இளைஞன் கூறினான்:
"உங்களை நான் கவனிக்க ஆரம்பிச்சு ரெண்டு... மூணு நாளாகிருச்சு. காலையில வரக்கூடிய முதல் பேருந்துல நகரத்திலிருந்து வருவீங்க. கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்திருந்துட்டு, எல்லா திசைகள்ல யும் சுத்தித் திரிவீங்க. மீண்டும் இங்கவந்து... வெறுமனே உட்கார்ந்து... கேட்கறேன்னு எதுவும் நினைக்காதீங்க. உங்க நோக்கம் என்ன? நீங்களோ இந்த இடத்தைச் சேர்ந்தவரில்ல. உங்களுக்கு இங்க தெரிஞ்சவங்க இருக்கறது மாதிரியும் தெரியல. இருந்தாலும் நீங்க...
இங்க ஏதாவது வேலைதேடி வந்திருக்கறதுக்கு வாய்ப்பில்ல. அதுக்கான வயசெல்லாம் எப்பவோ தாண்டிப் போயிட்டதே! அதையும் தாண்டி... இங்க... இப்போ வேலை எதுவுமில்ல. புதிய ஆளுங்க பழைய நிறுவனத் தோட கட்டடங்கள் வரை இடிச்சு நீக்கிக் கிட்டிருக்காங்க. நாளை அவங்க இங்க என்ன ஆரம்பிக்கப் போறாங்கன்னு யாருக்குமே தெரியாது. அவங்க எங்கிருந்தோ வர்றவங்க! இங்க இருக்கறவங்களோட அவங்களுக்கு எந்தவொரு உறவும் இல்ல. அப்படி இருக்கறப்போ...
ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட சொல்றேன்னு கேட்டா... கடந்த ரெண்டு நாட்கள்ல உங்களோட கொஞ்சமாவது பேசியியிருக்கக்கூடிய ஆள் நான்தானே? அதனாலதான்...''
அது ஒரு சிறிய ஹோட்டலாக இருந்தது. ஹோட்டல் என்று கூறினால்...
சற்று பெரிய ஒரு தேநீர்க் கடை... கிராமப் புறத்தின் அழகையும் சுத்தத்தையும் கொண்டிருந்த ஒரு வாசலின் ஓரத்தில், ஆளே இல்லாத ஒரு மூலை யில் கிழவர் அமர்ந்திருந்தார். இளைஞன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாரே தவிர, அவனுடைய கேள்விகளுக்கு கிழவர் எந்தவொரு பதிலையும் கூறவில்லை.
தொடர்ந்து கிழவர் எழுந்து சாலையின் ஓரத்திலிருந்த சுவரை நோக்கி நடந்தார். போகும்போது அவர் இளைஞனையும் அழைத்தார்.
"வா...''
இளைஞன் அவர் கூறியபடி அவருடன் சேர்ந்து சென்றாலும், கிழவர் முதலில் அவனிடம் எதுவும் கூறவில்லை. தூரத்திலிருந்த ஏரியைப் பார்த்தவாறு, ஒரு கனவில் இருப்பதைப்போல கிழவர் நின்றார்.
மழைக் காலத்தின் பலத்தால் ஏரி நிறைந்து நின்றிருந்தது. கிழவர் மெதுவாக கண்களைப் பின்னோக்கித் திருப்பி இளைஞனிடம் கேட்டார்:
"என்ன வயசு நடக்குது?''
கேள்வியின் பொருள் தெரியாமல் இளைஞன் திகைத்து நின்றிருக்க, கிழவர் மீண்டும் மிடுக்கு நிறைந்த குரலில் கூறினார்:
"பயப்பட வேணாம். சொல்லு... வயசு என்ன ஆச்சு?''
அப்போது இளைஞன் கூறினான்:
"இருபத்தாறு...''
கிழவர் சற்று கவலை நிறைந்த குரலில் கூறினார்:
"இல்ல... உங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாது. நீங்கள்லாம் பிறக் கறதுக்கு முன்னவே நடந்தது....''
இளைஞன் குழப்பத்துடன் நின்றிருக்க, அவனைத் தன்னுடன் சேர்த்துப் பிடித்தவாறு... தூரத்தைச் சுட்டிக் காட்டிக்கொண்டு கிழவர் கூறினார்:
"அந்த ஏரியைப் பார்த்தேல்ல?''
இளைஞன் கூறினான்:
"நான் எப்போதும் பார்க்கறதுதானே? இளம் வயசுல இருந்தே...''
கிழவர் கூறினார்:
"அது ஒரு மனிதரால உண்டாக் கப்பட்டது. அப்படியில்லாம தெய்வம் உண்டாக்கியதில்லைங்கற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? மனிதர்னா...
ஜான் விற்றேக்கர். விற்றேக்கர் துரை... அவரோட, அவருக்கு உதவியாளரா நானும் இருந்தேன். நான் அப்போ ரொம்ப இளம் வயசுல இருந்தேன். ரொம்ப இளம் வயசு... கல்லூரியை விட்டு வெளியேவந்து ஒரு வேலைக்காக அலைஞ்சிக்கிட்டிருந்த நேரம்.
அப்போதான் துரையைச் சந்திச்சேன்... ஒரிஸ்ஸாவில வச்சு. துரைக்கு என்மேல விருப்பம் உண்டாச்சு. "சரி... என் கூடவே இருந்திடு. உன் ஊருக்குதான் இனி நான் போகப்போறேன்'னு துரை சொன்னாரு.
இங்க பெரிய ஒரு உர உற்பத்தி தொழிற்சாலை உண்டாக்கறதுக்காக அரசாங்கத்துக்கிட்டயிருந்து ஒப்பந்தம் பெற்ற அமெரிக்க கம்பெனியோட தலைமைப் பொறியாளரா விற்றேக்கர் துரை இருந்தாரு. துரைக்குக் கீழே ஏராளமான பொறியியல் நிபுணர்களும், பிற பணியாளர்களும் இருந்தாங்க. இருந்தாலும், எல்லா விஷயங்கள்லயும் தன் கண்களே பதிஞ்சிருக்கணும்ங்கறதுல துரை பிடிவாதமா இருந்தாரு.
அரசாங்கத்துக்கிட்டயிருந்து கிடைச்ச 1,500 ஏக்கரோட ஒவ்வொரு மூலையையும் என்னவோ மனசுல பார்த்திருக்கறதைப்போல துரை போய் பார்த்தாரு. அவரோட நிழலைப்போல நானும் இருந்தேன்.''
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, கிழவர் மீண்டும் தொடர்ந்தார்:
"ஏரியோட அந்தப் பக்கத்தில தெரியும் அணைக் கட்டு இருக்குல்ல! அந்த இடத்தை அடைஞ்சதும், ஒரு வெளிச்சம் கிடைச்சிட்டதைப்போல சந்தோஷத்துடன் துரை, "இங்க நாம ஒரு அணைக் கட்டு கட்டுவோம்'னு சொன்னாரு. அப்போ இங்க அணைக்கட்டோ ஏரியோ எதுவுமே இல்லைங்கறதை ஞாபகத்தில வச்சிக்கணும். முற்றிலும் வயலா இருந்தது. நெல் விளையக் கூடிய அருமையான வயலுங்க! வயலுக்கு மத்தியில சாதாரணத்தைவிட பெரிய ஒரு வாய்க்காலும் இருந்தது.
துரை அன்னிக்கு என்கிட்ட ஆவேசத்தோட சொல்லிக்கிட்டேயிருந்தாரு. "அதோ... தெரியக்கூடிய மலை இருக்கே! அங்கருந்து ஆரம்பிச்சு, இந்தக் கரையில முடியக்கூடிய ஒரு அணைக்கட்டு!
அணை கட்டி முடிக்கப்பட்டுட்டா...கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி வந்து, இங்க பெரிய ஒரு நீர்நிலை உண்டாகும். நீர்நிலையில எப்பவும் தண்ணி இருக்கும். தண்ணிதான் மிகவும் முக்கியம்... நல்ல, சுத்தமான தண்ணி! எந்திரங்களை இயக்கி உரத்தைத் தயாரிக்கணும்னா ஏராளமான தண்ணி இருக்கணுமே! பிறகு... இங்க வசிக்கப்போற ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் குடிதண்ணி வேணுமே! இந்த அணைக்கட்டு எழுந்து நீர்நிலை உண்டானா... பிறகு... தண்ணிக்கு இங்க ஒரு பற்றாக்குறையும் இருக்காது.
என் நாட்ல ஒரு அணைக்கட்டு இருக்கு. கொலோரடோவில் இருக்கக் கூடிய ஹுவர்.
அதைவிட ரொம்ப சின்னது இது. ரொம்ப ரொம்ப சின்னது. கொஞ்சம் சிந்திச்சுப் பார்த்தா... எந்தவொரு ஒற்றுமையும் இல்லை. இருந்தாலும்...'
ஆனா... என் மனசுல அப்போ அமெரிக்கா வின் ஹுவர் அணைக்கட்டு இல்ல. நான் சிந்திச்சிக் கிட்டிருந்தது... தண்ணி உயர்ந்தா இழக்கப்படப்போற வயல்களையும் நெல் விவசாயத்தையும் பற்றிதான்...
இந்த சிந்தனை என்னை கவலையில மூழ்க வச்சது. என் மனசை தெரிஞ்சிக்கிட்டதைப்போல விற்றேக்கர் துரை அப்போ சொன்னார்:
"ஆனா... நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியும். இங்க இருக்கிற சில ஏக்கர் பரப்பளவுள்ள வயல்கள்ல விவசாயம் அழிஞ்சிடுமேங்கறதைப் பத்தி நீ கவலைப்படுற. ஆனா இந்த மாநிலத்தில இருக்குற லட்சக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல்களோட விளைச்சலை அதிகப்படுத்தறதுக்காக தேவைப்படுற உரத்தை நாளைக்கு நாம இங்க தயாரிக்கப் போறோம். இந்த உரத்தோட இங்க எளிமையா கிடைக்கக்கூடிய சாணமும் சேர்ந்திருக்க றப்போ, இந்த ஊரோட தரித்திரமான முகச்சாயலை நம்மால மாத்தியெடுக்க முடியும்...'
விற்றேக்கர் துரை எதிர்காலத்தைப் பார்த்து ஆவேசத்துடன் இவற்றையெல்லாம் கூறினார். துரையின் முகத்தில் முழுமையான திருப்தியும் சந்தோஷமும் இருந்தன. எதுவுமே கூறமுடியாமல் நானும் துரையின் அருகில் நின்றிருந்தேன்.
பிறந்தது அமெரிக்காவாக இருந்தாலும், துரை என்றுமே ஒரு இந்தியராகத்தான் இருந்தார். நல்ல ஒரு இந்தியன்!
துரை மரணத்தைத் தழுவியது... அமெரிக்காவில. ஆனா உயிலின்படி பிணம் அங்க எரிக்கப்பட்ட பிறகு, சாம்பல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவர் இங்க ஆரம்பத்தில உண்டாக்கிய தொழிற்சாலைக்கு முன்னாலிருந்த ஆத்துல கரைக்கப்பட்டதுங்கற விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியுமா?
அந்தச் சடங்கைச் செய்யக்கூடிய பொறுப்பு எனக் குக் கிடைச்சதுங்கற விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியுமா? இல்ல... தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. எல்லாம் ஒவ்வொரு கொடுப்பினைங்க!
துரை போனபிறகும்... இதுக்கிடையில நான் தொழிற்சாலையில ஒரு தொழிலாளியாகிட்டிருந்தேன். நான் ஓய்வுபெறும் வரைக்கும் இங்கதான் வசிச்சேன். ரிட்டயர்ட் ஆனபிறகு, சொந்த ஊருக்குப் போய்ட்டேன். ஒரு வகையில சொல்றதா இருந்தா, சொந்த ஊர்னு சொல்ல முடியுமா?
துரைக்கு நாடும் ஒரு மனைவியும் இருந்தாங்க. குழந்தைங்க இல்லை. எனக்கோ?
ஓய்வு உத்தரவு வாங்கியும் காலம் எவ்வளவோ ஆயிருச்சு! ஒரு திசையிலிருந்து இனினொரு திசைக்கும்... அங்கிருந்து வேறொரு திசைக்கும்... பிறகு... எந்தவொரு நிரந்தர நிலையும் இல்லாம...
அப்படியே... இதற்கிடையிலதான் கேள்விப்பட்டேன்... நம்மோட இப்போதைய அரசாங்கம் தங்களோட கட்டுப்பாட்டில இருக்கக்கூடிய நிறுவனங்களை தனியாருக்கு மோசமான விலைக்கு வித்துத் தொலைக்கப்போறதா... இந்த நிறுவனமும் விற்கப்பட்டுடுச்சுன்னு கேள்விப்பட்டப்போ... என்னால வெறுமனே உட்கார்ந்திருக்க முடியல. பிணத்தை சிதையில வைக்கறதுக்காக எடுக்கறதுக்கு முன்ன, பிரியமானவங்களை இறுதியா ஒருமுறை பார்க்கணும்னு தோணுமில்லியா?
அப்படித்தான் இங்கவந்து கடந்த ரெண்டு மூணு நாளா இந்த வழியா நடந்து... தங்களோட அனைத் தையும் இந்த கம்பெனிக்கு பலியா தந்த... இங்கிருந்த பழைய ஊர்மக்களையும் தொழிலாளிகளையும் அதிகாரிகளையும் பார்த்து... ஆனா விருப்பம் அதுவா இருந்தாலும், அப்படிப்பட்ட யாரையும் என்னால பார்க்கமுடியல... நேத்து நான் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்தேன். தொழிலாளர்களோட பிள்ளைகளுக்காக விற்றேக்கர் துரை கட்டிய பள்ளிக்கூடம்... ஆனா பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டுட்டிருந்தது. ஆனா அதைவிட கவலையைத் தந்தது... பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் துரை தன் சொந்த கைகளால நட்டு வளர்த்த மரங்க... அவையெல்லாம் வெட்டி நீக்கப்பட்டிருந்தன.
துரை பொதுவா சொல்வாரு... "நம்மோட குழந்தைங்க மரங்களுக்கு மத்தியில வளரணும்.
அவற்றோட அழகான இலைகளைப் பார்த்து...
அவற்றோட வாசனையை சுவாசிச்சு... அவற்றோட குளிர்ச்சியை அனுபவிச்சு...
பிறகு... மரங்கள்ல கிளிகள் இருக்குமில்லியா? அவற்றோட பாடலைக் கேட்டுக்கிட்டு... நல்ல குழந்தைங்களா அவங்க வளரட்டும்!'
மரங்களோட வெட்டப்பட்டு எஞ்சியிருக்குற அடிப் பகுதிங்க முழுமையா காய்ஞ்சு போகல. சிலவற்றிலிருந்து நீர் கசிஞ்சிக்கிட்டடிருந்தது.
அந்த இடங்களைத் தொட்டுப் பார்த்தப்போ... தடவிப் பார்த்தப்போ... இந்தக் கிழவனோட கைங்க நடுங்கிச்சு. கடந்தகாலத்து நண்பர்களோட உரத்த குரல்களையும் நான் கேட்டேன். பலரிடமும் விசாரிச்சுப் பார்த்தும், எங்கிருந்தும் தெளிவான எந்தவொரு பதிலும் கிடைக்கல. அரசாங்கத்துக்கிட்டயிருந்து யார் இதை வாங்கியிருக்காங்க, இந்த 1,500 ஏக்கர் நிலத்தை வச்சு அவங்க என்ன செய்யப்போறாங்க, இங்க அவங்க என்ன தொழிலை ஆரம்பிக்கப் போறாங்க, எவ்வளவு பேருக்கு இங்க வேலை கிடைக்கும்...
பலவற்றையும் கேள்விப்பட்டேன்... இங்க எஞ்சியிருக்கற மரங்களையும்கூட வெட்டி நீக்கிட்டு, சர்வதேச தரத்தைக்கொண்ட கால்ஃப் விளையாட்டு மைதானத்தை உண்டாக்கப் போறாங்க...
ஆற்றங்கரையில எல்லா வசதிகளையும் கொண்ட ரிஸார்ட்டுங்க வரப்போகுது... எல்லாவிதமான ஐந்து நட்சத்திர வசதிகளையும் கொண்டவை. பிறகு... ஏரியோட தண்ணியை எடுத்து மிகப்பெரிய ஒரு கோலா தொழிற்சாலையையும் ஆரம்பிக்க இருக்காங்க. பிறகு மிகப்பெரிய ஒரு வாட்டர் பார்க்கும்...
எங்கிட்ட இவ்வளவையும் சொன்னது புதிய முதலீட்டாளர்களோட ஒரு சிறிய கைத்தடி... நான் பதைபதைப்போட அந்த ஆள்கிட்ட கேட்டேன்:
"அப்படின்னா உரம்..?'
கைத்தடி நிறுத்தாம சிரிச்சது... உரத்து... உரத்து...
"உரமா? ஹே..! நீங்க எந்தக் காலத்தில வாழறீங்க? இங்க வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எதுக்கு உரம்?'
இவ்வளவையும் கூறிவிட்டு, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தவாறு கிழவர் நின்றுகொண்டிருந்தார். தொடர்ந்து தன்னுடைய வார்த்தைகளை அதுவரை கேட்டுக்கொண்டு நின்றிருந்த இளைஞனிடம் கேட்டார்:
"சொல்லு நண்பா... நமக்கு இனிமேல் உரம் வேணாமா?''
ஆனால் கிழவரின் கேள்வியைக் கேட்பதற்கு அப்போது அங்கு இளைஞன் இல்லை. அவன் வெறுப்புடன் சற்று முன்பே அங்கிருந்து சென்று விட்டிருந்தான்.
கிழவர் சற்று அதிர்ச்சியடைந்தார். நகரத்திற்கு செல்லக்கூடிய இறுதிப் பேருந்து புறப்படும் நேரமாகிவிட்டிருந்தது. கிழவர் தன்னுடைய முழு பலத்தையும் சேர்த்துக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தார். அன்றே அவர் நகரத்தை அடைந்தாக வேண்டும். பிறகு...
மறுநாள்... ஒரு மெல்லிய போர்வையைப்போல வானத்தின் விளிம்புகளிலிருந்து இருட்டு இறங்கி வந்துகொண்டிருந்தது.