தண்ணிய போட்டுட்டு கவர்மெண்ட் பஸ்ல தகராறு பண்ணி இருக்காரு, அதனால ஜெயில்ல போட்டாங்க. அப்படிங்குற செய்தி அப்பாவோட ஆபீசுக்குப் போகுது. அப்பாவ வேலைய விட்டு நீக்குறாங்க.
ஏதோ மாச சம்பளம் வாங்கி பொழப்பு நடத்துன குடும்பம், திடீர்னு அப்பாவ ஜெயில்ல போட்டதால நிலைகுலைஞ்சு போச்சு. ஒட்டுமொத்த குடும்பச் சுமையும் அம்மா தலையிலதான் வந்து நின்னுச்சு.
அதுக்கப்புறம் ஏதோ ரெண்டு வேளை கிடைச்ச சோளச்சோறும், கம்மஞ்சோறும் கூட முழுசா கிடைக்கல.
உங்க வீட்டு பஞ்சம் எங்க வீட்டு பஞ்சமில்லை. சூறக்காத்துல மாட்டிகிட்ட இலை மாதிரி, எங்க வீட்ல பஞ்சம் தலவிரிச்சு ஆடுடிச்சு.
எல்லாம் அப்பா பாத்துப்பாரு, அப்பா பாத்துப்பாருன்னு, ஒன்னுமே தெரியாம வீட்டையே சுத்தி சுத்தி வந்த அம்மாவுக்கு, வெளி ஒலகமே புது ஒலகமா தெரியுது. அதுக்கப்புறம்தான், களை எடுக்க கத்துக்கிச்சி, நடவு நடவும் கத்துக்குச்சி.
அதுக் கப்புறம் அம்மா காலை ஷிப்டு, மத்தியானம் ஷிப்ட், சாயங்கால ஷிப்ட்ன்னு நடவு நடுறதுக்கோ , களை எடுக்குறதுக்கோ போகும். ஆனா முழுசா மூணு நேரமும் வேலை கிடைக்கிறது என்பது ’குதிரைக்கு கொம்பு மொளைச்ச கததான்”. சில நாளைக்கு வேலையே இருக்காது.
என்ன பண்றது ”பட்ட காலுலயே படும் கெட்ட குடியே கெடுமுன்னு சும்மாவா சொல்லிவச்சாங்க.
அப்பல்லாம் குழந்தை பிள்ளைங்க நிறைய சாகும்.
ஏன்னா சோறு கிடைக்காது. அம்மாக் களுக்கு பாலும் சுரக்காது. சாப்டாதானே பால் சுரக்கும்.
புள்ளைங்க சோறு தண்ணி இல்லாம, எலும்பும் தோலுமா, வயிறு மட்டும் பெருசா சூனாம் வயிறு உழுந்து தள்ளிக்கிட்டு நிக்கும். இந்த புள்ளைங்களதான் அந்த காலத்துல காலராவும் தாக்குச்சு. உசுர புடிச்சு வக்கிறதுக்கு ஏழைங்களுக்கு ஏது தெம்பும் திராணியும்.
இது மாதிரி பஞ்சத்துல புள்ளைங்க எல்லாம் சாகறதை பாத்துட்டுதான், காமராசர் பள்ளிக்கூடங் கள்ல மதிய உணவுத் திட்டங்குறத கொண்டுக்கிட்டு வந்தாரு.
இந்த ஏழை சனம் சோறு இல்லாமல் இருக்கிறாங்க.
செருப்பு இல்லாம இருக்கிறாங்க. துணி இல்லாம, கிழிஞ்சு போன துணியைக் கட்டிக்கிட்டு இருக்கிறாங்க அப்படின்னுதான் பள்ளிக்கூடங்கள்ல மதிய உணவுத் திட்டம், செருப்பு, சட்ட துணிமணி எல்லாம் கொடுத்தாங்க.
பள்ளிக்கூடத்துல சட்ட துணிமணி கொடுக்க ஆரம்பிச்சதில இருந்துதான் நாங்க தீபாவளி, பொங்கலுக்கு புது சட்டைய போட ஆரம்பிச்சோம்.
வயிறார ஒருவேளை சோறு கிடைக்குது, சட்ட துணிமணி கிடைக்குதுன்னு இதுக்காகவே அந்த காலத்தில பிள்ளைகள பள்ளிக்கூடத்தில கொண்டுபோய் சேப்பாங்க.
எங்க அண்ணன் பள்ளிக்கூடத்துல படிக்கும் போது நான் ஓடி ஓடிப் போயி எட்டிப் பாப்பேன். நம்மளுக்கும் சோறுபோட மாட்டாங்களா? செருப்பு குடுக்க மாட்டாங்களா? சட்ட துணிமணி கொடுக்க மாட்டாங்களா? அப்படின்னு பள்ளிக்கூடத்து கதவுகிட்ட ஒரு ஏக்கத்தோடு போயி நிப்பேன்.
அப்படி ஒரு நாளு நிக்கும்போதுதான் வாத்தியார் என்னைக் கூப்பிட்டு என்னடா இங்க எட்டி எட்டி பாக்குற அப்படின்னு கேட்டாரு. சார் எங்க அண்ணன் இங்க படிக்குது, அதான் சார் பார்த்துட்டு போக லாமுன்னு வந்தேன் அப்படின்னு சொன்னேன். இங்க வாடான்னாரு. போனேன். தலைய சுத்தி உன் காதை தொடு அப்படின்னு சொன்னாரு. காதை நான், கொஞ்சம் தொட்டோன்ன, உடனே போய் ஒண்ணாம் வகுப்புல உக்காரு அப்படின்னு சொல்லிட்டாரு.
நான் எங்க அப்பா அம்மாவை கூட்டிக்கிட்டு வந்து, ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்து, அந்த சிகப்பு கலர்ல இருக்குமே ஆரஞ்சு மிட்டாய் அது, அப்புறம் சிலேட்டு, பல்பம் எல்லாம் வாங்கிட்டு வந்து நம்மளும் ஒரு நாளைக்கு பள்ளிக்கூடத்தில் வந்துசேருவோம் அப்படின்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா எதுவுமே இல்லாம வாத்தியார் என்னை அப்படியே உட்கார சொன்ன உடனே நான் உட்கார்ந்துட்டேன். அப்படியே பள்ளிக்கூடத்துல சேர்ந்துட்டேன்.
நான் பள்ளிக்கூடத்தில சேர்ந்துட்டேன். நான் உன்கூட நண்பனா ஆயிட்டேன். இந்தா முட்டாய் சாப்பிடுட்டு என் கூட நட்பா இருக்கணும். உன்னோட அன்பு எப்போதும் எனக்கு கிடைக்கணும் அப்படின்னுதான் இதெல்லாம் செய்வாங்க.
யாராவது பள்ளிக்கூடம் சேர்க்க வந்தாலே நமக்கு இன்னைக்கு முட்டாய் கிடைக்கும் அப்படின்னு சந்தோஷமா இருப்போம். இந்த பக்கத்து வீட்டுல சேட்டு புள்ள பள்ளிக்கூடத்துல சேர்றான் போ மிட்டாய் கிடைக்கும் அப்படின்னு வீட்டிலிருந்து அனுப்பி வைப்பாங்க. அந்த கால் சட்டையோட ஓடிப்போய் பள்ளிகூடத்தில போயி உட்கார்ந்துக்குவோம்.
நீ என்னடா காலையில அட்டனன்ஸ் எடுக்கும்போது வரலையேன்னு சார் கேட்டா, சார் எனக்கு வயித்து வலி சார் அதனால பின்னாடி போயிட்டு வந்தேன் சார் அப்படின்னு சொல்றது. அப்படியே பார்த்தாலும், ஒரு ஒரு முட்டாய்தான் கொடுப்பாங்க. கொஞ்சம் வசதி படைச்சவங்களா இருந்தா ரெண்டு மூணு முட்டாய் கிடைக்கும். கொஞ்சம் சீனி குடுப்பாங்க.
இப்படியெல்லாம் எனக்கு எதுவுமே செய்யல. காதுல கை வச்சு தொட்டுட்ட உடனே அப்படியே ஒண்ணாம் கிளாஸ்ல போயி உக்காருன்னு சொல்லிட் டாரு வாத்தியாரு.
அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துல ஏதாவது குடியரசு தினம், சுதந்திர தினம் அப்படின்னா கொடி பாட்டு பாடுவோம்.
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்
அப்புறம் தமிழ்த் தாய் வாழ்த்து, இப்படியெல்லாந் தான் பள்ளிக்கூடத்துல பாட்டு பாட ஆரம்பிச்சோம்.
சில நாட்கள்ல ஞாயிற்றுக்கிழமையிலகூட அம்மா ஏண்டா பள்ளிக்கூடம் போகல அப்படின்னு கேக்கும். இல்லம்மா இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவு அப்படின்னு சொன்னாலும் கேட்காம, ஞாயித்துக்கிழமைன்னும் தெரியாம, பள்ளிக்கூடத்துல போய் பாக்கும். போய் பாத்ததுக்கு அப்புறம்தான் அம்மாவுக்கு பள்ளிக்கூடம் லீவுங்குற செய்தியே தெரியும்.
ஏன் அம்மா அப்படி கேக்குமுன்னா, பள்ளிக் கூடத்துல சோறு வாங்கிட்டு வந்தா ஏதோ ஒருவேளை சாப்பாடாவது பிள்ளைகளுக்கு பசியாறக் கிடைக்குமே அப்படிங்கறதனால.
பள்ளிக்கூட நாட்கள்ல, வீட்டுல உள்ளவங்களுக்கும் ஒருவேளை சோறு கிடைச்சுடும்.
எப்படின்னா பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு எல்லாருக்கும் சோறு போட்டு முடிச்ச உடனே, மிச்சம் இருந்தாக்க, இரண்டாவது தடவை வேணும்கிறவங்க எல்லாம் கியூவுல வந்து நின்னுங்க அப்படின்னு ஆயா அம்மா சொல்லும். பின்னாடி போய் நின்னோம்னா மிச்சம் இருந்தா ஆளுக்கு ஒரு ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா போடுவாங்க. அதை கொண்டுட்டு வந்துதான் வீட்டில எல்லாருக்கும் ஆளுக்கு கொஞ்சமா கொடுத்து பசியை போக்குறது. கொஞ்ச நேரம் அங்க நின்னுகிட்டு இருந் தோம்னா ஆயா அம்மா சொல்லுவாங்க இருடா எல்லாம் போட்டுமுடிச்சிட்டு மிச்சம் இருந்தா தரேன் அப்படிம்பாங்க.
எங்க உசுரு உடம்புல ஒட்டி இருக்கிறதுக்கு, ஏதோ அந்த மவராசன் காமராசர் செஞ்ச புண்ணியம்தான்.
என்னைக்காவது பசங்க பாதிப் பேருக்கு மேல லீவு அப்படின்னா அன்னைக்கு சோறு கொஞ்சம் நெறையா கெடைக்கும்.
நான் அதுக்காக சாமியை வேண்டுக்குவேன். மத்தியான சோறு கொஞ்சம் அதிகமா கிடைக்கனு முன்னா, ஒரு நாலு பேரு பள்ளிக்கூடம் வரக்கூடாது சாமி அப்படின்னு வேண்டிக்குவேன்.
அப்ப சோறு மீந்துருச்சுன்னா ஆளுக்கு ஒரு அரை
கரண்டி எக்ஸ்ட்ரா போடுவாங்க. அப்ப எங்க
அண்ணனுக்கு ஒரு ஒன்றரைக் கரண்டி. எனக்கு ஒரு
ஒன்றரைக் கரண்டி. மூணு கரண்டி சாப்பாடு கிடைச்சு
டும். அதை ஒரு நாலு பேர் சாப்பிடலாம். அந்த கரண்டி ஆப்பை அளவுக்கு கொஞ்சம் பெருசாவே இருக்கும்.
சனிக்கிழமை பள்ளிக்கூடம் இல்லை அப்படின்னா
கூட சோறு மட்டும் போடுவாங்க. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் சோறு கிடைக்காது
சனி, ஞாயிறு ரெண்டு நாளும் சோறு போட
லைன்னா, மறந்து போய் திங்கட்கிழமை அன்னைக்கு
பள்ளிக்கூடம் வரமாட்டாங்க அப்படின்றதால, சனிக்கிழமை சோறு மட்டும் போட்டாங்க.
அப்ப விளையாட்டு பீரியட்ல நாங்க விளையாடும் போது இந்த பாட்டெல்லாம் பாடி ஆடுவோம்.
ஏ பச்சரிசி கொத்தமல்- கீரையோடவே குத்து சம்பா வெந்த சோறு நாங்க கேக்கல - நாங்க கேட்டதெல்லாம் கேப்ப கூழு - இப்ப கிடைச்சதெல்லாம் கம்மஞ்சோறு.
காலேஜ் கான்வென்டுன்னு கட்டி வெக்கிறான் காசு பணம் இல்லையின்னா எட்டி உதைக்கிறான் நாங்க எம். ஏ; பி. ஏ.,வா படிக்க போறோம் - இல்ல எருமை மாடு மேய்க்க போறோம்.
அப்பவே நான் இது மாதிரி நிறைய பாட்டு கேட்டு, பாடி இருக்கேன்.
பள்ளிக்கூடம் போறதவிட ஆடு மாடு மேய்க்கிறதுலதான் அலாதி சுகம்.
வீட்டுக்கு வந்தாதான் சோறு தண்ணியெல்லம் தேடுவோம்.. காட்டுக்குப் போயிட்டோம்னா, ஆட்டு மாடுக்கு கெடைக்கிறது மாதிரி, நமக்கும் பசிக்கு ஏதாவது கிடைக்கும்.
காட்டை விட்டு வெளியில வந்ததுக்கு அப்புறம்தானே நாம சோத்த தேடி அலைஞ்சோம். காட்டில் இருந்த வரைக்கும் விலங்குகள் மாதிரி நாமளும் அங்க இருந்த பழங்களையும், காய்களையும்தான சாப்பிட்டு வாழ்ந்தோம்.
நாங்க ஆடு மாடு ஓட்டிகிட்டுப் போனா அந்த காலத்து காட்டுவாசி மாதிரி மாறிடுவோம்.
குருவி பழம் பரிச்சு திம்போம். குருவி பழம் மிளகு சைஸ்ல கருப்பா இருக்கும். அதோட விதை மட்டும் உள்ள பெருசா இருக்கும். அதை அப்படியே கடிச்சு சாப்பிட லாம் ரொம்ப நல்லா சுவையாக இருக்கும். அப்புறம் காரை பழம். அது கொஞ்சம் துவர்ப்பா இருக்கும். அது ஒரு மாதிரியான சுவையாக இருக்கும். ஆனாலும் நல்லா இருக்கும்.
சப்பாத்தி பழம் ரொம்ப இனிப்பா இருக்கும். நல்லா செகப்பா பழுத்திருக்கிற பழமா பார்த்து பறிச்சி, அதுல முள்ளு அங்கங்க நீட்டிக்கிட்டு இருக்கும். அத புல்லுல போட்டு தேச்சோம்னா, முள்ளு எல்லாம் கொட்டிடும். அதுக்கப்புறம் அதை கையால புட்டு, உள்ள பார்த்தோம்னா பீர்க்கங்காய் மாதிரி உள்ள கொட்டையோட செக்க செவேல்ன்னு பழுத்திருக்கும். அதை எடுத்து சாப்பிட்டோம்னா அவ்வளவு அலாதி யான சுவையாக இருக்கும். சப்பாத்தி பழத்த சாப்பிட்ட உடனே அதோட சாறு வாய் முழுசும் செவப்பா ஆயிடும். ஒரு ரெண்டு பழம் சாப்பிட்டாலே போதும். பசி அடங்கிடும்.
அப்புறம் நெல்லிக்காய் பறிச்சு சாப்பிடுவோம். சிறு நெல்லிக்காய் சாப்பிடும்போது இனிப்பா இருக்கும். ஆனா அரு நெல்லி நல்ல பெருசா இருக்கும். கடிச்சு சாப்டோம்னா ஒரு மாதிரியான கசப்பும், துவர்ப்புமா இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன், எங்கேயாவது இன்ஜின் ஓடுச்சுன்னா அதுல போய் தண்ணிய அள்ளிக் குடிப்பொம். வாயிலிருந்து வயிறு வரைக்கும் தண்ணியே இனிப்பா இனிக்கும். இந்த அருநெல்லிதான் அதியமான் ஔவைக்குக் கொடுத்தது.
ஆதி குடிகள் இந்த அருநெல்லியை காயின்னு சொல்லமாட்டாங்க. கனின்னுதான் சொல்லுவாங்க. இந்த நெல்லிக்கனியை சாப்ட்டா நீண்ட நாள் வாழலாமுன்னு அதியமான் அவ்வைகிட்ட கொடுத்தாரு.
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.
நீண்ட ஆயுளைத் தரவல்ல அந்த சிறப்பு வாய்ந்த நெல்லிக்கனியை, அரசனாகிய தான் உண்பதைவிட அறிவில் சிறந்து இருக்கக்கூடிய, தனது நண்பர் அவ்வையார் உண்பது நாட்டின் தமிழின் முன்னேற் றத்திற்கு நல்லது என எண்ணி அவ்வையாருக்கு அளித்தான் அதியமான்!
அந்த நெல்லிக்கனிய நாங்க ஒரு நாளைக்கு ஒன்னுனாலும் சாப்பிடுவோம். அது ஒரு மாதிரி துவர்ப்பா இருக்கும் அதனால நிறைய சாப்பிடமுடியாது.
அப்புறம் கொடுக்காப்புளி பழம் அடிச்சு சாப்பிடுவது, அப்புறம் அல்லிக் குளத்துல போயி, தண்ணியில மூழ்கி அடியில இருக்குற அல்லிக் கிழங்க பறிச்சுக்கிட்டு வருவோம். அதை கொண்டுகிட்டு வந்து அம்மாகிட்ட குடுத்தா, அம்மா அதுல கொஞ்சம் உப்புப் போட்டு வேகவச்சுக் கொடுக்கும். அதுவும் நல்லா இருக்கும்.
நாங்க அஞ்சு நிமிசத்துல பால தயிர் ஆக்கிடுவோம் தெரியுமா? காட்டுல நிறைய ஆடுங்க மேஞ்சுக்கிட்டு நிக்கும். அதுல குட்டி போட்ட ஆடுங்க மட்டும் நல்லா தெரியும். அதோட மடியில பால் சுரந்து பெருசா இருக்கும். நாங்க மெதுவா அதை போய் புடிச்சு நாலு காலையும் புடிச்சுகிட்டு, கழுத்தை ஒருத்தர் புடிச்சுகிட்டு, கொட்டாங்குச்சி எடுத்துகிட்டு போயி, அந்த கொட்டாங்குச்சியில பால் கறப்போம், அப்படியே மல்லாக்க படுத்துக்கிட்டு ஆட்டு மடிய வாயில வச்சு பாலும் குடிப்போம்.
அங்க காட்டிலேயே போற எல அப்படின்னு ஒரு இலை உண்டு. சின்ன சின்னதா கருவேப்பிலை மாதிரி கரும்பச்சை நிறத்தில இருக்கும். அது ஒரு புதர் செடி.
அதோட குச்சி வெள்ளையா இருக்கும். அந்த இலையை பறிச்சு, அந்த எலையோட காம்புல இருக்குற பாலை இந்த கொட்டாங்குச்சியில இருக்குற பால்ல கலந்து, அந்த எலைய இந்த கொட்டாங்குச்சியில் இருக்கிற பால் மேல அப்படியே ஒன்னு ஒன்னா போட்டு படர விட்டு வெயில்ல வச்சோம்னா அந்த பாலு அஞ்சே நிமிசத்துல தயிரா ஆயிடும். அத அப்படியே நுணா இலையை பறிச்சு, அதை சுருட்டி ஸ்பூன் மாதிரி வச்சுக்கிட்டு, அந்த கொட்டாங்குச்சியில இருக்குர தயிர வெட்டி வெட்டி சாப்பிடுவோம். அதுதான் எங்களுக்கு பால்கோவா. அது அவ்வளவு அலாதியான சுவையாக இருக்கும்.
ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு
எரும பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம் பசு ஓட்டி வாராண்டீ தாய்மாமன்
வெள்ளிச் சங்கு செஞ்சா வௌக்கி வைக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்
பச்ச உடம்பு காரி பாத்து நடக்க சொல்லு
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்க சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்க சொல்லு
மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே
பொட்டப்புள்ள பொறந்ததுனு புலிகாட்டில் கூவும் குயிலே
தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ - அவன்
தங்க கொலுசு கொண்டு தாரண்டீ
சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஊரு வருமே
சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஊரு வருமே
கிழக்குச் சீமையிலே படத்தில வைரமுத்து ஐயா எழுதின பாட்டு இந்த பாட்டு. ஐயா சொல்ற மாதிரி நாங்க அப்படி எல்லாம் பார்த்தா வளர்ந்தோம். ஆட்டுப் பாலோ மாட்டுப் பாலோ, எருமை பாலோ, அறிவு அழிஞ்சுச்சோ, வளந்துச்சோ, கிடைச்சது குடிச்சிட்டுதானே வளர்ந்தோம் வாழ்ந்தோம்.
நொணா எல அப்படின்னோன ஒரு நெனப்பு வருது. கால்ல முள் அடிச்சிட்டாலும், இல்ல வேற ஏதாவது வெட்டு காயம் ஏற்பட்டாலும் இந்த நொணா இலை கொழுந்த பறிச்சு, உள்ளங்கையில வச்சு நல்லா கசக்கி, அந்த பச்செலைய அந்த காயத்து மேல வெச்சி, கொஞ்சம் சாணிய பென்சில் மாதிரி உருட்டி, அதை அந்த பச்செலைய சுத்தி, ரவுண்டா வச்சி நல்லெண்ணைய காய்ச்சி அந்த பச்செலை மேல ஊத்துனோம்னா பட படன்னு அந்த இலையில ’என்ன’ பட்டு தெறிக்கும். அது போயி அந்த புண்ணுல பட்டு சுள்ளுன்னு ஒரு சூடு அவ்ளவுதான். ஒரு ரெண்டு மூணு தடவ இது மாதிரி வச்சி கட்டினா போதும். புண்ணு தானா ஆறிடும். அவ்வளவு பெரிய மருத்துவ குணம் அந்த நுணா இலைக்கு உண்டு.
அப்புறம் வயித்துல பூச்சி இருக்கும். வயித்துல பூச்சி இருந்துச்சுன்னா தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்கும். அதுக்கு எங்க அப்பா ஒரு பச்செலைய சாப்பிடக் குடுக்கும். அது என்ன இலை. அத எப்படி சாப்பிடனுமுன்னு அடுத்தமுறை சொல்றேன்.
வண்டி ஓடும்