நான் யார் நான் யார் நீயார்?” -என்ற பாடல் வரிகள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, தான் யார் என்பதை நிரூபித்துச் சென்றிருக்கிறார் புலவர் புலமைப்பித்தன். அவருடன் ஏறத்தாழ 12 ஆண்டுகள் பயணித்தவரான அவரது தனிச்செயலாளரும் வழக்கறிஞருமான குணசேகரன், புலவரின் பொன்னான நினைவுகளை ’இனிய உதயம்’ வாசகர்களிடம், நெகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 10:50 மணி.

திருப்பூர் சென்றிருந்த எனக்கு, ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களின் அலைபேசியில் இருந்து எனக்கு அழைப்பு.

pp

Advertisment

எப்போதும் போன்ற அழைப்பு தானே என்று நினைத்து, மகிழ்ச்சியோடு, ஐயா காலை வணக்கம் எப்படி இருக்கிறீர்கள்? உடல்நிலை நன்றாக இருக்கிறதா? என்று கேட்டேன்.

ஆனால் எதிர் முனையில் நான் கேட்ட அவரது குரலில் இருந்த தளர்வும், தடுமாற்றமும் என்னை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்தது. எப்படிப்பட்ட கம்பீரக் குரலுக்குச் சொந்தக் காரர் இப்படி பேசுகிறாரே என்று மிகவும் அதிர்ச்சி அடைந்த தருணம் அது.

அப்போது, குணா என்னால் நடக்க முடியவில்லை! பேச முடியவில்லை !நீ உடனடியாக கிளம்பி வா. வந்து என்னை மருத்துவமனையில் சேர்க்கனும். நீ தான் கூட இருக்கனும். நீ உடனே கிளம்பி வா. சீக்கிரம் வா!” என்றார் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க. உடனே டிக்கெட் புக் செய்து அன்றிரவே திருப்பூரில் இருந்து சென்னைக்குக் கிளம்பினேன்.

Advertisment

*

சமீபகாலமாக புலவர் உடல் தளந்திருந்தார். அதனால் மனதளவிலும் அவருக்குத் தளர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரைத் தொடர் எழுத வைத்தது நக்கீரன். ’நாயகன்’ என்ற தலைப்பில் 60 கட்டுரைகளை அவர் புத்துணர்ச்சி பெற்றவராக உருவாக்கினார். அவர் சொல்லச் சொல்ல நான் அதை எழுதினேன். அந்தத் தொடர் மூலம், தனது பெருமிதத் திற்குரிய வாழ்க்கையை, அவரே திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை அவருக்கு நக்கீரன் வழங்கியிருந்தது. அதனால், மீண்டும் புத்துணர்ச்சி பெற்றார். பழைய நினைவுகளை எல்லாம் அதில் திரட்டி, பாடல்களின் அனுபவங்களையும் சுவையாகப் பதிவுசெய்தார்.

dd

நக்கீரன் ஆசிரியர் ஆசிரியர் மீதும், அவரது துணிச்சல் மீதும் புலவருக்கு அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது நக்கீரன் ஈழத் தமிழர்களின் இதயம் கவர்ந்த இதழ் என்றும்... அதில் தனது தொடர் வருவது பெருமிதத்திற்குரியது என்றும் புலவர் உளம் மகிழ்ந்தார். அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக அந்தக் கட்டுரைத் தொடர் வெற்றிபெற்றது. அவற்றைப் படித்துவிட்டு பலரும் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்தினர். அவரது கடைசி நாட்களில் நக்கீரன் மூலம் அதிகம் நட்புறவுகள் வாய்க்கப்பெற்றார். அந்தத் தொடர்ந்தான் அவர் உயிரை இவ்வளவு நாட்கள் நீட்டித்தது என்றும் சொல்லலாம்.

நக்கீரனில் புலவர் எழுதிய தொடர், நாயகன் என்ற தலைப்பிலேயே நூலாக வந்தபோது, அந்தப் புத்தகத்தைத்தடவித்தடவிப் பார்த்து ரசித்தவர்... இது காகிதமல்ல. என் கடந்த காலம் என்று நெகிழ்ந்தபடி, அந்த நூல் ஒன்றில் தன் கையெழுத்தைப் போட்டு, எனக்குப் பரிசாக அளித்தார். அதுதான் அவர் போட்ட கடைசிக் கையெழுத்தாகிவிட்டது. அவரது நிலைவுகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

*

மறுநாள் 25 ஆம் தேதி காலை நான் அவரது வீட்டிற்குச் சென்றபோது, என்னைப் பார்த்த உடனேயே அவரது முகத்தில் ஒரு புன்னகை.

”வந்துட்டியா குணா ” என்று ஆர்வம் பொங்கக் கேட்டார்.

” வந்துவிட்டேன் அய்யா” என்று சொன்னேன்.

குளித்துமுடித்து எப்போதும் போலவே இருவரும் ஒன்றாக அமர்ந்து காலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு மருத்துவமனைக்கு கிளம்பத் தயாரானோம்.

ஆனால் ஏனோ தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது. தாமதித்துக்கொண்டே இருந்தார். வீட்டையும் வீட்டின் நினைவுகளையும் விட்டுவிட்டு அவரால் எளிதில் கிளம்ப முடியவில்லை.

அவராக என்னை அழைத்து, ” வா குணா, நாம ஒன்னா படம் எடுத்துக்குவோம்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. என்னை சோபாபில் இழுத்து தன் அருகே அமரவைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதுதான் அவர் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்.

ஒருவழியாக மதியம் 2 மணி அளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள சாந்தி மருத்துவமனைக்குச் சென்றோம். கிளம்பும் முன் தன் வீட்டை அப்படி ஆசை தீர ஏக்கமாகப் பார்த்தார். தான் திரும்பி வரமாட்டோம் என்று அவருக்கு தெரிந்துவிட்டது போன்ற, ஒரு பரிதவிப்பு அவரிடம் இருந்தது.

iii

சாந்தி மருத்துவமனையின் மருத்துவரான திரு.டி.வி. சீனிவாசனைச் சந்தித்தோம். அவர் மனிதாபிமானம் மிக்க மருத்துவர். அவரது ஆலோசனையின்படி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் புலவரய்யா.

சில பரிசோதனைகள் முடிந்த பின்னர், புலவர் அவர்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ரத்தம் செலுத்த வேண்டும் என்று கூறினர். அடுத்த நாள் அதாவது 26 ஆம் தேதி ஒரு யூனிட் இரத்தமும் மறுநாள் 27 ஆம் தேதி ஒரு யூனிட் இரத்தமும் செலுத்தினார்கள்.

27 ஆம் தேதி இரத்தம் செலுத்தி முடித்தபோது நள்ளிரவு 2 மணி இருக்கும்.

”குணா இங்கே வா...” என்று என்னை அழைத்து கட்டிலில் அருகில் அமரவைத்துக்கொண்டார்.

”நான் உன்னை எனது உதவியாளராக எப்போதும் நினைத்ததில்லை! எனது மகனாகவே உன்னை நினைத் தேன்” என்றார்.

” ஐயா, நானும் உங்களை என் தந்தையாகத்தான் நினைத்து இத்தனை ஆண்டுகள் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

அப்போது ஐயா அவர்கள் ”நீ ராஜா இடத்தில இருக்க” என்று சொன்னார்.

அவர் குறிப்பிடும் ராஜா, அய்யாவின் மகனான மறைந்த ராஜா என்ற புகழேந்தி. ”இந்த முறை நீ அவசரப்பட்டு ஊருக்குப் போய்டாத .... எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே நீ எனக்கு செய்ய வேண்டிய சில கடமைகள்... காரியங் கள் இருக்குது. அதை ராஜா இடத்திலிருந்து நீ செய்துட்டுத் தான் ஊருக்குப் போகனும்” என்றார் தீர்க்கமாக.

”ஐயா இப்போது நேரம் நள்ளிரவு 2 மணி. இந்த நேரத்தில் ஏன் இப்படி பேசுகிறீர்கள் ? உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. நீங்க நல்லா இருக்கீங்க. இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம்” என்று கூறினேன்.

”இல்ல குணா. எனக்கு சொல்லணும் போல தோணிச்சு. அதான் உன்கிட்ட சொன்னேன்” என்று கூறினார் புலவர்.

”மனசுல எதையாவது போட்டுக் குழப்பிக்கிட்டே இருக்காம, நல்லா தூங்குங்க. காலையில பேசிக்கலாம்” என்று சொன்னேன்.

அதன் பின்னரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பல விஷயங்களை இருவரும் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு தான் நாங்கள் தூங்க ஆரம்பித் தோம்.

பின்னர் 28 ஆம் தேதியும் 29ஆம் தேதியும் டாக்டர் சீனிவாசன் அவர்களின் தொடர் சிகிச்சையில் ஓரளவு உடல்நிலை தேறி நன்றா கவே இருந்தார்.

29 ஆம் தேதி நள்ளிரவு திடீரென்று சளி அதிகமாகி, விடிய விடிய தொடர் இருமல் ஏற்பட்டது. அன்று இரவு முழுவதும் இருவருமே தூங்கவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு உடல்நிலை தொந்தரவு ஏற்பட்டு விட்டது.

30 ஆம் தேதி காலையில் சில மருந்து மாத்திரைகள் கொடுத்த பிறகு ஓரளவு சுமாராக இருந்த ஐயாவின் உடல்நிலையில் மாலை 5 மணிக்கு மேல், பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலைக்கு அவரது உடல் நிலை சென்றது.

அன்று இரவு 10 மணிவரை அவருக்கு ஆக்சிஜனுடன் சில சிகிச்சைகள் அளித்தும் சரி வராத காரணத்தால் அடுத்த கட்டமாக வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவரது உடல்நிலை சென்றது. உடனே..

சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் முப்பதாம் தேதி நள்ளிரவு அதாவது முப்பத்தி ஒன்றாம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது லிஃப்ட்டில் ஏறி. தீவிர சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லும் போது, என் கைகளைப் பற்றிகொண்டு, துயரம் பொங்க பார்த்தார். அந்தப் பார்வை விடைபெறும் பார்வை என்று அப்போது எனக்குத் தெரியாது.

உள்நோயாளி அனுமதிச் சீட்டில் எனது கையொப்பத்துடன் மருத்துவமனையின் சில நடைமுறைகளை முடித்துவிட்டு மருத்துவமனையின் முன் வராண்டாவில் அதாவது வரவேற்பாளர்கள் அறை முன்பாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

அப்போது மணி நள்ளிரவு 2.30.

கண்களை மூடி சில நினைவலைகளில் நான் மூழ்கினேன்.......

*

முதன் முதலில் புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களை 2008-ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அப்பு தெருவில் இருந்த அவரது இல்லத்தில் சந்தித் தேன். எனது சென்னை வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்த நாட்கள் இந்த முகவரியிலேதான்.

ff

பிறகு 2008ஆம் ஆண்டு முதல் சென்னையில் புலவருக்கு எங்கு எந்த விதமான நிகழ்ச்சிகள் நடந்தா லும், உதாரணமாக பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தாலும் அவருடன் அவரது நிழலாக நானும் சென்றேன். தமிழ் நாட்டில், குறிப்பாக கோயம்புத்தூர், ஈரோடு போன்ற ஊர்களில் நடந்த பல நிகழ்ச்சிகளிலும், அவருக்குத் துணையாகச் சென்றேன்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திருமதி.மீனா அவர்கள், புலவருக்கு, பெரியார் விருது கொடுத்த போதும் அவரோடு நான் பயணித்து அருகில் இருந்து அந்தக் காட்சியை ரசித்திருக்கிறேன்.

சென்னையிலும் ஒரு முறை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை மதிமுக தலைவர் ஐயா.வைகோ அவர்கள் தலைமையில் புலவர் மற்றும் அண்ணன் கொளத்தூர் மணி மற்றும் பல தமிழீழ இன உணர்வு ஆதரவாளர்களோடு அந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தார்கள்.

அப்போது காவல்துறையினர் புலவரிடம் வந்து அன்பாக ஐயா உங்கள் வயோதிகம் உடல் நிலை ஆகியவற்றை யோசிக்கிறோம். நீங்கள் கைதாக வேண்டாம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்றார் கள்.

ஆனால் ”நானும் முற்றுகை ப் போராட்டத்தில் ஈடுபட்டேன். எனவே நானும் கைது செய்யப் பட வேண்டும்” என்று விடாப்பிடியாக வந்து கைதாகி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டார். நானும் அவரோடு. அன்று மாலை ஆறு மணிக்கு தான், எங்களை விடுதலை செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை அது எனக்கு முதல் நிகழ்வு.

அப்போது ஐயா கேட்டார்கள், குணா இன்றைய நிகழ்வில் உங்களுக்கு ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டதா?” என்று. உங்களோடு நான் இருக்கும் போது எனக்கு ஒரு அசவுகரியமும் இல்லை ஐயா என்று கூறினேன்.

அப்போது ”இதே போன்று என்னோடு வாழ்நாள் முழுக்க பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். நானும் மகிழ்ச்சி ஐயா என்று சொன்னேன்.

அதேபோல் 2013 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளன்று, அண்ணா சதுக்கத்திற்கு சென்று புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது புலவர் அவர்களின் விருப்பம். ஆனால் அன்று புலவர் அவர்களின் உடல்நிலை சரியில்லை. எனவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். இருப்பினும் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்து விட்டு அன்று நாள் முழுக்க அவர் மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு பயனித்த நாட்களின் நினைவுகளில் மூழ்கி விட்டார்.

பின்னர் மாலை ஆறு மணி இருக்கும்.

”குணா கிளம்புங்கள் நாம் அண்ணனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வருவோம்” என்று கூறினார்.

ஐயா உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது நாம் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறினேன்.

gg

”மருத்துவமனைக்கு நாளை செல்லலாம் . இன்று நாம் அண்ணனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வருவோம்” என்று சொன்னதால் ஆறு மணி வாக்கில் எம். ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்றோம்.

அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களின் கூட்டம் ஐயாவைப் பார்த்த பிறகு அனைவரும் அருகில் வந்து” ஐயா நலமாக இருக்கிறீர்களா புரட்சித்தலைவர் அவர்களோடு ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நீங்கள் அவருக்கு நிழலாக இருந்திருக்கிறீர்கள் என்றும் அவருக்கு நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. நீங்கள் எழுதிய பாடல்கள் மிகச் சிறந்த பாடல்கள். உங்களை நேரில் காண்பது எங்களுடைய பாக்கியம். நாங்கள் உங்களுக்கு தலை வணங்குகிறோம்” என்று பலவாறு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கூட்டத்திலிருந்து விலக்கி, ஐயாவை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்று மாலை அணிவிக்கச் செய்தேன். அஞ்சலி செலுத்திய போது, திடீரென புலவர் ஐயா அவர்கள், மலர் மாலையின் மீது தனது முகத்தைப் புதைத்து ஒரு சிறு பிள்ளை போல குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

அப்போது அண்ணே! ஏண்ணே இந்த உலகத்துல என்ன தனியா விட்டுட்டுப் போனீங்க? என்று வாய்விட்டு அழுதார். பிறகு மெல்ல அவரைத் தேற்றி அங்கிருந்து அழைத்து வந்தது இன்றளவும் என் மனதில் நீங்காத நினைவு.

*

dd

ஒரு காலத்தில் புலவர் நடக்கும் செம்மாந்த நடையழகைப் பற்றி, குமுதத்தில் தர்பார் நடை என்று எழுதியிருந்தார்கள். பிற்காலத்தில் தன்னால் வேகமாக நடக்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, எப்படி இருந்த நான் இப்ப இப்படி ஆயிட்டேனே..என்று வருந்துவார்.

அண்மைக்காலமாக, அவர், என்னுடன் தனது வீட்டின் வெளியில் ஷோபாவில் காற்று வாங்கிய படியே பேசிக்கொண்டிருப்பார். அப்போது அவர்..

ஆண்டவன் கட்டளை படத்தில் வரும், கண்ணதாசனின் ’ஆறுமனமே ஆறு... அந்த தெய்வத்தின் கட்டளை ஆறு.. பாடலை செல்போனில் போடச்சொல்லி, அப்படியே வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்ப்பார். ஒரு நாளைக்கு 20 தடவைக்கு மேல் கூட அந்தப் பாட்டைப் போட்டுக் காட்டியிருக்கிறேன். கடைசிக்காலத்தில் 100 தடவைக்கு மேல் அவர் கேட்ட பாட்டு அதுதான். அதில் நடிகர் திலகம் சிவாஜியின் நடையைப் பார்த்து ரசித்து.. ’நடைன்னா இதுதாண்டா நடை’ என்பார் தனக்குத்தானே.

நான்வெஜ் பிரியரான புலவருக்கு, தினமும் நாட்டுக்கோழி சூப் வேண்டும். அதேபோல் காலையில் பொங்கலும் இரவு கோதுமை தோசையும் சாப்பிடுவார். அவரோடு சேர்ந்து சாப்பிடுவதும் இனிய அனுபவம். பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே சாப்பிடுவார்.

*

கடைசியாக, இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை, வீட்டில் நடத்தினார் புலவர். அதில் அ.தி.மு.க.வில் நடக்கும் கோளாறுகளைச் சுட்டிகாட்டிய அவர்....

“இப்போது முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், என் மகனைப் போன்றவர். அவருடைய தந்தையும் நானும் நல்ல நண்பர்கள். ஒரு காலத்தில் அவரது கோபாலபுரம் வீட்டில். கலைஞருடன் நான் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கும் போது, ஸ்டாலின் சிறுவயது மாணவராக இருந்தார். அவர் இப்போது நட்டையே ஆள்கிறார்.

சிறப்பாக ஆள்கிறார். தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்றும், அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு திருக்குறளைப் பாடமாக வைப்பேன் என்கிறார். உண்மையில் அவரை நினைத்தால் எனக்குப் பெருமிதமாக இருக்கிறது” என்று மனம் திறந்து பாராட்டினார். அவர் கடைசியாக மனம் ஒப்பிப் பராட்டியது நம் முதல்வர் ஸ்டாலினைத்தான்.

*

இப்படி, அவர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த போது, நர்ஸ் என்னை அழைத்து புலவர் இப்ப நல்லா இருக்கார் என்று நம்பிக்கையோடு சொன்னார். மனம் மகிழ்சியில் திளைத்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த புலவர், என்ன நினைத்தாரோ? தனக்குப் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஜிஜன் குழயை இழுத்துப் பிடுங்கிவிட்டார். அதனால் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. உடனே மருத்துவர்கள் அவரை மொய்த்துக் கொண்டு சிகிச்சை கொடுத்தனர். அடுத்து மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டர் வைத்தனர்.

அடுத்த நாளே சுவாசப் பிரச்சினை நீங்க, வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்துவிட்டார் புலவர். இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது..

அதைத் தொடர்ந்து அவரது பேரனும் நடிகரு மான திலீபன் புகழேந்தி, அவர் அருகே சென்று “பயப் படாதீங்க தாத்தா?” என்றார். உடனே புலவர் அந்த நிலையிலும் பயமா? எனக்கா? தம்பி பிரபாகர னோடு பழகியவன் நான்” என்று புன்னகைத்துவிட்டு..

“ தம்பி, நமக்கு தைரியமும் தன்னம்பிக்கையும்தான் சொத்து. அதை மட்டும் எந்த நேர்த்திலும் இழந்து டாதே?” என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை.

அதன் பினர் மூச்சிரைப்பு அதிகமானதால் அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் வைக்கப் பட்டுவிட்டது. கவிஞர்களும் இலக்கிய அன்பர்களும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தபடியே இருந்தனர். அவரை சந்திக்க மருத்துவ மனை இடம் கொடுக்காததால், என்னிடமும் அவர் குடும்பத்தினரிடமும் விசாரித்து விட்டுச் சென்றார்கள். இந்த நிலையில் நான், பாதுகாப்பு உடையோடு, அவரைச் சென்று பார்த்தேன். ஆழ்ந்த தூக்கத்திலோ மயக்கத்திலோ இருந்தார்.

அப்போது, டாக்டர் சரவணகுமார் என்னிடம் “புலவர் எழுதிய பாடலில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் எது” என்று கேட்டார்.

நான், ”ஆட்டோ ராஜா படத்தில் வரும் ’சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?’ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடிக்கும்” என்றேன்.

uu

உடனே, தன் செல்போனில் அந்தப் பாடலை வைத்து, அதை புலவரின் காது அருகில் கொண்டு போனார் டாக்டர். அதைக்கேட்டதும் புலவர் கண்களைத் திறந்து பார்த்தார். உடனே, மகிழ்வோடு அவர் காதருகே சென்று “நான் குணவந்திருக்கேன் ஐயா” என்று சொன்னேன். உடனே அவர் தனது கைகளை அசைத்தார்.

கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே வந்துவிட்டேன். அடிக்கடி அவரது பாடல்களை அவர் கேட்டுகும் படி செய்தார் டாக்டர் சரவணகுமார்.

இந்த நிலையில், 8-ந் தேதி காலை 8.33-க்கு, புலவரின் மூச்சுக்கற்று, அமைதியாய்ப் பிரிந்துவிட்டது. ஏராளமான தமிழ்ப் பாடல்களைக் கவித்துவமாய் எழுதிய அவரது இதயத் துடிப்பு அமைதியாகிவிட்டது.

புலவர் மறைந்துவிட்டார்.

அந்த செய்தி அவர் குடும்பத்தினரையும் என்னையும் அடைந்தபோது... தலையில் இடிவிழுந்தது போல் ஆனேன். இனி எப்போது புலவரின் கம்பீரக் குரலைக் கேட்பது?

அவரது அன்பை இனி எப்போது உணர்வது? என்று தத்தளித்தேன்.

அவரது உடல், நீலாங்கரை இல்லத்தில் ஒரு நாள் வைக்கப்பட, ஏராளமானவர்களின் கண்ணீர் அஞ்சலியைப் பெற்றுக்கொண்ட புலவர், தன் இறுதியாத்திரையை, திரும்பாப்ப்யணத்தைத் தனியே தொடங்கிவிட்டார்.

ஒரு சகாப்தம் நிறைவடைந்து விட்டது.