போலீஸ் சூப்பிரண்ட் ஓட்சும்யெலோவ் ஒரு புதிய மேலாடையை அணிந்து கொண்டு, கையில் ஒரு பார்சலை வைத்துக்கொண்டு மார்க்கெட் சதுக்கத்தின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார்.
சிவப்பு நிறத்தில் தலைமுடியைக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அவருக்குப் பின்னால் முன்னோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவரின் கைகளில் இருந்த ஒரு சல்லடைப் பையில் பறிக்கப்பட்ட நெல்லிக்காய்கள் இருந்தன. சுற்றிலும் அமைதி நிலவிக்கொண்டிருந்தது.
சதுக்கத்தில் ஒரு ஆள்கூட இல்லை. கடைகளின், மது விற்பனை சாலைகளின் திறந்திருந்த கதவுகள், கடவுளின் உலகத்தை பசியில் இருக்கும் வாய்களைப் போல பார்த்துக்கொண்டிருந்தன.
அவர்களுக்கு அருகில் ஒரு பிச்சைக்காரன்கூட இல்லை.
"ம்... நீ கடிச்சிட்டியா? நாசமாப் போன மிருகமே!''- ஓட்சும்யெலோவ் திடீரென குரலைக் கேட்டார்.
"பசங்களா...! அவனைப்போக விடாதீங்க! இந்தக்காலத்தில் கடிப்பது என்பது தடைசெய்யப்பட்ட விஷயம்.
அவனைப் பிடிங்க! ஆ..... ஆ.....''
அப்போது ஒரு நாயின் அலறல் சத்தம் கேட்டது.
ஓட்சும்யெலோவ் ஓசை வந்த திசையின் பக்கம் திரும்பியபோது, ஒரு நாயைப் பார்த்தார். பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் அதன் மூன்று கால்களால் பிட்சுகினின் மரக்கூடத்திற்கு வெளியே ஓடிக்கொண்டிருந்தது.
சலவை செய்யப்பட்ட காட்டன் சட்டையையும்
பொத்தான் இடாத கோட்டையும் அணிந்திருந்த ஒரு மனிதன் அந்தப் பெட்டை நாயை விரட்டியபடி ஓடிக்கொண்டிருந்தான்.
அவளுக்குப் பின்னால் ஓடிய அவன் தன் சரீரத்தை முன்னோக்கி நகர்த்த, கீழே விழுந்தான். நாயை அவளின் பின்னங்கால்களைக் கொண்டு அவன் பிடித்தான். மீண்டும் அங்கு ஒரு அலறல் சத்தம் எழுந்தது.
"போக விடாதீங்க...!'' என்றொரு கூச்சலும் உண்டானது. தூக்கக்களை பரவியிருந்த முகங்கள் கடைகளிலிருந்து வெளிப்பட்டன. சீக்கிரமே அங்கு ஒரு கூட்டம் தோன்றியது.
பூமிக்குள்ளிருந்து வெளியே வந்ததைப்போல தோன்றிய அது மரக்கூடத்தைச் சுற்றி நின்றிருந்தது.
"அது ஒரு வெறிபிடித்த நாயைப் போல தோன்றுகிறது... அய்யா''- போலீஸ்காரர் கூறினார்.
ஓட்சும்யெலோவ் இடது பக்கமாக பாதியளவு திரும்பி, கூட்டத்திற்குள் நுழைந்தார்.
ஏற்கெனவே கூறிய பொத்தான் இடாத மேலாடையை அணிந்திருந்த அந்த மனிதனை அவர் பார்த்தார்.
மரக்கூடத்தின் கேட்டிற்கருகில் அவன் நின்றிருந் தான். தன் வலது கையை அவன் காற்று வெளியில் வைத்திருந்தவாறு குருதி வழிந்து கொண்டிருந்த விரலைக் கூட்டத்தினர் பார்க்கும்படி செய்தான். பாதியளவு மதுவைக் குடித்திருந்த அவனின் முகத்தில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது: "நான் உனக்கு திருப்பித் தர்றேன்... பயங்கரமான பிறவியே!'' அதேநேரத்தில் அந்த விரல், வெற்றியை வெளிப்படுத்தும் ஒரு பதாகையைப் போலவும் தோன்றியது.
அந்த மனிதன் நகை செய்யும் ஹ்ரியுகின் என்பதை ஓட்சும்யெலோவ் அடையாளம் தெரிந்து கொண்டார்.
பரபரப்பை உண்டாக்கிய அந்தக் குற்றவாளியான வெள்ளை நிறத்தில் இருந்த நாய் கூர்மையான வாயையும் முதுகில் ஒரு மஞ்சள் நிற அடையாளத்தையும் கொண்டிருந்தாள்.
கூட்டத்திற்கு மத்தியில் தன் முன்னங்கால்களை விரித்து வைத்தவாறு, முழுமையாக நடுங்கியவாறு அது அமர்ந்திருந்தது.
அவளின் கண்ணீர் அரும்பிய கண்களில் கவலையும் கோபமும் வெளிப்பட்டன.
"இங்கே... என்ன...?''- ஓட்சும்யெலோவ் கூட்டத்திற்குள் தன்னை நுழைத்தவாறு கேட்டார். "நீங்க எதுக்கு இங்கு இருக்குறீங்க? நீ ஏன் உன் விரலை ஆட்டுனே? யார் கத்தியது?''
"நான் இங்கு தனியே நடந்து வந்து கொண்டிருந்தேன். அய்யா''- ஹ்ரியுகின் உள்ளங்கை யால் வாயை மூடி இருமியவாறு ஆரம்பித்தான். "எரிக்கப்படும் விறகைப் பற்றி மித்ரி மித்ரிட்சிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போ இந்த நாசமாப் போன நாய் காரணமே இல்லாமல் என் விரலைக் கடித்துவிட்டது. நீங்கள் என்னை மன்னிக்கணும். நான் ஒரு தொழிலாளி. என் பணி அருமையான பணி. ஒரு வாரத்திற்கு இந்த விரலை நான் பயன்படுத்தாமல் இருந்தால், எனக்கு பாதிப்புகள் உண்டாகும்.
ஒரு மிருகத்திடமிருந்து ஒரு மனிதன் அனுபவிக்கும் அவல நிலையை ஒன்றும் செய்ய முடியாது. இப்படி ஒவ்வொருவரும் கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் ஒழுங்காக வாழவே முடியாது."
"ம்... மிகவும் நல்லது.''- ஓட்சும்யெலோவ் இருமிய வாறு, தன் புருவங்களை உயர்த்திக் கொண்டு உறுதியான குரலில் கூறினார். "ரொம்ப நல்லது. இது யாரோட நாய்? நான் இதை இப்படியே விடமாட்டேன். எல்லா இடங்களிலும் தங்களோட நாய்களை ஓட விடுபவர்களுக்கு நான் பாடம் கற்றுத்தரப் போறேன். சட்டங்கள் கூறுகிறபடி நடக்காதவர்களைக் கவனிக்குறதுக்கு இது சரியான நேரம். சட்டத்தை மதிக்காத அந்த மனிதனுக்கு அபராதம் விதிக்கப்படும், நான் அவனுக்கு கற்றுத் தருவேன்..
நாய்களையும் சுற்றித்திரியும் கால்நடை களையும் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று. நான் அவனுக்கு ஒரு பாடம் கற்றுத் தருவேன்.யெல்டிரின்....!''- சூப்பிரெண்ட், போலீஸ்காரரை அழைத்துக் கூறினார்..
"இது யாரோட நாய் என்பதைக் கண்டுபிடித்து, ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணுங்க. நாயைத் தூக்குல போடணும்.
தாமதமாகக் கூடாது. உண்மை யிலேயே அதுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. நான் கேக்குறேன்... இது யாரோட நாய்?'' "நான் நினைக்கிறேன்... இது ஜெனரல் ஜிகாலோவின் நாயாக இருக்கும் என்று..''- கூட்டத்தில் யாரோ கூறினார்கள்.
"ஜெனரல் ஜிகாலோவ்... ம்... என் கோட்டைக் கழற்றுவதற்கு உதவுங்க....
யெல்டிரின்! மிகவும் வெப்பமாக இருக்கு. இது மழை வருவதற்கான அடையாளமாக இருக்கலாம். ஒரு விஷயத்தை என்னால் புரிஞ்சிக்க முடியல. அது உன்னை எப்படி கடிப்பதற்கு வந்தது?''- ஓட்சும்யெலோவ் ஹ்ரியுகின் பக்கம் திரும்பினார்.
"நிச்சயமாக அதனால் உன் விரலுக்கு வந்திருக்க முடியாது. அது ஒரு குட்டி நாய். நீயோ ஒரு உயரமான ஆள். நீ உன் விரலை ஒரு ஆணியைக் கொண்டு குத்தச் செய்திருக்கலாம். இதற்காக நஷ்ட ஈடு பெறலாம் என்ற எண்ணம் பின்னர் உனக்கு ஏற்பட்டிருக்கலாம். எங்கள் எல்லாருக்கும் தெரியும்... உன் திட்டம் என்ன என்று. உன்னைப் போன்ற சாத்தான்களை எனக்கு நன்கு தெரியும்.''
"அய்யா... இவன் ஒரு சிகரெட்டை அதன் முகத்தில் வைத்திருக்கலாம்.தமாஷுக்காக... இவனைக் கடிப்பதற்கான காரணம் அதற்குத் தெரியும். இவன் ஒரு முட்டாள்... அய்யா.''
"அது ஒரு பொய்.. நீங்கள் பார்க்கவில்லை. பிறகு... அதைப்பற்றி ஏன் பொய் சொல்றீங்க? அய்யா ஒரு புத்திசாலியான நல்ல மனிதர். யார் பொய் சொல் றாங்க, யார் உண்மை பேசுறாங்கன்னு அவருக்குத் தெரியும். கடவுளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் பொய் சொல்கிறேனா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.
இப்படி சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் நாம் அனைவருமே சமநிலையில் உள்ளவர்கள்தான். என் சொந்த சகோதரனே ஆயுதப் படையில் இருக்கும் போலீஸ்காரர்தான். நான் உங்களுக்குக் கூறுகிறேன்...''
"வாதம் செய்ய வேண்டாம்.''
"இல்லை... இது ஜெனரலின் நாய் அல்ல.''- போலீஸ்காரர் கூறினார்... தெளிவான தீர்மானத் துடன்.
"ஜெனரலிடம் இப்படிப்பட்ட ஒரு நாய் இல்லை. அவரிடம் இருப்பவை..பெரும்பாலும் உயர் தரமானவை.''
"உண்மையாகவே உனக்கு அது தெரியுமா?''
"ஆமாம்... அய்யா.''
"எனக்கும் அது தெரியும். ஜெனரலிடம் விலை உயர்ந்த நாய்கள்தான் இருக்கின்றன. தரமான இனத் தைச் சேர்ந்தவை... இது எப்படிப்பட்ட தரத்தில் உள்ளது? மேலாடை இல்லை.. நல்ல தோற்றம் இல்லை... தாழ்ந்த இனப் பிறவி! இப்படிப்பட்ட ஒரு நாயை வைத்திருக்க முடியுமா? இதில் ஏதாவது அர்த்தம் இருக்குதா? இப்படிப்பட்ட ஒரு நாய் பீட்டர்ஸ்பர்க்கிலோ அல்லது மாஸ்கோவிலோ சுற்றிக் கொண்டிருக்கிறது என்றால், என்ன நடக்கும் என்று உனக்குத்தெரியுமா? அவர்கள் சட்டத்தைப்பற்றி கவலையேபட மாட்டார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் அதை தூக்கில் தொங்கவிட்டு விடுவார்கள். உனக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஹ்ரியுகின்... நாம் இந்த விஷயத்தை வெறுமனே விட்டுவிட முடியாது. நாம் அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கட்டாயம் கற்றுத்தந்தே ஆகணும். இதுதான் சரியான நேரம்....!''
"இது ஜெனரலின் நாயாக இருந்தால்....''- போலீஸ்காரர் கூறினார்... ஆழமாகச் சிந்தித்தவாறு.
"அதன் முகத்தில் இது எழுதப்படல. இதே மாதிரி ஒன்றை ஒரு நாள் அவரின் வீட்டு வளாகத்தில் நான் பார்த்தேன்.''
"அது ஜெனரலின் நாய் என்பது உறுதி''- கூட்டத்திலிருந்து ஒரு குரல் கூறியது.
"ம்... யெல்டிரின், மேலாடை விஷயத்தில் எனக்கு உதவுங்க. என் நண்பரே... காற்று பலமாக வீசுது. எனக்கு குளிரா இருக்கு. நீங்கள் இதை ஜெனரலிடம் கொண்டு செல்லுங்கள். அங்கு விசாரிங்க.. நான் இதைப் பார்த்ததாகவும், அனுப்பி வச்சதாகவும் சொல்லுங்க. இதை தெருவுல விடக்கூடாதுன்னு அவங்ககிட்ட சொல்லுங்க. இது ஒரு மதிப்புமிக்க நாயாக இருக்கலாம்.
ஒவ்வொரு நாயும் தன் வாயில் ஒரு சிகரெட்டை வச்சா... அது சீக்கிரமே அழிஞ்சிடும். நாய் என்பது... ஒரு வினோதமான மிருகம். முட்டாளே... நீ உன் கையைக் கீழே போடு. உன் முட்டாள்தனமான ஒரு விரலை வெளியே நீட்டுவதால், எந்தவொரு பிரயோஜ னமும் இல்லை. இது உன்னுடைய தவறுதான்...'' "இதோ... ஜெனரலின் சமையல்காரர் வருகிறார்.
அவரிடம் கேட்போம். சமையல்காரரே.... இங்கு வாங்க... என் அன்பு மனிதரே.... இந்த நாயைப் பாருங்கள். இது உங்களின் நாய்களில் ஒன்றா?'' "என்ன கேட்குறீங்க? இப்படிப்பட்ட ஒரு நாய் எங்களிடம் இல்லவே இல்லை.''
"விசாரித்து நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை.''- ஓட்சும்யெலோவ் கூறினார்: "இது ஒரு தெரு நாய்தான். இதைப்பற்றி பேசி நாம் நேரத்தை வீணாக்கக்கூடாது. அவர் கூறிவிட்டார்.... இது ஒரு தெரு நாய்தான் என்று. இது தெரு நாயேதான்...! இது அழிக்கப்பட வேண்டும். இதன் விஷயம் இத்துடன் முடிந்தது.''
"இது எங்களின் நாய் அல்ல...'' -சமையல்காரர் தொடர்ந்து கூறினார்: "இது ஜெனரலின் சகோதர ருக்குச் சொந்தமானது. அவர் நேற்று வந்திருந்தார்.
ஜெனரலுக்கு நாய்களின்மீது அக்கறை கிடையாது. ஆனால், அவரின் சகோதரருக்கு அவற்றின்மீது அளவற்ற விருப்பம்...''
"ஜெனரலின் சகோதரர் இங்கு இருக்கிறார் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாமா... வ்லாடிமிர் இவானிச்?''- ஓட்சும்யேலோவ் கேட்டார். அப்போது அவரின் முகம் முழுவதும் ஒரு அழகான புன்னகையால் ஒளிர்ந்தது.
"நல்லது... எனக்குத் தெரியவே தெரியாது. அவர் ஒரு பயணமாக இங்கு வந்திருக்கிறாரா?''
"ஆமாம்....''
"நல்லது... எனக்கு இதுவரை தெரியாது. அவர் தன் சகோதரரிடமிருந்து பிரிந்து இருக்க முடியாது. எனக்கு விஷயமே தெரியாது. அப்படின்னா.... இது ஜெனரலின் சகோதரரின் நாயா? கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கு. இதை எடுத்துக்கோங்க. இது ஒரு மோசமான நாய்க்குட்டி இல்ல. ஒரு அழகான நாய்... இந்த மனிதனின் விரலைக் கடித்துவிட்டது! ஹாஹா... ஹா...''
"வா... நீ ஏன் நடுங்குறே?''
ர்ர்ர்... ர்ர்ர்...
"போக்கிரி நாய் கோபத்துல இருக்கு... ஒரு அழகான நாய்க்குட்டி...!''
சமையல்காரர் நாயை அழைத்தார். மரக்கூடத் திலிருந்து அதனுடன் நடந்து சென்றார்.
ஹ்ரியுகின்னைப் பார்த்து கூட்டம் சிரித்தது.
"நான் உன்னை ஒரு வழி பண்றேன்''- ஓட்சும் யெலோவ் அவனை மிரட்டினார். தன் பெரிய கோட்டிற்குள் தன்னை முழுமையாக மூடியவாறு, சதுக்கத்தில் இருந்து தன்னுடைய வழியில் நடந்து சென்றார்.