கிறிஸ்த்தவம் இரத்தக்கறை என்னும் நூலை, இலக்கிய நண்பர் பன்முகக் கலைஞர் மு.ஞா.செ.இன்பா, ஆய்வு நூலாகத் தமிழுலகிற்குத் வழங்கியிருக்கிறார். ஆய்வு என்றால் சாதாரண ஆய்வல்ல; சிந்தனா உலகை அதிரவைக்கும் அதிரடி ஆய்வு.

ஆய்வென்னும் சொல்லின் ஆழமான அர்த்தம் உணர்த்தும் நூல்தான், இந்த கிறித்துவ இரத்தக்கறை. தன் உடல் முழுவதும் ரத்தப்பொட்டுக்களைச் சுமந்த ஏசுவின், முள்கீரிடம் சூடிய தலைப்பாகையில் இருந்து நெற்றித் தீற்றலாய் ரத்தம் வழிந்தோடி கிறித்தவத்தின் மேல் படிந்துள்ள மதக்கறைகளை எல்லாம் கழுவுகிறது.. எழுத்தாளர் இன்பாவின் பேனா முனை மூலம். கரு மை யிட்டு எழுதவில்லை. சிவப்பின் தீற்றல்களாய் மயில்தோகைக்கு பதில், கூர் எலும்புகளின் நுனிக்காம்பு கொண்டு, புத்தகக் கல்வெட்டாய்ச் செதுக்கியிருக்கிறார் சிற்பியாய் இன்பா.

ஆகச் சிறந்த இலக்கியத்தின் அடிப்படை வாசனையை இந்தப் புதினத்தின் ஒவ்வொரு வரிகளிலும் நுகரலாம். ஒரு நெடு நாளைய கனவின் கலையாத துவக்கம். இன்னமும் மூடிய விழிகளுக்குள் கனவாகவே சிறைப்பட்டிருக்கும் மெய் என்னும் காட்சியின் தோற்றம். அதுதன் இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம்.

மண்புழுவைக் குச்சியில் தட்டி வலியில் துடிப்பதைப் பார்த்து உவகை கொள்ளும் உலகின் மனநிலையில் ......! கிறிஸ்தவத்தின் அத்தனை கொடூரக் கதைகளையும், ரத்தத் தீற்றல் களையும் உள்ளடக்கியிருக்கிறது இப்புதினம் கிறிஸ்த்தவம் என்ற மதத்தின் கரு அகிலத்தின் கருவறையில் வளரத் தொடங்கியது என்ற வார்த்தையை நூலாசிரியர் முன்னெடுக்கும் போதே, இயேசு என்பவர் கடவுளாக மட்டும் வரிக்கப்படவில்லை. ஏசு என்ற அந்த இளைஞன் ஒரு நாத்திகவாதியாகவும், தன் கொள்கைகளைச் செப்பனிடும் மேய்ப்பராக வும், நிலத்தைக் கீறித் தன்னைப் புதைத்துக் கொள்ளும் விதையாகவும், தெரிகிறார்.

Advertisment

இந்த நூலின் வழி நெடுகிலும் புரட்சியின் பேரிரைச்சல் கேட்கிறது.

கிறிஸ்தவத்தின் பிறப்பினையும் அது இயேசுவிற்குப் பிறகு மோசேவின் கைகளில் குழந்தையாய் தவழ்ந்ததையும், பின் அந்த கைகள் இயற்கையின் விதி வசத்தால் இறுதி இளைப்பாற்றலைத் தொடங்கியதும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதைக் கிறிஸ்தவம் மீண்டும் அநாதையாக்கப் பட்டது என்ற வரிகளில் உணர வைக்கிறார். வரிசையாக வரலாறுகள் உலகம் அழிந்த போது இந்து மதத்தில் மனுவினாலும், மனுவும் கிருஸ்தவ மதத்தில் நோவாவாலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதும் சுவையுடன் சொல்லப்பட்டு இருக்கிறது.

விவிலியம் என்னும் மறைநூல் யூதர்களின் உருவாக்கத்தையும் அவர்களின் வரலாற்றையும் கூறிட, யூதர் குலம் ஆபிரகாம் லிங்கனை தங்கள் விசுவாசத் தந்தையாய் ஏற்றுக்கொண்டதும், வரலாற்றில் அநேக சம்பவங்களின் தொடக்கத்தை அறிந்து கொள்ள நாம் அனைவரும் விரும்புவது இயல்பே. அந்த பசிக்கு தீனியிட்டு இருக்கிறது இன்பாவின் கிறிஸ்தவ ரத்தக்கறை மீட்பரான இயேசுவின் பிறப்பு தினத்தில் வானத் தில் பேரழகுடன் தோன்றிய வால் நட்சத்திரத்தையும், கூட்டு நட்சத்திரங்களின் வர்ண ஜாலங்களையும் பரவசத்தோடு கண்டு களித்தவர்களைப் பற்றி குறிப்பிடும் போது பருவ மங்கையை நோட்டமிடும் அடலேறுகளைப் போலவும், விண்மீனின் பேரழகில் முகில்கள் முகவரி தொலைத்து அலைந்தன என்று அந்த நாளின் வியப்பை காதலுக்கு ஒப்பீடாகவும் வர்ணிக்கிறார் ஆசிரியர்.

Advertisment

f

எருசலேமின் அன்றைய நிலைமை முள்ளிவாய்க்கால் அவலத்தை ஒத்து இருந்திருக்கிறது. கால மாற்றங்களில் கிறிஸ்தவத்தின் வழிபாட்டு முறைகளையும் ஒவ்வொரு முறையும் அது நாகரீகத்தின் விளிம்பில் கோட்பாடுகளை ஆடை என மாற்றிக் கொண்டதை மதம் ஒரு மாய விளையாட்டுக் களமாகவே இருந்திருக்கிறது என்று வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறார் எழுத்தாளர்.

இயேசுவின் இளமைக்கால மறைக்கப்பட்ட பக்கங்களை விளக்கமாகவே சுமந்து வந்திருக்கிறது, மடமைகளில் இருந்து மாறுபட்டு நான் என்னும் அகந்தை ஒழித்து எங்கும் அன்பு ஒன்றே நிலையானது என்ற ஆயுதம் ஏந்திய புரட்சியாளனாகவும், அரசியலில் மதம் என்னும் பெயரில் நடத்தப்பட்டு வந்த மூடப்பழக்கங்களையும் களைந்தெறிய வந்த போராளியாகவும் இயேசு வலம் வருகிறார். அவரின் உடலில் பூத்த ரத்தப் பூக்களின் வாசம் வார்த்தைகளாய் தெரித்திருக்கிறது.

அன்பை அள்ளிக் கொடுக்க அமைத்த ஆலயத்தின் வாசலும் உட்புறமும் வெறும் ரத்தச் சிதறல்களையும் ஒன்று மறியா ஐந்தறிவு ஜீவன்களோடு குழந்தைகளும் தங்களை குருதிச் சான்றாக பலியானதைக் கண்டு கோவிலிற்குள் காலெடுத்து வைக்கவே அவரின் ஆன்மா தயங்கியதாக அரசியலில் சிக்கிய மதத்தின் வன்மத்தை விவரித்து இருக்கிறார் புத்தகத்தில் !

, நட்பு என்ற சிகரம் நோக்கி இயேசு பார்வை பதிந்தது மக்தலா மரியாளிடம் தான். இயேசுவும் மக்தலா மரியாள் எதிர்பார்ப்பு இல்லாத அன்பைக் கொண்டு இருந்தார்கள். . நீண்ட நெடுதூரப் பயணம் மேற்கொண்டு களைத்த இயேசுவின் பாதங்களை தைலம் கொண்டு தன் கூந்தலால் துடைத்தும், இயேசுவின் அன்பின் கொள்கைகளை பரப்புவது ஒன்றே கடமையென்று இயேசு என்ற அன்பின் அரசனுக்கு படைத்தளபதியைப் போல திகழ்ந்தாள். ஆனால் கிறிஸ்தவ மதத்தைக் காக்க அவர்கள் ஒவ்வொரு விநாடியும உயிர் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது ஒரு மனிதனின் வெற்றி கண்டு பொறாமை கொள்பவர்கள் அம்மனிதனின் ஒழுக்கத்தின் மீதுதான் முதல் கல்லை எறிவார்கள். அதற்கு இயேசுவும் மரியாளும் விதிவிலக்கல்ல என்பதை செல்சஸ் எழுதிய புத்தகம் உணர்த்தியது.

கறுப்பினத்தைச் சேர்ந்த எடிசா மன்னனின் மனமாற்றம் அவரின் உடல் நலம் பெற சீடனிடம் தீங்கை இனி நீ காணாதிருப்பாய் என்ற இயேசுவின் கையெழுத்தைக் கண்டவுடனேயே உக்காமா குணம் பெறுவதும் அதன் பின் இயேசுவின் அடிமையென்று தன்னை அறிவித்துக் கொண்டு இயேசுவை கடவுள் என்று அங்கீகரித்த முதல் மன்னன் உக்கமா முதல் நாடு எடிசா இப்படி ஏகப்பட்ட முதல்களின் பிறப்பை கிறிஸ்தவ ரத்தக்கறை கொண்டிருக்கிறது.

கால மாற்றங்களில் கிறிஸ்தவத்தின் வழிபாட்டு முறைகளையும் ஒவ்வொரு முறையும் அது நாகரீகத்தின் விளிம்பில் கோட்பாடுகளை ஆடை என மாற்றிக் கொண்டதை மதம் ஒரு மாய விளையாட்டுக் களமாகவே இருந்திருக்கிறது என்று வார்த்தைகளில் ஜாலம் காட்டுகி றார் எழுத்தாளர்.

கற்பழிப்பு கடத்தல் பாலியல் கொள்ளை ஊழல் இவைகளுக்கு அன்றைய மன்னன் ஹமுராபியின் தண்டனைகள் என்ன தெரியுமா அடிக்கு அடி கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், மரணதண்டனை. இப்போதைய நடைமுறையில் இந்த தண்டனைகளைத்தான் அகில உலகமும் வரவேற்கிறது மதத்தின் மயிலிறகுகள் நிம்மதிப் பாட்டு எழுதுவதற்கு பதில் மனித ரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறியது என்று இரண்டே வரிகளில் உணர்த்தி மக்கள் பட்ட வேதனைகளையும் கண்முன்னே நிறுத்திவிடுகிறது இன்பாவின் சில வார்த்தைப் பிரகடனங்கள். நம்மை அந்தக் காலத்திற்கே கூட்டிப் போய்விடுகிறது.

யூதர்களின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்ட பஸ்கா பற்றிய விழாக் குறிப்புகள், அகிலத்தின் மூத்த குடியென ஒப்புக்கொள்ளப்பட்ட நாகர்களின் திருவிழாப் பற்றிய செய்திகள் என பலவும் அணிவகுக்கின்றன. இயேசுவால் பயன்படுத்தப்பட்ட கைத்தடி இன்றும் புனித பொருளாகப் பயன்படுகிறது. அது இருக்கும் இடமும் இந்த நூலில் தெளிவாகக் கொடுக்கப்பட்டு உள்ளது.

இயேசுவை எதிர்த்து பின் ஏற்றுக்கொண்ட உக்காமா, பவுல் முதல் ஆதரித்த காரல்மார்க்ஸ் ஸ்தேவான் வரையிலும் பதிவுகள் நீண்டு கொண்டே போனாலும் ஸ்தேவானின் கொடூரமான சாவு எத்தனை கல் நெஞ்சத்தையும் கரைத்துவிடும், அதிலும் தன் தலை சற்று நேரத்தில் வெட்டப்படும் என்று தெரிந்தும் இறையை வணங்கிவிடுவேன் என்று இயேசுவின் பெயரைச் சொல்ல, அந்தக் கணமே தலை துண்டாகிப் போய்... அந்த உடலின் துடிப்பை வாசிக்கும்போது நமது உடலும் ஒருமுறை உணர்கிறது. அத்தனை உயிரோட்டமான எழுத்துக்கள்.

மேலும் மேலும் பக்கங்களை புரட்டச் சொல்லி தூண்டுகிறது புதைந்து போன வரலாறு. ஆயிரம் அதிசயங்களைத் தன்னுள் வைத்துள்ளது. மரியாளும், மகதலேனாவும் கிளியோப்பட்ராவும் கண்முன்னே வந்தாடினார்கள். மக்தலா மரியாளின் பிறப்பின் ரகசியம் கூறுகிறார் ஆசிரியர் வழியாக பிலோ.

மனித நேயத்திற்கு உதவாத எந்த மதச் சடங்கும்

எனக்குத் தேவையில்லை. ஜீவகாருண்ய சட்டத்தை முறைமைப் படுத்திய அசோகரும், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்தரும் கூட கிறிஸ்தவ ரத்தக்கறையின் வழியே பயணிக்கிறார்கள். மனுவும், நோவாவும் எப்படி உலகை உயிர்ப்பித்தார்களோ அதேபோல் விவிலியத்தில் ஏழைப் பெண் ஒருவர் இயேசுவிற்கு அளித்த கொடையைப் போல புத்தருக்கும் ஏழைப் பெண் ஒருத்தி கொடை அளிப்பதைப் போன்ற ஒரே மாதிரி நிகழ்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எழுத்தாளருக்குள் ஒரு கை தேர்ந்த ஆசிரியனும் உள்ளான், தேடலை தொலைக்காத மாணவனும் உள்ளான். அதன் வெளிப்பாடுதான் இந்த கிருஸ்தவ ரத்தக்கறை என்னும் வலுவான நூல். பேனாவில் மை ஊற்றவில்லை .. மதம் என்னும் காட்டேறி மனிதனைக் கொன்று குடித்த குருதியை ஊற்றியிருக்கிறார்.

அதன் வாடை அன்று எருசலேமில் வீசியதைப் போல் பக்கங்களிலும் சுவாசிக்க முடிகிறது. இயேசுவை தாண்டி மரியாளின் வழிகாட்டலையும் அரசியல் மற்றும் மதத்தின் பயத்தில் துறந்து புலியின் பற்களுக்குப் பயந்து ஆற்றில் தஞ்சம் புகுந்த முதலையின் வாயில் அகப்பட்ட மானின் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதை வருத்தத்தோடு பதிவு செய்கிறது ஆசிரியரின் எழுதுகோல்.

மிகநீண்ட நாளாகவே இருந்த சர்ச்சை ஆனால் தற்போதைய கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் இந்திய வருகையை மறைத்தனர். ஆனால், மோசேவின் வருகையால்தான் கிறிஸ்தவம் உள்ளே நுழைந்தது என்பது தற்போதைய வரலாறு. என்ன காரணத்தினால் இயேசுவின் இந்திய வருகை இருட்டடிக்கப்பட்டது என்று புரியவில்லை.

அன்னை மரியாவின் கல்லறை இந்தியாவில் இருப்பதும், இயேசுவால் பயன்படுத்தப்பட்ட கைத்தடி இன்றும் புனித பொருளாகப் பயன்படுவதும் அது இருக்கும் இடமும் இந்த நூலில் தெளிவாகக் கொடுக்கப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவத்தினை விற்பனை பொருளாக்கி யவர்களுக்கான வார்த்தை சவுக்கை நீட்டிச் சுழற்றியிருக்கிறது கிறிஸ்தவ ரத்தகறை. போப்பின் அரண்மனையில் நடைபெற்ற காமக் களியாட்டம், சிறைபட்ட மனைவிகள் வதைபட்ட கணவர்கள் என பல நிகழ்வுகள் துயரக்கதைகளைச் சொல்லியிருப்பதாக பெட்டர்ச் கருத்துகளை உணர முடிகிறது. திருநங்கைகள், பாலைவன கிறிஸ்தவர்கள், கிபி 250 கூட்டாக மன வசிய முறையில் தற்கொலை செய்து இறந்தவர்கள், மதம் மாற மறுத்த இசுலாமியர்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல், கலீரா என்ற கிராமமே அழிக்கப்பட்ட துயரம். இறந்து போனவனின் எலும்புக்களை 30 ஆண்டுகள் கழித்து தோண்டி மீண்டும் எரித்து இன்பம் கண்ட சைத்தானின் குணம் என அனைத்தையும் பட்டியில் இடப்பட்டு இருக்கிறது.

இயேசு சொல்லாத திரித்துவக் கொள்கையைக் கிறிஸ்துவத்தின் முதன்மைப் பத்தியில் அமர வைத்து மக்கள் தலையில் மிளகாய் அறைக்கின்றன கிறிஸ்தவத் திருச்சபைகள், எதைத் தின்றால பித்தம் தெளியும் என்று வறுமையில் வாடும் ஏழையின் வீட்டு ஒட்டுச் சட்டியில் வைரத்தில் பெரியலையும், தங்கத்தில் குழம்பையும் போல பணம் என்னும் கூர் அலகால் கொத்திக் கொண்டு போகும் மத கழுகுகள். சமுதாய களத்தில் முதுகில் தட்டி ஒட்டப்பட்ட கிறிஸ்த்தவ குதிரை பாரமென மூடநம்பிக்கையும் சுமந்து ஓடத் துவங்கியது. அன்பே முதன்மை என்ற இயேசு கோவிலுக்கு வெளியே நின்று தன்னை உள்ளே அழைக்கமாட்டார்களா ? என ஏங்கிக் கொண்டிருக்கி றார் ரத்தக் கண்ணீரோடு !

புத்தகத்தின் ஆசிரியரும், நண்பருமான திரு.மு.ஞா.செ. இன்பா அவர்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தும் தற்போதைய கிறிஸ்த்துவம் இயேசு சொன்ன அன்பென்னும் சொல் மறந்து போனதை மிகவும் காட்டமாக அதேநேரம் ஆணித்தரமான ஆதாரங்களோடும் குறிப்பிட்டு இருக்கிறார். நிச்சயம் இந்த வரலாற்றை எழுத நிறைய மெனக்கெனடல்கள் இருந்திருக்க வேண்டும். கிறிஸ்தவம் அன்பை போதித்தது இயேசு சன்மார்க்கத்தை போதித்தார் என்பது மறக்க இயலாத ஒன்று. அதையும் தாண்டி நல்ல கடவுள், தலைவன், புரட்சியாளன், வீரன், நண்பன் என்று பல்வேறு அவதாரங்களை ஏசு எடுத்ததை இப்புதினம் விளக்குகிறது.

இந்த அதிரடி ஆய்வு நூல், பழமை மடங்களின் இருட்டுச் சுவர்களை உடைத்தெரிகிறது. வாசித்துப் பாருங்கள்.