பேராசிரியர் முனைவர் இராம.குருநாதன், மிகச் சிறந்த ஆய்வறிஞர். மரபுக் கவிதையில் தனித்தடம் பதித்து வருபவர். உலக இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங் களை ஒப்பிட்டு பல நூல்களைத் தந்திருக்கிறார். பல்வேறு இலக்கிய படைப்புகளையும் தமிழுக்குப் படைத்திருக்கிறார். ஏராளமான ஆராய்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழும், முனைவர் இராம.குருநாதன், நூல் திறனாய்விலும் புகழ்பெற்றவர். மேலும், செம்மொழித் தமிழாய்வு நிறுவன ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகவும், சாகித்திய அகாடமி யின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பொறுப்பாளராகவும் இருந்து சிறப் பாக செயலாற்றி வருகிறார். தமிழக அரசின் மொழி மொழி பெயர்ப்புக்கான விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பாராட்டுக்களையும் பெற்றவர் இவர்.

புகழின் உச்சம் தொட்ட பாடலாசிரியர்களான கவிஞர் வைரமுத்து, நாமுத்துக்குமார், இளையகம்பன், கபிலன், அண்ணாமலை உள்ளிட்டவர்கள், பேராசிரியர் குருநாதனிடம் பாடம் கேட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 21- ஆம் தேதி 75 ஆம் அகவையை நிறைவுசெய்திருக்கும் முனைவர் இராம,குருநாதனின் நேர்காணலை, வாழ்த்துக் களோடு வாசகர்களுக்கு இனிய உதயம் வழங்குகிறது.

* தங்கள் குடும்பம் -இளமைக்காலம் பற்றி?

குடந்தையில் சாதாரண வேளாண் குடும்பத்தில் பிறந்த வன் நான். விவசாயம்தான் அடிப்படைத் தொழில். எனக்கு நான்கு வயது இருக்கும்போது என் தாயார் சேது அம்மாளை இழந்தேன். இறுதிவரை தந்தை ராமலிங்கம், திருமணம் புரிந்துகொள்ளாமல் என்னு டைய சகோதரிகள் இருவருக்கும் திருமணம் முடித்தார். அதன் பிறகு சிறிதுகாலம் துணிக்கடை நடத்திவந்தார். என் அண்ணன் ஒருவர் இறந்த பிறகு கடையை மூடிவிட்டார். மூத்த அண்ணன் திருமணம் முடிந்த பின் அண்ணியார்தான் குடும்பத்தைக் கவனித்துவந்தார். இதுதான் எங்கள் குடும்ப வரலாறு.

Advertisment

என் இளமைக்காலம் ஒரு கனவுலகமாகவே இருந்திருக்கிறது. சிறுவயது முதலே எதையாவது படிக்கவேண்டும், ஓவியம் வரையவேண்டும் என்பனவற்றில் நாட்டம் இருந்தது. அவற்றை ஓரளவு வளர்த்துக்கொண்டேன். நான் முதலில் வரைந்த படம் ஐந்தாவது வகுப்புத்தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருந்த கட்டபொம்மன் படத்தைதான். எங்கள் வீட்டுத் திண்ணையில் ’கலர் சாக்பீஸ்’ கொண்டு தத்ரூபமாக வரைந்திருந்தேன். என் தந்தை பார்த்துவிட்டு வரவேற்பார் என்று நினைத்த எனக் குத் திண்ணையை வீணடித்து விட்டாயே என்று வசைதான் கிடைத்தது. படிப்பதை விட்டுவிட்டு இதெல்லாம் வெட்டிவேலை என்பது அவரது கணிப்பு. தந்தை மிகக் கண்டிப்பானவர். தெரு பையன்களிடம் சண்டை இட்டும், வம்பு வளர்த்தும் என் தந்தையிடம் அடிகள் பல வாங்கியதுண்டு. அந்தச் சிறிய வயதில், குடந்தை அரசலாற்றில் நண்பர்களோடு நீச்சலுக்குச் சென்று வீடு திரும்பியதும், எனக்குச் சூடு போட்டதும் உண்டு. ஆனால் அவருக்குத் தெரியாமல் காவிரி ஆறு, அரசலாறு சென்று குளிப்பதை நான் நிறுத்தவில்லை. அச்சிறு வயதில் இக்கரைக்கும் அக்கரைக் கும் சென்று சாகசம் புரிந்த காலங்கள் உண்டு. ஆனால் வாழ்க்கை யில்தான் எதிர் நீச்சல்! ஐம்பதுகளின் இறுதியில் திரைப்படம் பார்க்கும் ஆசை வளரத் தொடங்கியது. தந்தைக்குத் தெரியாமல் திரைப்படம் பார்த்த தெல்லாம் நண்பர்கள் பணத்தில்தான்!

குடந்தையில் எம் உறவினர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றமைக் காக நடந்த பாராட்டுக் கூட்டத்தில் நான் பேசப்போய், அதைக் கேட்டவர்.. யார் பையன் நன்றாகப் பேசுகிறானே என்று வினவியிருக்கிறார். பிறகுதான் தெரிந்தது அவருக்கு மாப்பிள்ளையாகப் போகிறேன் என்று!

அவருடைய மகள் செயலட்சுமி எனக்கு மனைவியானது 1971 இல், அதுவும் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது! அவளுக்கோ மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைத்த நேரம். என் தந்தை பெண்கள் படிக்கக் கூடாது என்ற உணர்வினர்.

Advertisment

இதனால் திருமணம் தடை படுமோ என்று நினைத்த பெண்ணின் தந்தை தன் மகளை மருத்துவராக்கிப் பார்க்கவேண்டும் என்ற அவர் கனவு தகர்ந்தது. திருமணம் நிகழ்ந்தது. என் தந்தை மனம் குளிர்ந்தது.

எனக்கு தேவி என்று ஒரு மகள். மாநில அளவில் தமிழில் முதல் தேர்ச்சி பெற்றவள். இளங்கலை விலங்கியல் . முதுகலைத் தமிழ்ப் படித்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரித் தமிழ்த்துறையில், மாலைக் கல்லூரிப் பேராசியர். தமிழில் கவிதைகள் எழுதிவருபவள். கணவர் பரிதி பொறியாளர். நாக்பூரில் பணிமாற்றம் பெற்றதனால் மகள் பணியை விட்டு அங்கே செல்லும்படி ஆனது. கவின்மதி என்று ஒரு பேத்தியும் இருக்கிறார். இதுதான் என் குடும்பம்.

* பள்ளிப் படிப்பு?

பள்ளிக்கூட வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத பாடம் கணிதம்! .சுட்டுப் போட்டால் கூட வராது. தந்தை சொல்லிக்கொடுத்தும், தனியாக ஆசிரியரை அமர்த்தியும் கூட எனக்குக் கணக்கு என்றாலே பிணக்குத்தான் (அந்த வகையில் நான் பாரதியார் கட்சி) என் துடுக்குத்தனத்தையும் சக நண்பர்களிடம் தார்மீகக் கோபம் கொண்டு சண்டையிட்டதையும் அறிந்து கொண்ட என் தந்தை. இவன் இங்கு ஒழுங்காக வரமாட்டான் என்று நினைத்தார் போலும்! அந்த நேரத்தில் ” பையனை என்னிடம் அனுப்பு. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று என் தந்தையின் நண்பர் சொல்லவே, செங்கல்பட்டில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக இருந்த அவர், என்னை அங்கு அழைத்துச்சென்றதால் அங்குப் படிக்கும்படி ஆயிற்று. மூன்றாண்டு காலம் அங்கு விடுதி மாணவன். சொந்த ஊர் பற்று அடிக்கடி என் படிப்பையும் பாதித்தது அந்த வயதில்! பள்ளி இறுதியில் குடந்தை நகர உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். ஆனால் கணிதத்தில் தேர்ச்சிபெறாதவனானேன்.

ஒருவழியாக மறுதேர்வில் வெற்றி பெற்றுக் கல்லூரி வாசலில் காலடி எடுத்து வைத்தேன். கணிதம் ஒழிந்தது; காலம் கனிந்தது.

* கல்லூரி மாணவராக இருந்த போது தங்கள் ஆர்வமும் ஊக்கமும் எதை நோக்கிச் சென்றன?

புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், ஆங்கில இலக்கியம் அல்லது தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என இருந்தேன். குடந்தைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பிரிவு கிடையாது. அதனால் நான் தமிழ் இளங்கலைப் படிப்பை மேற்கொண்டேன். இனிமை ததும்பும் இளமைக்காலம் என்பது கல்லூரி வாழ்க்கையின் போதுதான்! கற்பனை உலகத்தில் மிதந்த காலம். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆர்வம் மிகுதியாக வளர்ந்தது. கண்டதையும் படிக்கத் தொடங்கினேன். எனக்கு அமைந்த ஆங்கிலப் பேராசிரியர்களிடம் ஆசிரியர் -மாணவர் உறவு மலர்ந்தது. ஆங்கில வகுப்புகளில் முதல் வரிசையில் போய் அமர்ந்துகொள்வேன். பொருளாதாரம், கணிதம் , தமிழ் ஆகிய மூன்று வகுப்புகள் சேர்ந்து மொத்தம் 130 மாணவர்கள். சேக்ஸ்பியர் நாடகம், உரைநடை, கவிதை ஆகிய வகுப்புகளில் ஆங்கிலப் பேராசிரியர்கள் கேட்ட வினாக்களுக்கு விடை கூறுவேன். மற்றும் முதல்நாள் நடத்திய பாடத்தின் தொடர்ச்சியை மறு நாள் வகுப்பில், பேராசிரியர்கள் கேட்டபோது முதல்நாள் விட்ட இடத்தைக் குறிப்பிடுவேன். இதன் காரணமாகவே ஆங்கிலப் பேராசிரியர்களாக இருந்த கா. செல்லப்பன், டி. என். சேஷாத்திரி, கே.வி. செயராமன், ராமதாஸ் போன்ற பேராசிரியர்கள் பாராட்டுவார்கள், 130 பேரில், அதுவும் தமிழ்ப் படிக்கும் மாணவன் சரியாகச் சொல்கிறானே என்று!

இளங்கலை இரண்டாம் ஆண்டில் நான் எழுதும் கட்டுரைகளில் ஆங்கில மேற்கோள் இல்லாமல் இராது. தமிழ்ப்பேராசிரியர்களும் வியக்கும் வண்ணம் அவை அது இடம்பெற்றிருக்கும். சேக்ஸ்பியரின் திறனாய்வாளரான ஏ.சி பிராட்லி, உரைநடையில் செஸ்டர்டன், மற்றும் சிந்தனைவாதி எமர்சன் போன்றோரின் நூல்களை சாது சேசய்யா நூலகத்திலிருந்து எடுத்துவந்து படித்திருக்கிறேன். பாடக்கட்டுரைகளிலும் அவற்றை ஆங்காங்கே பொருத்திக் காட்டுவது என் வழக்கம்.

*குடந்தையில் குத்து விளக்கு என்ற கையெழுத்து ஏட்டை நடத்தி வந்திருக்கிறீர்கள் அது பற்றி?

குடந்தையில் நடந்த என்.சி.பி.எச் புத்தகக் கண்காட்சியில் உருஷ்ய மொழி வலதுபுறமும், ஆங்கிலம் இடப்புறமும் அச்சிடப்பட்ட கவிதை நூல் ஒன்று வாங்கினேன். அதில் சில கவிதைகளை அப்போதே மொழி பெயர்த்திருக்கிறேன். கவிதை என் உள்ளத்தின் வாயிலைத் திறக்கத் தொடங்கியது.

1967- 1969 வரை மூன்று ஆண்டுகள் ’குத்துவிளக்கு’ என்ற கையெழுத்து இதழை ஆசிரியராக இருந்து நடத்தத் தொடங்கினேன். தொடக்கத்தில் நானே பல புனைபெயர்களில், குறிப்பாக பொன்னிநாடன், பொன்னி, நெடியோன், குருஜி உள்ளிட்டப் பெயர்களில் என்னை வெளிப்படுத்தத் தொடங்கினேன்.

கவிதை. சிறுகதை. கட்டுரை, துணுக்கு, மொழி பெயர்ப்பு, சித்திரக் கதைத்தொடர் முதலியவற்றையும், ஓவியங்கள் சிலவற்றையும் எழுதியும் வரைந்தும் வந்தேன். இரண்டு இதழ்கள் வெளிவந்த பின் நண்பர்கள் பலரை எழுதவைத்தேன். நண்பர் சாமிநாதன் ஓவியப் பகுதியைக் கவனித்துக்கொண்டார். அக்கையெழுத்துப் பிரதி மு.வ., அ.சிதம்பரநாதன், கிருபானந்தவாரியார், மு.அருணாசலம் முதலியோரின் பாராட்டுதலைப் பெற்றது. மூன்று ஆண்டுகள் மிகச் சிறப்பாக வெளிவந்த குத்துவிளக்கு, நான் சென்னைப் பச்சையப்பனில் முதுகலை படிக்க வந்த பின் சுடரொளி வீசாமல் நின்று போனது.

*சென்னையில் பச்சையப்பனில் படிக்க வந்த அனுபத்தையும், அங்கு பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் சொல்லமுடியுமா?

சென்னையில் 1969 இல் பச்சையப் பனில் தமிழ் முதுகலை பயின்றேன், சென்னையில் படிக்க வந்தது முதலாக, மாலை நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை. என் வகுப்புத் தோழர் க.இராச சேகரனும், நானும் தி.நகரில் இருந்த பிரிலியண்ட் டுட்டோரியலில் பிரெஞ்சு மொழி வகுப்பில் ஆறுமாதம் கற்றோம்.

முதுகலை படிக்க வேண்டிய முனைப்பில் இருந்ததால், பிரெஞ்சு மொழி எங்களை விட்டு ஒதுங்கிப் போயிற்று!

முதுகலை முடித்தவுடன் நான் படித்த கல்லூரியிலேயே பணி வாய்ப்புக் கிடைத்தது.

சங்க காலக் குறிஞ்சி நிலம் பற்றிய எம்.லிட் ஆய்வி லும், அகிலன் நாவல் குறித்த பிஎச்.டி பட்ட ஆய்விலும் உழைக்கவேண்டியிருந்தது. எம்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் அவர்கள் எம்.லிட் பட்டத்திற் கான நெறியாளராக இருந்து நெறிப் படுத்தினார். அதன் பின் டாக்டர் பட்டத்தை நெறியாளரின்றித் தனியாகச் செய்து முடித்தேன். இப்படிக் ’கல்விக் கலவியில் பின்னிப்பிணைந்து ஒன்றிக் கலந்ததால் என் படைப்பார்வம் குறையத் தொடங்கியதோ அல்லது கரையத் தொடங்கியதோ என்னவோ!

ஆசிரியராக இருந்துகொண்டே மாணவனாகவும் மாறிப் பல பட்டயப் படிப்புகளைப் படித்து முடித்தேன். பணியிடையே மாலை நேரத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டய வகுப்பாக மானிடவியல், உருஷ்ய மொழி, கல்வியியல், நாட்டுப் புறவியல் என்று தொடர்ந்தது. இதன் பின்னரும் திருவான்மியூரில் ஆசிய நிறுவனம் சார்பில் நடத்திய ஜப்பானிய மொழி வகுப்பில் சேர்ந்து அம் மொழியை அறிமுக அளவில் கற்றேன். இதற்குப் பின்னர் மதுரைக் காமராசர் பல்கழகம் அஞ்சல் வழியில் நடத்திய இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் வகுப்பில் படித்துப்பட்டயம் பெற்றேன்.

வகுப்புகளில் - குறிப்பாக முதுகலையில் இலக்கியத் திறனாய்வு, ஒப்பிலக்கியம் ஆகிய பாடங்களையே எடுக்கச்சொன்னார்கள். அதன்படி அந்தத் துறையில் ஆர்வம் வளர்ந்தது. ஆய்வுத் தொடர்பாகப் பதின் மருக்கு மேற்பட்டோர் என்னிடம் முனைவர் பட்டம் பெற்றனர். அறுபது இளம் ஆய்வியல் பட்டம் பெற்றனர்.

gg

*இலக்கிய ஈடுபாடும் கவிதை ஆர்வமும் எப்போது ஏற்பட்டது?

இலக்கிய உணர்வு சிறுவயது முதலே உள்ளத்தில் அரும்பியிருந்தது. இயற்கையின் அழகு என்னை ஒருபுறம் கவிதை எழுத வைத்தது. மறுபுறம் நாட்டு நடப்பும் என்னைச் சிந்திக்கச் செய்தது. ஆனால் நான் முதல் கவிதை எழுதத்தொடங்கியது செங்கல்பட்டுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளியின் முன்றிலில் இருந்த புன்னைமர நிழலில் இருந்துகொண்டு தமிழை ஒரு பெண்ணாக உருவகித்து ஒருசிறு கவிதை எழுதினேன். இந்தி பண்டிட் கிருஷ்ணமாச்சாரி யார் அதனைக் கிழித்து எறிந்தார். ஆயினும் நான் மனத்தில் இருந்த வரிகளைச் சொல்லிப் பார்த்து அறைக்குள் சென்று நோட்டில் எழுதிக்கொண்டேன். ’புன்னைமர நிழலில் என்னை வரச்சொல்லி பூ முத்தம் ஒன்று தந்தாள்’ என்று அக்கவிதை தொடங்கும். அதன் பின் கவிதை எழுதுவதை விட்டு விட்டேன். பிறகு பங்களாதேஷ் கலவரத்தின் போது முஜ்பூர் ரஹ்மான் பற்றித் தஞ்சை செய்தி மடலுக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பிவைத்தேன். அதுதான் நான் எழுதி இதழில் வெளிவந்த முதல் கவிதை. அதன் பிறகு குத்துவிளக்கு இதழில் மிகுதியாக மரபுக்கவிதை எழுதலானேன். சில மொழிபெயர்ப்புக் கவிதையும் அதில் வெளிவந்தது.

எங்கள் மூதாதையாரின் நூலகமான சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையத்திலிருந்து பல இலக்கிய நூல்கள் என் இலக்கிய தாகத்தைத் தீர்த்தன. சிறுகதை, நாவல், கவிதை நூல்கள் பல என் இலக்கிய ஆர்வத் தைத் தூண்டின. நூலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த உடன் எதாவது ஒரு கவிதையாவது எழுதிப்பார்த்து விடவேண்டும் என்று நினைப்பேன். அப்படிப்பட்ட எண்ணத்தின் வெளிப்பாடுதான் குத்துவிளக்கில் வெளிவந்த பல கவிதைகள். இராம. குருநாதன் கவிதைகள் என்ற தலைப்பில் விழிகள் பதிப்பகம் நூலாக தொகுத்து வெளியிட்டது என்றாலும் கவிதை ஆர்வம் மெல்ல மெல்லத் தேய் பிறைபோல ஆனது.

இதற்குக் காரணம் ஆய்வுலகில் நுழைந்ததாக இருக்கலாமோ!

*குடந்தையில் உள்ள நூலகத்தை உங்கள் குடும்பம் தடத்தி வருவதாகக் குறிப்பிட்டீர்கள். அதன் பின்னணி என்ன?

என் சிறிய தந்தையார் பெரும் செல்வந்தர். அவ ருடைய தாத்தா பெயரில், (சிவகுருநாதன்) ஒரு நூலகத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் 1953 இல் இருந்தே ஈடுபட்டார். திருவாவடுதுறை ஆதினத்திற்கு அடிக்கடி அவர் செல்வது உண்டு.

அங்கு இருந்த நூலகத்தைப் போல ஒரு நூலகத்தை உருவாக்கவேண்டும் என்று நினைத்தார். 1958 வாக்கில் நூலகம் உருவானது. ஒரு சிறிய தொடக்கமாக அப்போது உருவான அந்நூலகத்தில் சுமார் 300 அல்லது 400 நூல்கள்தாம் இருந்தன. இப்போது கிட்டதட்ட 40,000 நூல்கள் உள்ளன. நூலகத்திற்கு எனத் தனியான கட்டடம் இருக்கிறது. அதற்காக குத்தாலத்தில் உள்ள நிலத்தின் ஒருபகுதியை நூலகத்தின் பெயருக்கு எழுதிவைத்தார். ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் சரியாக இல்லை. அங்குள்ள நூல்கள் அங்கேயே படிப்பதற்கு மட்டுமே. வெளியில் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. நூலகம் தொடங்கி 50 ஆண்டு களாயின. முன்பெல்லாம் ஒருநாளைக்கு சுமார் 40 வாசகர்களாவது வருவார்கள். இப்போது வருவோர் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே வருகிறார்கள், அரிய தமிழ் நூல்கள் பல இங்கு உள்ளன. பயன்படுத்துவார்தான் குறைவு.

அதன் மேலாண்மை இயக்குநராக திரு.தயாளனும், பொருளாளராக திருமாறனும், செயலாளராக நானும் இருந்து செயற்பட்டு வருகிறோம். இருமுறை இராஜா ராம் மோகன்ராய் அறக்கட்டளை நூலகத்திற்கு பணக்கொடை அளித்திருக்கிறது. இப்போது நூல்கள் கனிணியில் ஏற்றப்பட்டுவருகின்றன.

*ஆரம்பத்தில் மரபுக்கவிதைகளில் புதுப்பாய்ச்சல் காட்டினீர்கள்? உங்கள் மரபுக்கு ஆசான் யார்? இப்போது தாங்கள் அதிகம் மரபுக் கவிதைகள் எழுதுவதில்லையே ஏன்? ஆன்மிகத்தில் மூன்று நூல்கள் அந்தாதியாக எழுதி வெளியிட்டீர்களே அது பற்றி?

புதுப்பாய்ச்சல் என்று சொல்ல முடியாவிட்டாலும் நாட்டு நடப்பையும், மொழியுணர்வையும் முன்னிறுத்தி எழுதியுள்ளேன். பள்ளிப் பருவத்தில் கவிதை எழுதினேனே தவிரத் தொடரவில்லை, குத்துவிளக்கில் கவிதைகள் பல எழுதிவந்திருக்கிறேன். அப்படி ஒன்றும் பெரிய கவிஞனாக வரவில்லை. எப்போதாவது கவிதை எழுதுவேன்.எனது கவிதை களுக்குக்குக் காரணம் பாரதி, பாரதிதாசன், கண்ண தாசன் படைப்புகளே. மரபில் எழுதுவது விட்டுப் போகவில்லை. எப்போதாவது வருவதுதான் கவிதை.

சிறுவயதிலிருந்தே கோயிலுக்குச் செல்வது வழக்கம். குடந்தையில் கோயிலுக்கா பஞ்சம்! இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்துக்கொண்டிருந்த போது யாப்பருங்கலக் காரிகை நடத்திய பயிற்றுநர் பிச்சைப் பிள்ளை என்பவரிடம் கட்டளைக் கலித்துறை பற்றிய ஐயத்தை வகுப்பு நடந்து கொண்டிருந்த போது கேட்ட தும், கோபம் கொண்ட அவர், அதிகப்பிரசங்கியாகப் பேசாதே. நீயாகவே தெரிந்துகொள் என்று உரக்கச் சொல்லி நிறுத்திக்கொண்டார். அந்த யாப்புக் குறித்துச் சில இலக்கண நூல்கள் வழி அறிந்துகொண்டேன். என் வீட்டுக்கு இரண்டுஅல்லது மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் கோயிலில் உறைந்த தெய்வ நாயகி அம்மன் பற்றி அந்தாதி எழுதலானேன். இது 1968 இல் என்று நினைக்கிறேன். அதன் பிறகு சென்னைக்குப் படிக்கவந்தபோது கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்களுக்குத் தொடர்ந்து செல்வேன். அந்த இரு தெய்வங்களையும் எண்ணிக் கருமாரி அம்மன் அந்தாதியை 71 லும், காமாட்சி அம்மன் அந்தாதியை 82 லும் எழுதினேன்.

இவை மூன்றும் கட்டளைக் கலித்துறையில் அமைந்தவை. குடந்தை குருஜி என்ற பெயரில் நூலாக அவை வெளிவந்தன. இந்நூலைப் படித்துவிட்டு பேராசிரியர் எஸ். ஏ சங்கர நாராயணன் அந்தாதி வடிவிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அது அண்மையில் நூலாக வெளிவந்துள்ளது. ஒரு கால கட்டத்தில் பக்தியில் நான் மூழ்கித் திளைத்ததன் விளைவு அப்படைப்புகள்.

*உங்களிடம் படித்த மாணவர்கள் பலரும் பாடலாசிரியராக ஆனது எப்படி?

பச்சையப்பனில் பயிற்றுநராக 06.09.71 இல் சேர்ந்த அன்று, அறை எண் 8-ல், முதல் நாள் வைரமுத்து என்கிற மாணவர் இரண்டு பயிற்சி ஏடுகள் நிறையக் கவிதை எழுதியதைக் காண்பித்தார். முத்து முத்தான கையெழுத் தில் அழகிய கவிதைகள் அவை. அன்றே பாராட்டினேன்.

அது அவரது திறமை. வெண்பாவில் கருத்துகளை அள்ளி வீசி இருக்கிறாயே! புகழேந்தியைப் போலச் சிறப்பாய் என்று வாழ்த்துரைத்தேன்.

அவர் வகுப்புகளில் புதுக்கவிதைகள் பலவும் சொல்லுவேன். அவர் கவிதைத்துறையில் சிறந்திருக் கிறார். பிறகு நாவல், சிறுகதை ஆகிய துறைகளிலும் நாடறிந்த திரைப்படக் கவிஞராகவும் திகழ்கிறார். இளங்கம்பன், அருணாசலம், நா.முத்துக்குமார், கபிலன் ஆகியோர் திரைப்படத்துறையில் நுழைந்தார்கள்.

அவரவர் திறமைக்கேற்ப வளர்ந்தார்கள்.

*தாங்கள் எழுதிய நூல்கள் பற்றி? ஒப்பாய்வுத் துறையில் தாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவது பற்றியும் சொல்லுங்களேன்.?

70- 80 களில் தாசப்பிரகாஷ் விடுதிக்கு அருகில் குடியிருந்தேன். கன்னிமரா நூலகம் அடிக்கடிச் செல்வேன். நிறையப் படித்தேன். நூல் எழுதவேண்டும் என்ற சிந்தனை அப்போது உருவாயிற்று. புதுமையாகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்த ஜப்பானியக் கவிதை நூல், சீனக்கவிதை நூல்கள் முதலியவற்றை வீட்டுக்கு எடுத்துவந்து படிப்பேன். நான் எழுதிய முதல்நூலாக வெளிவந்திருக்க வேண்டிய நூல் ஹைகூ பற்றியது. பேரா.லீலாவதி அது பற்றிய நூலினைக் கொண்டுவந்துவிட்டார். எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். என்னிடம் உள்ள குறைபாடு, எழுதியது பரண்மேல் படுத்துறங் கும். எதற்கும் ஒரு நேரம் வரும் என்ற எண்ணத்தில் இருந்துவிடுவேன் . படித்தது மிகுதி என்றாலும் படைத்தது கொஞ்சம்தான். பரணில் படுத்துக் கொண்டிருப்பவை இன்னும் 5அல்லது 6 இருக்கும். தூசி தட்டிப் பார்த்துத் தகுதியுடையதாயின் வெளியிடலாம் என்று நினைத்துக்கொள்வேன். கட்டுரை, கவிதை. மொழிபெயர்ப்பு, ஒப்பிலக்கியம் திறனாய்வு முதலிய எல்லா இலக்கிய வகைகளிலும் சுமார் 40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன்.

gg

ஒப்பாய்வுத் துறையில் நான்கைந்து நூல்களை வெளியிட்டேன். தமிழில் முதன்முதலாக சப்பானிய மன்யோசு கவிதைகளையும், சங்கக் கவிதைகளையும் வெளியிட்டேன். அது அறிமுக நூலாயினும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. பிறகு நான்கைந்து ஆண்டுகள் கழித்து, இலங்கையைச் சார்ந்த பேராசிரியை மனோன் மணி சண்முகதாஸ் ஜப்பானிய மொழியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்த்துச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஒரு நூலை வெளியிட்டார். மூலத்தின் சுவையை அறிய நல்லதொரு வாய்ப்பாக அந்த நூலைச் சொல்லலாம். ஒப்பிலக்கியத்துறை நான் பாடம் நடத்திய துறை. எனவே ஒப்பீட்டு ஆர்வம் இயல்பாக வளர்ந்தது. மொழிபெயர்ப்புத் துறையில் அதிக ஆர்வம் செலுத்தியிருப்பதாக உணர்கிறேன்.

*பொதுவாக மொழிபெயர்ப்புக்கான அங்கீ காரம் எப்படி இருக்கிறது?

ஆங்கில நூல்களை இளம் வயது முதலே படிப்பேன். நல்ல கதைகள் , நாவல் , கவிதை என்னை ஈர்க்குமானால் அவற்றை மொழிபெயர்ப்பேன். அந்த வகையில் பத்துக்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறேன். மொழிபெயர்ப்புக்காகத் திசை எட்டும் விருது, தமிழக அரசு விருது பெற்றிருக்கிறேன். இன்னும் சில மொழிபெயர்ப்புகள் கையெழுத்துப் பிரதியாக உள்ளன. அவை விரைவில் வெளிவரும்.

மொழிபெயர்ப்பு நூல்கள், மூலத்தின் சுவையை அப்படியே கொண்டு வருமேயானால் அது வரவேற்புப் பெறும். மூலத்தின் சுவடே இல்லாமல் பெயர்த்தல் வாசகர்களிடையே மதிக்கப்பெறாது. பெயர்ப்பு நூல்களுக்கு அங்கீகாரம் போதுமான அளவில் இல்லை என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

சாகித்திய அகாதெமியில் உறுப்பினராக நான் இருந்தபோது மொழிபெயர்ப்புக்காக விருது தருவதென முடிவெடுக்கப்பட்டது. அதற்கும் ஒரு இலட்சம் கொடுக்கவேண்டும் என ஒருங்கிணைப் பாளராக இருந்த கவிஞர் சிற்பியும் நானும் வாதாடி னோம். அது நகல்தானே எனக் கருதி ஐம்பதாயிரமாகத் தருவதென முடிவெடுத்தார்கள். இன்றைய நிலையில் அறிவியல் பெயர்ப்புகள் அதிகம் வரவேண்டும். இலக்கியத்தோடு மட்டும் நின்றுவிடக்கூடாது என்பது என் கருத்து.

*சாகித்ய அகாதெமி உள்ளிட்ட இலக்கிய அமைப்புகள் உண்மையில் தகுதியான படைப் பாளர்களைக் கவனிப்பதில்லை என்கிற குற்றச் சாட்டுக் குறித்துத்தங்கள் கருத்து என்ன?

தகுதியானவை விடுபட்டுப்போவது சில சமயங்களில் நடந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தேர்வுக்குழு நடுநிலையாகச் செயல்படுவதில் சிக்கல்களும் இருக்கின்றன. பொதுக் குழுவில் நான் அங்கம் வகித்தபோதும் சரி, அதற்குப் பிற்பாடு நடுவராக இருந்த சூழலிலும் சரி, எனக்கு வந்த நூல்களைத் தகுதியறிந்து தேர்வுக்காகப் பரிந்துரைத்திருக்கிறேன். மேலாண்மை பொன்னுசாமி. நாஞ்சில் நாடன், சு.வெங்கடேசன், வண்ணதாசன், தருமன் போன்றோ ரின் படைப்புகளைப் பரிந்துரைத்திருக்கிறேன். இவர்களெல்லாம் விருது பெறத்தகுதியானவர்கள்தாமே! அது போல இளம் எழுத்தாளர்க்கான தேர்ந்தெடுப்புக்குழுவில் நடுவராக இருந்தபோது அபிலாஷ் போன்றோரைத் தெரிவு செய்திருக்கிறேன். தகுதியான நூல்களுக்கு விருது வழங்கவேண்டும் என்று நடுவர்க் குழுக் கூட்டத்தில் வாதிட்டும் இருக்கிறேன். எல்லா இலக்கிய அமைப்புகளிலும், விருது அளிக்கும் நிறுவனங்களிலும் பாரபட்சம் இருக்கவே செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதே நிலையில்தான் குஷ்மாஞ்சலி விருதினை சா.கந்தசாமி, நான், சிவசங்கரி நடுவராக இருந்து தேர்ந்தெடுக்கையில் சா.கா வும், நானும் விட்டல்ராவுக்குத் தருவது எனப் பரிந்துரை செய்தோம். ஆனால் சிவசங்கரி வேறு மனநிலையில் இருந்தாலும் நாங்கள் இருவரும் தெரிவு செய்ததில் குறுக்கிடாமல் பெருந்தன்மையாக எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டார். ஞான பீட விருதுக்கு மூவர் அடங்கிய குழுவில் பணியாற்றியிருக்கிறேன். தமிழுக்கு வரவேண்டிய சூழல் இருந்தபோது வங்காளக் கவிஞருக்கு விருது வழங்கப்பட்டது.

*தங்களின் வெளிநாட்டு அனுபவங்கள் பற்றி?

இலங்கையில் தெல்லிப்பழையில் தொண்ணூறின் தொடக்கத்தில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறேன். மலேயாவில் நடந்த உலகத் தமிழ் நாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்ததோடு, நான் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகாரம்- அறிமுகம், பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களை அங்குக் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. சிகாகோவில் நிகழ்ந்தேறிய 10 ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு தொல்காப்பியக் கவிதையியல் வடமொழி, கிரேக்கக் ஒப்பீடு என்ற கட்டுரை வாசித்தேன்.

* இன்றைய இலக்கியப் போக்கு எப்படி உள்ளது? தமிழ்ப் படைப்பாளிகளுக்குத்,தாங்கள் சொல்ல விரும்புவது?

விருது பெறவேண்டும் என்பதற்காகப் பக்கம் பக்கமாய் எழுதும் போக்கு அண்மைக்காலப் பதிவாக இருக்கிறது. அது சரியாகாது. உலகளாவியப் பார்வையில் இலக்கியம் படைக்கப்பட்டுவருவது பாராட்டுக்குரியதாக உள்ளது. கவிதை இந்த வகையில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்து நாவல்.

தகுதி உள்ளது வாழும்: நிலைக்கும்; (உண்மைத் தன்மையோடு) விருது பெறும், தமிழ் இலக்கியவாதிகளிடையே குழுமனப் பான்மையும், சொந்த மண் சார்ந்த உணர்வும் காணப்படுகின்றன. இது இலக்கியத்தின் ஆரோக்கியத் தன்மை ஆகாது. நடுநிலைப்போக்கைக் காணமுடிவதில்லை.

மரபுக்கவிதை எழுதுவோர் அரைத்த மாவையே அரைக்கிறார்கள், இளைஞர்களிடையே ஹைக்கூ ஆர்வம் மிகுதியாக இருப்பினும் அவ்வடிவத்தின் உயிர்ப்பொருளை அறியாது பலரும் எழுதி வருகிறார் கள்.புதுக்கவிதை. நவீனக்கவிதை என இலக்கிய உலகம் கவிதைத்துறையில் விரிந்துள்ளது. புரிதல் தன்மையை முன் வைத்து எழுதப்படவேண்டும். தமக்கு மட்டுமே புரிகிறது என்ற போக்கில் அமைந்து விடக்கூடாது. நல்ல சொற்றொடர்களைக் கவிதையில் உருவாக்கலாம். மரபுக்கவிதையில் இது குறைவு. பாடுபொருளிலும் அப்படியே! இவையெல்லாம் வளரும் இளம் தலைமுறையினர் பார்வைக்கு!

*இப்போதைய தமிழக அரசின் செயற்பாடுகள் பற்றி? நீங்கள் அரசுக்கு வைக்க விரும்பும் கோரிக்கை?

புதிய அரசைப் பற்றிப் பத்திரிகைகளும் அரசியல்வாதிகள் பலரும் பாராட்டுகின்றனர். மக்களும் புதிய அரசை வரவேற்றிருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செவ்வனே செய்கிறார்கள். அமைச்சர்கள் சிலர் அசுர வேகத்தில் செயல்பட்டுவருகிறார்கள். நலவாழ்வுத் துறை, அறநிலையத் துறை முதலியவை மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி தந்தால் மனதார வாழ்த்துவது மக்களின் கடமை யல்லவா?

இந்தப் புதிய அரசு நல்லாட்சியோடு மொழியுணர்வையும் முன்னெடுத்துச்செல்லவேண்டும். தமிழ்ப் படித்தவர்களுக்கு முன்னுரிமை தருதல் வேண்டும் என்பது என் விருப்பம்.

*உங்கள் எதிர்காலத் திட்டம்? இன்றும் இலக்கியப்பணி தொடர்கிறதா? நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கிறீரகளா?

எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் என்றார் பாரதி. ஒரு புறம் இலக்கியப்பணி; மறுபுறம் மற்றவர்க்கு எவ்வகையிலேனும் உதவுதல். மொழியை மறவாமல் ஆக்கப் பணிகளில் இறங்கவேண்டும்.

சென்னையை அடுத்த வாணுவம் பேட்டையில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் 46 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் செயலாளராக இருந்து ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையும் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அமரர் திரு பார்த்தசாரதி தலைவராக இருந்து சிறப்பாக நடத்திவந்தார். கொரனாவால் இரண்டாண்டுகள் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. திருக்குறள் போட்டிகளும் நடைபெறவில்லை. மரபுக்கவிதைப் போட்டியைக் கடந்த நான்காண்டுகளாக நடத்திவருகிறோம், மன்றத் தின் இப்போதைய தலைவர் முதுபெரும் கவிஞர் புதுவயல் செல்லப்பன் தம் துணைவியார் பெயரில் அமைத்த அறக்கட்டளை சார்பாகச் சிறந்த மரபுக் கவிதை நூல்களுக்கு 10,000, 7500.5000 அளித்துவருகிறார்.

மரபுக்கவிதை எழுதுவோரிடையே அது எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது கன்னிமரா வாசகர் வட்டத்தின் சார்பில், நூற்றாண்டு கண்ட தமிழ் அறிஞர்களைப் பற்றிக் கட்டுரை வாசிக்கச் செய்து அவர்களுக்கு நூலகம் சார்பில் பரிவுத் தொகை அளித்துவந்தோம். நூல் வெளியீடு. மற்றும் திறனாய்வுக் கூட்டங்கள் பல நடத்தியிருக்கிறோம். அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கக் கூட்டங்களை கன்னிமராவில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்தேன். கொரானாவால் அது சிறிது காலம் தடைப்பட்டு இருக்கிறது.

சாகித்திய அகாதெமி பொதுக்குழுவில் இருந்த போது சில கருத்தரங்குகளைச் சென்னையில் சிறப்பாக நடத்தியிருக்கிறேன். நடுவண் அரசு அண்மையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் புதிய பொறுப்பாக ஆட்சிக் குழுவில் என்னை இடம் பெறச் செய்திருக்கிறது. அதன் மேம்பாட்டிற்குரிய புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். செம்மொழி வரிசையில் மேலும் சில நூல்களைச் சேர்ப்பதற்கான சிந்தனையை நடுவண் அரசுக்குப் பரிந்துரைக்கும் எண்ணம் உள்ளது. இப்போது அதன் இயக்குநர் திரு சந்திரசேகரன் சிறப்பாகச் செயற்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

தினமலரில் தொடர்ந்து நூலக மதிப்புரை செய்துவருகிறேன். இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் மதிப்புரை செய்யப்பட்டுப் ’படிக்க வாங்க’ பகுதியில் இடம்பெற்றுள்ளன. நாளும் தமிழ் வளர்ப்பதே எம் பணி! அது தொடரும்!! நன்றி!!

சந்திப்பு: நாடன்