ளார்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை
பறை அறைவதன் கருத்தை உணரமாட்டாத ஆநிரைகளைத் தன் ஆட்களை ஏவிக் கவரச் செய்வான். அவ்வீரர், பசுக்களைக் கவர்தலும், ஆநிரைகளுக்குரியவர், அவற்றை மீட்டலும் வெட்சி எனப் பெயர் பெறும். அரசன், வஞ்சி சூடிப் பகைவர் நாட்டின்மீது படையெடுத்துச் செல்லுதலும், படையெடுக்கப்பட்டவன், எதிர்நின்று தாக்குதலும் வஞ்சி என முற்றுகையிடப்பட்ட அரசன் மதிலைக் காத்தலும் உழிஞை என்று சொல்லப்படும். இருபெரு வேந்தரும் உழிஞை குறித்துச் செய்யும் கடும்போர், தும்பை எனப் பெயர் பெறும். போரில் வெற்றி பெறுதல், வாகை எனப்படும். வெட்சி முதலியன பூக்களின் பெயர்கள். அரசரும் வீரரும் அப் பூக்களைச் சூடிக்கொண்டே போர்புரிவர். வெற்றி பெற்றோர், வாகைப்பூ மாலையைச் சூடுவர்.
தமிழரின் போர்க்கருவிகள்
அடார், அரம், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஆயுதக்காம்பு, உருமி, எரிசிரல், ஐயவித்துலாம், கவை, கல்லுமிழிகவண், கல்லிடுகூடை, களிற்றுப்பொறி, கலப்பை, கழு, கற்பொறி, காழெக்கம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கைப்பெயர் ஊசி, கோடாலி சக்கரம், சகடப்பொறி, சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, தூண்டில், நவியம், நாராசம், நூக்கியெறி பொறி, மட்டுவு, மழு, முக்குத்துவாள், முசுண்டி, வட்டக்கத்தி, வல்லயம், வளரி, வளைவிற்பொறி, வாள், வில், வேல், உலக்கல், ஏப்புழை அல்லது சூட்டிஞ்சி, கணையம், குருவித்தலை, தாமணி, கவர்தடி, நீர்வாளி, விதப்பு, புதை, கருவிரலூகம், கழுகுப்பொறி, குடப்பாம்பு, கத நாகம், கரும்பொன்னியல் பன்றி, பனை, அயவித்துலாம், எஃகும் கண்ணாடியும் தைத்த கேடயம், கணிச்சிப்படை, கழிப்பிணிப் பலகை, சதக்களி தள்ளிவெட்டி, சிறியிலை எக்கம், சிறுசவளம், சுழல்படை, தாமணி, தோமரம், நாராசம், பிண்டிபாலம், பூண்கட்டிய தண்டு, பெருஞ்சவளம் மற்றும் விழுங்கும் போன்ற போர்க் கருவிகள் தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துள்ளன ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக, புறநானூற்றின் முன்னுரையில் உ.வே,. சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார். மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோல் மற்றும் புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளைப் பயன்படுத்தியதாகக் கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார். (கந்தையாப்பிள்ளை, தமிழகம், ப, 176)
முதன்மைப் போர்க் கருவிகள்
மேற்கண்ட கருவிகளுள் தொல்காப்பியர் காலம் முதலாகத் தமிழர் மூன்று போர்க் கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவை வாள், வில், வேல் என்பனவாகும். வாள் என்னும் போர்க்கருவி, நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப்படுவதாக இருந்துள்ளது. வில்லும் வேலும் பகைவரைத் தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது. வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியாகப் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளனர். வேல் என்னும் போர்க்கருவி, முருகக்கடவுளின் கருவியாகச் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாகத் தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர்.
அரண்களின் வகைப்பாடு
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பது தமிழர்களின் அரசியல் கொள்கையாகும். அரசனைப் பாதுகாக்கும் காவல்களுள் அரணும் முதன்மையான ஒன்றாகும்.
"முழுமுத லரணம் முற்றிலும் கோடலும்
அனைநெறி மரபிற் றாகும் என்ப" (தொல்.புறம்-10)
இங்கு முழுமுதல் அரணாவது மலையும் காடும், நீரும் அல்லாத அகநாட்டுச் செய்த அருமதில், வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு. அதனை அடுத்த கிடங்கு / அகழி . யவனர் இயற்றிய பல பொறிகளும், வாயிற்கோபுரமும், எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டுள்ளன. தொல்காப்பியச் செய்தியை வழிமொழிவதாக பதிற்றுப்பத்தும் அரண்களைப் பற்றிய குறிப்புகளைத் தருவதோடு, "வானுற ஓங்கிய வனைந்துசெய் புரிசை" என்னும் தொடரில் குறிப்பிடப்படும் புரிசை என்ற சொல் கோட்டையை உடைய பெருநகரைக் குறித்து வந்தது. திருக்குறளிலும் அரண் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
மன்னர்களின் ஆட்சிக்காலம் சிறப்பிடம் பெறவேண்டுமாயின் அவர்களின் பாதுகாப்பு இன்றியமையாததாகும். அவர்களைப் பாதுகாக்கும் அரண்கள் முற்றுகையினாலோ, போரினாலோ, சூழ்ச்சியினாலோ, பகைவர்களாலோ கைப்பற்ற முடியாத சிறப்புடையதாக இருக்கவேண்டும். மதில் அரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலை அரண் என்னும் ஐவகை அரண்களைக் கொண்டு பண்டைத் தமிழர்கள் தமது தலைநகரை யும் நாட்டையும் நாட்டையும் பாதுகாத்தார்கள் என்பது பதிவுசெய்யப்பட்ட வரலாறு. ஒரு நாட்டினைச் சுற்றியோ அல்லது ஒரு கோட்டை யினைச் சுற்றியோ காணப்படும் இயற்கை வளங் களைத் தம் நாட்டின் பாதுகாப்பு அரண்களாக அமைத்துக்கொள்வதும், செயற்கையாகப் பாதுகாப்பிற்காக கையாளும் முறையை செயற்கை அரண்கள் என்பர். ஒருநாட்டின் அரண்களாக மலைகள் (மலையரண்), காடுகள் (காட்டரண்) ஆறுகள், கடல் (நீரரண்) முதலானவை பயன்படுத்தப்பட்டன என்பதைப் பல இலக்கியச் சான்றுகளால் மெய்ப்பிக்க இயலும்.
நீர் அரண்
நீர் அரண் என்பது, புறமதிலுக்கு அப்பால் அகழி, ஆறு, கடல் இவற்றுள் ஒன்று அமைந்திருத்தலாம்.
காட்டரண்
காட்டரண் என்பது, நாட்டின் புறத்தே இயற்கையாகவே அமைந்திருக்கும் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒருவகை அரண் ஆகும். பொதுவாக மலையை அடுத்திருக்கும். மலையில்லாத இடங்களில், அகழிக்கு அப்பால் அமைந்திருக்கும். இது, காவற்காடு எனப் பெயர் பெறும். இது பகைவர்கள் எளிதில் கடந்து வரமுடியாதபடி தடுப்பு வசதிகளுடனும், அவர்களைத் திடீரெனத் தாக்கும் பொறி அமைப்புகளுடனும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு மிளை என்றும் பெயருண்டு.
மிளை
மிளை என்பதை, "கடிமிளை" (புறம்:21),
"அருமிளை" (பதிற்றுப்பத்து, 9), "அருங்குழு மிளை" (மதுரைக்காஞ்சி 64), "வருமிளை" (சிந்தாமணி, 142) என்று பல இலக்கியங்கள் கூறுகின்றன. "கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை' (புறம்.2) எனும் வரிகள் மிக உயரமான அடர்ந்த மரங்களும், முட்புதர்களும் சூரியக் கதிர்கள் உள்ளே நுழையாதபடி பகலிலேயே அச்சத்தைத் தரக்கூடிய அடர் இருள்சூழ்ந்த காடு எனப் பொருள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது காட்டின் பாதுகாவல் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. காவற்காட்டினுள் நுழைய ஆங்காங்கே சிறிய வாயில்கள் காணப்படும். இதற்குப் "புழை" என்று பெயர். போர் தொடங்கும்முன் இவ்வாயில்கள் கவைமுள்ளினால் அடைக்கப்படும். இதனை.
"செலவ சைஇய மறுக்கு எம்பினின்
இனநன் மாச்செலக் கண்டவர்
கவைமுள் ளிற்புழை யடைப்பவும்" (புறம் 98)
"திங்களும் நுழைய வெந்திரப் படுபுழை (புறம் 177)
என்னும் அடிகள் உணர்த்துகின்றன.
மலையரண்
மலையரண் என்பது, பகைவர் பலரால் ஏற முடியாததும், போதிய உணவும் உறையுளும் உச்சியில் உடையதும் ஆகிய தனிக் குன்று. சங்ககாலக் குறுநில மன்னர் பலர், இம் மலையரணைப் பெற்றிருந்தனர். மலைகளையுடைய நாட்டிற்கு அந்த மலைகளாலேயே பெயர் வழங்குவதும் உண்டு. தமிழகத்தின் மிகச்சிறந்த பாதுகாப்பு அரண்களாக கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன. சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை மலைகளில் கோட்டைகளைக் கட்டி ஆட்சி புரிந்துள்ளனர்.
பாரியின் பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகையிட்டபோது பறம்புமலைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை,
"ஒன்றே சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே"
(புறம்-10 9)
"முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு" (புறம்-110)
ஆகிய அடிகள் உணர்த்துகின்றன. முந்நூறு ஊர்களை உடைய பறம்புநாடு பலவிதமான கனிகள், கிழங்குகள், தேன் முதலிய வளங்களை உடையதாக மலை இருந்ததால் பகைவர்களின் தாக்குதலால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமலிருந்ததாக புறநானூறு கூறுகிறது. அளவற்ற வளங்கள் எதிரியிடமிருந்து நாட்டை பாதுகாக்க உதவின என்பதை அறிய முடிகிறது.
நில அரண்
பகைவர் மதிலைப் பற்றாதிருக்கும்பொருட்டு, மதிலுக்குப் புறத்தே வெட்டவெளியாக விடப் பட்டுள்ள கொடுமையான நிலம், நில அரண் எனப் படும். மதிலின் வெளிப்புறத்தில், நெடுந்தூரத்துக்கு இத்தகைய வெளிநிலம் இருக்குமாயின், பகைவர்கள், சேனையோடு தங்கிப் போர்செய்வதற்கு இடமின் றாம். ஆகவே, அவர்கள் இம்மதிலை முற்றுகை செய்து கைப்பற்றிக்கொள்ள முடியாது. ஆதலால், இஃது ஓர் அரணாயிற்று.
மதில் அரண்
மதிலுக்குப் புரிசை, எயில், இஞ்சி முதலிய பல பெயர்கள் உண்டு. புரிதல் என்றால் சூழ்தல் என்று பொருள். நகரை சூழ்ந்து இருப்பதால் புரிசை என்று அழைக்கப்பட்டது. மதில் போரில் வில்வீரர் மதில் மேடைமேல் நின்று மறைந்து அம்பு எய்தற் குரிய இடம் இருந்தமையால் எயில் என அழைக்கப் பட்டது. செம்பை உருக்கி அதை வார்த்துச் செங்கல் துணையுடன் திண்மையாகக் கட்டப்பட்டமையால் இருக்கிக் கட்டப்பட்டதால் இஞ்சி எனப்பட்டது.
"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை''
புறநானூறு, 201.
"செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்''
(கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம்)
மதில்கள் உயரம், அகலம், திண்மை, அருமை ஆகிய நான்கு இயல்பும் உடையனவாய் இருத்தல் வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகும்.
"உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
(திருக்குறள் 743)
மதிலில் இருந்த பொறிகள்
புறமதிலில் இருந்த பொறிகளும், கருவிகளும், உறுப்புக்களும் நிறைந் திருந்தன என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து பெற முடிகிறது.
* வளைவிற்பொறி - வளைந்து தானையை எய்யும் இயந்திர வில்.
* கருவிரல் ஊசும் - கரிய விரலை உடைய கருங்குரங்கு போலிருந்து, சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.
* கல் உமிழ் கவண் - கல்லை வீசும் கவண்.
* வெர்நெய் - உருக்கி இறைக்கப்படுதலால், சேர்ந்தாரை வருத்தும் தன்மையுடையது.
* பாகடு குழிசி - செம்பு உருக்கும் மிடா.
* காய் பொன் உலை - உருகக் காய்ச்சி எறியும்' எஃகு உலையாகும்
* கல்லிடு கூடை - கல்லிட்டு வைக்கும் கூடை.
* தூண்டில் - அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை மாட்டி இழுக்கும் தூண்டில் வடிவான பொறி.
* தொடக்கு - கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி.
* ஆண்தலை அடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்தலை வடிவமான பொறி.
* சுவை - அகழியில் இருந்து பகைவர் மதில்மேல் ஏறினால், அவரை அகழிக்குள் விழுமாறு தள்ளும் இரும்புக் கவை.
* ஐயவித் துலாம் - தலையை நெருக்கித் திருகும் மரங்கள்.
* கைபெயர் ஊசி - மதிலின் உச்சியைப் பற்றுவாரின் கையை நடுங்கச் செய்யும் ஊசிப் பொறி.
* சென்று எறி சிரல் - பகைவர்மேற் சென்று தாக்கும் சிச்சிலிப் பறவை வடிவமாகச் செய்யப்பட்ட பொறி.
* பன்றி - மதிலில் ஏறினவர் உடலைக் கொம்பால் கிழிக்கும் இயந்திரப்பன்றி
* பனை - அடிக்க உதவும் மூங்கில் தடி வடிவமான பொறியாகும்.
இவைதவிர, கழுக்கோல், அம்புக்கட்டு, மறைவாக நின்று அம்பெய்ய உதவும் அறைகள் முதலியனவும் அம்மதில்மேல் இருந் தன. இவையல்லாமல், மதிற்கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில், நிலத்தில் விழவிடும் மரங்கள், மதிற் கதவுக் குத் தடையாகக் குறுக்கே யிடும் மரங்கள், குருவித் தலை என்னும் மதில் உறுப்புக்கள் முதலியனவும் மதுரை மதிலிலும், கோட்டை வாயிலிலும் இருந்தன என்பது தெரிகின்றது.
போர் இவ்வுலகத்திற்குப் புதியது அன்று. எல்லாக் காலங்களிலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றது. போரில்லாத உலகமே இல்லை எனலாம். இவ்வுலகில் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உலக நியதி என்றாற்போல போர் புரிவது உலக இயற்கை என சங்கப் புலவர்கள் கருதியதை,
“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை ”
(புறம். 76)
என்ற இடைக்குன்றூர் கிழாரின் பாடல் மெய்ப்பிக்கின்றது. தனக்குரிய பொருளைப் பிறர் பறிக்க நினைக்கும் பொழுது போர் தோன்றி இருக்கலாம். இயற்கையாகவே வலிமை உடைய ஒருவன், வலிமை குறைந்த மற்றொரு வனை அடக்கி ஆள நினைத்தபொழுதும் போர் தொடங்கி இருக்கலாம். இவை போன்ற இன்னும் பல காரணங்களால் சங்கப்போர்கள் நடைபெற்றுள் ளன. இந்தப் போர்களில் தமிழர்கள் கையாண்ட உத்திகள், படை வலிமை, போர்த்திறம் என்றென்றும் வியப்புடன் நோக்கப்படுகிறது என்பதே வரலாற்று உண்மை.