சுமார் 38 வயதுடைய ஒரு பெண், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
"ஐயா, எனக்கு 24 வயதில் திருமணம் நடந்தது. இப்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண் குழந்தை இல்லை. ஒரு மகன் பிறக்கவேண்டுமென்று ஜாதகம் பார்த்தேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mother-son.jpg)
சிலர் ஆண் குழந்தை பிறக்காதென்றும், இன்னும் சிலர், பரிகாரம், பூஜைகள், யாகங்கள் செய்தால் பிறக்கும் எனவும், சிலர் கோவில் வழிபாடு, விரதங்களைக் கடைப்பிடித்தால், ஆண் வாரிசு, உண்டு என்றும் கூறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் நிறைய பணம் செலவழித்து முறையாகச் செய்து முடித்தேன். ஆனால் ஆண் குழந்தை பிறக்கவில்லை. மூன்றாவதாக வும் பெண் குழந்தைதான் பிறந்தது. வம்ச விருத்திக்கு ஒரு மகனைப் பெற்றுத்தர மனைவி யால் முடியவில்லையே என்று என் கணவர் விரக்தி யுடன், அந்த சோகம் வெளியில் தெரியாமல் வாழ்ந்து வருகிறார். என் உடன்பிறந்த சகோதர- சகோதரி களுக்கும், என் கணவரின் உடன்பிறந்தோர் என அனைவருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் எங்களுக்கு மட்டும் ஒரு மகன் பிறக்க வில்லை.
எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா என்பதை அறிந்துகொள்ளவே அகத்தி யரை நாடி வந்துள்ளேன். அவர்தான் என் கவலை தீர்வதற்கு நல்லவழி காட்டவேண்டும்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
"இந்த மகள் மனவருத்தத்துடன் அகத்தியன்மீது அதிகமான நம்பிக்கை யுடன் என்னை நாடி வந்துள்ளாள். இவளுக்கு மகன் பிறப்பான்; வம்சம் வளரும் என்று முதலில் கூறி இவள் கவலையைப் போக்கு. மன அமைதி யுடன் நான் கூறுவதைக் கேட்டுப் புரிந்துகொள்ளச் சொல்'' என்றார்.
அகத்தியர் கூறியதைக் கேட்ட அந்தப் பெண், உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர்வடிய கைகூப்பி வணங்கினாள்.
"இவளுக்கு இதுவரை ஆண் குழந்தை பிறக்காததற்கும், இனி பிறக்குமென்று நான் கூறியதற்கும் சூட்சுமமான ரகசியத்தைக் கூறுகிறேன்.
இந்த மகள், தனது முற்பிறவியில் ஒருவனை மணந்து, அவனிடம் வாழ்ந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.
அந்த மகன் பிறந்த சில வருடங்களில், அவன் சிறுவனாக இருக்கும்போது, தன் கணவனையும், பெற்ற மகனையும் விட்டுவிலகி, வேறொருவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று விட்டாள். தான் பெற்ற பிள்ளையை மறந்து வாழ்ந்து மடிந்தாள்.
இவள் மகன், தாய்ப் பாசத்தை அனுபவிக்காமலேயே வாழ்ந்தான். இவனைப் போன்ற மற்ற சிறுவர்கள் தாயின் பாசம், பராமரிப்பினை அனுபவிப்பதைப் பார்த்து, தனக்கு தாயினால் மகிழ்ச்சி கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தி, அவ்வப்போது பெற்றதாயை வெறுத்து பலவிதமான வாக்கினைவிட்டான். முற்பிறவியில் இவள் பெற்ற மகனுக்குச் செய்த பாவத்தால், மகன்விட்ட சாபம் இப்பிறவியில் புத்திர தோஷமாக செயல்பட்டு, ஒரு மகனை அடைய தடைசெய்கிறது.
இவளுக்குப் பிறந்த மூன்று பெண் குழந்தைகளில், முதலிரண்டு பெண் குழந்தைகளுக்கு அண்ணனும் இருக்கக் கூடாது; தம்பியும் இருக்கக்கூடாது என்ற விதி அமைப்புடன் பிறந்துள்ளார்கள். ஆனால் மூன்றாவது பெண் குழந்தை, தனக்குப் பின்னால் ஒரு தம்பி பிறப் பான் என்ற விதி அமைப்புடன் பிறந்துள் ளாள். அவளின் சகோதர பாக்கியம் செயல்படவேண்டும் என்பதால், மூன்றா வது மகளின் யோகத்தால் இவளுக்கு அழகும், அறிவும், அதிர்ஷ்டமும் உள்ள ஒரு மகன் பிறப்பான். இவள் மனக்குறை நீங்கும்.
இவளுக்கு மகன் பிறந்தாலும், முற்பிறவி மகன் சாபத்தால், அந்த மகன் பாசத்தை அனுபவித்து நீண்டநாள் மகனுடன் வாழ முடியாமல் மரணத்தை அடைவாள். புத்திர சாப பாதிப்பு இவளுக்கு உண்டாகாமல் இருக்க நான் கூறும் சில நடைமுறை நிவர்த்தியை செயல்படுத்தச் சொல். இவள் ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படாது'' என்று கூறி சில வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
வம்சத்திற்கு வாரிசு கேட்டு வந்த பெண் மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி யுடன், அகத்தியரை வணங்கிச் சென்றார்.
ஒரு குடும்பத்தில் கணவன் அல்லது மனைவிக்கு புத்திர சாபம், புத்திர தோஷம் இருந்து, ஆண் குழந்தை பிறக்க வில்லையென்றாலும், அவர்கள் பெற்ற மகள்களுக்கு சகோதர யோக பாக்கியம் இருந்தால், அவர்களுக்கு சகோதரனாக ஒரு மகன் பிறப்பான் என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-07/mother-son-t.jpg)