சென்னை மாநகரில் வெயில் தணிந்து மழை மேகம் சூழத்தொடங்கிய இதமான மாலைவேளையில், மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி அவர்களின் 90-ஆவது பிறந்த நாள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா, சின்ன குத்தூசி அறக்கட்டளையால் கடந்த ஜூன் 16ஆம் தேதி, மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடத்தப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை கோவி.லெனின், சின்ன குத்தூசியுடனான குட்டிக் குட்டி நினைவுகளோடு மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கினார். விழாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் கோபண்ணா தலைமை தாங்கினார். திராவிட இயக்க ஆய்வாளர் சு.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
விழாவின் தொடக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக நம்முன் காட்சிப்படுத்திய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தில் சின்ன குத்தூசியாரின் பால்ய காலத்தில் அவர் வாழ்ந்த விதம், அவரது கல்வி, மேற்படிப்புக்கு தந்தை பெரியார் செய்த உதவி, திராவிட இயக்கக் கொள்கைமேல் சின்ன குத்தூசியாருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு என அனைத்தும் விளக்கப்படமாகவும், சின்ன குத்தூசியாரே பேட்டியாகச் சொல்வதாகவும் அமைந்திருந்தது. சின்ன குத்தூசியாரின் பத்திரிகையாளர் பணி வாழ்க்கை, முரசொலியில் அவரது எழுத்துப்பணி, கலைஞரோடான ஆழ்ந்த நட்பு, நக்கீரனில் சின்ன குத்தூசியாரின் எழுத்துப்பணி, அவரது இறுதிக்காலத்தில் சின்ன குத்தூசியாரை அவரது மகனைப் போல் கவனித்துக்கொண்ட நக்கீரன் ஆசிரியரின் அன்பு என அனைத்தும் புகைப் படங்களாகவும், வீடியோவாகவும் விவரிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நமது நக்கீரன் ஆசிரியர், "2011ஆம் ஆண்டு மே மாதத்தில் சின்ன குத்தூசி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான பின்னர், அவருக்கு நடந்தஇரங்கல் கூட்டத்தின்போது ஆவணப்படம் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. விரைந்து அதற்கான வேலைகளைத் தொடங்கி, பத்து நாட்களில் ஆவணப்படம் தயாரானது" எனத் திரையிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விளக்க மளித்துவிட்டு, விழா வில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் வரவேற்றுப் பேசி அமர்ந் தார்.
அடுத்ததாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையுரையாற்றியபோது சின்ன குத்தூசியாருடன் அவருக்கிருந்த நட்பை விவரித்துப் பேசினார். "தொடக்கத்தில் நான் திராவிடக் கட்சி எதிர்ப்பாளராக இருந்தேன். சத்யமூர்த்தி பவனின் முழுநேர ஊழியனாக அங்கேயே இருந்தேன். அங்கிருந்து கிளம்பினால் சின்ன குத்தூசி தங்கியிருக்கும் அறைக்குச் செல்வேன். அவரோடு பத்திரிகைகள், திராவிட இயக்கம், தமிழக, இந்திய அரசியல் குறித்தெல்லாம் நிறைய பேசுவோம். அவர் தான் திராவிட இயக்கம் குறித்து சரியான புரிதலை எனக்கு ஏற்படுத்தினார். சின்ன குத்தூசிக்கு தினமும் நக்கீரன் கோபால் தனது இல்லத்திலிருந்து உணவு கொண்டுவந்து தருவார். அதோடு, அந்த சின்ன அறையில் சின்ன குத்தூசியோடு அமர்ந்து அவரும் உணவருந்துவார். அந்த அளவுக்கு சின்ன குத்தூசி மீது அன்போடிருந்தார். சின்ன குத்தூசியோடான நட்பின் காரணமாகத்தான் 'பெரியாரும் பெருந்தலைவரும்' என்ற தலைப்பிலான நூலையே நான் எழுத முடிந்தது. அதேபோல், 'காமராஜர் ஒரு சகாப்தம்' என்ற நூலை எழுதிமுடித்து, அதனை கலைஞர் கரத்தால் வெளியிட விரும்பினேன். ஆனால் அத்தருணத்தில் கலைஞர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தார். எனவே அந்த நூலை சரியான தருணத்தில் வெளியிடலாம் சற்று பொறுங்கள் எனக் கூறினார் கலைஞர்.
அடுத்த சில மாதங்களில், காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கலைஞரின் கரங்களால் எனது நூல் வெளியிடப்பட்டது. நூல் வெளியான 3, 4 நாட்களில் வாஜ்பாய் அமைச்சரவையிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேறினார்கள். மொத்தமாக அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இணைந்தது. எனக்கு அரசியலில் தெளிவு, முன்னேற்றம் ஏற்பட சின்ன குத்தூசி மிக முக்கிய காரணம்.
நான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நன்முறையில் பேசுவதைக் கண்ட கலைஞர், என்னைப்பற்றி கவிஞர் வைரமுத்துவிடம், நல்ல வாதத்திறமை கொண்டவர் என்று பாராட்டி சொல்லியிருக்கிறார். இப்படி நான் பாராட்டப் பட்டதற்கு காரணம் சின்ன குத்தூசியே. இதுபோல் பிறரின் நலனில் அக்கறை கொண்ட பண்பாளர் சின்ன குத்தூசி. சின்ன குத்தூசி பில்ரோத் மருத்துவ மனையில் உடல்நலக்குறைவுக்காக அனுமதிக்கப் பட்டிருந்தபோது அவரைக் காணவந்த கலைஞர், 50,000 ரூபாயை அவரது செலவுக்காக வழங்கியிருக்கிறார்.
சிகிச்சை முடிந்தபின் அந்த 50,000 ரூபாயை கலைஞரிடமே திரும்பக் கொடுத்தவர், எனக்கு எந்த செலவும் இல்லை, எனக்கான சிகிச்சையை பில்ரோத் மருத்துவமனையில் இலவசமாகவே செய்தார்கள். எனக்கான மருந்து, மாத்திரைச் செலவுகளை நக்கீரன் கோபால் கவனித்துக்கொண்டார். பிறகெதற்கு எனக்கு 50,000 ரூபாய் எனக்கேட்டு திருப்பியளிக்கவும், அதை வாங்க மறுத்த கலைஞர், "இந்த பணம் எனது தனிப்பட்ட பணம்" எனக் கூறியவர், அந்த கவரின் மீது 'அன்பினால் வழங்கப்பட்டது! - மு.க.' என எழுதிக் கொடுத்திருக்கிறார்! பிராமண சமூகத்தில் பிறந் தாலும், பெரியாரால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர் சின்ன குத்தூசி. அவருக்கு குடும்பம் இல்லையே, மகன் இல்லையே என்ற குறையை போக்கியவர் நக்கீரன் கோபால்!" என்று சின்ன குத்தூசியாரை பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்து பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் சு.திருநாவுக்கரசு, "இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பெறக்கூடிய ஓவியக் கலைஞர் அமுதோன் எனப்படும் அமுதபாரதி, கவியரசு கண்ணதாசனிடம் நெருங்கிப் பழகியவர். கண்ணதாசன் நடத்திவந்த இதழுக்கு ஓவியங்கள் வரைந்துகொடுத்தவர். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் நடத்திவந்த ஓம்சக்தி இதழிலும் கலைஞரின் முரசொலியிலும் ஓவியங்கள் வரைந்தவர். இலக்கியத்தைப் பொறுத்தவரை, இலக்கியம் பேசி வாழ்ந்தவர், இலக்கியம் பேசிக் கெட்டவர் என்ற இரண்டு வகை உண்டு. அமுதபாரதியிடம் இரண்டுமே உண்டு! முன்னட்டை ஓவியத்தை மிகவும் நேர்த்தியாக வரைந்துகொடுப்பார். அதற்காக சற்று கூடுதல் காலம் எடுத்துக்கொள்வார். எங்கள் பதிப்பகத்தில் வெளியான இராம அரங்கண்ணல் நினைவுகள் நூலுக்கும் தமிழில் கீதை நூலுக்கும் அமுதோன்தான் முன்னட்டை ஓவியம் வரைந்தார். மிகவும் நுட்பமாக ஓவியம் வரையக்கூடியவர் அமுதபாரதி. கவிஞர் சுரதாவும் அமுதபாரதியும் நண்பர்கள். அமுத பாரதி, மரபுக் கவிதைகளில் தொடங்கி, ஹைக்கூ வரை கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கி றார். ஓர் அரசியல் வாதியுடனான தனது கசப்பான அனுபவத்தை, அவர் பதவிக்கு வரும்முன்பு நன்முறை யிலும், பதவிக்கு வந்த பின்னர் கண்டுகொள்ளாமலும் இருந்தது குறித்து ஹைக்கூ கவிதையாக,
"எந்த மரமும்
துளிர்ப்பதில்லை
நாற்காலி ஆன பின்பு'
என அருமையாக எழுதியிருந்தார். தற்போது
ஆயிரம் ஹைக்கூக்களை அமுதபாரதி தொகுத்துக்
கொண்டிருக்கிறார்" என்று அமுதபாரதி குறித்து எடுத்துரைத்தார்.
அதன்பின்னர், ஓவியக்கவிஞர் அமுதபாரதிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்தார். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
அதன்பின்னர் உரையாற்றிய ஓவியக் கலைஞர் அமுதபாரதி, "இப்படிப்பட்ட விருது விழாக்கள்தான் கவிஞர்களுக்கு ஊக்கமளிப்பவை. இத்தகைய விழாக்கள் நிறைய நடைபெறவேண்டும். என்னைப் பற்றி சிறப்பாகப் பாராட்டிப்பேசிய நண்பர் திருநாவுக்கரசுக்கு நன்றி. சின்ன குத்தூசி அவர் களைப்போல் நானும் சின்ன வயதில் நூலகங்களோடு தான் வளர்ந்தேன். இளம் வயதில் முரசொலி வாசிக்கும் பழக்கமுண்டு. முரசொலியில் கவிஞர் சுரதா எண்சீர் விருத்தக் கவிதைகளை முரசொலியில் எழுதுவார். அதை படித்துப் படித்து நானும் கவிதை எழுதினேன். சுரதாவோடு எனக்கு 56 ஆண்டுகாலப் பழக்கம். அவருக்காகவே '100 சுரதா' என்ற நூலைப் பதிப்பித்தேன். 1956-ல் ஓவியர் மணியம் வீட்டிலிருந்தபோது பார்த்திபன் கனவு திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் அங்கு வந்திருந்தார். அப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருந்தார், அப்போது மணியனோடு சென்று கண்ணதாசனை சந்திக்க வாய்த்தது." எனக் கூறியவர், கவிஞர் கண்ண தாசனோடு அவருக்கு இருந்த நட்பையும், முரசொலிக்கு ஓவியங்கள் வரைந்தபோது கலைஞரோடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பையும் தனது நினைவுகளிலிருந்து விவரித்து கூறினார்.
அடுத்து சிறப்பு விருந்தினர் இயக்குனர் பொன்வண்ணன் பேசியபோது, "எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, கல்கி, அமுதசுரபி அட்டைப்படங்களைப் பார்த்துப் பார்த்து நானும் ஓவியங்கள் வரையப் பழகி னேன். ஓவியர் மாதவன் நூற் றாண்டு விழாவில் அமுதபாரதி ஐயாவை முதன்முதலில் பார்த் தேன். அப்போது எடுத்த புகைப்படம் பிரமிப்பாக இருந்தது. இப்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கும் விழாவில் சந்திப்பது மகிழ்ச்சி. என் நண்பர் ஜனநாதனுடன் சேர்ந்து சின்ன குத்தூசி ஐயாவை அவரது அறையில் சந்தித்திருக்கிறேன். சின்ன குத்தூசி ஐயாவுக்கும் கலைஞருக்குமான நட்பு... கலைஞருக்கு சின்ன குத்தூசி ஐயா முத்தம் கொடுக்கும் காட்சியை ஆவணப்படத்தில் பார்க்கும்போது என்னையறி யாமல் கண்ணீர் வந்துவிட்டது" என்று பேசினார்.
அடுத்து பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், "இந்த விழா ஒருநாள் தள்ளி இன்று நடைபெறுகிறது. சின்ன குத்தூசி ஐயாவைப் பொறுத்த வரை ஓர் ஆண்டில் எந்த நாளில் பிறந்த நாளைக் கொண்டாடினா லும் பொருந்தும். அவரது பிறந்த நாளென்பது ஆசிரியர் குறித்துக் கொடுத்ததுதான். சின்ன குத்தூசி குறித்து பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதியபோது, 'திராவிட இயக்கத்தை ஆதரித்த 5 பிராமணர்களில் இவரும் ஒருவர்' என்று எழுதியிருந்தார். அதுகுறித்து சின்னகுத்தூசி, ;
இது எனது தோல்வியாகக் கருதுகிறேன். திராவிட இயக்கத்தை இவ்வளவு ஆழமாக நேசித்தும் என்னை நீங்கள் சூத்திரனாக ஏற்கவில்லை' எனக் கூறினார்.
அந்த அளவுக்கு தனது ஜாதியில் நடக்கும் கொடுமை களைக் கடுமையாக எதிர்ப்பவர். சின்ன குத்தூசிக்கு விழா எடுத்திருக்கும் நக்கீரன் கோபாலின் செயல் பாராட்டுக்குரியது" என்றார்.
இறுதியாக, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது சிறப்புரையில், "நானும் நக்கீரனில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கட்டுரையாக எழுதியதால், நக்கீரன் குழுமத்தில் ஒருவராகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். எனது அலுவலக அறையும் சின்ன குத்தூசி ஐயாவின் அறையைக் கடந்துதான் இருந்தது. அவரது அறையைக் கடந்துசெல்லும் போதெல்லாம் அங்குள்ள நூல்கள் ஆச்சர்யப்படுத்தும்.
முரசொலியை அடுத்து நக்கீரனில் சின்ன குத்தூசி ஐயாவின் கட்டுரைகளை விரும்பி வாசிப்பேன். கலைஞர், சின்ன குத்தூசி ஐயா ஆகியோரிடம் கற்றுக்கொண்ட மொழிப்பயிற்சியால்தான் சட்டமன்றத்தில் ஜெயலலிதா இருக்கும் அவையில், 'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கையில் தாது மணல் இருக்கிறது' என்று பூடகமாகப் பேச முடிந்தது. கலைஞர் மீது சின்ன குத்தூசி ஐயா மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரை நக்கீரன் கோபால் மிகவும் நன்றாகக் கவனித்துக்கொண்டார்." எனக் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையாற்றிய ஆவுடையப்பன், சின்ன குத்தூசியாருடன் தனக்கிருந்த தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிக்க, விழா இனிதே நிறைவுபெற்றது.
தொகுப்பு: தெ.சு.கவுதமன்