ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: கார்த்திகை- 2, 3, 4.

செவ்வாய்: திருவாதிரை- 4, பூனர்பூசம்- 1.

புதன்: ரோகிணி- 3, 4.

Advertisment

குரு: அவிட்டம்- 4.

சுக்கிரன்: ரோகிணி- 2, 3, 4.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

20-5-2021- புதன் வக்ர ஆரம்பம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

17-5-2021- கடகம்.

19-5-2021- சிம்மம்.

21-5-2021- கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு என்றாலும், அவர் குருவின் பார்வையைப் பெறுவதால் மறைவு தோஷம் விலகும். அதாவது 5, 9 திரிகோண ஸ்தானங் கள், திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் பெற்றால் அந்த கிரகங்களுக்கு எந்த தோஷமும் பாதிக்காது. "5, 9-க்கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே புரிவார்' என்பது சந்திரகாவியவிதி. எனவே ராசிநாதன் செவ்வாய்க்கு பாக்கியாதிபதி பார்வை கிடைப்பதால் உங்களின் கடமைகளும் காரியங்களும் தங்கு தடையின்றி நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம். தெளிவாகச் சொன்னால் "பொங்கும் மங்களம் எங்கும் தங்குக' என்பதுபோல எல்லாம் மங்களகரமாக நிறைவேறும். 6-க்குடைய புதன் 2-ல் இருப்பது எதிரிகளாலும் தனவரவு உண்டு என்பதைக் குறிக்கும். 2-க்குடையவர் 6-ல் மறைந் தால் நமது தனம் எதிரிகள் வசமாகும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால் எதிரிகள் தனம் தன் வசமாகும். இது அனுபவப்பூர்வமான உண்மை! பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கு இந்த இரண்டாவது விதி பொருந்தும். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கும் இந்த விதி பொருந்தும். 5-க்குடைய சூரியன் 2-ல் இருப்பதால் பிள்ளைகளின் தொல்லை விலகும். எம்.ஜி.ஆர் பாடிய மாதிரி, "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்பதுபோல நல்ல பிள்ளைகளைப் பெற்று அல்லல்களைப் போக்கலாம். பெரும்பாலும் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் காப்பாற்றுவார்கள்.

rasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். அவருடன் 2, 5-க்குடைய புதனும், 4-க்குடைய சூரியனும் சம்பந்தம். 4- கேந்திரம்; 5- திரிகோணம். கேந்திராதிபதியும் திரிகோணாதிபதியும இணைவதால் முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல உங்களுடைய நியாயாமான கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கவியரசர் எழுதினார். ஆனால் உங்களுடைய கிரக அமைப்பு, நீங்கள் நினைப் பதை எல்லாம் இறைவன் நிறைவேற்றுவார். சில நேரங்களில் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக நேரமும் காலமும் நீங்கள் நினைப்பதை நிறைவேற்றும். அதேசமயம் ராகுவும் கேதுவும் ரிஷப ராசியில் சம்பந்தப்படுவதால் சில குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்பட்டா லும், கேந்திராதிபதியும் (சூரியன்), திரிகோணாதிபதியும் (புதன்) ஜென்ம ராசியில் இணைவதால் எல்லா தடைகளுக்கும் அது பரிகாரமாகும். அதாவது கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். ஒருவருடைய முயற்சிக்கும் வெற்றிக்கும் விஷ்ணு, லட்சுமி இருவரின் கடாட்சமும் வேண்டும். 9-ல் சனி ஆட்சியும், 10-ல் குருவின் சேர்க்கையும் வெற்றிக்குரிய கிரக அமைப்பாகும். அதனால் ஜென்ம ராகு, சப்தம கேதுவின் தடைகளைக் கடந்து வெற்றியை நோக்கி முன்னேறலாம். 7, 12-க்குடைய செவ்வாய் 2-ல் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவு களை சந்திக்கநேரும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் 6, 11-க்குடைய செவ்வாய் நிற்க, குருவின் பார்வை யைப் பெறுவது சிறப்பு. 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். 6-க்குடைய செவ்வாய் 11-க் குடையவருமாகி ஜென்மத்தில் இருப்பதால் எதிரியும் உங்களுக்கு அனுகூலமாக உதவிசெய்வார். அதேசமயம் சூரியன், புதன், சுக்கிரன், ராகு நால்வரும் 12-ல் மறைவதால் தவிர்க்கமுடியாத செலவினங்களைச் செய்து காரியத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஜென்ம ராசியில் செவ்வாய் நிற்பதால் நண்பர்களும் விரோதி களாவார்கள். விரோதிகளும் நண்பர்களாவார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம். சமீபத்தில் நடந்த தேர்தலில், நீண்டநாள் கட்சியிலிருந்த பிரமுகருக்கு தேர்தலில் வேட்பாளர் அங்கீகாரம் கிடைக்காததால், அதற்கு எதிர்கட்சியில் இணைந்து போட்டியிட்டார். வெற்றி யும் பெற்றார். அதுபோல, 8-ல் சனியிருப்பதும் அவரை செவ்வாய் பார்ப்பதும் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து வெற்றிபெறுவது போல சாதனை படைக்க லாம். 10-க்குடைய குரு 9-ல் இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு கடவுளின் கருணையும் கடாட்சமும் உண்டாகும். நினைப்பது மனிதனின் நியதி. நிறைவேற்றுவது இறைவனின் கருணை. ஆண்டவன் துணையிருந்தால் வேண்டுவதெல்லாம் நிறைவேறும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 9-க்குடைய குரு 8-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கி றார். சனி ஆட்சி பலம். அதனால் மறைந்த குருவுக்கும் பலம் கிடைக்கிறது. "நெய்க்கு தொன்னை ஆதாரமா! தொன்னைக்கு நெய் ஆதாரமா' என்று நிர்ணயிக்க முடியாதபடி ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகவும் பலமாகவும் அமைகிறது. 10-க்குடைய செவ்வாயை 9-க்குடைய குரு பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாக அமைகிறது. இருவரும் மறைகிறார்கள்- குரு 8-ல்; செவ்வாய் 12-ல். இலைமறைவு காய்மறைவு என்று பழமொழி சொல்வார்கள். திரைப்படங்களில் திரை யில் தோன்றும் நடிகர்களின் வாயசைவிற்கு பின்னணி குரல் கொடுப்பவர்போல, நிஜமான உங்களுக்கு நிழலாக இருப்போர் பல காரியங்களை சாதித்துக் கொடுப்பார்கள். இதைத் தான் "ஒருவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்று சொல்லுவார்கள். அது தாயாகவும் இருக்கலாம். தாரமாகவும் இருக்கலாம். சகோதாரியாகவும் இருக்க லாம். காமவெறி பிடித்து அலைந்த அருணகிரி நாதருக்கு அவர் சகோதரியே ஆன்மிகநெறிக்கு வழி வகுத்துக்கொடுத்தவராக மாறினார். காரைக்காலம்மை யாரை அவர் கணவர் தெய்வ சக்தியாகக் கருதி வழிபட் டார். எனவே பாவம்- புண்ணியம் என்ற இருநிலையிலும் இறைசக்தி நம்மை மாற்றியமைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் திக்பலம் பெறுகிறார். திக்பலம் என்றால் என்ன? சுயசாரம் பெற்றாலும், அந்த கிரகம் நின்ற வீட்டு அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றா லும் அது திக்பலம் எனப்படும். சிலர் கேந்திர திரிகோணம் பெற்றாலும் அது திக்பலம் என்பார்கள். சிம்ம ராசிக்கு ராஜயோகாதிபதியான செவ்வாய் 11-ல் இருப்பதும், பஞ்சம திரிகோணாதிபதியான குரு செவ்வாயைப் பார்ப்பதும் ஒரு யோகம்தான். 4-ல் கேது நிற்பது பூமி, வீடு, வாகனம் போன்ற 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட பலனில் ஒருசில வேண்டாத பிரச்சினைகளை சந்தித்தாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாயை குரு பார்ப்பது பரிகாரமாகும். 10-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய நான்கு கிரகங்களும் பலம் பெறுவதால் வாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் நற்பலன்களை அடையலாம். அரசு வேலைக்கு முயற்சியெடுக்கும் அன்பர் களுக்கு வெற்றிவாய்ப்பு உருவாகும். அவரவர் ஜாதகத்திலும் 10-ஆமிடத்துக்கு சூரியன் சம்பந்தம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உறுதியாக அரசுவேலை நிச்சயம். அதேபோல அரசு வங்கிக்கடன் பெற்று சொந்தத்தொழில் ஆரம்பிக்கவும் அமைப் புண்டு. காலமெல்லாம் சம்பளத்திற்கு அடிமை வேலை பார்த்தவர்களுக்கு சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் முதலாளி கனவு நிறைவேறும். அதற்குண்டான மூலதனம், முதலீடுகளும் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். புதன் 10-க்குடையவராகி 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். புதனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் அங்கு ஆட்சி பெறுகிறார். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களுக்கு தொழில் நடத்துவதற்குண்டான வாய்ப்புகளும் அமையும். தங்கள் அயராத உழைப்பாலும் முயற்சியாலும் முன்னேற்றமடையலாம். 8-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பதும், ராகு- கேது சம்பந்தப்படுவதும், 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டமும், தொழில் பிரச்சினைகளும், உத்தியோகத்தில் போட்டி பொறாமைகளும் ஏற்பட இடமுண்டு. அப்படி இருந்தால் தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களை செய்துகொள்ளலாம். 8-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பதால், வெள்ளந்தித் தனமாக வெளுத்ததெல்லாம் பால் என்று எல்லாரையும் நம்பிவிடக்கூடாது. நகரத்தார் வீடுகளில் புதிததாக வேலைக்கு சேர்ப்பவர்களை எடைபோடுவதற்கு பணம், பொன், பொருளை ஆங்காங்கே போட்டு வைப்பார்களாம். அதைத் தவறாமல் எடுத்து உரிமையாளரிடம் கொடுப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். இது வேலைக்காரர்களுக்கு வைக்கும் சோதனை. அதுமாதிரி உங்களுடைய நாணயம், ஒழுக்கம் எல்லாவற்றுக்கும் கிரகங்கள் சோதனை வைக்கும். அதில் நீங்கள் ஜெயிக்க வேண்டும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். ஆட்சி, உச்சம்பெறும் கிரகங்களுக்கு மறைவு தோஷம் இருக்காது. அதேசமயம் 9-க்குடைய புதனும் 11-க்குடைய சூரியனும் 8-ல் மறைவதும், ராகு- கேது சம்பந்தம் பெறுவதும் "செஸ்' விளையாட்டில் ராஜா வுக்கு "செக்' வைப்பதுபோல உங்கள் திறமைக்கும் நேர்மைக்கும் சோதனை ஏற்படும். அதில் நீங்கள் ஜெயித்தாக வேண்டும். உண்மை, நம்பிக்கை, விடாமுயற்சி, வைராக்கியம் ஆகியவை இருந்தால் இராமாயணத்தில் சீதைக்கு அக்னிப் பரீட்சை வைத்து நிரூபிக்கப்பட்டதுபோல், நீங்களும் கிரகத்தின் சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம். ஜெயிக்கலாம். இறைவன் எப்போதும் சோம்பேறிகளுக்கும் நம்பிக்கை துரோகிகளுக்கும் உதவி செய்யமாட்டார். உண்மை, விசுவாசம், உழைப்பு இருப்பவர் களைக் கைவிடமாட்டார். இந்த வாசகத் துக்கு உதாரணம் புராண காலத்தில் விசுவாமித் திரரைச் சொல்லலாம். அதேபோல ஆகாய கங்கையை பூலோக கங்கையாகக் கொண்டுவந்தவர் பகீரதன் என்னும் மன்னன். கடும் தவமியற்றி தன் முன்னோர் களுக்கு பித்ருகர்மா- தர்ப்பணம் செய்ய பகீரதன் என்ற மன்னன்தான் கங்கையை பூலோகத்திற்கு வரவழைத்தவன். நேரடியாக ஆகாய கங்கை பூமியில் வந்தால் பூமி தாங்காது என்பதால், பரமேஸ்வரன் தன் தலையில் தாங்கி இமயத்தில் பாயவைத்தார்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு. பொதுவாக லக்னநாதனுக்கும் ராசிநாதனுக்கும் 6, 8, 12 என்ற மறைவு தோஷம் பாதிக்காது. இதை அடிக்கடி எழுதி வருகிறேன். பஞ்சம திரிகோணாதிபதி குரு 4-ஆமிடம் கேந்திரத்தில் நின்று செவ்வாயைப் பார்ப்ப தால் மேலும் சிறப்பம்சம் பெறுகிறது. அதாவது பழம் நழுவிப் பாலில்விழுந்து அதுவும் நழுவி வாயில்விழுந்த மாதிரி! பருத்தி புடவையாய் காய்த்த மாதிரி என்றும் சொல்லலாம். ஜென்ம கேது ஒரு சிலருக்குப் படுத்தினாலும், ராசிநாதனை குரு பார்ப்பதால் கழுவின மீனில் நழுவின மீனைப்போல எல்லா வகை யிலும் உங்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம். 3-ஆமிடம் சகோதரம், தைரியம், சகாயம், நண்பர்கள். 11-ஆமிடம் வெற்றி, லாபஸ்தானம். இந்த மூன்று இடங்களையும் ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் மேற்கண்ட இடத்துப் பலன்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியாகவும் அனுகூலமாகவும் அமையும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு நால்வரும் நிற்பது- திருமணமானவர்களுக்கு மனைவி- கணவன் வகையில் நன்மைகள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். ராகு நிற்பதால் சிறுசிறு தடை இருந்தாலும், தடையைக் கடந்து வெற்றி பெறலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந் தாலும் அவருக்கு சாரம். கொடுத்த செவ்வா யைப் பார்ப்பதால் (அவிட்டம் நட்சத்திரத் தில் குரு சஞ்சாரம்)- செவ்வாய் உங்கள் ராசிக்கு 5-க்குடையவர் என்பதால், உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். 9-க்குடைய சூரியனும் 10-க்குடைய புதனும் 6-ல் மறைந்தாலும், அவர்களுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சியாக இருப்ப தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமும் முயற்சிகளில் வெற்றியும் எதிர்பார்க்கலாம். சூரியன், புதன் இணைவு தர்ம கர்மாதிபதி யோகமாகும். 6-ல் மறைவது தாமதப்பலனாக இருக்கலாம். திருவிளையா டல் படத்தில் நக்கீரன் தருமியிடம் "உமது பாட்டில் பிழை இருக்கிறது' என்பார். அதற்கு தருமி "பிழை இருந் தால் என்ன? எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி தொகையைக் குறைத்துக்கொண்டு மீதியைத் தாருங்கள்' என்பார். அதுபோல தர்மகர்மாதிபதி சேர்க்கை முழுமையாக நிஷ்பலன் ஆகிவிடாது. மேலும் 6-ஆமிடம் என்பது 10-ஆமிடமாகிய தொழில், வாழ்க்கை, ஜீவன ஸ்தானத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். ஆகவே வாழ்க்கையும் தொழிலும் சிறப்பம்சம் பெறுவதால் கேடு கெடுதிக்கு இடமில்லை. திடீர் திருப்பங்கள் முன்னேற்றத்தையும் தரும். திருப்தியையும் தரும். சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி மகரத்தில் ஆட்சிபலம் பெறுவதோடு வக்ரமாகவும் இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். அதாவது தான் நின்ற இடத்துப்பலனை, ஆட்சி, உச்சம் பெறும் பலனைக் காட்டிலும் வலுவாகச் செய்யும் என்று அர்த்தம். குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும் என்பதுபோல, சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்றொரு வாசகம் உண்டு. அதுபோல வக்ரமடையும் கிரகங்கள் உக்ரமாக- வலுவாக- பலமாக பலன் செய்யும் என்று அர்த்தம். ராசிநாதன் சனியின் பார்வை 3-ஆமிடம் மீனம், 7-ஆமிடம் கடகம், 10-ஆமிடம் துலாம் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது. சகோதர ஒற்றுமை திருமண ஏற்பாடுகள், புதிய தொழில் வாய்ப்புகள், இனிய வாழ்க்கை எல்லாம் கூடிவரும் என்று எதிர்பார்க்கலாம். அபிராமி அந்தாதியில் ஒரு பாடல் உண்டு. "தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே' என்பது பாடல். உங்கள் கிரக அமைப்பின்படி மேற்கூறிய நல்லன எல்லாம் உங்களைத்தேடி நாடி ஓடிவரும். 3-க்குடைய குரு 2-ல் பலம் பெறுவதால் உடன்பிறப்புக்கள் வகையில் ஒற்றுமையும் உதவியும் ஆதரவும் பெருகும். அதனால் உங்கள் திட்டங்கள் வெற்றியடை யும். எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும் ஆட்சிபலம் பெறுகிறார். 2, 11-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங் களைப் பார்க்கிறார். உங்கள் எண்ணங் களும் திட்டங்களும் கைகூடும். திருமணம், புத்திரபாக்கியம், வாரிசு யோகம், பிள்ளை களுக்கு நல்லகாரியம் போன்றவையெல் லாம் நடக்கும். தேவ லோகத்தில் இந்திரன் மகனுக்கு திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது எந்த லக்னத் தில் நல்ல காரியத்தை நடத்துவது என்ற சர்ச்சை ஏற்பட்டது. அந்தசமயம் சுக்ராச் சாரியார் குருவைப் பார்த்து, "நீங்கள் இருக்கும் லக்னமே சிறந்த லக்னம்' என்றாராம். அதுபோல குரு இருக்கும் (லக்னம்) இடம் சிறப்பம்சம் உடையதாக அமையும். குரு இருந்தாலும் பார்த்தாலும் பெருமைதான். குறையேதும் வராது. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்பதுபோல எல்லாம் நிறைவாகத் திகழும். 12-க்குடைய சனி 12-ல் ஆட்சிபெற்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே சில காரியங்களை செலவு செய்து சாதிக்கவேண்டும். சில காரியங் களை செலவில்லாமலே சாதிக்கலாம். ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்ப ஒற்றுமை எல்லாம் தெளிவாகவும் வலுவாகவும் இயங்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகி றார். அவருக்கு வீடு கொடுத்த சனி அவருக்கு (குருவுக்கு) 12-ல் மறைகிறார். என்றா லும் சனி ஆட்சியாக இருந்து ராசியைப் பார்க்கிறார். 2, 9-க்குடைய செவ்வாய் 4-ல் கேந்திரபலம் பெற்று 10-ஆமிடத்தையும் 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். 9-க் குடைய வர் 10-ஆமிடத்தைப் பார்ப்பதும். 10-க்குடை யவர் 9-க்குடையவரைப் பார்ப்பதும், தர்ம கர்மாதிபதி யோகமாகும். அதாவது 9-ஆமிடம் திரிகோண ஸ்தானம். 10-ஆமிடம் கேந்திர ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சி. திரிகோணம் என்பது தெய்வ கடாட்சம். "முயற்சி திருவினையாக்கும்' என்பது சான்றோர் வாக்கு. அதுமட்டுமல்ல; "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பது பழமொழி. எனவே உங்களுடைய செயல்களுக்கும் முயற்சிகளுக்கும் காலமும் கடவுளும் காவலாக நின்று வெற்றியைத் தேடித்தரும். இதுதான் தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன். நினைப்பதும் முயற்சிப் பதும் மனிதன் செயல். அதை முடிப்பதும் நிறைவேற்றுவதும் இறைவன் கருணை. ஆக குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்துவதால், மகாகவி பாரதியார் பாடியதுபோல ஜெயமுண்டு பயமில்லை. திறமை உங்களுக்குப் பெருமை தேடித்தரும். தளராத முயற்சி தோல்வியில்லாத வளர்ச்சி யைத் தரும்.