பிறைசூடன் என்னுடைய நீண்டகால நண்பர். அவர் தொடர்ந்து போராடி போராடி ஜெயித்த ஒரு நல்ல தமிழ் கவிஞர்.
70களில் சிவாஜி ஸாரின் ரசிகனாக என் அலுவலகம் வந்தவர். சில ஆண்டுகள் கழித்து பாட்டு எழுத வாய்ப்பு கேட்டு வந்தார். கவியரசர் கண்ணதாசன், வாலி ஸார், பூவை செங்குட்டுவன், மு.மேத்தா, புலவர் புலமைப்பித்தன் ஆகிய கவிஞர்கள் தொடர்ந்து என் படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததனால் பிறைசூடன் அவர்களை எழுதவைக்க என்னால் முடியவில்லை.
அவர் உரிமையோடு சண்டை கூட போட்டுப்பார்த்தார்.
சில வருடங்கள் கழித்து அவர் சினிமா சங்கங்களில் என்னோடு பழக ஆரம்பித்தார். நாங்கள் நண்பர்கள் ஆனோம். ஈழ விடுதலைப் பாடல்கள் சில அவர் எனக்காக எழுதியுள்ளார். வாய்ப்பு வரும்போது அவரைத் திரைப்படப் பாடல்கள் எழுதவைப்பது என முடிவுசெய்தேன். அப்படி ஒரு வாய்ப்பு வந்தது.
ராஜ்கிரண் அவர்கள் நடிக்க, 'எம்.ஜி.ஆர். இல்லம்' என்ற படத்தை எழுதி இயக்கித் தயாரிக்க முடிவுசெய்தேன். அந்தப் படத்திலே 7 பாடல்கள். எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைப்பில் 6 பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதினார். ஏ.வி.எம்மில் பாடல்கள் பதிவும் செய்யப்பட்டன. படப்பிடிப்புக்கு நாளும் குறிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். நான் அரசியல்வாதி அல்ல. ஆனாலும் அண்ணா, எம்.ஜி.ஆர். இவர்கள் இருவரும் என்னுடைய கண்கள். கலைஞர் என் உயிர்மூச்சு.
அவருடைய எழுத்தைப் படித்துப் படித்து, அவருடைய திரைப்பட வசனங்களைக் கேட்டுக் கேட்டுதான் நான் தமிழைக் கற்றுக்கொண்டேன். தமிழை எழுத ஆரம்பித்தேன்.
வசனங்கள் எழுத அவைதான் எனக்குத் தூண்டுகோலாக இருந்தன. 77ல் நான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆதரவாக எடுத்த மாங்குடி மைனர் அரசியல் களத்தில் பரவலாகப் பேசப்பட்டது. எனக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. அந்தப் படத்தில் "அண்ணா, நீங்க நினைத்தபடி நடந்து இருக்கு. புரட்சித்தலைவர் கையில் நாடு இருக்கு" என்று வாலி
அவர்கள் எழுதிய பாடல் பட்டையைக் கிளப்பியது.
அதேபோல், 'எம்.ஜி.ஆர். இல்லம்' என்ற ஒரு படத்தை நான் ஆரம்பித்தபோது பிறைசூடன் அவர்கள் எழுதியுள்ள பாடல்- அதில் முக்கியமான ஒரு பாடல் உணர்ச்சியுள்ள அத்தனை மனிதர்களையும் நெகிழவைத்துவிடும். இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.
அவர்களுடைய ரசிகர்களையும், அவரது வாரிசுகளையும் பொங்கி எழ வைக்கும்.
சற்றும் எதிர்பாராத விதமாக நம்மை விட்டுப்பிரிந்த நண்பர் பிறைசூடனை இப்பாடலைப் படமாக்கி அவர் புகழை பல படிகள் ஏற்றிவைக்க நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
பிறைசூடன் அவர்கள் ஒருநாள் ஒரு பொதுக்கூட்டத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். மேடையிலே மைக்கில் அத்தனை பேர் முன்னா லும் "என்னை மன்னித்துவிடுங்கள்" என மன்னிப்பு கேட்டார்கள்.
அவர் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்றால், எழுத்தாளர் சங்கத்தில் ஒரு யூனிட் அமைத்து, விசு அவர்களுடைய கோஷ்டியில் என்னை தேர்தலில் நிற்கச்சொல்லி கேட்டார்.
வீட்டிற்கு அவரும் வேறுசில நண்பர்களும் வந்தார்கள். நான் இயக்குனர் விக்ரமன், இயக்குனர் செல்வமணி அவர்களுடைய அந்தக் குழுவில் நிற்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால், அவர்கள் என்னிடம் கேட்டு வந்தார்கள். நானும் விக்ரமன் அவர்கள் மேல் மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருப்பவன்.
அதனால் அந்தப் பக்கம் நிற்பது என்று முடிவுசெய்தேன். நான் இந்த முடிவை எடுத்தவுடன், பிறைசூடன் அவர்கள் அந்தப்பக்கம் எனக்கு எதிராக போட்டி போட்டார்.
தேர்தல் நடந்த அன்று, 7 வாக்குகளில் நான் பிறைசூடனிடம் தோற்றுவிட்டேன். ஆனால், அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால், நான் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டேன் என்பதைப் பலரும் என்னிடம் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள்.
மற்றவர்கள் சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால், பிறைசூடன் அவர்கள் என்னை சந்தித்தபோது, "இது திட்டமிட்ட சதி. இந்த 7 வாக்குகளால் நீங்கள் அந்த அணியில் இருந்து தோற்கவேண்டும் என்று ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன" என்று பல ரகசியங்களை என்னிடம் சொன்னார். அதன்பின்னால் அந்தப் பொதுமேடையில் மன்னிப்பும் கேட்டார்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளத்துக்கு, 'நான் நிச்சயமாக நன்றி மறந்தவன் ஆகிவிடக்கூடாது' என்பதற்காக அவருடைய பாடலை நான் சீக்கிரமாக மக்கள் மத்தியில் வெளியிட்டு அவருடைய புகழை இன்னும் ஒருபடி ஏற்றிவைக்க முயற்சிப்பேன்.
வாழ்க பிறைசூடன் புகழ்..!