"பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்..'

-என்பார் வள்ளுவர்.

இதன் பொருள், பிற பெண்களிடம் முறைகேடாக நடப்பவர்களைவிட்டு, பகையும், தீமையும், அச்சமும், பழியும் நீங்குவதே இல்லை என்பதாகும்.

பொள்ளாச்சியில் கொடூர ஆட்டம் போட்ட மன்மத ஓநாய்கள்,இப்போது மரணம் வரையில் ஆயுள் தண்டனையை அடைந்திருப்பதோடு, மக்களின் வெறுப்பையும்,தீராப்பழியையும்,வாழ்நாள் முழுக்க சிறைக்குள்ளேயே அஞ்சி வாழும் நிலைமையையும் அடைந்திருப்பதிலிருந்தே,வள்ளுவரின் எச்சரிக்கை எப்படிப்பட்டது என்பது தெரியவரும்.

இப்படியும் ஒரு கொடூரம் நடக்குமா? என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் 6 ஆண்டுகளுக்கு முன் திகைத்தவைத்தது அந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நடந்த காலத்தில், 2018-19 ஆம் வருடங்களில், அன்றைய ஆளுங்கட்சியில் செல்வாக்கு பெற்றவர் களாக வலம் வந்த உடல் திமிர் கொண்ட பொள்ளாச்சி இளைஞர்கள் சிலர், தாங்கள் நினைத்தபடியெல்லாம் ஆபாச அடாவடிகளில் இறங்கினர்.

ss

இளம்பெண்கள், மாணவிகள், குடும்பத் தலைவிகள் என ஏராளமான பெண்களை காதல் மொழி பேசி எளிதாக ஏமாற்றி, சின்னப்பம் பாளையம் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று, மிகக் கொடூரமாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, ஆபாசமாக வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டியே அவர்களைப் பலருக்கு பந்திவைத்து வந்தது அந்த வக்கிரக் கும்பல்.

அந்த கொடூரத்தின் கோர சாட்சியாக நம் கைக்கு சில வீடியோக்கள் கிடைத்தன.குறிப்பாக, ஒரு வீடியோவில், தங்களிடம் சிக்கிய இளம்பெண்ணை, ஒரு கொடூரன் பெல்டால் அடித்து சித்ரவதை செய்தபடியே,உடையை அவிழ்க்கச் சொல்ல, அடிதாங்க முடியாமல் அந்த இளம்பெண், "அண்ணா..

Advertisment

பெல்டால் அடிக்காதீங்கண்ணா...' என்று கதறுகிற காட்சி பதிவாகி,நம்மை அதிர்ச்சியில் நொறுங்க வைத்தது.

இந்த விவகாரத்தை நமது நக்கீரன் இதழிலும் நக்கீரன் இணைய தளத்திலும் ஆதாரத்தோடு அப்போதே அம்பலப்படுத்தினோம்.

அந்தத் துயரம் மிகுந்த வீடியோக்களும், அதனிடையே ஒலித்த, "அடிக்காதீங்கண்ணா' என்ற கதறலும்... ஒட்டுமொத்த தமிழகத்தையும் கதிகலங்க வைத்தது.

Advertisment

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் நாம் புலனாய்வு மூலம் வெளிக்கொண்டு வந்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி அன்றைய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினோம்.

நக்கீரன் கொடுத்த அழுத்தங்களால்,அன்றைய ஆளுங்கட்சி,இதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. எனினும், பிரச்சினையை வெளிக்கொண்டு வந்த நக்கீரனுக்கே, சி.பி.சி.ஐ.டி. மூலம் சம்மன் அனுப்பி, வழக்கை நீர்த்துப்போக வைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டது அன்றைய அரசு. ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில்,சி.பி.சி.ஐ.டி. நக்கீரனுக்குக் கொடுத்த நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு முறியடித்தோம்.

இந்த விவகாரத்தில் தொடர்ச்சி யாக நக்கீரன் காட்டிய அதிரடி களால்,பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ யின் கைக்குச் சென்றது.அதன்பிறகே வழக்கு சரியான பாதையில் நகர ஆரம்பித்தது.நக்கீரனும் தன்னிடமிருந்த ஆதாரங்களைக் கொடுத்தும்,சாட்சி சொல்லியும்,நீதிக்கான தனது பங்களிப்பைத் தயக்கமின்றிச் செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நாம் அம்பலப்படுத்திய குற்றவாளிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 ஓநாய்கள் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள், 200 ஆவணங்கள், 40-க்கும் மேற்பட்ட மின்னணுத் தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றன. இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட் டில் நடந்துவந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பு பல்வேறு வகையிலும் வழக்கை இழுத்தடிக்க முனைந்தது. எனினும், நீதிமன்றம் கொஞ்சமும் அசராமல் வழக்கை சிறப்பாகவே நகர்த்தியது.

இதைத் தொடர்ந்து,பல்வேறு விசாரணை களுக்குப் பின், கடந்த 13-ஆம் தேதி மகிளா கோர்ட் நீதிபதி நந்தினிதேவி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.

குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டி ருப்பதாக அறிவித்த நீதிபதி, குற்றவாளிகளின் குற்றச்செயல்களுக்கு ஏற்ப, அவர்களில் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை விதித்தித்தார்.அதிலும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்து, பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீருக்கு ஆறுதல் ஒத்தடம் கொடுத்தார்.

அதன்படி குற்றவாளிகளான...

சபரிராஜனுக்கு- 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும், சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனையும், வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், ஏனைய குற்றவாளிகளான பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோருக்குத் தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக அறிவித்தார் நீதிபதி.

இதன்மூலம் பெண்களை வேட்டையாடிய அந்த ஓநாய்களின் கோரப்பற்கள் சுத்தமாகப் பிடுங்கி எறியப்பட்டன.

=

தீர்ப்புக்கு முன்பு வரை விசாரணைக் கைதிகளாக, விதவிதமான கலர் உடைகளில் சேலம் சிறையில் வலம்வந்த அந்த பொள்ளாச்சிக் குற்றவாளிகள், தீர்ப்பு வந்த மறுநாளே தண்டனைக் கைதிகளாக அடையாளம் பொறிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இவர்களுக்கு தண்டனைக் கைதிகளுக்காக வெள்ளை நிற அரைக்கை சட்டையும் பேண்ட்டும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தண்டனைக் கைதிகளுக்கான எண்களும், இந்த ஒன்பது பேருக்கும் வழங்கப்பட்டது. அதன்படி,

சபரிராஜனுக்கு 148734,

திருநாவுக்கரசுக்கு 150566,

சதீஷுக்கு 148733,

வசந்தகுமாருக்கு 148732

மணிவண்ணனுக்கு 155483,

பாபுவுக்கு 303344,

ஹெரன் பாலுக்கு 303341,

அருளானந்தத்தக்கு 303338

அருண்குமாருக்கு 356907 - என்று எண்கள் ஒதுக்கப்பட்டன.

இனி இவர்கள் எண்களால்தான் சிறையில் அழைக்கப்படுவார்கள்.

சாகும்வரை ஆயுள் தண்டனை என்று இவர் களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், நன்னடத்தை என்று காரணம் காட்டி கூட இவர்களால், மற்ற ஆயுள்தண்டனைக் கைதிகளைப் போல், இடையில் வெளியே வரமுடியாது. மரணம் வரை, அவர்களின் வாழ்க்கை, சிறையின் நான்கு சுவர்களுக்குள்தான் கழிந்தாகவேண்டும்.

ஈவு இரக்கமே இன்றி பெண்களைக் கொத்திக் குதறி, அவர்களைக் கதறவைத்த வக்கிரக் கழுகுகளுக்கு உரிய தண்டனை கிடைத்திருப்பது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் உயர்த்தியிருக்கிறது.

எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், பார் நாகராஜ் உள்ளிட்ட ஒருசிலர், கடந்தகால அ.தி.மு.க. அரசின் செல்வாக்கால் இந்த வழக்கிலிருந்து தப்பித்திருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் குமுறிவருகிறார்கள்.

மிச்சசொச்ச குற்றவாளிகளும் விரைவில் சிக்குவார்கள் என்கிறார்கள், நீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

பல்கலைக் கழக கொடூரத்திற்கும் நீதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இரவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரமும் தமிழகத்தை அதிரவைத்தது. இந்த விவகாரத்திலும் நக்கீரன் களமிறங்கி, இந்தக் கொடூரத் திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தது. மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட "பிரியாணிக் கடை' ஞானசேகரனுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும் என்கிற உத்வேகத்தோடு, நக்கீரன் செயல்பட்டது.

இதை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது. அவர்களின் விசாரணைகளின் அடிப்படையில், ஐந்தே மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த 28 ஆம் தேதி, இந்த விவகாரத்தில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உறுதிபட அறிவித்திருந்தார். மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஜெயந்தியின் திறமையான வாதத்தால் ஞானசேகரன் மீதான 12 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்பால் நீதி கிடைக்க 6 வருடங்கள் ஆனது. ஆனால் இந்த வழக் கிலோ ஐந்தே மாதங்களில் நீதி கிடைத்துள்ளது. அதற் கான பெருமை தமிழக அரசையே சேரும். 2 ஆம் தேதி குற்றவாளிக்கான தண்டனையை அறிவிக்கஇருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பெண்களை வேட்டையாடும் ஓநாய்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எளிதில் தப்பமுடியாது என்பதையே, இந்த சம்பவமும் அழுத்தம்திருத்தமாக உணர்த்தியிருக்கிறது.

ss

முதல்வரின் நிமிர்வு!

மே 24-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழக முதல்வரும் கலந்துகொண்டார்.

கடந்த மூன்றாண்டுகளாக நடந்த இந்த நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்தார். காரணம், பா.ஜ.க. ஆளாத, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடம், மத்திய அரசு காட்டிவரும், பாரபட்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்தான் அந்தப் புறக்கணிப்பு.

இப்படி புறக்கணித்தும்கூட, டெல்லியின் மனசாட்சி உறுத்தவில்லை. அது வழக்கம்போல, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதி இனங்களைக் கொடுக்காமல் இழுத் தடித்து வந்தது.

இந்த நிலையில்தான் இவ்வாண்டுக் கான கூட்டத்தில் தமிழகத்துக்கான நிதியைக் கொடுங்கள் என்று நேரிலேயே உரிமைக்குரலை எழுப்ப, முதல்வர் அதிரடியாகவே டெல்லிக்குச் சென்றார்.

அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், "பி.எம். ஸ்ரீ' திட்டம் தொடர்பான கல்வி அமைச் சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்.எஸ்.ஏ. நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-2025-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

= கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

-என்றெல்லாம் கோரிக்கையை வைத்துவிட்டுதான் அவர் திரும்பியிருக்கிறார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியோ, டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளில் இருந்து தனது குடும்பத்தினரைக் காப்பாற்றவே முதல்வர் டெல்லி சென்றதாக, புனைந் துரைத்தார்.

"நீங்கள் டெல்லி சென்றது, தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா? இல்லை. உங்கள் குடும்ப உறுப்பினர் நிதிக்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார் கள். அதற்கான உண்மை பதில் என்ன? அதன் பின்னணி யிலுள்ள நிதிகளையும், அவர்களுக்கு துணையான தம்பிகளையும் காப்பாற்றிவிடலாம் என்ற நப்பாசை யில்தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடிச் சென்றீர்கள்?' -என்று கிண்டலாகக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இதற்கும் முதல்வர் நாகரிகமாகவே, "டெல்லிக்குச் சென் றேன். தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப் பினேன்!' என்றிருக்கி றார். மேலும் "ரெய்டு களுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர் களுக்குக்கூட தெரியா மல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை!' என எடப் பாடிக்கு, அவர் பாணியிலேயே பதிலையும் சொன்னார்.

முதல்வர் மாநிலத்தின் நிதி உரிமைக்காக டெல்லி சென்று குரல் கொடுத்து வந்திருப்பதைப் பாராட்ட மனமில்லை என்றாலும், அதில் மலின அரசியல் செய்து குளிர்காயாமலாவது இருந்து தொலைக்க லாமே.

இவரைப்போலவே முதல்வரின் டெல்லிப் பயணத்தை விமர்சித்திருக்கும் "அரசியல் கத்துக் குட்டியான' நடிகர் விஜய் "அவர் சென்றது, மாநிலத்திற்கான நிதியை பெறுவதற்காக அல்ல; தன் குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே . 2026 சட்டசபைத் தேர்தலில், தோல்வி உறுதி என்பது தி.மு.க.,விற்கு தெரிந்துவிட்டது. அதனால், மத்திய பா.ஜ.க.விற்கு சாமரம் வீசியாவது, இனி காலத்தை ஓட்டி தப்பித்துக்கொள்ளலாம் என்று அது நினைக்கிறது' என்று புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.க.விற்கு தி.மு.க. சாமரம் வீசப்போகிறது என்பது, எவ்வளவு மட்டமான கற்பனை. திராவிடச் சிந்தனைகளையும் சுயமரியாதை உணர்வையும் ஏந்திப்பயணிக்கும் முதல்வரையும் அவர் தலைமை யிலான தி.மு.க.வையும் இப்படி லாஜிக் இல்லாமல் விமர்சிப்பதே, விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மை யைக் காட்டுகிறது.

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திலேயே.. வளைந்து நெளிந்து குழையாமல் பேசிய முதல்வர் "மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய நிதியை எப்போதும் போராடி - வாதாடி - வழக்குப் போட்டுப் பெற வேண்டிய நிலைமை யில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல.' என்று அழுத்தம்திருத்தமாக, எச்சரிக்கைத் தொனியில் கூறிவிட்டுதான், நிதிக்கோரிக்கையை வைத்தார்.

இதை இங்குள்ள அரசியல் கூமுட்டைகள் கூர்ந்து கவனிக்கவில்லை என்றே தெரிகிறது.

-ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்