சென்னை அலுவலகத்திற்கு இளம் வயது கணவன்- மனைவி இருவரும் நாடியில் பலன்காண வந்திருந்தனர். அவர் களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "எங்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றது. இதுவரை குழந்தை பாக்கியமில்லை. நிறைய ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். அவர்கள் பலவிதமான சாப- தோஷங்களைக் கூறி பரிகாரம் செய்யச் சொன்னார்கள். அவை அனைத் தையும் செய்தோம். அவர்கள் கூறிய அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வழிபட்டோம். ஒரு ஜோதிடர் பசுவும், கன்றையும் வாங்கி ஒரு பிராமணருக்கு தானம் கொடுத்தால், குழந்தைப் பிறக்கும் என்றார். அதையும் செய்தோம்.
மருத்துவரிடம் இருவரும் சென்று, பரிசோதனை செய்து சிகிச்சைப் பெற்றோம். அவர்கள் பெரிதாகப் பிரச்சினையில்லை என்றுகூறி மருந்து தந்து சாப்பிடச் சொன்னார்கள். மருந்து சாப்பிட்டும் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. எனது உறவினர், ஒருவர் தங்களைப் பற்றிக்கூறி ஜீவநாடியில் பலன் கேளுங்கள். உங்களுக்கு இந்த பிறவியில் குழந்தைப் பாக்கியமுண்டா? இல்லையா? என்பதையும் குழந்தை உண்டென்றால், தடைக்கு காரணத்தையும், தடைவிலக வழிமுறைகளையும் அறிந்துகொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் நாடியில் பலன் அறியவந்தேன். அகத்தியர்தான் எங்கள் பிள்ளைக் குறை தீர வழிகாட்ட வேண்டும்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
குழந்தைப்பேறு அடைய கோவில் கோவிலாக அலைந்தேன் என்கின்றான். குழந்தைப் பேறு என்பது ஆண்- பெண் இருவரின் சுக்கிலம், சுரோணிதம், வம்ச முன்னோர்களின் ஆத்மா வில்தான் உள்ளதே தவிர, ஆண்டவனிடமில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளட்டும். இவர்களுக்கு இந்த பிறவியில் ஒரேயொரு ஆண் குழந்தை மட்டுமே உண்டு. இவன் வம்ச முன்னோர் களில் ஒருவன் இவனுக்கு மகனாகப் பிறப் பான். முதலில் மனக்கவலையை விடச்சொல் என்றார்.
முற்பிறவியில் இவனுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்தான். தன் மகனை இவன் அதிகபாசத்துடன் வளர்த்தான். நிறைய பணம் சம்பாதித்து சொத்துகளை தன் மகனுக்காகச் சேர்த்துவைத்தான். மகனும் வளர்ந்து, வாலிபனானான். அவனுக்கு திருமண வயது வந்ததும், தனது குடும்ப உறவிலேயே ஒரு பெண்ணையும் திருமணம் செய்துவைத்தான். ஒரு தந்தை தான் பெற்ற பிள்ளைக்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்துக் கடமைகளையும் செய்தான்.
இவன் மகன் திருமணம் முடித்த சிறிது காலத்திலேயே தன் மனைவி அவரின் உறவினர்கள் பேச்சைக்கேட்டு பெற்றவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டான். மேலும் இவன் சம்பாதித்து சேர்த்துவைத்த சொத்துகளையும் பறித்துக்கொண்டு தாய்- தந்தையை அனாதையாக அலையவிட்டான். தாய்- தந்தைக்கு பெற்று வளர்த்த கடனை தீர்க்கவில்லை.
முற்பிறவியில் மகனாகப் பிறந்து, பெற்றவர்களுக்குப்பட்ட கடனை, இந்த பிறவியிலும் இவர்களுக்கு மகனாகப் பிறந்து, முற்பிறவி பித்ரு கடனை தீர்க்கவேண்டும் என்பது மகனின் கர்மவினைக் கணக்காகும். முற்பிறவியில் யார்? மகனாக இருந் தானோ, அவனையே இந்த பிறவியில் மகனாக அடையவேண்டும் என்பது இவர்களின் விதிக் கணக்காகும்.
முற்பிறவி மகனின் ஆத்மா, இந்தப் பூமியில் பிறக்க இன்னும் காலம் கூடிவரவில்லையென்பதால், அவனைத் தவிர வேறு குழந்தைகள் இவர்களுக்கு பிறக்கக்கூடாது என்பதாலும் தான், இதுவரை இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளட்டும். அந்த ஆத்மா இந்தப் பூமியில் பிறக்கும் காலம் வரும்வரை இவர்கள் பொறுமையாக இருக்கவேண்டும் என்றார்.
முற்பிறவியில் மகனாக இருந்தவனே, இந்த பிறவியிலும் மகனாகப் பிறப்பான்.
அதற்கு இன்னும் காலம் வரவில்லை என்று அகத்தியர் கூறுகின்றார். அந்தக்காலம் எப்போது? முற்பிறவி மகன்தான் என்பதை எப்படி அறிந்துகொள்வது? அந்த மகனின் வாழ்க்கை நிலை பற்றியும் அகத்தியரிடம் கேட்டுக் கூறுங்கள் என்றார்.
இவன் மனைவி இன்னும் 18 மாதங்கள் சென்றபின்பு, கர்ப்பம் அடைவாள். முற்பிறவி மகன்தான் என்பதற்கு அடையாளம் அவன் முதுகில் உருகுமீனைப் போன்ற ஒரு மச்சம் இருக்கும். பல தொழில் செய்து நிறையப் பணம் சம்பாதித்து, புகழ்பெற்று வாழ்வான். பெற்றவர்களை மதித்து காப்பாற்றுவான். நல்ல குணமும், பெருமை தரும் கல்வியைக் கற்று பேர் சொல்லும் பிள்ளையாக பெருமையாக வாழ்வான் என்றார். இவன் இந்த இடத்தைவிட்டுச் செல்லும்முன்பு குழந்தை சம்பந்தமான ஒரு செய்தியைக் காதில் கேட்பான். அப்போது புரிந்துகொள்ளட்டும், அகத்தியன் கூறியது உண்மைதான் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் எங்கள் கவலையைத் தீர்த்துவிட்டார். அகத்தியருக்கு எங்கள் வணக்கம் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது, அவரின் செல்போன் ஒலித்தது.
அதை எடுத்து பேசி முடித்துவிட்டு அகத்தியர் கூறியபடியே ஒரு செய்தி வந்தது. எனது தங்கையை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்.
அவளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை எனது மாப்பிள்ளை இப்போது கூறினார் என்று கூறினார்.
நீங்கள் கோரிவந்த காரியம் நல்லபடியாக அமையும் என்று நிமித்தம் காட்டியுள்ளது; சென்று வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
ஒரு குழந்தையின் பிறப்பில் பல சூட்சும மான ரகசியங்கள் உள்ளது என்பதை நானும் அறிந்துகொண்டேன்.