சென்ற இதழ் தொடர்ச்சி...

6-ஆம் அதிபதியால் ஏற்படும் தீயபலன்களும் அதற்கான பரிகாரங்களும்...

தனுசு

லக்னாதிபதி குரு. ஆறாம் அதிபதி சுக்கிரன். அப்படியே துலாம் லக்னத்தைப்போலதான் இங்கேயும் பலன் ஏற்படும். லக்னாதிபதி குருவுக்கு ஆறாமதிபதி சுக்கிரன். வீடு, வாகனம், திருமணம் என்று சுக்கிரதசை காரகத்துவப் பலனைச் செய்தால் கூட, அவற்றை கடன்மூலம் கொடுத்து ஓடி ஒளிய வைத்துவிடுவார். பலருக்கு சுக்கிரதசை ஆயுள் தண்டனை பெற்ற கைதியின் நிலையை ஏற்படுத்தி விடும். சுக்கிரன் ஆட்சி, உச்சம்பெற்றாலும், சுக்கிரன் சுயசாரத்திலிருந்தாலும் ஜாதகரின் வாழ்க்கை நித்தியகண்டம்; பூரண ஆயுள்தான். குரு, சந்திரன் சம்பந்தம்பெற்று சந்திர மங்கள யோகம் பெற்றவர்களுக்கு, சந்திரன் சாரத்தில் நின்று சுக்கிர தசை நடந்தால் கடனால் கடல்கடக்க நேரும். குரு, சந்திரனுக்கு கேது சம்பந்தம் இருப்பவர்கள் நம்பிக்கை மோசடியில் சிக்கி கடனாளியாகிறார்கள்.

Advertisment

பரிகாரம்

ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரங்களை தினமும் முடிந்தளவு பாராயணம் செய்தால் நற்பலன்கள் தேடி வரும். சரபேஸ்வரரை வணங்க ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளகும். அன்று அசைவ உணவுகள் உண்ணாமல், உடல், மனசுத்தி செய்துகொண்டு, மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ராகு காலத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று, சரபேஸ்வரர் சந்நிதிமுன்பு விளக்கெண்ணெய் தீபமேற்றி வழிபாடுசெய்தால் கடன் குறையும். எதிரிகளால் ஏற்படும் எத்தகைய பிரச்சினைகளாக இருந்தாலும் நீங்கி வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தாங்கமுடியாத கஷ்டங்கள், பிரச்சினைகளால் மன அமைதி இல்லாதவர்கள், ஊரின் எல்லை, காவல் தெய்வத்தை தொடர்ந்து 48 நாட்கள் தரிசித்துவர சுபச்செய்தி தேடிவரும். கொடுத்த கடன் வசூலாக, பைரவர் சந்நிதி யில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபமேற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யவேண்டும்.

12

Advertisment

மகரம்

லக்னாதிபதி சனி. ஆறாமதிபதி புதன். சற்றேக் குறைய கன்னி லக்னத்தவர் அனுபவிக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் மகர லக்னத் திற்குப் பொருந்தும். புதன், சனி சம்பந்தமானது ராசிக்கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் ஜாமின் போடக்கூடாது. கடன் கொடுக்கக் கூடாது. சூரியனுடன் புதன் இணைந்து புதாதித்ய யோகம்பெற்றவர்கள் கடனுக்காக தண்டனை அனுபவிப்பவர்கள். சூரியன், புதனுடன் சனி சம்பந்தம் இருப்பவர்கள் அரசுடைமை வங்கிகளில் நிதி பெற்றால் விபரீத ராஜயோக அடிப்படையில் கடன்தொகை தள்ளுபடி யாகும். தற்போது அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடனால் பயனடைந்த வர்களில் மகர லக்னத்தினரே அதிகம். தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் மீட்டர்வட்டி, கந்துவட்டியினரிடம் கடன்பெறுவது, வங்கியில் பணமின்றி காசோலை கொடுப்பது பாதுகாப்பைத் தராது.

பரிகாரம்

சிவன் கோவில் வன்னிமரம், வில்வமரத்தை 21 முறை வலம்வந்து குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். நாம் கூறுவதைக் கேட்கும் சக்தி இந்த மரங்களுக்கு உள்ளது. பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1,000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள். காரியசித்திக்கு துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு. ராகுகாலத்தின் கடைசி அரை மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பூஜை, வழிபாடுசெய்ய உகந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபட, வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

கும்பம்

லக்னாதிபதி சனிக்கு ஆறாமதிபதி சந்திரன் பகையாவார். சனி, சந்திரன் சேர்க்கை எந்த இடத்திலிருந்தாலும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திற்கும் தடை, தாமதத்தை சந்தித்தே வயதாகிவிடும். முதலில் கடனுக்காக அலைய வேண்டும். ஒரு சிறிய கடனுக்குக்கூட நூறுமுறை அலையவேண்டும். கடன் கிடைத்தால் அதை அடைக்கும்முன்பு வாழ்க்கையே வெறுப்பாகி விடும். சனி, சந்திரனின் சாரப் பரிவர்த்தனை பெற்றாலும், சந்திரன் உச்சம், நீசமடைந்தாலும், சந்திரன் சுயசாரத்திலிருந்தாலும் சந்திர தசை எந்த நிலையிலும் பெரிய யோகத்தைத் தராது. சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தம் இருப்ப வர்களில் பலர் கடனால் மனநோயாளியாகிறார் கள்.

பரிகாரம்

அம்மன்கோவிலிலுள்ள திரிசூலத்தில் எலுமிச்சம்பழம் குத்தி, குங்குமார்ச்சனை செய்து வழிபட பாதிப்பு குறையும். கடனால் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனைசெய்து வழிபடவேண்டும். பாதிப்பு மிகுதியாக இருப்பவர்கள் முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணங்கள் செய்வது அவசியம். பால், தயிர், கோமயம், சாணம் கலந்த பஞ்ச கவ்யக் கலவையை வாரம் ஒருமுறை வீடுகளில் தெளிக்க தோஷம், தீட்டுநீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மீனம்

லக்னாதிபதி குரு. ஆறாம் அதிபதி சூரியன். குரு, சூரியன் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந் தாலும் பாதிப்பு மிகைப்படுத்தலாக இருக்கும். இதற்கு சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் கடனால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், சுயசாரத்திலிருந்தாலும் கடன் எளிதில் தீராது. சூரியனும் சுக்கிரனும் நீசமானால் கடன்தொகை தள்ளுபடியாகும். சூரியனுக்கு ராகு- கேது சம்பந்தமிருந்தால் தந்தையால் கடன் பெற நேரும். சிலர் குலம், கௌரவம், அந்தஸ்திற் காக, முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை மீட்பதற்காக சொத்தின் மதிப்பைவிட அதிகமான கடனைச் சுமக்கிறார்கள். அல்லது கடனால் பூர்வீகத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். அல்லது பூர்வீக சொத்தை இழக்கிறார்கள்.

பரிகாரம்

சிவாலயங்களில் உழவாரப்பணி செய்ய வேண்டும். மூன்று தலைமுறை முன்னோர் களுக்கு தில ஹோமம் செய்யவேண்டும். சிவன்கோவில் திருப்பணிக்கு உதவிசெய்தால் மேன்மை உண்டாகும். காக்கைக்கு காலையில் உணவளித்தால் பித்ருக்களால் நன்மை உண்டாகும். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு, ஆறாமதி பதி உபஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ல் இருக்கும்போதும், நட்புவீட்டில் இருக்கும்போதும் தீயபலனைத் தராமல் குறைத்துக்கொண்டு, சில நல்ல பலன்களைத் தருவார்கள். அதற்காக யோகத்தையெல்லாம் தந்துவிட மாட்டார்கள். மற்ற ஆறு லக்னங்களான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றுக்கு, லக்னாதிபதிக்கு ஆறாமதிபதி நட்பாவதால் பெரிய தீயபலன்களைத் தரமாட்டார்கள். இங்கேயும் ஆறாமதிபதி நல்லநிலையில் இருந்தால்தான் நல்ல பலனைத் தருவார்கள். சனி, ராகு- கேது போன்றவர்களின் சேர்க்கையோ, பார்வையோ ஏற்பட்டால் கெடுபலன்களே இருக்கும். ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலைக்கேற்பவே அனைவரும் தங்களுடைய கர்மவினைகளை அனுபவிக்கவேண்டும். கிரகங்கள் பெயர்ச்சி மற்றும் தசை, புக்தி மாறும்போது தடைகள், சங்கடங்கள், பிரச்சினை, குழப்பம், மனநிலை பாதிப்பு, கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது துன்பங்கள், துயரங்கள், அவமானம், பழிச்சொல், வம்பு, வழக்கு போன்ற பல்வேறு விதமான தீயபலன்கள் ஏற்படும். இதில் கிரகபலம் மற்றும் பலன்களை நிர்ணயம் செய்வதற்குமுன், தசைநடத்தும் கிரகமானது நின்ற ஸ்தானத்தை லக்னமாக பாவித்து, அந்த தசாகிரகம் நின்ற ஸ்தானத்திற்கு மற்ற கிரகங்கள் எந்தெந்த பாவங்களில் நிற்கின்றன என்பதை கவனத்தில் கொண்டபின், நடக்கப்போகும் நல்ல- கெட்ட பலன்களின் வீரியத்தை முடிவுசெய்தே கடன் பெறவேண்டும். ஒன்பது கிரகங்களுமே பாவகிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ பெற்றிருக்கும் போது, தீயபலன்களையே தருவார்கள் என்பதே உண்மை. ஆனால் 6, 8, 12-ஆமதிபதிகள் அளவிற்கு அதிகமாக தீயபலன்களைத் தந்து வாட்டிவதைக்க மாட்டார்கள். லக்னமும் லக்னாதிபதியும் வலுவிழந்து 6, 8, 12-ஆமதிபதிகள் வலுவானால் சொல்லவே வேண்டாம். நடுவீதியில்கூட நிறுத்திவிடுவார்கள். லக்னம் வலுவிழந்து ஆறா மதிபதி தசை நடந்தால் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, வில்லங்கம், பில்லி, சூன்யம், அடிமைத்தனம், சிறை, நோய்நொடி, வேதனை என்று அளவிற்கு அதிகமாக மனிதர்களைக் கதறவிட்டுவிடுவார். லக்னம் வலுவிழந்து ஆறாமிடம் தசை நடத்தினால் கடன் வாங்கவும் கூடாது; கொடுக்கவும் கூடாது. இவர்கள் முதலீடில்லாத தொழில் அல்லது அடிமை வேலையில் இருந்தால் கடன் பாதிப்பே இருக்காது. என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர், "ஆறாமிடம் வேலை செய்கிறது; கடன் வாங்கினால் நோய் வராது. பன்னிரன்டாமிடம் வேலை செய்கிறது; கடன்வாங்கி சுபவிரயம் செய்து வீடுகட்டினால் நோய் வராது என்று எங்கள் ஜோதிடர் கூறினார். தற்போது கடனை அடைக்க முடியவில்லை' என்றே கூறுகிறார்கள். என் அனுபவத்தில் லக்னம் வலிமையில்லாதவர்கள் ஆறாமிடம் வேலை செய்யும்போது, கடன்வாங்கி திரும்பக் கட்டமுடியாமல் கடனுக்கு பயந்து ஆயுளுக்கு பங்கம்தரும் நோயை வரவழைத்துக் கொள்கி றார்கள். லக்னம் வலிமையுடன் இருப்பவர்கள் கடன்தொகையைப் பயன்படுத்தி அபார வளர்ச்சியடைகிறார்கள். தன் நிலையறிந்து, திரும்பக் கட்டமுடியக் கூடிய தொகையை தேவைக்கேற்றாற்போல் உபயோகித்தால் கடன் ஒரு நல்ல உபகரணம், வழிகாட்டி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலக வாழ்க்கையில் மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் ஏதாவதொரு விதத்தில் ஒரு மன சஞ்சலம், ஏதாவதொரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டங்கள், பிரச் சினைகள்தீர அதற்கான வழிமுறைகளைப் பதிவு செய்துள்ளேன். இதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறுங்கள்.

செல்: 98652 20406