சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
ஒரு நாள் காலைவேளையில், என் சென்னை அலுவலக அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தபோது, அங்கே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
""நீங்கள் யார்? யாரைப் பார்க்கவேண்டும்?'' என்று கேட்டேன்.
""ஐயா, தங்களைப் பார்க்கத்தான் காலையிலேயே வந்து விட்டேன். நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னையில் அன்றாடம் கூலிவேலை செய்து என் மனைவி, குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறேன். வேலை கிடைக்காத நாட்களில் பட்டினியாகவும் இருந்துள்ளோம். இந்த கட்டடத்தின் மேலாளர் தங்களைப் பற்றிக் கூறி, உங்களிடம் என் நிலையைக் கூறச் சொன்னார். தாங்கள் தான் எனக்கு நல்லவழி காட்டவேண்டும்'' என்றார்.
அவர் கூறியதைக் கேட்டவுடன், "இன்று அகத்தியர் இவருக்கு நாடியில் பலன்கூற அழைத்து வந்து விட்டார். பலன் காணும் பிராப்தம் இவருக்கு உள்ளது' என்றெண்ணி உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தேன். ஜீவநாடியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
நாடியில் அகத்தியர் தோன்றி, ""இவன் பலரிடமும் அடிமைத்தொழில் செய்து அன்றாடம் கூலிபெற்று வாழ்ந்துவருகிறான். இந்தப் பிறவியில் அரசியல்வாதி ஒருவனுக்கு அடிமைபோல் பணிசெய்து வாழ்வில் உயரவேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு அரசியல்வாதியிடம் பணியாள ராக வேலைசெய்யச் சொல். வளமான வாழ்வை அடைவான்'' என்று கூறி மறைந்தார்.
இந்த விவரத்தை அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர், ""ஐயா, நான் ஒரு ஏழை கூலிக்காரன். அந்தஸ்து, அதிகாரம் உள்ளவர்களிடம் என்னால் நெருங்கமுடியாதே. நான் எந்தக் கட்சியையும் சேராத வன். யாரையும் தெரியாது. ஆனா லும் அகத்தியர் கூறியதால் ஏதாவது வழி இருக்குமென்று எண்ணுகிறேன். நான் யாரிடம் வேலை கேட்பது என்று அகத்தியரிடமே கேட்டுச் சொல்லுங்கள்"" என்றார்.
மீண்டும் ஓலை யைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
""அவன் நிலையில் அவன் கேட்பது சரிதான். அரசியல் வாதிகள் தங்கும் விடுதிக்கு அவனைப் போகச்சொல். அங்கு தரைத்தளத்திலுள்ள ஏதாவது ஒரு அறையின்முன் அமர்ந்திருக்கச் சொல். அங்கு முன்னாளில் பிரபலமான அரசியல் வாதியாக இருந்து, எதிரிகளின் சூழ்ச்சி யால் அவன் சார்ந்த கட்சியிலிருந்து ஒதுக் கப்பட்டு, இப்போது பதவி, புகழ் இல்லாதவன் தங்கியுள்ளான். இவன் அவனுக்கு வேலைக்காரனாகும்போது, இவன் யோகத்தால் அந்த அரசியல்வாதிக்கு பதவி, புகழ் கிடைக்கும். அவனால் இவனுக்கும் வருமானம் உண்டாகும். அந்த கட்சியின் தலைமையிடம் இவனுக்கு ஆதரவு, அபிமானம் கிடைக்கும். ஆனால் இவனுக்கு வாழ்வின் இறுதிக்காலம்வரை தான் அரசியல்வாதி என்ற எண்ணம் இருக்கக்கூடாது. ஒரு கட்சியைச் சார்ந்தவன் என்று மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. ஆயுள் உள்ளவரை அரசியல் பதவியில் உள்ளவர் கூறும் அந்தரங்கப் பணியை ஒரு அடிமைபோல் செய்துவரச் சொல். வாழ்வில் உயர்டைவான்'' என்று கூறி ஓலையிலிருந்து மறைந்தார் அகத்தியர்.
இந்த விவரங்களை அவரிடம் கூறிவிட்டு, "
"நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்று, உங்கள் மனதில் எந்த அறையின்முன் அமரலாம் என்று தோன்றுகிறதோ, அங்கு காலைமுதல் மாலைவரை அமர்ந்திருங்கள். அந்த அறையில் இருப்பவர் உங்களைப் பற்றி விசாரித்தால் உங்கள் நிலையை அவரிடம் கூறுங்கள். அவர் சொல்லும் வேலையை எந்த எதிர் பார்ப்புமின்றி செய்துகொடுங்கள். மாலையில் ஏதாவது பணம் கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, இன்னும் சில வழிமுறைகளையும் சொல்லி அனுப்பி வைத்தேன்.
சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அந்த நபர் மீண்டும் என்னைக் காண வந்தார். முன்பு பார்த்ததைவிட இப்போது சற்று தெளிவாக இருந்தார். ""என்ன நடந்தது?'' என்று கேட்டேன்.
""ஐயா, ஓலையில் அகத்தியர் கூறியபடி செய்தேன். அங்கு ஒரு ஆளுங்கட்சி அரசியல் வாதி இருந்தார். சிறிது நாட்கள் அவரைப் பார்க்க யாருமே வரவில்லை. நானும் அவரும் மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். மாலை யில் என் கையில் கொஞ்சம் பணம்கொடுத்து, காலையில் வரச்சொல்லி அனுப்பிவிடுவார்.
அதன்பிறகு ஒவ்வொருவராக அவரைப் பார்க்க வரத்தொடங்கினார்கள். சென்றவாரம் "அவரது கட்சித் தலைவர் வரச்சொல்லியிருக்கிறார்' என்று கூறி, என்னை மட்டும் உடனழைத்துச் சென்றார். இப்போது அவருக்கு மீண்டும் கட்சியில் மரியாதை கிடைத்து, நிறைய பேர் அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களும் போகும்போது எனக்கு பணம் கொடுத்துவிட்டுப் போகிறார் கள். இன்று என்னிடம் அனுமதிபெற்றுத்தான் எல்லாரும் அவரைப் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது அகத்தியர் அருளால் நன்றாக உள்ளேன்'' என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.
அகத்தியர் கூறியது போன்று இவர் யோகத்தின் பயனாக கட்சித் தலைமையின் பார்வை அந்த அரசியல்வாதிக்குக் கிடைத்து மீண்டும் பதவி, புகழ் அடைந்துவிட்டார். பொதுவாக அரசியலில், தொழிலில் மனைவியின் யோகத்தால் பதவி, புகழ் அடைபவர் களைப்போல, வேலைக்காரர்கள் யோகத்தாலும் தொழிலில் உயர்வு, அரசியலில் பதவி, புகழ் அடைந்தவர்கள் உண்டு.
தற்போது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இரு பெரும் கட்சி களும் வெற்றிபெறும் வேட்பாளர்களைக் கோடிக்கணக்கில் விலைபேசி, அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்யவைக்க முயல்வார்கள். இதனால் இரு கட்சித் தலைவர்களும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் தடுமாற நேரலாம். இவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களே இவர்கள் மெஜாரிட்டி அடையமுடியாமல் உள் அரசியல் செய்து கெடுத்துவிடக்கூடும்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நாள்முதல், வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவு அறிவிக் கும் நாள்வரை தங்கள் கட்சி வேட்பாளர் களை யாரும் சந்திக்காமல் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இரண்டு பூனைகளுக்கு குரங்கு அப்பம் பிரித்துக்கொடுத்த கதையாக மாறிவிடும். இந்தத் தேர்தலில் பல வேட்பாளர்களும் பணத்திற்காக பதவியை விற்க முயல்வார்கள்.
2021 தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், குரு மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் ஆட்சி மாற்றம் அல்லது முதலமைச்சர் மாற்றம் உண்டாகலாம். ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
செல்: 99441 13267