நீண்ட ஒரு பயணம்... அந்தப் பயணம் ஆரம்பித்து இப்போது எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? வீட்டிலிருப்பவர்கள் அவனை என்றென்றைக்குமாக மறந்து விட்டார்களோ? தாயாவது அவனைப்பற்றி நினைக் காமலிருக்க மாட்டாள். சிறிதும் எதிர்பாராமல் ஒருநாள் வீட்டிற்கு வந்துசேர்ந்தான்.

வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்து மைத்துனனும் நண்பர்களும் தமாஷாகப் பேசி சிரித்துக்கொண்டி ருந்தார்கள். எல்லோரின் விரல்களுக்கு நடுவிலும் எரிந்துகொண்டிருந்த சிகரெட்டுகள் இருந்தன. திடீரென பார்த்ததும் மைத்துனனின் வெளுத்து சிவந்த முகம் இருண்டுபோய் விட்டதோ? உரையாடல் ஒரு நிமிடம் நின்றுவிட்டது. அனைவரின் கண்களும் அவன்மீது பரவிச் சென்றன.

மேஜையின்மீதிருந்த சாம்பல் கிண்ணத்தில் சிகரெட்டின் சாம்பலைத் தட்டியவாறு வெளுத்து அழகாக இருந்த ஒரு இளைஞன், அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு மைத்துனனிடம் கேட்டான்:

"ஹூ ஈஸ் ஹீ..?''

Advertisment

"அன் ஓல்ட் சர்வன்ட்.''

மைத்துனன் ரகசியமாகக் கூறுவதைப்போல பதிலைக் கூறினான். அதைக் கேட்டவாறு அவன் உள்ளே நுழைந்தான்.

வாசலிலிருந்து உள்ளே செல்லும் கூடத்தின் சுவரிலிருந்த நிலைக் கண்ணாடியை அறியாமலே சற்று பார்த்து விட்டான். கண்ணாடியை முகம் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது!

Advertisment

கவலையின் பள்ளத்தாக்கு போன்ற கண் தடங்கள்... வளர்ந்து அலங்கோலமாகக் கிடக்கும் தலைமுடிகள்... செம்பு நிறம் ஏறியிருந்த முடிகள், கயிறு இழைகளைப்போல கிடந்தன. சட்டை கிழிந்தும் அழுக்கு படிந்தும் காணப் பட்டது. பொத்தான் இடாத மார்பின் வழியாக எலும்பின் இருப்பு தெரிந்தது.

தோள் எலும்புகள் தோளில் இரண்டு துருத்தல்களை உண்டாக்கியவாறு கழுத்துப் பகுதியில் காலை நீட்டிக் கொண்டிருந்தன. ஆடை முழுவதும் சேறு படிந்திருந்தது.

வட்ட மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஒருவரோடொருவர் கருத்துகளைக் கூற ஆரம்பித்தார்கள்.

ss2

"தோழர் தாண்டிச் சென்றபோது, ஒரு சாக்கடையைத் திறந்துவிட்டதைப்போல இருந்ததே.. மோகனன்?''

"அஃப்கோர்ஸ்... வாட் எ ட்ரெமான்டஸ் டர்ட்டி க்ரீச்சர்!'' (உண்மை...என்னவொரு அழுக்குப் பிடித்த ஜந்து!) மெல்லிய செம்பு நிற மீசையையும் கையில் தங்கச் சங்கிலியையும் அணிந்திருந்த கண்ணாடிக் காரன் அதைக் கூறினான். அவனின் பெயர்தான் மோகனன். "வந்த உடனே உறவினர் உள்ளே நுழைஞ் சிட்டாரே?''

"இதை அனுமதிக்கக்கூடாது... மிஸ்டர் ராம் மேனன். இவர்களை வீட்டிற்குள் விட்டால், அங்குள்ளவர்களுக்கு தொற்றுநோய் வந்திடும்.''

"உண்மைதான்...''

-மைத்துனன் அந்த அபிப்ராயத்துடன் முழுமையாக உடன்பட்டான்.

"உங்களின் வீட்டில் இப்படிப்பட்ட ஊர் சுற்றிகளுக்குத்தான் அதிக சுதந்திரம் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால்... வந்தவுடனே இவனெல்லாம் உள்ளே நுழையமுடியுமா?''

பலவீனமான இரக்க உணர்வுகொண்ட அவனுடைய மைத்துனன் அதைக்கேட்டு சிரித்தானோ வெட்கப்பட்டானோ?

தாய் கட்டிலில் படுத்திருந்தாள். கட்டிலில் படுத்துக்கொண்டே தொட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஆட்டிக் கொண்டிருந் தாள். தங்கையின் இளைய குழந்தையைப் பார்த்ததும் அவன் பலவற்றையும் நினைக்க ஆரம்பித்துவிட்டான். அளவற்ற பாசத்தின் தாகத்தால், தொட்டிலில் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னங்களை அவன் மெதுவாகத் தடவினான். நெற்றியில் முத்தமிட்டான்.

சுருட்டப்பட்டிருந்த இளம் குழந்தையின் உள்ளங்கைகளை அசைத்தான். அது கண்களைத் திறந்தது. நீல நிறத்திலிருந்த அந்தக் கண்களையே எவ்வளவு நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்!

கொஞ்சம்... கொஞ்சமாக அந்த குழந்தையை அள்ளியெடுத்து நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமென இதயம் ஏங்கியது.

கண்ணாடிப் பாத்திரத்தைத் தொடுவதைப் போல மிகுந்த எச்சரிக்கையுடன் அதைத் தொட்டி லிலிருந்து எடுத்தபோது, தாய் பார்த்துவிட்டாள்.

"யார் அது?''

"நான்தான்... அம்மா''.

தாய் மகனைப் பார்த்தாள். அகன்ற விழி களுடன் தாய் உற்றுப் பார்த்தாள்.

"ரவி... அம்மா ரவி...''

இதயத் துடிப்புகள் கூடிக்கொண்டிருந்தன.

"என் மகனே..'' என்று கூறியவாறு அன்னை கட்டிப் பிடிக்கவில்லை. அதற்கு பதிலாக ஒரு கற்சிலையைப் போல இருந்தாள். இறுதியில் இதையும்கூட கூறினாள்:

"குழந்தையை எழுப்பவேண்டாம். அதில் படுக்க வை..''

குழந்தையைத் தொட்டிலில் படுக்கவைத்தபோது, மேலேயிருந்து தங்கை இறங்கி வந்துகொண்டிருந்தாள்.

"யாரும்மா குழந்தையைத் தொட்டிலிலிருந்து எடுத்தது?''

குரல் முரட்டுத்தனம் உள்ளதாகவும் பெண்மைக்குப் பொருந்தாததாகவும் இருந்தது.

"தங்கச்சி.... நான்தான். உன் ரவி அண்ணன்..''

"ஓ...! கனிவு மனம்கொண்ட ஒரு அண்ணன் வந்திருக்கிறார்! குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், அதைத் துன்பப்படுத்தலாமா?''

"இல்லை... தங்கச்சி. எந்த சமயத்திலும் யாரையும் துன்பப்படுத்த மாட்டேன். வெறுப்படையச் செய்ய மாட்டேன்.''

அப்போது அவனுடைய கண்கள் வைரத் துணுக்குகளைப்போல பிரகாசிக்கவும், கன்னங்கள் ஈரமாகவும் செய்தன.

தங்கையின் மூத்த குழந்தை ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தது. சில்க் ஃப்ராக் அணிந்திருந்த... வெளுத்து தடித்த சிறுமியை அவன் அருகில் அழைத்தான்:

"வா மகளே... உன் மாமா..''

சுருண்ட தலைமுடியைக் கொண்ட... சிவந்த ஆரஞ்ச் சுளையைப் போலிருந்த உதடுகளைக்கொண்ட... கழுத்தில் முத்து மாலை அணிந்திருந்த அந்த கள்ளங்கபடமற்ற சிறுமி அவன்மீது சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் ஒரு காவடியைப்போல குனிந்தவாறு கிழிந்த சட்டையின் பைக்குள்ளிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து நீட்டினான்.

அவள் பொட்டலத்தை அவிழ்த்து, அதிலிருந்த சாக்லேட்களில் ஒன்றை எடுத்து வாய்க்குள் வைத்தபோது, தங்கை கூறினாள்: "அதற்கு கண்ணில்படும் பொருளையெல்லாம் கொடுக்க வேண்டாம். ஏதாவது பாதைக்கருகில் ஈயும் புழுவும் அரித்து நாறியதாக இருக்கும்.''

தொடர்ந்து சிறுமியிடம் கூறினாள்: "வயிறு வலிக்கும், மகளே. துப்பிவிடு...''

"அப்படிச் சொல்லாதே, தங்கச்சி. அது ஈ மொய்த்ததோ புழு அரித்ததோ அல்ல. கண்ணாடி ஜாடிக்குள் வைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு நான் கெட்டுப்போன பொருளைக் கொடுப்பேனா?'' தொண்டை தடுமாறியதால் அவனால் அதிகமாக எதுவும் பேச முடியவில்லை.

சிறுமியின் கையைப் பிடித்தவாறு தங்கை இரண்டாவது மாடிக்கு மேலே கோபத்துடன் படிகளில் ஏறிச் சென்றாள்.

மேலேயிருந்து சிறுமி அழுவது கேட்டது.

சில நிமிடங்களில் சிறுமி இரண்டாவது மாடிக்கு மேலேயிருந்து ஈரமான கண்களுடன் இறங்கிவந்தாள்.

"வேண்டாம், மாமா. அம்மா அடிப்பாங்க'' சாக்லேட் பொட்டலத்தைக் காட்டியவாறு அவள் தழுதழுத்த குரலில் கூறினாள்.

"மாமாவுக்காக ஒண்ணாவது சாப்பிடு மகளே!''

அவன் இடறிய வார்த்தைகளை உச்சரித்தான்.

அவள் ஒரு சாக்லேட்டை விழுங்கினாள். பொட்டலத் திலிருந்த மீதத்தை திருப்பிக் கொடுத்தாள்.

இரவில் தாயும் தங்கையும் ஒருவரோடொருவர் உள்ளே படுத்தவாறு பேசிக்கொண்டிருந்ததை, கூடத்தில் படுத்துக்கொண்டு மிகவும் தெளிவாகக் கேட்டான்.

"இருந்தாலும்... நீ அதை அவனிடம் சொல்லியிருக்கக் கூடாது. ஒரு தடவை பார்க்கணும்னு ஆசைப் பட்டு வந்திருப்பான்.''

"எனக்கு அது பிடிக்கல அம்மா. இனி எத்தனை நாட்கள் தங்கியிருப்பார்னு யாருக்குத் தெரியும்? இறுதியில் இங்கே தங்கக் கூடாதுன்னு முகத்தைப் பார்த்து சொல்லவேண்டிய நிலை உண்டாகும்.

"அவனிடம் அதைச் சொல்லவேண்டிய நிலை வராது. அவன் அறிவுள்ளவன். பார்த்தே தெரிஞ்சுக்குவான்.

உனக்கு பயந்துதான் அவனிடம் இதுவரை ஒரு வார்த்தைகூட நான் பேசாமலிருந்தேன். அவன் என்னுடைய உயிராக இருந்தான். அவனுக்கு நானும் உயிராக இருந்தேன்.

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவன் நான்கு நாட்கள் இங்கு இருக்கட்டும் அம்புஜம். இங்கு இருக்கும் அனைத்து செல்வத்திற்கும் மூலகாரணக்காரனே அவன்தான் மகளே! அதை மறந்துடக்கூடாது. அனைத்துமே அவனுக்குச் சொந்தமானவையாக இருந்தன. எனினும், அவன் அவை எதுவுமே வேண்டாம்னு வச்சிட்டான்.''

"வேணும்னா... நான்கு நாட்கள் தங்கிக்கொள்ளட்டும்.

ஐந்தாவதொரு நாள் சம்மதிக்க மாட்டேன். விஷயம் என்ன என்பதை முன்கூட்டியே சொல்லிடுறேன். இங்கு பலரும் வருவாங்க. அவர் ஏதாவது சொல்லிடலாம்.

தொந்தரவு... சீக்கிரம் போய்விட்டால் போதும்.''

"அவன் போயிடுவான். நீ கவலைப்பட வேண்டாம்.''

அவனைப் பற்றிய அந்த ரகசிய உரையாடல் இரவு நீண்டநேரம் நீண்டு நின்றுகொண்டிருந்தது.

ஒரு பாயும் தலையணையும் கூடத்தில் கிடைத்த காரணத்தால் சற்று தலையைச் சாய்க்க முடிந்தது.

அனைத்தையும் நினைத்துப் பார்த்தான்... நல்ல ஒரு பணியை வேண்டாமென ஒதுக்கிவிட்டு சொந்த ஊருக்கு வந்தான்.. வந்திருக்கவேண்டாமென தோன்றியது. தந்தை இறந்துவிட்டார். பிறகு... குடும்பத்தைப் பார்க்கவேண்டியது அவன்தான். தங்கையும் தாயும் தனியாக இருக்கிறார்களே? உதவிக்கு யார் இருக்கிறார்கள்? எல்லா அதிர்ஷ்டங்களையும் வீசியெறிந்துவிட்டு சொந்த ஊருக்கு வந்தான். தந்தை இறந்தபோது, சம்பாதித்து வைத்திருந்தது கொஞ்சம் கடன்தான். கடன்களை அடைத்தான். இன்னொரு வரின் பிடியிலிருந்த நிலத்தை வாங்கினான். கஷ்டப் பட்டான்.

ஐந்தாறு வருடங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்த காரணத்தின் விளைவாக பழைய செல்வங் களை மீட்டெடுத்தான். வீட்டைப் புதுப்பித்துக் கட்டினான்.

அழகானதாகவும் நவநாகரீகமாகக் காட்சியளிக்கக் கூடியதுமான ஒரு முன்பகுதியைக் கட்டினான். கண்ணாடி போட்ட சாளரங்கள்... மின்சார விளக்குகள்... வானொலி...

அனைத்தையும் சொந்தத்தில் கொண்டுவந்தான்.

சந்தோஷமான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளும் அங்கிருந்தன.

அவையெல்லாம் அவனுடைய சொந்த சம்பாத்தியங்கள்... தன்னுடைய உயிராக இருந்த தங்கையின் எதிர்காலத்திற்காக, திருமணத்தைக்கூட வேண்டாமென ஒதுக்கிவைத்தான். அனைத்து பொறுப்புகளும் முடியட்டும்.. அப்போது பார்க்கலாம்...

தங்கையின் திருமணம் முடிந்தது. அழகான தோற்றத்தைக்கொண்டவனும் நன்கு படித்தவனுமாக இருந்த ஒருவனுக்குக் கொடுத்தான். சில நாட்கள் கடந்தன. அப்போது தோன்றியது...

மீண்டும் சொந்த ஊரைவிட்டுக் கிளம்பிவிட வேண்டுமென... திருப்தியற்ற இந்த வாழ்க்கையால் என்ன பயன்? ஒருநாள் சொத்து முழுவதையும் தாய், தங்கை ஆகியோரின் பெயர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, கையை வீசிக்கொண்டு கிளம்பி விட்டான்.

காற்றைப்போல சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும்...

வெளிச்சமாக இருக்கும் காற்றை சுவாசிக்க வேண்டும்.. நடந்து இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும்...

குறைந்தபட்சம்.. பாரதத்தையாவது...

பயணம்! நீண்ட... ஒருநாள் வீட்டிற்கு சிறிதும் எதிர்பாராமல் திரும்பிவந்தான். இப்போது அனைத் தையும் நினைத்துப் பார்க்கவேண்டிய நிலை வந்து விட்டது. பரவாயில்லை...

இதற்காக அந்த அளவிற்கு கவலைப்பட வேண்டுமா?அறிந்துகொண்டே அப்படி ஆகிவிட்டது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கூடத்தில் இருந்தது. பலவகைப்பட்ட போஸ்கள்... அனைத்திலும் அவன் இருந்தான். கல்லூரி யூனியனின் தலைவன்... மலையாள சமாஜத்தின் செயலாளர்... ரெக்ரியேஷன் க்ளப்பின் இணை செயலாளர்... சோஷியல் லீக்கின் கேப்டன்...

அவனுடைய பெயர் அனைத்திலும் இருந்தது. கல்லூரி யூனியன் ஸ்பீக்கராக ஆன காலத்து புகைப்படத்தைப் பார்த்தபோது, ஆச்சரியம் உண்டா னது. அவன் எந்த அளவிற்கு அழகானவனாக இருக்கிறான்!

நீண்டு மலர்ந்த கண்கள்... சிந்தனை வெளிப்படும் நெற்றி... ப்ரில்க்ரீம் தேய்த்து மினுமினுப்பாக்கிய முடிச்சுருள்... அழகான கருத்த மீசை... அந்த இளைஞன் இறந்துவிட்டான். பல வருடங்களுக்குமுன்பே... ஒரு நெடிய பெருமூச்சுடன் அந்த புகைப்படத்திலிருந்து கண்களை எடுத்தான். மலையாள சமாஜத் தின் க்ரூப் புகைப்படத்தில் பத்மினி இருக்கிறாள்.

அந்த புகைப்படத்தையே சிறிது நேரம் பார்த்தவாறு படுத்திருந்தான்.

"பத்மினீ... உனக்கு என்னைப் பற்றி ஞாபகத்தில் இருக்கிறதா?''

இரண்டு பக்கங்களிலுமாக வாரி மடித்துவிடப்பட்ட அந்த முடிச்சுருள் அவனை எந்த அளவிற்கு ஈர்த்தன! பல வருடங்களுக்குமுன்புதான் அளித்த ரத்த சிவப்பு ரோஜாதான் அந்த முடிச் சுருளுக்குள்ளிருந்துகொண்டு புன்னகைக்கிறதோ? ரத்த சிவப்பு நிற ரோஜாவைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் இப்போதும் பத்மினி யைப் பற்றி நினைப்பதுண்டு.

பத்மினி அவனை வழிபடவும் காதலிக்கவும் செய்தாளே! அவனைப் பார்க்கும்போது கண்கள் பிரகாசிக்கவும் கன்னங்கள் சிவக்கவும் செய்தன. அப்போதெல்லாம் காதலை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

அதிகபட்சம் அலட்சியமாக சற்று பார்ப்பான். அப்போது தலையைக் குனிந்துகொண்டு பத்மினி நிற்பதைப் பார்க்கலாம்.

ப்ரின்ஸிபல் குவார்ட்டர்ஸின் பூந்தோட்டத்தில் பறித்தெடுத்த பன்னீர் மலரை கைகளில் கொடுக்கும் போது, பல நேரங்களில் கூறவேண்டுமென்ற விருப்பம் இருந்தது.

"பிரியத்திற்குரிய பத்மினீ... நான் உன்னைக் காதலிக் கிறேன். மிகவும் அதிகமாககக் காதலிக்கிறேன்.''

ஆனால், அவனுடைய மாணவ வாழ்க்கையின்போது ஒரேயொரு பெண்ணிடம்கூட இன்பமாக இருக்கலாம் என்று சென்றதாக ஞாபகத்தில் இல்லை. அவனிடம் மட்டும் பேசவும், வாசிப்பதற்கு ஆங்கில புத்தகங் களைக் கேட்கவும் செய்திருந்த அந்த இளம்பெண்ணின் இதயத்தில் அவன் எப்போதும் நிறைந்து நின்று கொண்டிருக்கிறான் என்பதை அந்த முக உணர்ச்சியும் நடவடிக்கைகளும் வெளிக்காட்டின.

எதிர்காலத்தில் பெரிய ஒரு ஆளாக கட்டாயம் வருவோம் என்ற நம்பிக்கை மனதில் இருந்ததால், யாரிடமும் நிலை தடுமாறி எதையும் கூற விரும்ப வில்லை. அனைத்து அழகிகளிடமிருந்தும் விலகி விலகி சென்றுகொண்டிருந்தான்.

அந்த விலகிச் செல்லும் ஒரேயொரு குணம் மட்டுமே பலரும் அவனை அந்தக் காலத்தில் அமைதியாக வழிபடுவதற்கான சூழலை உண்டாக்கிக் கொடுக்கவும் செய்தது.

கல்லூரியிடம் இறுதி விடை பெற்றுவிட்டு வெளியே வந்தபோது, கிருஷ்ணன் நாயரின் பெயரிலிருந்த கேட்டிற்கருகில் ஆட்டோக்ராஃப் புத்தகத்துடன் வந்தாள். எதுவுமே பேசாமல் முகத்தை குனிந்துகொண்டு ஆட்டோக்ராஃப்பை முன்னால் நீட்டினாள். ஆட்டோக்ராஃப்பை கைகளிலிருந்து வாங்கியபோது, சரீரம் மின்சக்தி பாய்ந்ததைப்போல நடுங்கியது.

பத்மினியின் பேனாவை வாங்கி, எழுதிக் கொடுத்தான்.

"எதுவுமே எனக்கு வேண்டாம். மென்மனதில் என்னைப் பற்றிய நினைவு மட்டும் போதும்.''

அந்த வரிகளை வாசித்தபோது, அவளுடைய முகம் வாட ஆரம்பித்தது.

கண்ணீரை அணிந்த செந்தாமரையைப் போன்றிருந்த முகத்தைப் பிடித்து உயர்த்தி, இதய வேதனையுடன் கூறவேண்டுமென தோன்றியது.

"என் இதயத்தின் துடிப்பே..! நான் உன்னை இதயப்பூர்வமாகக் காதலிக்கிறேன்.''

தேம்பி வெடிக்கும் மனதுடன் இருவரும் விடைபெற்றுக்கொண்டு பிரிந்தார்கள். அந்தச் சம்பவம் நடைபெற்று இப்போது வருடங்கள் எத்தனை ஆயின? அனைத்தும் நேற்று நடைபெற்றதைப்போல தோன்றுகிறது.

அதிகாலைப் பொழுதின் வெளிச்சம் பூமியில் பதிவதற்குமுன்பே எழுந்தான். தூங்கிக்கொண்டு படுத்திருந்த தாயின் காலைத்தொட்டு வணங்கி முத்த மிட்டான். "என் தாயே... உங்களின் மகனான நான் போகிறேன். இனி திரும்பி வரமாட்டேன். எந்தக் காலத்திலும்..''

தங்கையின் மூத்த மகள், தாயை இறுக அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். நீர் ஊற்றி மெலிந்த சாக்லேட் பொட்டலத்தை அவளுடைய கையில் வைத்தான். "மகளே.. மாமா போகிறேன். நீ நல்லவளா ஆகணும். உன் சகோதரன்மீது அன்பு வைக்கணும்.'' அவளுடைய பூங்கன்னத்தில் இறுதியாக ஒரு முத்தத்தைத் பதித்துவிட்டுத் திரும்பி நடந்தான்...

பொழுது புலர்வதற்குமுன்பே நகரத்தை அடைந்து விட்டான். குளிர்ந்த காற்று எலும்புகளின் வழியாக வேகமாக நுழையும்போது முதலில் பார்த்த தேநீர் கடைக்குள் நுழைந்தான். அந்த தேநீர் கடைக்குள் நுழைந்தபிறகுதான், இடத்தைப் பற்றிய நினைவுவந்தது.

"ஹோட்டல் வியன்னா'வின் இடத்தில் முன்பு ஒரு சிறிய தேநீர் கடை இருந்தது.

நகரத்திலிருந்த கல்லூரியில் அவன் படித்துக் கொண்டிருந்தான். கல்லூரிக்கு முன்னாலிருந்த அந்த தேநீர் கடை அந்தக் காலத்தில் நகரத்திற்கு ஒரு அவமான மாக இருந்தது. அப்போதைய ஹோட்டலின் உரிமையாளர் கேசவன் நாயரா அந்த பணப் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருப்பது? அந்தக் காலத்தில் கேசவன் நாயரின் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு இருந்தவர் களே ஆறுபேர்தான். என்னவொரு மாற்றம்!

நல்ல உடலமைப்பைக்கொண்ட ஒரு மனிதர். வாயில் கொஞ்சம் ஆடிக்கொண்டிருக்கும் பற்களும்... இப்போது முப்பத்திரண்டு பற்களும் தங்கத்தால் ஆனவை. கழுத்திலும் கைகளின் விரல்களிலும் நகைகள்... ஆண்கள் பத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிவது ஈர்க்கக்கூடியதா? கேசவன் நாயரின் எதிர்காலத்தை நினைத்துத்தான் அன்று ஆறு பேரும் அங்கு உணவு சாப்பிட்டார்கள்.

இன்றோ? இன்றைய "ஹோட்டல் வியன்னா'விற்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் சவுக்கு மரத்தின் கிளைகளில் அப்போது நிறைய பூக்கள் இருந்தன. இப்போது பூக்கள் இல்லை.

"பிரியத்திற்குரிய கேசவன் நாயர்... நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள். எத்தனை முறை முயற்சி செய்தாலும், உங்களால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. உங்களிடமும் என்னிடமும் அந்த அளவிற்கு அதிகமான மாற்றங்கள் உண்டாகி விட்டிருக்கின்றன!''

பணத்தை எண்ணி கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் நகரத்தின் பல பகுதிகளின் வழியாகவும் நடந்தான். நேரம் ஒன்பதரையாகிவிட்டது. தேக்கின்காடு மைதானத் தின் எந்த மூலையில் நின்று பார்த்தாலும் நகராட்சி கடிகாரத்தில் நேரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

நேராக முன்னால் தெரிவதுதான் கல்லூரி. அந்த கல்லூரியில்தான் அவன் படித்தான். இந்த ஒன்பதரை மணிக்கு... என்னவெல்லாம் விசேஷங்கள் இல்லாமற் போயின?

மகளிர் கல்லூரிக்கு இளம்பெண்கள் வரிசை வரிசையாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மலர்ந்து வாசனையைப் பரப்பும் பல வண்ணங்களைக் கொண்ட மலர்களின் ஒரு அற்புத உலகம்... இதில் பத்மினி இருப்பாளா? இருக்கமாட்டாள். இப்போது பத்மினி ஒரு மாணவி இல்லையே! அவள் ஏதோவொரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுவதாகக் கேள்விப்பட்டான்.

வெளுத்து தடித்து அழகாக இருந்த ஒரு இளம்பெண்...

அவளுடைய அழகான சினேகிதியின் செவியில் ரகசியமாக ஏதோ முணுமுணுத்தாள். அந்த அழகான பெண் வேகமாக நடந்தாள். சிறிது நேரம் சென்றதும் திரும்பிப் பார்த்தாள். அவள் ஒருவேளை தவறாக நினைத்திருக்கலாம்... பைத்தியமாகவோ வேறு யாராகவோ இருக்கலாமென..

நகரத்தில் இந்த இருவகை மனிதர்களையும் அதிகமாக பார்க்கலாம். இல்லாவிட்டால்.. அவர்களுக்கு எதிரே வந்துகொண்டிருக்கும் அந்த இரண்டு வெள்ளை பேன்ட்களைப் பற்றிய கமென்ட்டாக இருக்குமோ? காதலிகள் கல்லூரிக்குப் போகிறார்கள். காதலர்கள் பணி செய்யும் இடங்களுக்கும்...

சகோதரிகளே...

பைத்தியமல்ல...

திருடனல்ல...

உங்களைப்போல நானும் படித்தவன்தான்...

பட்டம் பெற்றவன்தான். விதி இப்படி ஆக்கிவிட்டது. சுய உணர்வுள்ளவர்கள் இவ்வாறு கூறினால்...

லெக்சர்ஸ் ஹாலிலிருக்கும் சாளரங்களின் கம்பிகளைப் பிடித்தவண்ணம் சில இளம்பெண்கள் சாலையைப் பார்த்தபடி நின்றிருக்கின்றனர். இளமையின் பெட்டகங்கள்... அவர்களின் கண்களில் என்னென்ன கனவுகளெல்லாம் அலைமோதிக் கொண்டிருக்கின்றன!

அந்த லெக்சர்ஸ் ஹா-ல் அவன் எத்தனை முறை பேசியிருக்கிறான்! மேடையில் ஏறிவிட்டால், அன்று என்னவொரு ஆவேசம்!

பண்டிதரான ஒரு பேராசிரியர் அந்தக் காலத்தில் கல்லூரியில் இருந்தார். சொற்பொழிவு முடிந்து மேடையைவிட்டு இறங்கும்போது, அவர் அவனுக்குக் கைகொடுத்தார்.

நகரப் பேருந்து அருகில் தாண்டிச் சென்றபோது, பேருந்துக்குள்ளிருந்த ஓட்டுநர் மோசமான வார்த்தைகளால் திட்டுவது காதில் விழுந்தது. "ராஸ்கல்.. நசுங்கி சாகணும்..''

பேருந்திற்குள் கலவரமடைந்த கண்களுடன் பார்த்தான். கல்லூரி வாச-ல் இறங்கவேண்டிய இளைஞர்களும் இளம்பெண்களும் ஒன்றுசேர்ந்து சிரித்தார்கள். கவலை வழிந்துகொண்டிருக்கும் கண்களைக் கொண்டிருந்த ஒரு பெண் பேருந்தி-ருந்து அங்கு இறங்கினாள்.

அவளுடன் சேர்ந்து சில இளம்பெண்களும் இளைஞர்களும்... மற்ற அனைவரும் அப்போதும் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

நீங்கள் என்ன காரணத்திற்காக இந்த அரிய வேளையில் சிரிக்கவில்லை? அழகான உங்களுடைய நீலநிற கண்களைச் சுற்றி எங்கிருந்து வந்தது இந்த ஒட்டுமொத்த வேதனையும்? நைலான், வெல்வெட் ஆகியவற்றின் காலத்தில் நீங்கள் என்ன காரணத்திற்காக விலைகுறைந்த இந்த தாழ்ந்த தரத்தைக் கொண்ட வெண்ணிற ஆடையை அணிகிறீர்கள்? யாரையாவது காத-த்தீர்களா? காதல் என்ற பலவீனத்தின் பெயரில் நீங்கள் கவலைப்படுவதால், அனைவரின் துக்கத்தையும் பார்த்து கவலை கொள்ளலாம்.

இல்லாவிட்டால்... கண்ணாடி ஜாடி நொறுங்கு வதைப் போன்ற சத்தத்தைக்கொண்ட அந்த அனைவரின் சிரிப்பிலும் நீங்களும் பங்குபெற்றிருக்கலாமே! கவலையுடன் என்னையே ஏன் விரிந்த கண்களால் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்?

பத்மினி என்பதா பெயர்? சொந்த ஊர் மூக்குத் தலையா? உங்களுடைய வீட்டிற்கு முன்னால் செந்தாமரை விரிந்து நிற்கும் நீல நீர்நிலை இருக்கிறதா?

மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகி எத்தனை காலம் ஆகிவிட்டது?

கதாசிரியரான ரவீந்திரநாத மேனவனைத் தெரியுமா? அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கிருக்கிறது. ஆனால், அது எதையும் உங்களிடம் வெளிப்படையாகக் கேட்க என்னால் முடியாது.

அனைவருக்கும் தெரியும்படி ஒரு ஆண் ஒரு பெண்ணை சாலையில் வைத்து ஆக்கிரமித்தான் என்று பத்திரிகையில் வரும். இன்று தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் வெறுமொரு வழிப்போக்கன்...

அதனால், கவலைப்பட மட்டுமே உரிமை இருக்கிறது. விடை கேட்கிறேன். மனிதன் பூமியில் பிறந்ததே இறுதி விடை கூறுவதற்குத்தானே! எதிர் பகுதியி-ருந்து பிண ஊர்வலம் வருகிறது.

மொத்தத்தில் எட்டோ பத்தோ பேர் இருப்பார்கள். இறுதி விடைபெற்றுச் செல்லும் ஏதோவொரு புனித ஆன்மா... சிறிய ஒரு பிண மஞ்சம்... ஒரு மரச் சிலுவை... கருப்பு நிற கொடி... அந்த கருத்த கொடியின் மீது ஆடிக் கொண்டிருக்கும் ஒரு மணி இருக்கிறது. அந்த மணியின் ஓசையைக் கேட்டபோது, இதயத்திற் குள் எல்லையற்ற யுகங்களின் வேதனை மிதந்து வருவதைப்போல தோன்றியது.

எனினும், உயிருடன் இருப்பவர்களவிட மரணத் தைச் சந்தித்தவர்கள்தான் அதிர்ஷ்டசா-கள்! இவ்வளவு சிறிய பெட்டிக்குள் இறுதி ஓய்வெடுக்கும் நண்பரே... இவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு இந்த பூமியின் வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டதா?

தங்கச் சிலுவை இல்லை... சில்க் குடை இல்லை... இசைக்கும் வாத்தியங்கள் இல்லை... பாதிரியார் இல்லை.. அரசியல் தலைவர்கள் இல்லை. மரணத்தின் ஆழமான அமைதி மட்டுமே பின்தொடர்வதற்கு இருக்கிறது.

கவலையில் மூழ்கியிருக்கும் அந்த எட்டோ பத்தோ பேருக்குப் பின்னால் அவனும் நடந்தான். இறுதிச் சடங்குகளுக்குப்பிறகு அந்தச் சிறிய பிணப் பெட்டியை அடக்கம் செய்யும் இடத்திற்குக் கொண்டுசென்றார்கள்.

இரண்டடி நீளத்தி-ருந்த குழிக்குள் பெட்டியை இறக்கினார்கள். மண்ணால் மூடுவதற்குமுன்பு முருங்கைப் பலகையின் இடைவெளி வழியாக பிணத்தைக்கொண்டு வந்தவர்களுடன் சேர்ந்துவந்த அந்த பெரியவர், ஒரு வெண்ணிறப் பூங்கொத்தைத் திருகினார்.

பாதிரியார் இதை ஏன் தடுக்கவில்லை? அவன் அந்த முகத்தைத் தெளிவாக பார்த்தான். வெளுத்த முகத்தைக்கொண்ட மெலிந்த ஒரு குழந்தை... பளிங்கு குண்டைப் போலிருந்த கண்கள் திறந்திருந்தன.

தாத்தாவின் இறுதி மலரின் இதழ்கள் தலையில் விழுந்ததும், தூக்கத்திலிருந்து கண் விழித்திருக்குமோ?

வந்தவர்கள்... வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்று பிரிந்தார்கள். அந்த பேரமைதியில் தன்னுடைய இறுதி அஞ்சலியாக சிவந்த அலரிப் பூவின் ஒரு கொத்தை அந்த குழியின்மீது வைத்துவிட்டு, திரும்பி நடந்தான். அப்போது எந்தச் சமயத்திலும் உணர்ந்திராத ஒரு நிம்மதி உண்டானது.

இறந்தவர்களுக்காகவாவது பூக்களை ஆசைப் படலாம் அல்லவா?