நவகிரகங்களில் சூரியனைவிட்டு வெகு தொலைவில் இருக்கக்கூடிய கிரகம் சனிபகவான். இவரின் தசா வருடம் 19 ஆண்டுகள். ஒருவரின் ஜாதகத்திலுள்ள கர்மவினைக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடிய வல்லமை படைத்தவர் சனிபகவான். இவரின் பணியாட்கள் ராகு- கேதுகள். இவர் ஜாதகக் கட்டத்தை அது பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்ளக்கூடிய கால அளவு 30 ஆண்டுகள். அதனால் தான் நம்ம முன்னோர்கள், "30 ஆண்டு கள் வாழ்ந்தவர்களும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவரும் இல்லை' என்று சொல்லி வைத்தார்கள்.
எதற்கும் அஞ்சாதவர்களைக்கூட சனிபகவான் தனது கோட்சாரம் மற்றும் தசா புக்தி காலங்களில் ஒரு நாளாவது சோதிக் காமல் விடமாட்டார். ஏழரைச் சனி காலத்தில் சிவனே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தாக ஒரு புராணக் கதை அனைவரும் அறிந்த ஒன்று.
தனது தசாபுக்தி காலங்களிலும் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி காலங்களிலும் வாழ்க்கை பாடத்தை நியாய தர்மத்தை சுற்று கொடுப்பார். இந்த சோதனையை கடந்து சாதனையாளராக வலம்வருபவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்து மீளமுடியாதவர் களும் இருக்கிறார் கள். இது ஒருபுறம் இருக்கட்டும். குரு வட்டத்திற்கு சுய ஜாதகத்திலுள்ள குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. ராகு- கேது மற்றும் சனி வட்டம் பிறவி ஜாதகத்திலுள்ள கர்மவினைகளுக்கு ஏற்பவே இருக்கும்.
புராண கதைகளில் பலர் 100 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்து மறைந்ததற் கான சான்றுகள் உள்ளன. தற்போது உலகம் முழுவதுமுள்ள வயோதிகர்களை கணக்கு எடுத்தால் 100 வயதுவரை வாழ்பவர்கள் மிக சொற்பமாகவே இருப்பார்கள்.
தற்போது சராசரியாக மனிதனின் ஆயுட் காலம் 70 ஆண்டுகளாக உள்ளது. குறைந்தது ஒரு மனிதனின் ஜாதகத்தை இரண்டுமுதல் மூன்றுமுறை சனிபகவான் சுற்றி வருவார்.
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கும் சனிபகவான் தான் நின்ற பாவகம் மற்றும் காரகம் ராசியில் நின்ற கிரகத்திற்கு ஏற்ப தன் பலனை வழங்குவார்.
0-10 வயது
ஜாதகர் பிறந்த முதல் பத்து வருடம் குழந்தை பருவம். சுய ஜாதகத் தில் சனிபகவான் பலம்பெற்றால் நல்ல பெற்றோர்கள் கிடைப்பார்கள். முழுமையான தாய்- தந்தையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். பண்பு, பாசம், நல்ல மனநிலை, மூளை வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு நிம்மதியான உறக்கம் போன்றவை கிடைக்கும். சனி பலம் குறைந்தால் பெற்றோர்களின் அனுசரணை கிடைக்காது அல்லது ஆயுள் ஆரோக்கிய குறைபாடு இருக்கும்.
10-20 வயது
பத்து முதல் இருபது வயதுவரை கல்வி பருவம். முறையான கல்வி கற்று சமுதாயத்தில் தனக்கென ஒரு தனித்தன்மையை நிரூபிக்கும் காலம். சனி பலம் பெற்றால் நல்ல கல்வி கிடைக்கும். படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். நல்ல சிந்தனை, ஆத்ம ஞானம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் புகழுக்கு புகழ் சேர்ப்பார்கள். நீதி, நேர்மை, நியாயம், தர்மம் ஆகியவற்றை முறையாகக் கடைபிடிப்பார்கள். பூர்வபுண்ணிய பலம், குலதெய்வ அருள் நிரம்பி இருக்கும். குலத்தினர் ஒற்றுமையாக இணைந்து குலதெய்வம் கும்பிடுவார்கள். குடும்பம் வாழையடி வாழையாக தலைக்கும்.செல்வமும் செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
சனி பலம் குறைந்த நிலையில் ஜாதகம் இருந்தால் இந்த வயதோட்டத்தில் பள்ளி, கல்லூரி படிப்பில் தடை ஏற்படும். சுய ஜாதகத்தில் புதனும் 4-ஆம் அதிபதியும் வலிமை யாக இருந்தால் மீண்டும் படிப்பை தொடரக்கூடிய சூழ்நிலை உருவாகும். இல்லை யெனில் படிக்காமல் அடிமைத் தொழிலில் கஷ்ட ஜீவனம் செய்ய நேரும். சிலருக்கு இந்த வயதில் திருமணம் நடந்து அடுத்த தலைமுறையை உருவாக்குவார்கள்.
20-30 வயது
இனம்புரியாத சந்தோஷம் குடிபுகும். மனதிற்கு இன்பம் கொடுக்கும் சம்பவங் களை மட்டும் அனுபவிக்க விரும்பும் காலம். எதிர்பாலினத்தினர்மீது ஈர்ப்பை உண்டாக்கும். எதைப் பார்த்தாலும் அழகாகக் காட்சிதரும். காசு, காமம், காதல், ஆடை, அலங்காரம், சிற்றின்ப நாட்டத்தில் ஈடுபாடு ஏற்படும் காலம். ஆடம்பரமாக சொகுசாக வாழ விரும்பும் காலம். மனம் சார்ந்து உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதையே விரும்புவார்கள். மனம் எல்லைகளில்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும். தன் விருப்பத்துக்கு தடையாக இருப்பவற்றையெல்லாம் தகர்த்தெறியவும் துடிக்கும். தடைகளை விதிப்போர்மீது வெறுப்பையும் உமிழும். ஆனால், அத்தடைகளை உண்மையில் எதற்காக பெரியவர்கள் நமக்கு விதிக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கை வார்த்தைகளில் பொதிந்துள்ள உள் அர்த்தம் என்ன என்பதை அலசி ஆராய்வது அவசியம்.
தற்காலத்தில் பிஞ்சிலேயே பழுத்த பழமாக தவறான காதலில் 13, 14 வயதிலேயே மாட்டி தன் வாழ்வை தொலைக்கும் குழந்தைகளே அதிகம். இந்த கலிகாலத்தில் ஒருவனுக்கு தவறான காதல் உணர்வு வராவிட்டால் அவனுக்கு சமுதாயம் வேறு பெயர் சூட்டி அவமானப்படுத்துகிறது. படிக்கும் காலத்தில் தவறான எண்ண அலைகளை மனதில் விதைக்க கூடாது. காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சனி நன்றாக அமையப்பெற்றவருக்கு சிறப்பான திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் கூடி தேடிவரும்.
சனியின் முதல் சுற்று முடியும் இந்த காலம் 25 வயதுவரை ஆடிய ஆட்டத்திற்கான எதிர் விளைவை அனுபவிக்கும் நேரம். 20 வயதுவரை வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு ஒரு சுற்று முடியும் நேரத்தில் வசந்தம் வீசத் துவங்கும். பிறவியில் இருந்து துன்பத்தை சந்திக்காதவர்களுக்கு ஆயுள், ஆரோக்கிய பாதிப்பு, தொழில் இடர் போன்ற அசுப பலன்கள் உருவாகும். அதனால் பெரியவர்கள் பேச்சு வழக்கில், "30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை' என்பார்கள். அதாவது 30 வருடமும் எந்த துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதரும் இல்லை. 30 வருடமும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லை என்பதே இதன் பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்தபட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால் 30 வருடகாலம் சனிபகவானின் பிடியில் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கை இருக்கும்.
சுய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி வலிமையாக இருந்தால் எந்த மன சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல் படிப்பிற்கு தகுந்த தொழில் அல்லது வேலையில் சேர்ந்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்.
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்து முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் அடுத்த தலைமுறை 27 வயதில் தலைக்கும். அதிகப்படியாக 70 சதவிகிதம் 25 முதல் 30 வயதில் புதிய தலைமுறை உருவாகிவிடும். ஒருவருக்கு வாரிசு உருவாகுவது சாமானியமான செயல் அல்ல. ஒருவருக்கு வாரிசு உருவாகும் நேரமே சிசு உருவாகும் நேரமே கர்ம பலனை தீர்மானிக்கிறது. ஒரு ஆன்மா கர்ம பலனை அனுபவிக்கும் காலம் வரும்போது மட்டுமே பிறப்பெடுக்கும். ஒருவரின் ஜாதகம் என்பது கரு உருவான நேரமா அல்லது குழந்தை பிறந்த நேரமா? பூமியில் ஒரு உயிர் ஜெனித்த நேரம் அதாவது பிறந்த ஜாதகரின் விதிப் பயனை கூறும். கரு உருவான நேரம் என்பது ஆன்மாவின் பிறப்பின் ரகசியத்தை கூறும். அதாவது தந்தைவழி கர்ம வினையைத்தாங்கி கரு உருவாகி றதா? தாய்வழி கர்ம வினையைத் தாங்கி கரு உருவாகிறதா என்பதை அறிய முடியும். நல்ல நேரத்தில் கரு உருவாகவேண்டும் என்பதற்காகத்தான் திருமணத்திற்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து திருமண முகூர்த்தம் குறிக்கும்போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் தம்பதிகள் மகிழும்போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவுகொண்டு பிறக் கும் பிள்ளைகளால் பிரச்சினைதான் எழும்.
அப்படி நல்ல நேரத்தில் ஒரு கரு உருவாக கிரகங்களின் ஒத்துழைப்பு வேண்டும். தம்பதிகள் பழகும் நேரத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளதோ அதுவே குழந்தையின் கர்ம வினையை நிர்ணயிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் சனி நின்ற நட்சத்திராதிபதி உங்கள் லக்னரீதியான கேந்திர திரிகோண அதிபதிகளில் சாரமாக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தையால் மகிழ்ச்சி உண்டு. சனி என்ற நட்சத்திராதிபதி உங்கள் லக்னரீதியான 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தப்பட்டால் பிறக்கப்போகும் குழந்தையால் மன உளைச்சல் உண்டு. தம்பதிகள் பழகும் நாட்களில் உங்கள் சுய மற்றும் கோட்சார சனிபகவான் சாதகமாக இருந்தால் பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை சுகமாக இருக்கும். தம்பதிகள் பழகும் நாட்களில் உங்கள் சுய மற்றும் கோட்சார சனிபகவான் சாதகமற்று இருந்தால் பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை அசுபமாக இருக்கும். குழந்தை களால் வலியை உணர்த்துபவரும் சனி பகவான். அந்த பிரச்சினைகளில் இருந்து மீளும் வழியை காட்டுபவரும் சனிபகவான் தான்.
தொடரும்....
செல்: 98652 20406