தற்போதைய கோட்சாரத்தில் சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி நடந்துவிட்டது. வேறு சாரார் இப்போ இல்லை.
அடுத்த வருடம்தான் என அழிச்சாட்டியம் செய்கிறார்கள்.
ஆக இந்த மக்களும், ஜோதிடர்களும் கூடி, சனிப்பெயர்ச்சியை அந்தா, இந்தா என்று, 2 1/2 வருடம் ஆகவேண்டியதை ஐந்து வருடத்துக்கு இழுத்து விட்டு விடுவார்கள் போலிருக்கிறது.
அதெல்லாம் சரி, ஜனங்கள் எவ்வளவு காலம்தான் திருநள்ளாறு, குச்சனூர், சேந்த மங்கலம், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், ஆம்பூர் சனீஸ்வரர், கடையநல்லூர் ஆஞ்சனேயா, எட்டியத்தாரி, திருநாரையூர், ஏரிக்குப்பம், வழுவூர், குச்சனூர் என பொழுதன்னைக்கும் அலைய முடியுமா. முதல்ல சனி உங்களை இவ்வளவு தெய்வ தரிசனம் பண்ண விடுவாரா. எனவே மேற்கண்ட சனிப்ரீதி ஸ்தலங்களுக்கு முடிந்தபோது சேவித்துவிட்டு வரலாம். மற்றபடி மனுசனின் தினப்படி வாழ்க்கை இம்சையில், பக்கத்திலுள்ள கோவிலில் சனீஸ்வரரை வணங்குவது ரொம்ப நல்லது.
ஏழரைச் சனி
ராசிக்கு 12-ல் இருந்தால் விரயச்சனி. ராசியில் இருந்தால் ஜென்மச்சனி. ராசிக்கு 2-ல் இருந்தால் பாதசனி. 4-ஆமிடத்தில் அமர்ந்தால் அர்த்தாஷ்டமச்சனி. 8-ல் இருப்பின் அஷ்டமச்சனி. 10-ல் அமர்ந்தால் கர்மச்சனி.
இதுதவிர முதல் சுற்று மங்குசனி, இரண்டாவது சுற்று பொங்குசனி, மூன்றாவது சுற்று மரணச் சனி என்பர். ஒரு சனி சுற்று என்பது 30 வருடங்கள் கொண்டது.
இப்போதைய கோட்சாரப்படி, ஜோதிட மேதைகள் சேர்ந்து, சனியின் காலத்தை ரொம்ப லென்த்தியாக்கிவிட்டார்கள்.
நீண்டநாள் பரிகாரம் என்பது மக்களுக்கு எளிதாக, இஷ்டமாக, தொந்தரவு இல்லாமல் இருப்பது அவசியம். எனவே மிக எளிதான பரிகாரங்களை 12 வீட்டிலும் அமர்ந்த சனிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ராசி என கூறப் பட்டவில்லை. எந்த ராசியாக இருந் தாலும், உங்கள் பிறந்த ஜாதகப்படி, எந்த இடத்தில் கோட்சார சனி அமர்ந்துள்ளாரோ, அதற்கேற்ற எளிமையான பரிகாரங்கள் கூறப் பட்டுள்ளது. கூடியமட்டும் இந்த பரிகாரங்களை பூசம், அனுஷம், உத்திராட்டாதி எனும் நட்சத்திரங் களில் பின்பற்றவும். அன்று சனிக் கிழமையும் சேர்ந்து வந்தால் மிக நல்லது.
ஜென்மச் சனி
இது உங்கள் ராசியில் சனிபகவான் அமர்ந்திருப்பது, ராசியில் சனி அமர்வது என்பது, தலைமேல் உட்கார்ந்தது மாதிரி ஆகும். இதனால் சிந்தனை ஒழுக்கற்று போய்விடும். இதற்கு நீங்கள், சனிக்கு பிடித்த கருப்புநிற பொருளை, பிறருக்கு கொடுக்கவேண்டும். கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள், கருப்புநிற பொருளை, பிறரிடமிருந்து வாங்க மாட்டார்கள். இதற்கு எளிமையான வழி, கருப்புநிற ரிப்பன் வாங்கி, பள்ளிக்கூட சிறுமிகளுக்கு கொடுங்கள். உங்கள் பக்கத்து வீடுகளில் உள்ள சிறுமிகளுக்கு சீருடை ரிப்பனாக கொடுத்துவிடலாம். இந்த பள்ளி குழந்தைகள் எப்போதும் ரிப்பனை தொலைந்துவிடுவர். அதனால் கருப்புநிற ரிப்பன் கொடுப்பதில், சிரமம் ஒன்றும் இராது.
2-ஆமிட பாதச் சனி
இது ராசிக்கு 2-ல் சனி அமர்ந்திருப் பது. இதற்கும் சிறுவர்- சிறுமியருக்கு கருப்புநிற காலுரை எனும் சாக்ஸ் வாங்கிக்கொடுங்கள். மேலும் பள்ளி சீருடையாக கருப்புநிற ஷூ, செருப்பு வாங்கிக் கொடுப்பது நல்லது.
3-ஆமிட தைரிய சனி
இதற்கு உங்களுக்கு பண வசதி இருந்தால், சிறு சைக்கிள் வாங்கிக்கொடுங்கள். அதில் சற்று கருப்புநிறம் இருப்பது மாதிரி பார்த்துக்கொள்ளவும். அல்லது கருப்புநிறம் சார்ந்த விளையாட்டுச் சாமான்கள், பொம்மை, கைபேசி போன்றவை வாங்கிக்கொடுங்கள்.
4-ஆமிட அர்த்தாஷ்டம சனி
இதற்கு நுங்கு, பதநீர் போன்றவை வாங்கிக் கொடுங்கள். சனியின் விருட்சம் பனைமரம். எனவே வீட்டிற்கு தேவையான பனை விசிறி போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது நல்லது.
5-ஆமிட பூர்வபுண்ணிய சனி
இதற்கு நீங்கள் கேழ்வரகு மற்றும் எள் சேர்த்த திண்பண்டம் வாங்கிக் கொடுங்கள். காகத்திற்கு கண்டிப்பாக தினமும் அன்னம் வைக்கவேண்டும். இப்போது காகம், சாதம் சாப்பிடுவதில்லை. அதனால் மிக்சர், காரபூந்தி, பிரட் துண்டு என இவற்றை வைத்தால், காகம் எடுத்துக்கொள்கிறது.
6-ஆமிட ருண, ரோக சனி
கருங்காலி சனிக்கு உகந்தது. கருங்காலியால் செய்த பொருளை, உங்கள் சக்திக்கு ஏற்றவாறு தானம் செய்யலாம். மருந்து மாத்திரை தானம் செய்யலாம்.
7-ஆமிட ஸப்தம சனி
சந்தனம் வாங்கிக் கொடுக்கலாம். வெண் பொங்கல் தானம் செய்யலாம். சனி பிரதோஷமன்று சிவனை வணங்குவது சிறப்பு. மற்ற பிரதோஷ காலத்திலும் சிவனை, தீபமேற்றி வழிபடவும்.
8-ஆமிட அஷ்டமச்சனி
காலபைரவருக்கு, சனிக்கிழமை தோறும், எள் முடிச்சிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, திரியிட்டு விளக்கு ஏற்றவும். மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்கவும். பனையேறும் தொழிலாளிகளின் தேவையறிந்து உதவுங்கள்.
9-ஆமிட அதிர்ஷ்ட சனி
உங்களுக்கு வசதியிருந்தால் நீலக்கல் மோதிரம் அல்லது நீலக்கல் ஆபரணம் வாங்கிக்கொடுக்கலாம்.
அல்லது நீலக்கலர் பாசி மணி, வளையல் வாங்கிக்கொடுங்கள். வயதானவருக்கு நீலக்கலர் வஸ்திரம், வேஷ்டி, துண்டு வாங்கிக்கொடுங்கள்.
10-ஆமிட தொழில் சனி
எவர்சில்வர் பாத்திரம் வாங்கி, அதில் சாக்லேட் அல்லது எள்மிட்டாய் அல்லது கருப்புநிற கைக்குட்டை அல்லது சிறு டிபன் பாக்ஸ் என எவர்சில்வரில் வாங்கிக்கொடுங்கள். நீங்கள் தொழிற்சாலை நடத்துவராக இருந்து, உங்கள் ராசிக்கு 10-ல் சனி வந்தால், இந்தமாதிரி எவர்சில்வர் பொருட்களை, உங்களிடம் பணியாற்றுபவர்களுக்கு கொடுங்கள்.
11-ஆமிட லாப சனி
இப்போது அடர்வனம் எனும் அமைப்பில், சிறு சிறு காடுகளை ஆங்காங்கே உண்டாக்குகிறார்கள். அதற்கு, உங்களால் முடிந்த பணத்தை கொடுங்கள். தொடர்ந்து காடுகளின் பராமரிப்புக்கும் கவனம் செலுத்துங்கள்.
12-ஆமிட விரயச் சனி
கூண்டில் அடைபட்ட பறவைகளை வாங்கி, சுதந்திரமாக பறக்க விடுங்கள்.
பறவைகள் சரணாலயம், சதுப்புநிலத்தில் பறவைகள் தங்குமிடம் என இதற்கு முடிந்த உதவிச் செய்யுங்கள். தேவைப் படுவோரின் பயணச் செலவிற்கு கேட்டு உதவுங்கள்.
மேற்கண்டவை தவிர, சனிக்கு ரொம்ப பிடித்தமானது உழைப்பது. அதனால் முடிந்தமட்டும், உழவாரப்பணி, குளம், ஏரி, ஆறு சுத்தம் செய்வது, கடற்கரை தூய்மைபடுத்துவது, மருத்துவமனையில் நோயாளிக்கு உதவிச்செய்வது என இதுபோன்ற உடல் உழைப்பு தேவைப்படும் சேவையை செய்யுங்கள். மேலும் சனிக்குரிய விருட்சம் பனைமரம். பனைமரம் சார்ந்த பதநீர், நுங்கு, விசிறி மற்றும் பனையேறும் தொழிலாளர்களின் நலன் மேன்மையடைய நீங்கள் பாடுபட்டால், சனிபகவான் நன்று, நன்று என மிக மகிழ்வார்.
சனியின் இருப்பிடம் இருட்டு, குப்பை ஆகும். எனவே வீட்டிலும், தெருவிலும் குப்பை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்; நல்லது நடக்கும்.