திரைப்பாடல்களால் உலகத் தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் அப்பா. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து புறப் பட்டு, தனது லட்சியக் கனவான திரையுலகிற்குள் போராடி நுழைந்து, வெற்றிக்கோட்டினை எட்டிப் பிடித்ததோடு, எங்களை எல்லாம், இதயத்தின் கைகளால் தாலாட்டிக்கொண்டிருந்தவர்.

அந்த அன்பான அப்பாவை, ஒரே நொடியில், கண் இமைக்கும் நேரத்தில், நாங்கள் இழந்துவிட்டோம். அவருக்காக நாங்கள் கட்டிவைத்திருந்த கனவுக் கோட்டை அப்படியே இருக்கிறது. அவர்தான் இல்லை. அவரது கடைசிக் காலத்தில் அவரை எப்படியெல்லாமோ பார்த்துக் கொள்ளவேண்டும் என்று நான் போட்டு வைத்த திட்டங்கள், ஏமாற்றத்தில் கைபிசை கின்றன.

அப்பா, ஊதிபத்திப் புகைபோல் கரைந்துவிட்டார். கவித்துவம் மிகுந்த அவர் அன்பின் மணம் மட்டும் எங்களைச் சுற்றி, வீசிக் கொண்டே இருக்கிறது.

அப்பா பற்றி தகவல்களையும் ஒரு சில நினைவுகளையும் அவரைச் சுற்றி அவரை அடைகாத்திருந்த ஆன்மீக ரகசியங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Advertisment

அப்பா பிறைசூடனின் இயற்பெயர் சந்திரசேகர். திருவாரூர் அருகே இருக்கும் நன்னிலத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா ராஜு, காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர். இளமையிலேயே துருதுருப்பாக இருந்தவர் அப்பா என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அப்பாவுக்கு இயல்பாகவே ஆன்மீக நம்பிக்கை உண்டு. அதோடு, ஆன்மிகம் சார்ந்த ஒரு சக்தி அவரை வழி நடத்தி யது என்றுதான் சொல்லவேண்டும்.

அவர் நம்பிய இறை சக்தியால் அவர் கடைசி வரை வழிநடத்தப்பட்டார். இறையாற்றல் அவருடன் இருந்தது. அதுதான் அவரை இயக்கியது.

Advertisment

dd

*

சமீபகாலமாகவே அப்பா, மரணம் பற்றியும் நிலையில்லா வாழ்கை பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார்.

அவரது சொற்பொழிவுகளிலும் அதையே சொன்னார். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டல், அவருக்கே உரிய புன்னகைதான் அவரிடமிருந்து பிறக்கும்.

ஏற்கனவே அவர் எங்களிடம், நான் 65 வயது 4 மாதம் 11 நாள் மட்டும்தான் உயிரோடு இருப்பேன். அதுவரைதான் எனக்கு இங்கே அனுமதி. அதற்கு மேல் ஒரு நாள் கூடினாலும் அது எனக்குக் கூடுதலாக வழங்கப்படுகிற போனஸ் நாட்கள் என்று தெளிவாகச் சொன்னார். நாங்கள் அவர், நம்பிக்கையில்லாமல் அப சகுனமாகப் பேசுகிறாரே என்று நினைத் திருந்தோம். இந்த நிலையில் என் அக்காவுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. அதைப் பார்த்துவிட்டு, அன்றே என் அக்காவிடமும் எங்கள் அம்மாவிடமும், எனக்கு நேரம் நெருங்கிடிச்சி என்று சொல்லத் தொடங்கிவிட்டார்.

அதோடு, என் அப்பாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. அவர் எனக் காகக் காத்திருக்கிறார். கனவிலும் கூட வந்து அழைக்கிறார் என்றும் சொன்னார் .

அப்போதும் நாங்கள் நம்ப வில்லை. கடைசி நாளான கடந்த 8.10.20201 அன்று, காலை எழுந்ததுமே, என் அக்காக்களுக்குத் தீபாவளி சீர்வரிசைக்கான பணத்தை கூகுள்பே மூலம் அனுப்பச் சொன்னார்.

நனோ “அதற்குள் என்னப்பா அவசரம்? தீபாவளி அடுத்த மாதம் 4 ஆம் தேதிதானே வருகிறது? பிறகு அனுப்பலாமே..” என்றேன்.

அப்பாவோ “இல்லப்பா, இன்னைக்கே.. இப்பவே அனுப்பிடுப்பா. அப்பதான் மனசுக்கு நிம்மதி” என்று அழுத்தமான குரலில் சொன்னார். அதன்படி அனுப்பினேன்.

அப்போதுதான் அவர் நிம்மதியானார்.

ff

*

முதல்நாள், இரவு நான் தேனி போக நினைத்தேன். தாய் வீடு போயிருக்கும் என் மனைவியைப் போய் அழைத்து வருகிறேன் என்று அப்பாவிடம் சொன்னான். பிறகு போகலாம் என்று, என்னை வீட்டில் இருக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். நான் தயங்குவதைப் பார்த்துவிட்டு...

”ஆஸ்கருக்கு அனுப்புவதற்கான படங் களைத் தேர்வு செய்யும் குழு 9-ந் தேதி இணையத்தில் கூடுது. அந்த ஆலோச னைக் கூட்டத்தில் நான் கலந்துக் கனும். அதுக்கு என்கூட இருந்து கொஞ்சம் உதவிட்டு, கூட்டம் முடிஞ்சதும் நீ ஊருக்குப் போ. அதுவரை இங்கேயே என் கூடவே இரு என்றார்.

அதன் அர்த்தம் மறுநாளான 8-ஆம், தேதிதான் தெரிந்தது. தன் உயிர் பிரியும் போது, நான் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

*

அன்று காலையில் வழக்கம் போல் அமைதியாக இருந்தார். சிங்கப்பூர் ஆல்பம் ஒன்றிற்காக எழுதிய பாடலை அனுப்பிவைத்தார். அது என் நண்பர் ஒருவர் தயாரிக்கும் ஆல்பம். சூபிகள் பற்றிய ஆன்மீக ஆல்பம் அது. அன்று ஆழ்ந்த அமைதியில் இருந்தார். மதியம் சாப்பிட்டதும் தன் அறையில் போய் அமைதியாகப் படுத்தார். நான் என் அறைக்குச்சென்றேன்.

ff

திடீரென 4 மணிக்கு எழுந்து ஹாலுக்கு வந்த அப்பா, அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் அங்கே வந்தார்.

அப்போது அப்பாவுக்கு திடீரென்று வியர்த்தது. மெல்ல அவர் கண்கள் செருகத் தொடங் கின. அதைக்கண்டு பதறிப்போன அம்மா, ”டேய் தயா... சீக்கிரம் வா... அப்பாவுக்கு என்னவோ பண்ணுது” என்று சத்தம் போட்டார். நான் ஹாலுக்கு ஓடி வந்தேன். அப்பா கண் செருகிய நிலையில்...இருந்தார். ஒரு வித தியான நிலை போல் இருந்தது. நான், அப்பா என்று அழைத்ததும், அப்படியே என்னைப் பார்த்தவாறு மெதுவாக பக்கவாட்டில் சாய்ந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினேன். ஹார்ட் அட்டாக் என்று புரிந்துகொண்டேன்.

”அப்பா பயப்படாதிங்க உங்களுக்கு ஒன்னும் இல்லை” என்றபடி அவர் நெஞ்சைத் தட்டியும் நீவியும் முதலுதவி கொடுத்தேன். ஆம்புலன்ஸு டன் வந்த நர்ஸ், பல்ஸ் லேசா இருக்கு. இருந்தா லும் ஆம்புலன்ஸுல கொண்டு போறது நல்லது இல்லை. நிலைமை சரியில்லை. மோசமா இருக்கு என்று சொல்ல, திகிலடித் துப் போனோம்.

உடனே அருகில் இருக்கும் குடும்ப டாக்டர் இளங்கோவனுக்குத் தகவல் கொடுத்தோம். அவர் வந்து பார்த்துவிட்டு, அப்பா விடைபெற்றுவிட்டதை, உதட்டைப் பிதுக்கி உணர்த்தினார். அவர் வந்து அமர்ந்த ஷோபாவிலேயே அவர் உயிர்க் காற்று பிரிந்துவிட்டது. எல்லாம் ஒருசில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது.

இசை லயமாக, கவித்துவ வார்த்தை களாகத் துடித்துவந்த அப்பாவின், இதயம் ஓய்ந்துவிட்டது. சில நிமிடங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம். திகைத்தோம். உறைந்துபோய் உட்கார்ந்தோம். நடந்தது உறைக்க... அழத் தொடங்கினோம்.

*

அப்பா, ஆசையாய்க் கட்டிய வீடு, அவர் அமர்ந்து பாடல்கள் எழுதிய அறை, அவரது மேசையில் படபடக்கும் தாள்கள், அவர் அமர்ந் திருந்த ஷோபா, அவர் நடமாடிய வராண்டா, எல்லாம் வெறுமையாக இருக்கிறது. அவரது நினைவுகள் எல்லாப் பக்கமும் தெரிகிறது. அவரது அன்பையும், அந்தப் புன்னகையையும், காலம் அநியாயமாகக் களவாடிச்சென்று விட்டது.

*

dd

அப்பாவின் வாழ்வில் நிறைய ரகசியங்கள் உண்டு. அவர், ஆன்மீக ஞானிகளால் இலக்கிய வாழ்க்கைக்குத் திருப்பப்பட்டவர்.

அப்பாவுக்கு சின்ன வயதிலேயே வீர விளையாட்டுக்களில் அதிக ஆர்வம். கம்பு சுத்துதல், சுருள் வில் சுழற்றுதல், குத்துச் சண்டை என்று சகல வீர விளையாட்டுக்களையும் கற்றுக்கொண்டார்.

சென்னை மடுவங்கரைப் பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை ஆசிரியர் ஒருவர், நன்னிலம் பகுதியில் தங்கி அவருக்கு குத்துச்சண்டை சொல்லிக் கொண்டுத்திருக்கிறார். இப்போது சார்பட்டா பரம்பரை என்று சொல்கிறோமே அதுபோல், அவர் மடுவங்கரை பரம்பரை. முரட்டு மீசையுடன் சண்டியர் போல்தான் இளமைக்காலத்தில் அவர் இருந்திருக்கிறார்.

ஆனால் அப்பாவைப் பார்த்த மகான்கள் அத்தனை பேரும்,

”உன் துறை இதுவல்ல” என்று சொல்லி,

அவரைத் திசை திருப்பியிருக்கிறார்கள்.

தாத்தா காவல்துறையில் இருந்ததால், அடிக்கடி பல ஊர்களுக்கு மாற்றுவார்கள். அதனால் அப்பாவின் படிப்பும் பல ஊர்களில் தொடர்ந்திருக்கிறது. திருச்சி பிஷப் ஹீபரில் பி.யு.சி. படித்தவர், குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரியில் இளம் வணிகவியல் படிப்பை முடித்தார். அதன் பின் அவர் கவனம் முழுதும் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிவிட்டது.

அவருக்கு ஆரம்பத்தில் கங்கிரஸ் கட்சியின் மீது ஆர்வம் இருந்தது. கீவளூர் பகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலும் இருந்திருக்கிறார். அவர் கல்லூரியில் படிக்கும் போது, ஒருமுறை முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தை விழாவுக்கு அழைத்திருக்கிறார். அப்போது அவரது காலடியைத் தொட்டு அப்பா ஆசிர்வாதம் வாங்கியபோது, பக்தச்சலம், அவரைத் தடுத்து..

“வாழ்க்கையில் ஆய் அப்பனைத் தவிர வேறு எவர் காலிலும் விழாதே” என்று சொல்லியிருக்கிறார். பிறகு அப்பாவின் உரையைக் கேட்டுவிட்டு, உனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம். எழுத்தை மட்டுமே நம்பு. உனக்குத் திறமை இருக்கிறது. அதை எழுத்தில் வெளிப்படுத்து” என்று சொல்லியிருக்கிறார்.

*

கீவளூர் பகுதியில் அப்பா இருந்தபோது, ஒரு வீட்டுக் காம்பவுண்டுக்குள் வைக்கோல் போர், தீப்பிடித்து எரிந்திருக்கிறது. அதன் அருகே இருந்த குழதை ஒன்று அதில் சிக்கிக்கொள்ள இருந்த நேரத்தில், எலோரும் கூப்பாடு போட்டார்களே தவிர, எவரும் காப்பாற்ற முனையவில்லை. அப்போது அப்பா, உடனே அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குறித்து, அந்தக் குழந்தைக்கு சின்னக் காயம் கூட இல்லாமல் காப்பாற்றிவிட்டார்.

அப்போது அந்தப் பகுதிக்கு வந்திருந்த, பார்வையற்றவரான, புகழ்பெற்ற ’பதின் கவனகர்’ இராமையா அவர்கள், அப்பாவை தன் அருகே அழைத்துவரச் செய்து, திருநீறு பூசிவிட்டு, முருகன் திருப்புகழ் மந்திரத்தை அவருக்கு சொல்லிக் கொடுத்து, இதை மனப்பாடம் செய்து அடிக்கடி ஓது... உனக்கு ஒருவித சக்தி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதிலிருந்தே அப்பாவுக்கு சில சக்தி வந்ததாக அவரே சொல்வார்.

பிறகு அதுபோல் ஜோதிட ஆராய்ச்சியில் இறங்கியவர் வைத்தீஸ்வரன்கோயிலில் நாடிஜோதிடமும் கற்றுக்கொண்டார். மேலும் மேலும் அவருக்கு ஆன்மீகத் தேடல் அதிகமானது.

*

இந்த நிலையில், அப்பாவுக்கு புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கிருந்த தாசானந்த சாமிகள் அவரை ஈர்த்தார். எப்போதும் டீயும் சிக்ரெட்டுமாக இருப்பாராம் அந்த தாசானந்த சாமிகள்.

அவர் அப்பாவிடம் “ வில்லெடுத்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, சொல்லெடுத்துப் பாட்டெழுது’ என்று சொல்லிய துடன் அவர்தான், அப்பாவுக்கு பிறைசூடன் என்ற புனைபெயரையும் சூட்டினார்.

அதுமட்டுமல்ல. "உனக்கு பாட்டெழுத, வாய்ப்பு கிடைக்கும். முதல் பாட்டுக்கு 501 ரூபாய் சம்பளம் வாங்குவாய். அதன் பின் மூன்று வருடம் தெருத்தெருவாய் அலைவாய். அதற்குப் பிறகு தான் உனக்கு ஏறுமுகம்” என்றும் சொன்னாராம். அது அப்படியே நடந்தது.

அப்பா தன் திரைப்பாட்டு எழுதும் ஆசையை, எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பிரபல திரைப்படப் பாடகரிடம் சொன்ன போது, “அதெல்லாம் எளிதல்ல. சென்னைப் பக்கம் வந்து விடாதே. இங்கேயே ஏதாவது ஒரு பிழைப்பைப் பாரு என்று மட்டம் தட்டியிருக்கிறார். இதைக் கேட்டதும், சென்னைக்குச் சென்று சாதித்தே ஆகவேண்டும் என்று தீர்மானித் திருக்கிறார் அப்பா. அப்பவே வெறும் 130 ரூபாயோடு சென்னைக்குக் கிளம்பி விட்டார்.

அதன்பின் பல்வேறு சோதனைகளைத் தாண்டிதான் அப்பாவால் வெற்றிபெற முடிந்தது. சென்னைக்கு வந்த அப்பாவை, மக்கள் குரல் ராம்ஜிதான், இயக்குநர் ஆர்.சி. சக்தி மூலம் ’சிறை’ படத்தில் முதல் பாட்டை எழுதவைத்திருக்கிறார்.

அப்போது கூட இசையமைப்பாளரான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு, அப்பாவைப் பாட்டெழுத வைப்பதில் உடன்பாடு இல்லை. அவர், வைரமுத்துவை எழுதவைக்கலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம். அப்பாவை எழுதவைக்கனும் என்று இயக்குநர் பிடிவாதமாகச் சொன்னதால், வேண்டா வெறுப்பாக அவர் . பாடலுக்காக மெட்டை கிடுகிடுவென்னு வேகமாக வாசித்துத் திணறவைக்க, அப்போதும் சளைக்காமல் அந்த மெட்டுக்கு அப்பா, பாடலை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

அதுதான் ’ராசாத்தி ரோசாப் பூவே வெட்கம் ஏனோ?’ என்ற பாடல்.

*

பலரும் இயக்குநர் பாலச்சந்தர்தான் அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றும், அவர்தான் ஊர்காரர் என்ற பாசத்தில் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அவர் ஒரு படத்தில் கூட அப்பாவுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. என்ன காரணமோ அவர் அப்பாவை புறக்கணித்துக்கொண்டே இருந்தார். அவர் நிறமோ, தோற்றமோ நிமிர்வோ அவருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.

இத்தனைக்கும் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் ஜோதிடம் பார்த்தவர் அப்பா. அவர் குடும்பத் தினர் அனைவருக்கும் அப்பாவின் ஜோதிடத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை. அப்பா திரையுலகத்திற்குள் நுழையும் முன், எங்கள் நன்னிலத்தில் ஓடியன் திரையரங்கத் திறப்பு விழா நடந்தது.

அதற்கு பாலச்சந்தர் வந்திருந்தார். அந்த நிகழ்சியில் வரவேற்புரை ஆற்றிய அப்பா, கவிதையிலேயே இயக்குநர் பாலச்சந்தரைப் பார்த்து..

‘சம்மதமா- நான் சென்னைக்கு வர

உங்களுக்குச் சம்மதமா?

நான் அங்கு வந்தால்

ஆயிரம் பாடல்கள் கண் திறக்கும்.

சம்மதமா? ”

-என்ற ரீதியில், கவிதை பாடியிருக்கிறார்.

ஆனால் அதற்கு விழாவில் பதில் சொல்லாததோடு, கடைசிவரை அப்பாவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பை அவர் தரவே இல்லை.

*

அதேபோல் ஒரு பெரிய இசையமைப்பாளர் அப்பாவுடன் நெருக்கமாக இருந்தார். வாய்ப்பு களையும் கொடுத்தார். அவரைப் பொறுத்தரை ஒரு பாடலாசிரியர் எழுதும் ஒரு பாட்டு அதிகமாகப் புகழடைந்தால், அடுத்து அவரை அழைக்கமாட்டார். தன் பெயர் மட்டுமே வெளியே தெரியவேண்டும் என்று நினைப்பார். அப்பாவிடம் அவர், வெளியில் யாருக்கும் பாட்டு எழுதவேண்டாம் என்று சொல்ல, நீங்களும் தொடர்ந்து வாய்ப்பு தருவதில்லை. மற்றவர்கள் கொடுக்கும் வாய்ப்பையும் மறுக்கச் சொல்கிறீர்களே... பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் சென்னையில் என்ன செய்வது? என்று அவரிடமே முகத்துக்கு நேராகக் கேட்டிருக்கிறார்.

அதேபோல் அந்த இசையமைப்பாளரிடம் சவுண்ட் என்ஜினியராக இருந்த ஆதித்தனை, அமரன்’ பட இயக்குநரிடம் அப்பா அறிமுகப்படுத் தினார். அவரது அந்தப் படத்தின் பாடல்கள் செம ஹிட்டானது. இதையறிந்து கொதித்துப் போன அந்த இசையமைப்பாளர், என்னிடம் காதில் மைக்கை மாட்டிக்கொண்டு இருந்த ஒருவனை, நீ இசையமைப்பாளராக ஆக்குகிறாயா?” என்று கோபப்பட்டிருக்கிறார்.

அந்த இசையமைப்பாளர் இசைத்தெய்வம் என்று போற்றப்படுகிறவர். ஆனால் அவர் பாடலாசிரியர்களைத் தனது கொத்தடிமைகள் போல நடத்தியதை அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவருடன் வாக்குவாதம் செய்து, அவரைக் கண்டித்துவிட்டு, அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். இப்படி தன்மானப் போராட்டத்தையும் அப்பா திரையுலகில் நடத்த வேண்டியிருந்தது.

அடிக்கடி அவர் என்னிடம் சொல்வார்.

நீ எதிர்காலத்தில் சிறப்பான இடத்தைப் பிடிப்பாய். ஆனால். அதைப்பார்க்க நான் இருக்க மாட்டேன் என்று. அவர் சொன்னது போலவே ஆகிவிட்டது.

அதே இசையமைப்பாளர், அப்பாவிடம் உனக்கு என்ன மியூசிக்கைப் பற்றித் தெரியும்? என்று கேட்டாராம். இதனால் தன்மானம் சீண்டப்பட்ட அப்பா, என்னை உடனே இசைப்பயிற்சிக்கு அனுப்பினார். அவர் திட்டமிட்டே என்னை இசையமைப்பாளர் ஆக்கினார்.

அவர் கடைசியான நான் இசையமைக்கும் படத்துக்குதான் பாடல் எழுதினார். இதனிடையே நான் முன்பே குறிப்பிட்டது போல் சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பர் ஒருவருக்காக, சூபித்துவம் குறித்த ஆல்பத்துக்குப் பாடல் எழுதினார்.

‘உலகினில் கேட்கும் உயிரொலி யாவும்

இறைமொழி ஆகுமே!

மனிதா கேள்!

அசைந்திரும் காற்றும் அழகொளிர் ஊற்றும்

அவன்மொழி பேசுமே!

அன்பாய்க் கேள்!’

-என்ற வரிகளில் அவர் தன் எழுதுகோலுக்காக வேலைகளை முடித்துக்கொண்டார்.

அப்பா, தனது எழுத்துக்கு தேசிய விருதின் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பினார். ’

சோலைப் பசுங்கிளியே...’ பாடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. அது தேசிய விருதுக்கும் அனுப்பப்பட்டது. அது கிடைக்கவில்லை. அவர் தன் எழுத்துக்கு எதிர்பார்த்த தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பது அவர் மனதில் இருந்த ஒரே ஏக்கம். ஆதங்கம். அப்பா இல்லாவிட்டாலும் காற்றில் அவர், பாடலாக இழைந்துகொண்டேதான் இருக்கிறார்.