ஜாதகத்தில் சனி, செவ்வாய் சம்பந்தம் பெற்றவர்களுக்கு எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டேயிருக்கும். இவர் யாரையும் எதிரியாக நினைக்கமாட்டர், ஆனால் மற்றவர்கள் இவரை எதிரியாக நினைப்பார்கள். இவரை வீழ்த்த திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருக்கும். போராட்டமில்லாமல் எதையும் அடையமுடியாது.
இவர்களுக்கு ஆயுள் முழுவதும் கடன்தொல்லை இருந்துகொண்டே இருக்கும். கடன்கொடுத்தால் வராது. கைமாற்றாகக் கொடுத்தாலும் வராது. கடன் வாங்கிவிட்டால் அதைக்கொடுக்க சிரமமாகிவிடும். பிறருக்காக ஜாமின் ஏற்றுக்கொண்டால், அதனை இவர்கள்தான் தீர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். பொதுவாக சனி, செவ்வாய் சேர்ந்துள்ளவர்களின் ஆயுட்கால வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்க்கை சிரமமானதாகவும், ஒரு பங்கு வாழ்க்கை கொஞ்சம் சந்தோஷமாகவும் இருக்கும்.
பெண்களின் ஜாதகத்தில், சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால், அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவச் செயல்களால் திருமணம் தடை, தாமதமாகும். இளம் வயதில் திருமணம் நடந்தால் கணவன் இழப்பு, பிரிவு, விவாகரத்து, அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமணத்திற்குப்பின்பு கணவன் வீட்டில் சிரமம் அடைய நேரும். கணவன்- மனைவியிடையே, கணவன் வீட்டு உறவுகளால், வேலையாட்களால் அல்லது மூன்றாம் மனிதர்களால் பிரச்சினைகள் உண்டாகும். தாம்பத்தியம் குறையும். அதிகமான பெண்களுக்கு, திருமணத்திற்குப்பிறகு மாமனார், மாமியார், கணவன் வீட்டாருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசிக்க முடியாது. தனிக் குடித்தனம் சென்று வாழவேண்டிய நிலை ஏற்படும்.
இந்தப் பெண்களுக்கு அமையும் கணவன் சோம்பேறியாக இருப்பார். அல்லது குடும்பப் பொறுப்பற்றவராக இருப்பார். ஏதாவது ஒரு நோய்த் தாக்கத்தால் சிரமப்படுவார். கணவனுக்கு எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். கணவனின் செயல்திறன், உடல்பலம் குறைந்துகொண்டேவரும்.
கணவனுக்கு தொழில், உத்தியோகம் சரியாக அமையாது. செய்யும் தொழிலில் நஷ்டங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்தால், கூட்டாளிகளால் ஏமாற்றப் படுவார். கைமுதலை இழப்பார். கணவனின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. இந்தப் பெண்தான் குடும்பதை நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிடும்.
பிறப்பு ஜாதகத்தில் சனி, செவ்வாய் இணைந்துள்ள ஜாதகர்கள், இதுபோன்ற பலன்களில் ஏதாவது சிலவற்றை அனுபவித்து தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எந்த விதமான பரிகாரம், பூஜை போன்றவற்றைச் செய்தாலும் பலன் கிட்டாது.
கிருஷ்ணரின் ஜாதகத்திலுள்ள சனி, செவ்வாய் சேர்க்கைமூலம் அவரின் முந்தைய அவதாரங்களில் செய்த செயல்களால் சகோதர சாபம் எவ்வாறு உருவானது- அதனை கிருஷ்ணாவதாரத்தில் என்னவிதமாக நிவர்த்திசெய்தார் என்பதை அறிவோம்.
இராமாவதாரத்தில், இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்லுமாறு அவரது தந்தை தசரதன் கட்டளையிட்டபோது, அவரது குடும்பத்தினரும், மற்ற அரசர்களும், குலகுரு வசிஷ்டர், இராமனால் நன்மையடைந்த ரிஷி, முனிவர்கள் என யாரும் அவருக்கு ஆதரவாக, பக்கபலமாக இருந்து உதவி செய்ய முன்வரவில்லை. இராமன் வனவாசம் சென்றபோது அவரது தம்பி லட்சுமணன் மட்டுமே துணையாக நின்றான்; உடன் சென்றான்.
வனவாச காலத்தில் உறக்கமின்றி, இராமருக்கும், சீதைக்கும், பணிவிடைகள் செய்து, பாதுகாப்பாக இருந்தான், தன் சுகவாழ்வைத் துறந்து செயல்பட்டான். இராம- இராவண யுத்தத்தில், தன் அண்ணனுக்காகப் போரிட்டு பல துன்பங்களை அடைந்தான். இராமனின் ஆயுள்வரை துணையாக இருந்தான். இராமனின் நன்மை- தீமைகள், சுக- துக்கங்களில் பங்கெடுத்து அனுபவித்தான். லட்சுமணனின் இந்த எதிர்பார்ப்பில்லாத, சுயநலமில்லாத பாசத்திற்கும் உழைப்பிற்கும் ஈடாக எந்த நன்மைகளையும், இராமன் செய்ய வில்லை. இதனால் இராமனுக்கு சகோதர சாபம் பற்றிக்கொண்டது.
இராமாவதாரத்தில் ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த லட்சுமணன் கிருஷ்ணா வதாரத்தில் வசுதேவரின் மற்றொரு மனைவி யான ரோகிணியின் மகனாக, கிருஷ்ணருக்கு அண்ணனாகப் பிறந்தார். அவர்தான் பலராமன். இராமாவதாரத்தில் தம்பி லட்சுமணணாகப் பிறந்து தனக்குச் செய்த நன்மைகளுக்காக, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணன் பலராமனாகப் பிறக்கச் செய்து, அவரின் மனம் குளிர பணிவிடைகள் செய்து, அவர் இட்ட கட்டளைகளை மீறாமல் செயல்பட்டு, அவரின் ஆயுள்வரை பலராமனைவிட்டுப் பிரியாமல் வாழ்ந்தார். தான் தீர்மாணித்த துவாரகை நகருக்கு பலராமனுக்கு முடிசூட்டி மன்னராகச் செய்து, இராமாவதாரத்தில் உண்டான சகோதர சாபக்கடனை கிருஷ்ணாவதாரத்தில் நிவர்த்திசெய்தார்.