- தமிழிறிஞர் முனைவர் ய.மணிகண்டனின் சிறப்பு நேர்கணல்
பிந்தைய மறுமலர்ச்சி இலக்கியம் தொடர்பாக உங்கள் பங்களிப்புகள்?
பாரதியியல் தொடர்பான விடுபட்ட ஒரு செய்தியை முதலில் சொல்லிவிட விரும்புகின்றேன். பாரதியியலில் எனது முன்னோடிகள் பற்றிய முந்தைய பதிலில் இளசை மணியன் பெயர் விடுபட்டிருக்கின்றது. எட்டயபுரத்திலிருந்துகொண்டு கல்கத்தாவிலிருந்த பாரதியின் ‘இந்தியா’ இதழ் நுண்படச்சுருளைப் பெற்று நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் அதிலிருந்த பாரதி எழுத்துகளை எல்லாம் வெளிக்கொண்டுவரும் அரிய பணியை மேற்கொண்டவர் அவர். பெ. தூரன் உள்ளிட்ட முன்னோடிகளின் வரிசையில் அவருடைய இடமும் முக்கியமானது. இப்போது உங்களின் இந்தக் கேள்விக்கு வருகிறேன்.
புதுக்கவிதையின் பிதாமகர் எனவும் புதுக்கவிதையின் முன்னோடி எனவும் போற்றப் படுபவர் ந. பிச்சமூர்த்தி. தமிழின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களிலும் அவர் ஒருவர். புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி என்ற வரிசையில் இடம்பெறுபவரும் அவர். அவரைப் பற்றி முக்கியமாக இரண்டு செய்திகளை உங்கள் வாயிலாகத் தமிழுலகிற்குப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும் ந. பிச்சமூர்த்திக்கும் நெருக்கமான தொடர்பு ஒரு காலகட்டத்தில் இருந்திருக்கின்றது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ந. பிச்சமூர்த்திக்கு எழுதிய விரிவான கடிதம் ஒன்று பாவேந்தரின் கையெழுத்திலேயே எனக்குக் கிடைத்தது. அது ஒரு மிக முக்கியமான ஆவணம். அப்படிப்பட்ட ந. பிச்சமூர்த்திக்கு யாப்பிலக்கணத்திலே நல்ல தேர்ச்சி உண்டு. ஒரு நேர்காணலிலே அவர் நாங்கள் முன்னெடுத்த புதுக்கவிதை முயற்சிகள் வெற்றிபெறுகிறதோ இல்லையோ மரபுக்கவிதை செழுமைபெற அது ஒரு தூண்டுதலாக அமையும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மரபுக்கு எதிரியல்லர். மரபுக்கவிதை வீச்சோடும் புதுப்புதுப் பரிமாணங்களோடும் பொலியவேண்டும் என்று ஆசைப்பட்டவர்.
அவருடைய கட்டுரைகள் மட்டும் தொகுக்கப்படாமலேயே, நூல் வடிவம் பெறா மலேயே இருந்தன. அவற்றையெல்லாம் முதன் முறையாக அரும்பாடுபட்டுப் பழைய இதழ்களிலிருந்தும் அவருடைய குடும்பத்தார் வசம் முடங்கிக்கிடந்த கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும் கண்டெடுத்துக் காலவரிசையில் நூலாகப் பதிப்பித்து வெளியிட்டேன்.
இந்த வரிசையிலே மற்றுமொரு முக்கியமான முன்னோடி எழுத்தாளர் கு.ப.ரா.. அவருடைய கதைகளுக்கு, கவிதைகளுக்கு ஏற்கெனவே சில தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன என்றா லும் அதில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு சிக்கலை இனங்கண்டு ‘காக்கைச் சிறகினிலே’ இதழில் விரிவாக எழுதியிருந்தேன். இப்படிப் பல முயற்சிகளை இந்தக் களத்திலும் நான் புரிந்திருக்கின்றேன்.
இப்போது நீங்கள் மேற்கொண்டு வருகின்ற முக்கியமான பணிகள் குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தமிழின் வளமான இலக்கண, இலக்கியத் துறையான தமிழ் யாப்பியலின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் “தமிழ் யாப்புவடிவக் களஞ்சியம்” ஒன்று உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1924-ஆம் ஆண்டிற்கு முந்தைய தந்தை பெரியார் குறித்த முக்கியமான ஆவணங்கள் பலவற்றைத் திரட்டியிருக்கின்றேன். விரைவில் அவை நூல் வடிவம் பெறவேண்டும். தந்தை பெரியாரின் செயல்பாடு, ஆளுமை எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது என்கின்ற வரலாற்றை அறிய இந்த நூல் அருந்துணையாகும். தலித் இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமையான சகஜானந்தர் தொடர்பான இதுவரை அறியப்படாத பல ஆவணங்களைத் தேடித் திரட்டியிருக்கின்றேன். அதைப் போலவே அயோத்திதாசர், இலட்சுமி நரசு, சிங்காரவேலர் ஆகியோரின் பௌத்தம் சார்ந்த, சமூக மேம்பாடு சார்ந்த பலவற்றைக் கண்டறிந்துள்ளேன். அவையெல்லாம் மிக விரைவில் வெளிவரவிருக்கின்றன. எனக்கு உயிர்ப்பையும் உயர்வையும் வழங்கிக்கொண்டிருக்கிற தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தனித்தன்மையாகச் சிலவற்றைச் செய்து கையளிக்கவேண்டும் என்னும் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையோடு அடுத்தடுத்த பணிகளுக்குள் ஆழ்ந்துகொண்டிருக்கிறேன்.
__________________________________________________
முனைவர் ய.மணிகண்டனை நேர்காணல் செய்த முனைவர் பா.ஜெய்கணேஷ் (இளமாறன்), சென்னை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தமிழ்ப் பேராயத்தின் செயலராகவும் தமிழ்த்துறையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர் இதே தலைப்பில் வெளிவந்த நூலிற்காக 2015-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் கையால் இளம் ஆய்வறிஞர் விருதினைப் பெற்றவர். 15 நூல்கள், 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். வல்லினம், புதிய புத்தகம் பேசுது, காட்சிப்பிழை, வல்லமை, சான்லாக்ஸ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டுள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியின் ழகரம் "தமிழோடு விளையாடு" ஆகிய நிகழ்ச்சிகளின் நெறியாளராக இருந்துள்ளார்.