மீபகாலமாக தன் கணவனுடைய முக வெளிப்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் வந்து சேர்ந்திருப்பதாக கமலாக்ஷிக்குத் தோன்றாமலில்லை. ஆனால் அவற்றைப் பற்றிய சிந்தனை தனக்குள் பயத்தை உண்டாக்குமென்று அஞ்சி அவள் அவற்றின்மீது கவனத்தைச் செலுத்துவதற்குத் தயாராக இல்லாமலிருந்தாள்.

பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் கேட்க ஆரம்பித்திருந் தார்கள்: "தாமு அண்ணனுக்கு என்னாச்சு? கொஞ்ச நாட்களாவே முழுசா தோற்றமே மாறிடுச்சே! என்னாச்சு?''

எப்போதும் பிறரை ஈர்க்கக்கூடிய விதத்தில் இருக்கும் ஒரு இளைஞன் திடீரென அவலட்சணங்களைத் தேடிப் பெறுகிறான்!

இது எப்படி நடந்தது? பற்களைத் துலக்குவதில் வந்த அக்கறை யின்மையால், வெற்றிலைக் கறையும் பீடிக் கறையும் படிந்து பற்கள் இருண்டுபோய்க் காணப்பட்டன. முடி நீண்டு நீண்டு தோளில் விழுந்திருந்தது. கண்களில் எப்போதும் ஒரு கலக்கம் நிறைந்த பார்வை. நடைக்கு ஒரு அதிர்ச்சியின் பாதிப்பு... ஒவ்வொன்றையும் சிந்தித்தவாறு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றுகொண்டிருக்கும்போது, அந்த முகத்தைக் கண்களால் பார்ப்பதற்கு கமலாக்ஷிக்கு தைரியம் வரவில்லை.

Advertisment

அவனை "பிரியமானவனே' என்று அழைத்து இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டிருந்த நண்பர்கள், அவன் அழைத்தும் நடந்துசெல்வதை நிறுத்த வில்லை. சுமாரான வகையில் புகழ்பெற்ற ஒரு நிருபராக இருந்த காரணத்தால், எழுத்தாளர்கள் ஒரு காலத்தில் அவனை ஹோட்டல்களுக்கு உணவு சாப்பிட அழைத்துப் போவார்கள். "தாமுவுக்கு... அன்புடன்' என்ற வார்த்தைகளை எழுதி, தங்கள் நூல்களைப் பரிசாகத் தருவார்கள்.

அதெல்லாம் பழைய கதை. இன்று தொலைபேசி ஒலிப்பதில்லை. புத்தகங்களைச் சுமந்துகொண்டு யாரும் படிகளில் ஏறிவந்து நிற்பதில்லை. நிருபராக இருந்தவன் விமரிசகனாக மட்டும் என்று மாறியபோது, எழுத்தாளர்கள் அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

"எழுத்தாளர்களுக்கு நான் தேவைப்படாதவனாக இருக்கலாம். ஆனால், சாதாரண பொதுமக்களுக்கு நான் தேவைப்படுகிறேன்.'' அவன் அவலட்சணமான சிரிப்புடன் மனைவியை அழைத்துக் கூறினான். அவள் தன் கருத்தைக் கூறவில்லை.

Advertisment

எங்காவது ஒரு மரணம் நடந்துவிட்டால், அதை வாசனை பிடித்துத் தெரிந்துகொண்டு பிணத்திற்கு அருகில் உடனடியாகப் போய்ச் சேர்ந்துவிடுவான். பிணத்தை கிணற்றின் கரையிலோ குளியலறையில் விரிக்கப்பட்ட பாயிலோ படுக்கவைத்து எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டக் கூடிய பணியை அவனே ஏற்றெடுத்துக் கொண்டான்.

வளைவுகளிலும் சுருக்கங்களிலும் விரலை நுழைத்து எண்ணெய்யைத் தேய்ப்பான். தொடர்ந்து பிணத்தின் நாசித் துவாரங்களில் பஞ்சுத் துண்டுகளைத் திணிப்பது, கால்களின் பெருவிரல்களைச் சேர்த்துவைத்துக் கட்டுவது, நெற்றியில் ஈர விபூதியைக்கொண்டு மூன்று வரிகளைப் போடுவது, முதலில் கனமான துணியிலும்... பிறகு சிவப்பு நிற சில்க் துணியிலும் மூடுவது ஆகிய கர்மங்களை அவன் சர்வசாதாரணமாக ஏற்றெடுத்து நடத்தினான்.

சுடுகாட்டிற்கான பயணத்திலும் அழுது கலங்கிய கண்களுடன் அவன் பங்கெடுத்தான். தொடர்ந்து விதவைக்கு முன்னால்போய் நின்று தலையை குனிந்துகொண்டு துக்கத்தை வெளிப்படுத்து வான்.

இறந்தவனின் நல்ல குணங்களை கவலை தோய்ந்த குரலில் விளக்கிக் கூறுவான். இறந்த மனிதனுக்கும் தனக்குமிடையே இருந்த ஆழமான உறவைப் பற்றி பெருமையாகக் கூறுவான்.

குழந்தைகள் அவன் நடக்கும் பாதையில் நடக்காத நிலை உண்டா னது. சாமக்கோழி கூவும்போது பயந்து சாளரத்தின் கதவுகளைச் சத்தத்துடன் அடைக்கக்கூடிய பெண்கள், அவனுடைய முகத்தைப் பார்த்தும் குரலைக் கேட்டும் பயத்துடன் அறைகளுக்குள் ஓடி ஒளிந்துகொள்வார்கள். மரணம் அவனுடன் சேர்ந்திருக்கக்கூடிய நண்பன் என்று கமலாக்ஷியும் நம்ப ஆரம்பித்தாள்.

எப்போதும் வெளிறிப்போய்க் காணப்படும் அந்த முகத்திற்கு இறந்து கிடக்கும் மீனின் வெண்ணொளி எப்படியோ வந்துசேர்ந்தது.

அவனுடைய வியர்வைக்கு குளச் சேற்றின் வாசனை இருப்பதை மனைவி தெரிந்துகொண்டாள். இரவின் இரண்டாவது சாமத்தில் ஒரு அருள் வந்துவிட்டதைப்போல அதிர்ச்சியடைந்து எழுந்து, ஆவேசத்துடன் தன் படுக்கையில் ஏறி இணையும்போது, தன் சரீரம் ஒரு குப்பைத் தொட்டி என்றும், அதில் ஒரு நாற்றமெடுத்த நாய் அமிர்தத்தைத் தேடிக்கொண்டி ருக்கிறது என்றும் கமலாக்ஷிக்குத் தோன்றும். அவன் கடித்துக் கீறல் விழச் செய்வது தன் எலும்புகளை யல்லவா? அவளுக்கு வாந்தி யெடுக்க வேண்டும்போல தோன்றும். குப்பைத் தொட்டிகள் வாந்தி எடுப்பதுண்டா?

"நீங்கள் காதலர்களாக இருந்தீர்கள் அல்லவா? படிக்கும் இடத்திலிருந்துதானே உங்கள் இரண்டு பேருடைய காதலுறவு ஆரம்பமானது?'' பத்திரிகையாளர்கள் தன்னிடமும் அவனிடமும் இவ்வாறு கேட்டபோது, அவள் தலையைக் குலுக்கினாள். இல்லை என்று கூற முடியவில்லை. வேறொரு பிறவியில் நடைபெற்ற சம்பவங்களாக இருந்தாலும், அவற்றில் தானும் பங்கெடுத்தவளாயிற்றே!

இப்படிப்பட்ட கேள்விகள் அவளுடைய கணவனை மிகவும் உற்சாகப்படுத்தின. தான் முக்கிய கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் தோன்றக்கூடிய கதைகளை எத்தனை முறை கேட்டாலும் பேசினாலும் அவனுக்குப் போதுமென்றே தோன்றாது. தான் கதாநாயகனாக வலம்வரும் ஒரு திரைப் படத்தை உலகத்தின் அனைத்து மனிதர்களும் பார்த்துக்கொண்டி ருக்கிறார்கள் என்று அவன் நம்பினான். அவனுடைய கால்களுக்குக் கீழே காட்சிக்கான விளக்குகள் இருந்தன. வாய்க்கு முன்னால் கண்களுக்குத் தெரியாத மைக்ரோஃபோனும்...

நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் தெரிந்தவர்கள் யாரும் இறக்காத நாட்களில், அவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டு... சுகமும் துக்கமும் கலந்த சிந்தனையில் மூழ்கி, படுக்கையில் பல மணி நேரங்கள் ஒரு பிணத்தின் சலனமற்ற தன்மையுடன் படுத்திருப்பான். பணி செய்யும் இடத்திற்கு வாரக் கணக்கில் செல்லாமல் வீட்டில் இருந்த காரணத்தால், அவனுக்கு எப்போதோ பணி போய்விட்டிருந்தது. பல நேரங்களில் தான் முன்கூட்டியே எதிர்பார்த்தது ஒன்றுதான் அது என்பதை கமலாக்ஷி நினைத்துப் பார்த்தாள். ஆனால் அவனுடைய அலுவலகத்திற்குச் சென்று உண்மை நிலையை விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு அவளுக்குக் கூச்சமாக இருந்தது.

ஆசிரியையான மனைவி, குடையையும் சோறு வைக்கப்பட்டி ருக்கும் தூக்குப் பாத்திரத்தையும் தோள் பையையும் சுமந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்துசெல்லும்போது, பாதி வழிவரை அவனும் அவளைப் பின்பற்றி வருவான். போகக் கூடிய வழி வேறொன்று... அவள் சந்தேகப்படுவதற்கு வாய்ப் பில்லை என்று நினைத்து, அரை மணி நேரத்தில் நடை முடிந்து வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்து, தனிமையின் தேனைச் சுவைத்துப் பருகிய ஒரு சொர்க்கவாசியின் முழுமையான திருப்தியுடன் அவன் சாய்ந்து படுத்து பீடிகளைப் புகைப்பான்.

சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் இரண்டு கரங்களையும் பிடுங்கியெடுத்து நீக்கவேண்டுமென பல நேரங்களில் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. தான் எப்போதும் கடிகாரத்தின் அடிமையாக வாழ்க்கையை ஓட்டவேண்டுமா?

அதன் கரங்கள் தீர்மானிக்கக்கூடிய நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்து, குளியலறைக்குள் நுழையவேண்டும். சாப்பிட வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கவேண்டும். மனைவி யுடன் சேர்ந்து படுக்கவேண்டும். இறக்காதிருப்பதற்காக ரத்த அழுத்தத்திற்கான மருந்தை உட்கொள்ளவேண்டும்.

"எனக்கு எஜமானர்கள் இல்லை. நான்தான் இந்த உலகத்தின் எஜமானன்." அவன் சத்தமாகக் கத்தினான். அந்த உரத்த சத்தத் தைக் கேட்டு, வீட்டிற்கு முன்னால் கூடியவர்கள் திகைப்படைந்து விட்டார்கள்.

"தாமோதரன் நாயர் மது அருந்திவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்கிறானோ?" அவர்கள் ஒருவரோடொருவர் கேட்டுக்கொண் டார்கள். பாமர மக்களின் வசிப்பிடமாக மட்டுமே இருக்கும் இந்த உலகத்துடன் ஒரு கந்தர்வனான தன்னால் ஒப்புக்கொண்டு வாழ முடியாதென அவன் தனக்குள் கூறிக்கொண்டான். தான் கந்தர்வன் என்பதை தன் மனைவிகூட ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாள்?

ss

ஒரு காலத்தில் கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் நட்சத்திரமாக இருந்த தாமு அத்தான், இன்று யாருக்குமே வேண்டாதவனாக வடிவமெடுத்ததை நினைத்து கமலாக்ஷி கவலைப்பட்டாள். அவனை எந்த பயங்கரமான விஷம் தீண்டியது? இரவில் அவனுடைய கழுத்திற்கும் மார்பிற்கும் கரங்களுக்கும் குளச்சேற்றின் வாசனை இருப்பதை அவள் கண்டுபிடித்தாள். மரண அறைகளின் பலவிதமான வாசனைகள் அவனைப் பின்தொடர்கின்றனவோ? வாந்தியின்... சளியின்...

இறுதியாக வெளிவரும் மலத்தின் நாற்றங்கள் அவனுடைய அணைப்பிலிருந்து உண்டாயின.

"உங்களுக்கு என்னவோ நோய் இருக்கு. நாளைக்கே ஒரு டாக்டரைப் போய்ப் பாருங்க.'' கமலாக்ஷி கூறினாள். அவன் பிசாசுத்தனமாக சிரித்தான். "நீ எமனை டாக்டர்கிட்ட அனுப்பி வைக்கிறே?'' அவன் அவளிடம் கூறினான். தன்னை "எமன்' எனவும், "கொம்பு வைத்திருப்பவன்' எனவும் ஒரு இளம்பெண் அழைத்திருப்பதாக அவன் ஒருமுறை கூறியிருக்கிறான்.

"ஒரு வெளுத்த இளம்பெண்... அவள் தன் நண்பன்கிட்ட என்னைச் சுட்டிக்காட்டி.. "அதோ வர்றான் எமன். கொம்பு வச்சவவன்...'னு சொன்னாள். நான் குறுப்பு அண்ணனின் பிணத்தை எரிச்சிட்டு, மூழ்கிக் குளிச்சிட்டு வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்தேன்.''

அவன் ஏதோ தமாஷாகக் கூறியதைப்போல சிரித்தான்.

"அப்படி சொன்னதுக்குக் காரணம் என்ன?" கமலாக்ஷி பதைபதைப்புடன் கேட்டாள்.

"ஓ... இந்த இளம்பெண்களுக்கு என்ன காரணம் வேண்டிக் கிடக்கு? பதினேழோ பதினெட்டோ வயசு இருக்கற இளம்பெண் களுக்கு மத்தவங்களைக் கேலி செய்றதுக்குக் காரணம் வேணுமா என்ன?''

"தாமு அத்தான்... இனி மரணம் நடக்கற இடத்துக்கெல்லாம் போகவேணாம்.'' அவள் கூறினாள்.

"போகாம இருக்க முடியாது. வேற யாருக்கும் பிணத்தைக் குளிப்பாட்டத் தெரியாது. இறந்தது என்னோட நண்பர்கள்னா, போகாம இருக்க முடியுமா? என் பிணத்தை அடக்கம் செய்றதுக்கு அவங்களும் வருவாங்கள்ல?" அவன் கேட்டான்.

தன் கணவனின் பேச்சு சிந்தனையைத் தூண்டக்கூடியதுதான் என்று கமலாக்ஷிக்குத் தோன்றியது. அவனுடைய விதவையாக இருக்கவேண்டுமென்ற ஒரு விருப்பம் ரகசியமாகவாவது மனதில் தோன்றியது. அவனுடைய மனைவி என்ற வகையில் தான் கேலிப்பொருளாக மாறுவதைப்போல அவள் சமீபகாலமாக உணர ஆரம்பித்திருந்தாள். தான் யாரிடமும் நெருங்காமல் சொந்த காரியங்களைப் பார்த்துக்கொண்டு மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள்!

கணவனோ... மரணமடைந்த மனிதர்களின் உறவினன் என்று சிறப்பிக்கப்படும் தகுதியைக் கொண்டவன்! யாருடைய வீட்டிற்குள்ளும்... எந்த நேரத்திலும்... சுப வேளைகளிலும்... கெட்ட வேளைகளிலும் சனியைப்போல நுழைபவன்!

தன் கணவன் கண்டகச் சனியின் அவதாரமென கமலாக்ஷி தனக்குள் கூறிக்கொண்டாள். அவனால் தனக்கு என்ன பயன்? தன்னுடன் சேர்ந்து ஏதாவதொரு இடத்தில் அமர்ந்து இனிமையாகப் பேசிக்கொண்டிருப்பதற்கு அவன் தயாராக இல்லை. மரணத்தின் இயல்பைப் பற்றியும், குடும்ப உறுப்பினர் களின் மரணத்தைப் பற்றியும் மட்டுமே அவன் தன்னுடன் பேசியிருக்கிறான்.

முன்பு... புதிய மணமக்களாக இருந்தபோது, இலக்கியப் படைப்புகளைப்பற்றி அவன் பேசுவான். புத்தக விமர்சனத்தை மாத இதழ்களுக்கு விற்று, நூறையோ... நூற்றைம்பதையோ சம்பாதித்துக் கொண்டிருந்தான்.

ஒருமுறை ஓணம் சிறப்பிதழில் ஒரு கட்டுரை பிரசுரமாகி வந்தது. அவனுக்கு நான்கு நூறுகள் மணியார்டராக வந்தது. தனக்கு ஒரு சில்க் புடவையை வாங்கித் தரும்படி அவள் கெஞ்சினாள். அது எதுவுமே நடக்கவில்லை. அதே இரவில் நண்பர்களுடன் மதுக் கடைக்குள் நுழைந்து அவன் குடித்தான். காலியான பாக்கெட்டு டனும், வாந்தியின் நாற்றத்தைக் கொண்ட சட்டையுடனும் இரவு ஒன்றரை மணிக்கு வீட்டிற்கு வந்து நுழைந்தான்.

"என்னைத் தொடக்கூடாது.'' அவள் கோபத்துடன் கூறினாள். அவளது கோபம் நிறைந்த சீறல் அவனை பயமுறுத்தியது. "நீ ஒரு பெண் நாகம்...'' அவன் கூறினான்: "நீ என் வாழ்க்கையைக் கடிச்சி, விஷமயமாக்கிட்ட."

"அந்தப் பெண் என்னை அடிமையாக்கி வச்சிருக்கா.''

அவன் மது அருந்தும் இடத்திலிருந்த அறிமுகமற்றவர்களிடம் கூறினான். வீணாக கண்ணீரை வழியவிட்டான். "அந்தப் பெண் பழைய கஞ்சி, வெங்காய சட்னி, மீன் குழம்பு வச்சு என்னை அடிமைப்படுத்திட்டா. என் மனம் வெறும் அடிமை... எனக்கு விடுதலை இல்லை. என் முழு பலத்திற்கும் விடுதலை இல்லை...'' அவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான்.

"மனைவி தன்னோட சம்பளத்தை வச்சு காப்பாத்தறாள்ல?

உனக்கு அணியறதுக்கு வேட்டி வாங்கித் தர்றாள்ல? இனி என்ன வேணும்?'' ஒரு நண்பன் கேட்டான். அவனைத் தாக்கவேண்டு மென்ற விருப்பம் குடிகாரனுக்கு இருந்தது. அவன் தன்னு டைய மனைவியின் கள்ளக் காதலனாக இருப்பானோ?

குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத்தரும் போர்வையில் அவள் செல்வது... அவனை ஏதாவது ஹோட்டலின் அறையில் பார்ப்பதற்காக இருக்குமோ? தன் மனைவி... பதினைந்து வருடகாலம் பத்தினிக்கோலம் பூண்டு, உலகமே நேசிக்கக்கூடிய வகையில் உலவிக்கொண்டிருக்கும்... தன் மனைவி வெறுமொரு விபச்சாரியா? கோப நெருப்பு ஒளிரும் போது... அடிப்பதற்காக கையை ஓங்கும்போது.... கமலாக்ஷி கூறினாள்:

"இன்னிக்கு வைற்றில என்ற இடத்தில வர்க்கி மாஸ்டர் இறந்துட்டாரு. மத்தியானம் இறந்திருக்காரு...''

உடனடியாக உணர்ச்சி மாறுபாட்டுடன் அவன் செருப்புகளை அணிந்து வெளியே சென்றான். "நான் போகலைன்னா... ஆளுங்க தப்பா நினைப்பாங்க.தேவாலயத்திற்கு பிணம் வர்றப்போ, நான் அங்க போய் சேர்ந்திருக்கணும். முடிஞ்சா... இறுதிப் பயணத்தில பங்கெடுக்கணும்.'' அவன் கூறினான்.

மரணச் செய்திகள் அவனுடைய நரம்புகளை அமைதியாக் கின. அவனுக்கு தைரியம் கொடுத்தது மற்றவர்களின் தீரா இழப்பு கள்தான்.

ஒருநாள் காலையில் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்னர் அவன் எழுந்தான். குளியலறைக்குள் நுழைந்தான். குளியலின் சத்தத்தைக் கேட்டு, மனைவி எழுந்து வந்தாள்.

"நீ தொலைபேசி ஒலிச்சதைக் கேட்கலியா? காக்கநாட்ல ஒரு மரணம்... நான் உடனடியா கிளம்பறேன்.''

அவன் ஜிப்பாவையும் இரட்டை மடிப்பு வேட்டியையும் வேகமாக அணிவதைப் பார்த்தவாறு மனைவி அசைவே இல்லாமல் நின்றிருந்தாள்.

"எனக்கு காப்பி வேண்டாம்.'' அவன் கூறினான்.

"காக்கநாட்ல யார் இறந்தது?'' கமலாக்ஷி கேட்டாள்.

"உனக்குத் தெரியாத ஒரு ஆள்... என் நண்பனோட தந்தை.

புற்றுநோய் இருந்தது. கொடுத்து வச்சவர்! வீட்ல படுத்த நிலையி லேயே இறந்துட்டாரு.'' அவன் சிரித்துக்கொண்டே கூறினான்.

மருத்துவமனைகளுக்குச் சென்று பிணங்களைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லாமலிருந்தது. மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே பிணத்திற்கான சொந்தக்காரர்கள் என்ற உரிமையை உறவினர்களும் நண்பர்களும் பெறமுடியும்.

மருத்துவமனையின் நடைமுறைகள் முடிந்து வெளியே வரும் சரீரத்தை மற்ற சடங்குகளைச் செய்து, சவக்குழிக்கோ சிதைக்கோ தயார் செய்வது உறவினர்களின், நண்பர்களின் கடமை. அந்தச் சூழலில்தான் தான் எல்லாருக்கும் தேவைப் படுபவனாக ஆகிறோமென்ற விஷயத்தை தாமு அத்தான் அவளிடம் கூறியதை அவள் நினைத்துப் பார்த்தாள்.

"இப்போ பேருந்து கிடைக்குமா?'' கமலாக்ஷி கேட்டாள்.

"பேருந்து இல்லைன்னா... நடக்கலாம். இந்த நேரத்துல நடக்கறது சுகமா இருக்கும்.'' அவன் கூறினான்.

"நாய்ங்க கடிக்காம பார்த்துக்கணும்...'' அவள் கூறினாள்.

அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

"காசு வேண்டாமா?'' மனைவி கேட்டாள்.

"இருந்தா தா...''

அவள் அவனுக்கு கசங்கிய இரண்டு பத்து ரூபாய் நோட்டு களைக் கொடுத்தாள். அவனுடைய உருவம் மறைவதுவரை அவள் சாளரத்தின் கதவிற்கருகில் நின்றிருந்தாள்.

சாலையிலிருந்து பேருந்துகளின், சரக்கு வாகனங்களின் சத்தம் உயர்ந்து ஒலித்தது. ஆகாயம் வெளுக்க ஆரம்பித்தது. சாலையில் மக்களின் ஆரவாரத்தை அவள் கேட்டாள். என்ன நடந்தது? குடிகாரர்கள் சண்டை போடுகின்றனரோ? நூறடி தூரத்தில் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் அவள் கண்களைச் சுருக்கிக்கொண்டு தூரத்தை நோக்கி உற்றுப்பார்த்தாள்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. அதை எடுப்பதற்கும், அதன் செய்தியைக் காதில் கேட்பதற்கும் அந்த நிமிடத்தில் கமலாக்ஷிக்கு பயமாக இருந்தது.

____________________

மொழிபெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக நான்கு மாறுபட்ட மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

"கோழி' கதையை எழுதியவர் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் செவாலியே விருது பெற்றவரும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான எம். முகுந்தன். கோழிகளை நேர்த்திக்கடனாக நேர்ந்தவர்கள், அவற்றை பலிகொடுப்பதைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட வித்தியாசமான கதை. சில பக்கங்களே வரக்கூடிய ஒரு சிறுகதையில் இவ்வளவு கதைமாந்தர்களா! உண்மையிலேயே முகுந்தன் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.

கதையின் இறுதிப்பகுதி நம் இதயத்திற்குள் நுழைந்துவிடும்.

"இருட்டிற்குமுன்பு' கதையை எழுதியவர் கடந்த ஐம்பது வருடங்களாக மலையாள இலக்கியத் துறையில் சிறுகதைகளின் அரசராக ஆட்சிசெய்பவரும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான டி. பத்மநாபன்.

ஒரு வயதான மனிதரையும், அவர் எதிர்பாராமல் சந்திக்கும் ஒரு இளைஞனையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முழுக் கதையையும் வாசித்து முடித்தபிறகு, இனம் புரியாத ஒரு சோகம் நமக்குள் உண்டாகும் என்பது உறுதி.

"காக்கநாட்டில் ஒரு மரணம்' என்னும் கதையை எழுதியவர் மலையாளப் பெண் எழுத்தாளர்களின் திலகமும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. தாமோதரன் நாயர் என்ற மாறுபட்ட குணத்தைக் கொண்ட கணவனையும், அவனை அனுசரித்து வாழ்க்கையை நடத்துவதற்காக கடுமையாகப் போராடும் கமலாக்ஷி என்ற அருமையான மனைவியையும் கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட கதை.

இப்படிப்பட்ட... நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு கருவை வைத்து கதையை மிகவும் சிறப்பாக எழுதிய மாதவிக்குட்டிக்கு ஒரு பூச்செண்டு!

"பளிங்கு மாளிகை' கதையை எழுதியவர் பிரபல திரைப்பட கதாசிரியரும், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான பி. பத்மராஜன். காதலில் தோல்வியடைந்து, கவலையில் மூழ்கியிருக்கும் ஒரு இளைஞனை மையக் கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட கதை. பத்மராஜனின் ஆழமான முத்திரையை கதை முழுக்க நாம் உணரலாம்; வியக்கலாம்.

இந்த நான்கு கதைகளும், இவற்றை வாசிக்கும் உங்கள் அனைவரையும் நான்கு மாறுபட்ட உலகங்களுக்குள் கைகளைப் பிடித்து அழைத்துச்செல்லும்.

"இனிய உதயம்'மூலம் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா