நான் பாடுறதுக்கு காரணமா இருந்த எங்க வாத்தியார மேடைக்கு வரச்சொல்லி அவரை கட்டிப் புடிச்சிட்டேன். எனக்கும் கண்ணு கலங்குது. அவரும் தேம்பித் தேம்பி அழறாரு. அப்புறம் மேடையிலேயே அவருக்கு ஒரு சேர் போட்டு, என்னோட நிகழ்ச்சி முடியுற வரைக்கும் அவரை மேடையிலேயே உட்கார வச்சு, அவருக்கு சால்வை எல்லாம் போட்டு, மரியாதை பண்ணி அனுப்பி வச்சேன்.
இதே வாத்தியாரு, ஒருமுறை நான் துபாய்ல ருவைஸில இருக்கேன். நான் துபாய்க்கு வந்ததை அவரோட பொண்ணு போட்டோ எடுத்து அவங்க அப்பாவுக்கு அனுப்பி, உங்க ஸ்டூடண்ட்டுனு சொன்னீங்களே அவர் இங்க துபாய்க்கு வந்திருக் காரு புரோகிராமுக்கு அப்படின்னு சொல்லுது. சொன்ன உடனே அவரு எனக்கு போன் பண்றாரு.
"சார் என்ன சார் போன் பண்றீங்க"ன்னு கேட்டவுடனே, "துபாய்ல இருக்கியா. என் னோட மகளை அங்கதான் கட்டிக் கொடுத்து இருக்கேன். அங்கதான் இருக்காங்க.
அவங்க உன்ன பாக்கணும் உன்கூட போட்டோ எடுக்கணும்னு சொல்றாங்க. அப்படின்னு சொன்ன உடனே எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. வாழ்க்கையில நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாருடைய புள்ளைங்க, என்கூட துபாயில் போட்டோ எடுக்கணும்னு கேக்குறாங்க இதைக் கேட்ட உடனே எனக்கு மனசு எல்லாம் ஒரே பூரிப்பா போச்சு. அப்புறம் அவருடைய மகளை குடும்பத்தோட மேடைக்கு வரச்சொல்லி, போட்டோ எடுத்து அவங்களுக்கு சால்வை எல்லாம் போட்டு மரியாதை பண்ணி அனுப்பிவச்சேன்.
என்ன மேடைல பார்த்த உடனே எங்க வாத்தியாரு என்னை கட்டிப்பிடிச்சு எப்படி கண்கலங்கினாரோ. அதேமாதிரி அவருடைய பிள்ளைகளை மேடைக்கு அழைத்து அவங்களுக்கு சால்வை போட்டு மரியாதை பண்ணும்போது நானும் கண்கலங்கிட்டேன். வாழ்க்கையில சந்தோஷ மான தருணங்கள் இப்படியெல்லாம் வருமா? அப்படின்னு எனக்கு ஒரே ஆச்சரியமா ஆயிடுச்சு.
சரி நம்ம கதைக்கு வருவோம். முதனை ஹையர் செகண்டரி ஸ்கூல்ல பாட்டு பாடி மூனு சில்வர் தட்டு, மூனு சர்டிபிகேட் மாவட்ட கலெக்டர் கையால வாங்கியாச்சு. அதுக்கப்புறம் 9-ஆவது 10-ஆவதுன்னு அப்படியே போவுது. இப்ப நான் பத்தாவது பாஸ் பண்ணனும் அப்படின்னு அம்மா அப்பாவுக்கு ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ஏன்னா அப்பல்லாம் பெரும்பாலான பசங்க அஞ்சாவதுக்கு மேலே பள்ளிக்கூடமே போகமாட்டாங்க. "படிச்சு பாழாப் போறத ஆடு மேச்சு ஆளாப் போகலா முன்னு எல்லாரும் ஆடு மாடு மேய்க்கப் போயிடு வாங்க. எட்டாவது வரைக்கும் போறதே பெரிய விஷயம். அப்பல்லாம் பசங்கள படிக்க வைக்கிறதுக்கு வாத்தியாருங்க வீடு வீடா போயி பசங்கள புடிச்சுகிட்டு வருவாங்க. அது மாதிரியான காலம் அது. அப்ப மாவட்டத்துல ஒரு பத்துப் பேரு பத்தாவது பாஸ் பண்ணாலே பெரிய விஷயமா இருந்துச்சு. அதனாலதான் அப்பா அம்மாவுக்கு நான் பத்தாவது பாஸ் பண்ணனும்னு ரொம்ப கவலையா இருந்துச்சு.
அப்பல்லாம் எட்டாவது வரைக்குமே இங்கிலீஷ்ல என்ன சொல்லிக் கொடுக்கிறாங்கன்னே புரியாது. இங்கிலீசு படிக்கனும்னா இங்கிலீஷ் லெட்டரை தமிழ்ல எழுதித்தான் படிப்போம். அது மாதிரி போயம் சொல்லிக் கொடுக்கும்போதும் ஒரு எஸ்.ஏ. சொல்லிக் கொடுக்கும்போதும் இங்கிலீஷ் லெட்டரை தமிழ்ல எழுதிதான் மனப்பாடம் பண்ணுவோம்.
எஸ்.ஏ. எழுதினா 15 மார்க். போயம் எழுதினா 10 மார்க். சில ஒன்வேர்டு கொஸ்டின் எழுதினா நாலஞ்சு மார்க் தேறும். அப்புறம் ஆண்டனிம்ஸ் ஒரு 5 மார்க், சினானிம்ஸ் ஒரு 5 மார்க் இருக்கும். இதுல இங்கிலீஷ்ல போனது வந்தது எல்லாம் மாத்தி, மாத்தி மாத்தி எழுதி வச்சுட்டோம்னா இவன் ரொம்ப படிச்சிருக்கான்போல அப்படின்னு வாத்தியாருங்க மார்க் போட்டுடுவாங்க. இப்படி முழுசா தெரியாட்டாக்கூட ஒரு ஒரு கொஸ்டினுக்கும் ரெண்டு ரெண்டு மார்க் போட்டாலே 40 மார்க் வந்துரும். பாஸாயிட்டு போயிட்டே இருப்போம். இது மாதிரி டெக்னிக்கோட பரிட்சை எழுதுவோம்.
எனக்கு என்னா தோணுச்சுன்னா நம்ம வளர்ந்தா மட்டும்தான் நம்ம அப்பா அம்மாவ நல்லா வச்சிக்க முடியும் அப்படிங்கிற எண்ணம் தோணுச்சு. அதைப் புரிஞ்சுகிட்டு படிக்கணும்னு நினைச்சு நான் படிக்க ஆரம்பிச்சேன்.
பத்தாவது பரீட்சை எழுதியாச்சு. இன்னைக்கு சாயங்காலம் மாலை மலர்ல ரிசல்ட் வரப் போவுது. ரிசல்ட்டுக்காக காத்திருக்கிற நேரத்துல விருத்தா சலம் டவுன்ல எனக்கு வேலையும் தேடிட்டேன். ஒரு ஹோட்டலில் போய், "ஐயா நான் ஹோட்டலில் வேலைக்கு வரலாமா? ஏதாவது டேபிள் தொடைக்கிற வேலையா இருந்தாலும் பரவாயில்ல குடுங்க" அப்படின்னு கேட்டேன். என்ன ஊரு அப்படின்னு கேட்டாங்க.
நான், "முதனை கிராமம், நான் பத்தாவது பரீட்சை எழுதியிருக்கேன். இன்னைக்கு ஈவினிங் ரிசல்ட் வரும். பாஸ் ஆச்சுன்னா ஊருக்குப் போகணும். இல்லன்னா இங்கேயே ஏதாவது வேலை செஞ்சு பிழைச்சுக்கிறேன்" அப்படின்னு சொன்னேன். எனக்கு சம்பளம்கூட வேண்டாம். ஐயா நீங்க மூணுவேளை சோறு போட்டீங்கன்னா அதுவே போதும்"னு சொன்னேன். "சரி நீ போயிட்டு சாயங்காலம் வா" அப்படின்னு சொன்னாங்க. "சரிங்க ஐயா நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்"னு சொல்லிட்டு, கோயிலுக்கு போயிட்டு அப்படியே மேட்னி சினிமா பாத்துட்டு வந்தேன்.
வந்து பேப்பர் கடையில பேப்பர் வாங்கிப் பாக்கிறேன். என்னுடைய நம்பர் 35 10 88. பக்கத்தில இருந்தவங்க என்ன நம்பர் அப்படின்னு கேட்டாங்க சொன்னேன்.
இந்த நம்பர் இருக்குதே அப்படின்னு எல்லாரும் பாத்து சொன்னாங்க. எங்க ஊர்காரவங்க நிறைய பேரு அங்க நின்னுட்டு இருந்தாங்க. அவங்க சொன்னாங்க உங்க அப்பா வந்தாருப்பா பேப்பர் வாங்கிப் பார்த்தாரு நீ பாஸ் பண்ணிட்ட அப்படின்னு சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிப் போயிட்டாரு அப்படின்னு சொன்னாங்க.
அப்புறம் நான் எங்க ஊரு பஸ்ல ஏறுறேன். வீட்டுக்குப் போனா எங்க அப்பா பூவெல்லாம் வாங்கி வச்சிருக்காரு. நான் வீட்டுக்கு போன உடனே நீ பாஸ் பண்ணிட்டடா அப்படின்னு சொல்லி பக்கத்துல இருக்குற எங்க குலதெய்வம் செம்பையனார் கோவிலுக்கு அழைச்சிட்டுப் போறாரு. அங்க சாமிக்கு பூவெல்லாம் போட்டு, தேங்காய் உடைச்சு, சாமிக்கு சூடம் காட்டி சாமி கும்பிட்டு வந்தோம்.
நான் படிச்ச ஸ்கூல்ல மொத்தம் 61 பேர் பரிச்சை எழுதுனாங்க. அந்த ரிசல்ட்ல 35 10 88 என்னுடைய ரிஜிஸ்டர் நம்பர் மட்டும்தான் மாலைமலர் பேப்பர்ல வருது. மத்த 60 பேரும் ஃபெயில். நான் மட்டும்தான் பாஸ்.
நான் பத்தாவது பாஸ் பண்ணிட்டு ஐ.டி.ஐ படிக்கலாம்னு ஊரவிட்டு வெளியே போறேன். போன உடனே, எங்க ஊரே அழிஞ்சுபோகுது. எங்க ஊர்ல இப்ப யாராவது இருக்காங்களான்னா யாருமே இல்ல. நீங்க என்கூட ஒரு நாளைக்கு வாங்க. எங்க ஊருக்கு அழைச்சிக்கிட்டுப் போறேன். நான் இருந்த தெருவுல இப்ப ஒருத்தர்கூட இல்லை. எல்லாரும் போய்ச்சேர்ந்துட்டாங்க. சித்தப்பா, பெரியப்பா தெருவுல இருந்தவங்க, வாழ்ந்தவங்க எல்லாரும் போயிட்டாங்க. ஏதோ ஒருத்தர் ரெண்டு பேர் இருந்தவங்க எல்லாரும், அவங்க அவங்க தூர தூரத்துக்குப் போய்ட்டாங்க. நாங்க வாழ்ந்த ஊருன்னு பார்த்தா இப்ப அங்க யாருமே இல்ல.
அதாவது பஸ்சுல அங்க இறங்கி அரச மர ஸ்டாப்பிங் அப்படின்னு கேட்டா அன்னைக்கு அந்த எடத்துக்கு அவ்வளவு பேரும் புகழும் இருந்துச்சு. அது மாதிரி அங்க முதலியார் கடைன்னு ஒன்னு இருக்கும். அதுலதான் எல்லாரும் சாமான் வாங்குவோம். இப்போ அந்த கடை இருந்த இடமும் ஒன்னுமில்லாம போச்சு. அவரும் வீணா போயிட்டாரு. நான் ஊருல இருந்த வரைக்கும் எங்க ஊரு நல்லா இருந்துச்சு. ஊர்ல வீடு கட்டி அண்ணனை வாழவச்சேன். ஆனா அண்ணனாலயும் அங்க வாழ முடியல. அதனால அண்ணனை விருதாச்சலத்துக்கு குடிபெயர்ந்து அங்க கொண்டு வச்சேன். இப்ப நான் எங்க ஊரு முதனைக்குப் போனாலும் அம்மா வாழ்ந்த இடம், அப்பா இருந்த இடம் அப்படின்னு போயி அந்த மண்ணெடுத்து நெத்தியில விடனும் அப்படிங்கிறதுக்காகதான் அங்க போவேன்.
இப்ப வரைக்கும் எங்க ஊருக்கு நான் போகணும் அப்படின்னா போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கு ஏகப்பட்ட தடங்கல் வரும். ஏகப்பட்ட பிரச்சனை வரும். சாவுறதுக்கான அனைத்து அறிகுறிகளும் காட்டும். அடிபடும். லாரி வந்து திடீர்னு என் கார மோத வரும். அதனாலேயே ஊருக்குப் போகணும் அப்படின்னா போயிட்டு திரும்ப வர வரைக்கும் கடவுளை வேண்டிக்கிட்டுப் போயிட்டு திரும்ப வருவோம்.
அங்க அம்மன் கோயில் இருக்கு. வீரனாரு கோயில் இருக்கு. அந்த கோயில்களுக்கு ஏதாவது செலவு பண்ணனும் அப்படின்னு போனாலும் போயிட்டு வர்றதுக்குள்ள அவ்வளவு பிரச்சனை வரும்.
அவ்வளவு ஆபத்து வரும்.
அன்னைக்கு நான் அந்த பத்தாவது பாஸ் பண்றப்ப பள்ளிக்கூடம் போறதே குதிரைக் கொம்பா இருந்திச்சி. எப்படியோ பாஸ் பண்ணி வெளியில வந்தேன். அன்னைக்கு நான் பத்தாவது பாஸ் பண்ணலன்னா இன்னைக்கு ஒரு பாடகரா ஆயிருக்கமுடியாது. ஆனால் இன்னைக்கு நான் பாடகரா இருக்கேன்னா அதற்கு காரணம் அது அனைத்துமே முருகனுடைய அருள் தான்.
தைப்பூசத்துல பொறந்ததுனால முருகர்தான் எனக்கு வழிகாட்டுனாரு. முருகர்தான் என்ன பத்தா வது பாஸ் பண்ண வைக்கிறாரு. அவர்தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டுட்டு வந்து இருக்காரு.
முருகர் அவருடைய புள்ளதான் நான் அப்படிங் கறத எப்படி உறுதிப்படுத்துறார்ன்னா நான் முதல்ல சினிமாவுல பாட்டு பாடுன படத்தோட பேரு சுப்பிரமணியபுரம். படத்துடைய டைட்டில்ல முருகனோட பேரு வந்துடுச்சா. படத்தோட இயக்குனர் வந்து சசிகுமார் அதுவும் முருகனோட பேரு. நான் திருவிழாவுல பொறந்ததனால பாடறது மதுர குலுங்க குலுங்க திருவிழா பாட்டு. முருகர் அங்க வழியைக் காட்டுறாரு. இதற்கு இடையில 1000 சந்தர்ப்பங்களையும், ஆயிரம் கஷ்டங்களை யும், ஆயிரம் சூழல்களையும் சந்திக்கிறேன். பாக்க வைக்கிறாரு, வழி நடத்துறாரு. ஒவ்வொரு இடத்தையும் தாண்டி தாண்டி நான் பயணப்பட்டுக்கிட்டே இருக்கேன். முருகனுடைய அருளால நான் என்ன ஆகுனும்னு நெனச்சேன்னோ அதுவாவே ஆனேன். அது எல்லாமே எனக்கு நடக்குது.
நான் பத்தாவது பாஸ் பண்ண உடனே அப்பா என்ன கோயம்புத்தூர் அரசு தொழிற்கல்வி நிலையத் துல ஐ.டி.ஐ படிக்கிறதுக்கு கொண்டுட்டு வந்து சேக்கு றாரு. நான் படிச்சது ஒயர்மேன் ட்ரேடு. அட்மிஷன் போட்டுட்டு எங்க அப்பா போறாரு. நான் தேம்பித் தேம்பி அழறேன். ஒன்னும் தெரியாத இந்த ஊருல, ஒன்னும்புரியாத அந்த வயசுல என்னை தனியா விட்டுட்டுப் போறாரு. நாம எப்படி இருந்து இங்கு படிக்கப் போறோம் அப்படின்னு அழறேன். அப்போ நான் ரொம்ப சின்ன பையன். ஒரு ரெண்டு மூணு நாளைக்கு ஹோட்டல்ல சாப்பிடு அப்புறம் அரிசி, பருப்பு, மண்ணெண்ண ஸ்டவ் எல்லாம் எடுத்துட்டு வந்து தரேன் அப்படின்னு சொல்லிட்டுப் போறாரு. அப்ப 500 ரூபாய் ரூம் வாடகை. ஒரு ரூமுக்கு அஞ்சு பேரு, ஒருத்தருக்கு 100 ரூபாய் நாங்க தங்கி இருந்த இல்லம் பேரு ”அன்பு இல்லம்” அது 1995.
நான் ஐ.டி.ஐ. சேர்ந்தவுடனே முதல் நாள் முதல் கிளாஸ் பி.டி. கிளாஸ். அங்க ரமேஷுன்னு ஒரு பி.டி. வாத்தியார் இருந்தாரு. அவர் என்ன பண்ணாரு. எல்லாரையும் நிக்க வச்சு ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க எந்தெந்த மாவட்டத்தில் இருந்து வந்திருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு அறிமுகப்படுத்திக்கங்க.
அப்புறம் நீங்க என்ன ஊரு, உங்க பேரு, உங்களுக்கு தனித்துவம் அப்படின்னு ஏதாவது இருந்துச்சுன்னா அதையும் சொல்லுங்க அப்படின்னு சொன்னாரு.
அப்ப நான் என்ன சொல்றேன். சார் நான் வந்து கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பக்கத்துல முதனை என்கிற கிராமம் எனக்கு கொஞ்சம் பாட்டு பாட தெரியும் சார் அப்படின்னு சொல்றேன். உடனே அவர் என்ன சொல்லிட்டாரு, இன்னைக்கு ஃபுல்லாவே பி.டி பீரியடே கிடையாது. நீ தான் பாடுற அப்படின்னு சொல்லிட்டு பாடு அப்படிங்கறாரு.
சரிங்க சார் அப்படின்னுட்டு நான் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறேன்.
ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்
ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்
ராப்பகலா கண் விழித்தேன்
ராணி உன்ன கை புடிச்சேன்.
இந்த பாட்டு பாடுறேன்
அப்புறம்,
சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் வச்சு
சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் வச்சு
சீமானாற் பெத்த மவ அன்ன பொண்ணு நடையே
நீ செடிக்கு செடி குந்தலாமோ சின்ன பொண்ணு நடையே
அப்புறம்,
அடி ஏ பொண்ணு ஐயாரெட்டு ஆம்பூரு கரும்புக் கட்டு
அத்தானுக்கு ஆசை எல்லாம் உன் மேல
என்ன பாத்து பாத்து ஏங்குறியே கண்ணாலே
அப்புறம்,
சோலைக்குயில் பொம்மை போல சுந்தரி நீ நடக்கும்போது
மனசே தவிக்குதடி உன்னால
நீ காந்தம் போல் இழுக்குறியே முன்னால
நீ சொக்குப்பொடி போட்டியாடி டவுன்ல
இது மாதிரி பாட்டு எல்லாம் பாடுறேன். அப்ப அவர் சொல்றாரு. சினிமா பாட்டு எல்லாம் என்ன பாடுவ அப்படின்னு கேக்குறாரு.
அப்ப நான் பாடுறேன்
ஏ, கொட்ட பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்
மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்
இந்த பாட்டு பாடுறேன். வேற எனக்கு என்ன பாட்டெல்லாம் தெரியுமோ அதை எல்லாத்தையுமே பாடுறேன். நல்லா இருக்கே அப்படின்னு சொல்லிட்டு எங்க பி.டி வாத்தியார் என்ன பண்றாரு, டிராயிங் வாத்தியாரு, எலக்ட்ரானிக் வாத்தியாரு, எங்க பரமசிவம் வாத்தியாரு எல்லாரையும் கூப்பிட்டு இந்த பையன் நல்லா பாடுறான் சார். யார் வீட்டுலயாவது டேப் ரெக்கார்டு இருக்குதான்னு கேக்குறாரு.
எங்க எலக்ட்ரிகல்ஸ் வாத்தியாரு. காலேஜ் சேர்மேன் அவரு எங்கிட்ட இருக்கு. வந்து வாங்கிக்க சொல்லுங்க அப்படின்னு சொல்றாரு. அப்ப டி சீரிஸ்னு ஒரு கேசட் உண்டு. அதை போட்டு எல்லா பாட்டும் நான் பாடுறேன். அதுல அந்த சிகப்பு பட்டனையும்
பக்கத்துல உள்ள பச்சை பட்டனையும் சேர்த்து அழுத் தினா ரெக்கார்டு ஆகும். ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு வந்து கொடுத்தேன். உடனே, ஒரு ஒரு வாத்தியாரா வீட்டுக்கு எடுத்துகிட்டு போயி கேட்டுட்டு, வாய்ஸ் நல்லா இருக்கு… வாய்ஸ் நல்லா இருக்கு… அப்படின்னு வந்து சொல்றாங்க.
இதுக்கிடையில ஒரு வாத்தியார் என்னை சர்ச் சுக்குப் பாடக்கூப்பிட்டார். அதோட பிரமச்சாரியாவும் ஆவனும்ன்னு சொன்னார். நான் ஓடிவந்துட்டேன்.
இப்படியே காலம் ஓடுது. அப்படியே ஓடினா லும் பரவாயில்லை. ஆனா ஐ.டி.ஐ படிச்சிட்டு இருக்கும் போதே அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போகுது. அம்மாவை சென்னை அப்போலோ ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. அப்பா என்.எல்.சி.யில வேலையில இருந்ததால அம்மாவுடைய ஹாஸ்பிடல் செலவ கவர்மெண்ட் எடுத்துக்குது.
அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அப்படிங்குற செய்தி எனக்குத் தெரியாது. ஒரு நாளு எங்க மாமா கோயம்புத்தூர் ரூமுக்கு வற்றாரு. அவரு சொல்றாரு அம்மா உன்னை பாக்கணுமாம் அதனால உன்னை ஊருக்கு கூட்டிகிட்டு வர சொன்னாங்க அப்படின்னு சொல்றாரு.
-வண்டி ஓடும்