சுமார் 50 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்காண வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷய மாகப் பலனறிய வந்துள்ளீர்கள்'' என்றேன். அவர் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்பு "எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. அதில் ஒரு மகள் இறந்துவிட்டாள்.
அவளுக்கு 14 வயதுதான். அவள் இறப்பின் சோகத்தை எங்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
அவள் பிறந்தபோது, ஜோதிடர்கள் எழுதிய ஜாதகத்தில் அவளுக்கு 85 வயதுவரை தீர்க்காயுள் என்று எழுதியுள்ளார்கள். மேலும் சமீபத்தில், ஒரு காரியமாக, ஒரு பிரபலமான ஜோதிடரிடம் என் குடும்பத்தினர் ஜாதகங்களைக் கொடுத்து பலன் பார்த்தோம். அப்போதுகூட அவர் அந்தப் பெண்ணிற்கு யோக தசை, பட்டம் வாங்குவாள். அரசு உயர்பதவி பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வாள் என்று கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathiyar_38.jpg)
அவர் பலன் கூறிய இரண்டு மாதத்தில், என் மகள் இறந்துவிட்டாள். ஜோதிடமும், ஜோதிடர்கள் கூறியபடி பலன் இல்லையே, இப்போது புத்திர சோகத்தில் தவிக்கிறோம். அவளின் இறப்பிற்கு காரணம் அறிந்துகொள்ளவும், ஜோதிடம் ஏன் பலன் தரவில்லை? என்பதை தெரிந்துகொள்ளவும் அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இந்த மகளின் இறப்பு, பெற்றவர்கள் மனதில் இருந்து கொண்டு, ஆயுள்வரை தாங்கமுடியாத சோகத்தைத் தரவே செய்யும். மனதின் சோகத்தை யாருடைய ஆறுதலும் தீர்க்காது, காலம்தான் மறையச் செய்யும். ஆனால் இவள் மகளின் ஆத்மா, "புண்ணிய ஆத்மா' என்பதை மட்டும் அறிந்து கொள்ளச்சொல்.
வடபுலத்தாரின் வேதமுறை கணித ஜோதிடர்கள், மகளுக்கு 85 வயது ஆயுள் என்று ஜாதகத்தில் எழுதியுள்ளார்கள் என்றால்,
அந்த ஜோதிடமுறை, வான்வெளியில் கிரக நகர்வுநிலையை, நாள், மாத, வருடக்கணக்கின்படி, குறிக்குமே தவிர, ஒரு மனித ஆத்மாவின் முற்பிறவி, இப்பிறவி, வாழ்க்கைநிலை, பிறப்பு- இறப்பு என எதையும் கூறாது,
அறியமுடியாது என்பதே உண்மை.
ஜோதிடன் கிரகங்களுக்கு தசாபுக்தி, பலன் கூறுவானேதவிர, மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டம், பிரச்சினை, தடைகள், நன்மை- தீமைகளுக்கு காரணம் கூறமாட்டான்; கூறவும் முடியாது.
இந்த பூமியில் நிலையானது எது? நிலையற்றது எது? என்று கேட்டால் இதற்கு பூமியில் எல்லாமும் அழியும், ஆனால் அவர்கள் உருவாக்கி உலாவவிட்ட, கடவுள் பக்தியின்மூலம் கிடைக்கும் அருள் மட்டும் அழியாது என்பார்கள். இந்த பூமியில் கடவுள், பக்தி, மனிதன், உயிரினங் கள், தாவரங்கள், வாகனங்கள் அசையும் பொருட்கள் அனைத்தும் அழியும். ஆனால், பூமி, நிலம், தங்கம், வெள்ளி, பணம் போன்ற அசையாப் பொருட்கள் காலத்தாலும், இயற்கையாலும் அழியாது; நிலையானது. இவன் மகள் அசையும் நிலையான மனித இனத்தில் பிறந்தவள் என்பதால் மண்ணுலகில் இருந்து மறைந்தாள்.
இவளின் முற்பிறவி நிலையை அறிந்து கொள். இவன் வம்ச முன்னோர்களில் ஒரு பாட்டி (பெண்) இருந்தாள். அவளுக்கு இயல் பாக ஞானம், வாக்குப்ப-தம், ஆன்மாக்களின் நிலையறியும் சக்தி இருந்தது. தன் குடும்பத்தாரை நேசித்து, பிரிவினை, பேதம் இல்லாமல் வாழ்ந்தால் தன் கிராமத்தில் உள்ளவர்கள் பிரச்சினை, கஷ்டம்தீர வழி கூறினாள். இல்லறத்தில் ஏதுமின்றி ஒரு துறவிபோல வாழ்ந்தாள். இது அவளுக்கு முன்வினை பாவத்தை நீக்கி புண்ணியத்தை வளர்த்தது. வேதக் கொள்கையை ஒதுக்கி, சித்தர்களின் சித்தாந்த கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால், சித்தர்கள் எங்கள் அன்பிற்கு உகந்தவளானால் மனித பிறப்பு, வாழ்க்கையை அறிந்து, எங்களிடம், இனி இந்த மண்ணுலகில் பிறவாது இருக்க, அருள்செய்யும்படி, அனுதினமும் எங்களிடம் பிரார்த்தனை செய்தாள். அவளின் முற்பிறவி பாவ- சாப- புண்ணிய கணக்கு முழுமையாக தீராமல் இருந்ததால், அந்த பிறவியில் மோட்ச நிலையைத் தர முடியவில்லை.
முற்பிறவி கர்மவினைக் கணக்கினை தீர்த்துமுடிக்க இவன் வம்சத்திலேயே இவனுக்கு மகளாகப் பிறந்து, முற்பிறவியில் மீதம் இருந்த பாவ- சாப- புண்ணியத்தை தீர்க்கும் காலம்வரை வாழ்ந்து, மறைந்து மோட்சமடைய சித்தர்கள் அருள் செய்தோம்.
இந்தப் பிறவியில், அந்த ஆத்மா சித்த பிறவி யாகப் பிறந்து, எங்கள் அருளைப் பெற்று வாழ்ந்து மறைந்தாள். அவளின் முற்பிறவி கர்மவினை கணக்குப்படி, இந்த வயது வரை தான் இருந்தது. பாவ-புண்ணிய கணக்கினைத் தீர்த்தாள். மண்ணுலகில் இருந்து மறைந்தாள். அவள் ஆத்மா காற்று மண்டலத்தில் கலந்து, கரைந்து, மறைந்தது. முற்பிறவி பிரார்த்தனை இப்பிறவியில் நிறைவேறி, மோட்ச நிலையை அடைந்தது. இனி இவள் உருவம், இவன் குடும்பத்தினரின் கனவில்கூட காட்சி தராது. இவர்களால் பார்க்கமுடியாது.
மோட்சப் பிறவியான இந்த மகளை, தன் விந்துணுவில் உருவாக்கி, கர்ப்பத்தில் சுமந்து, சித்தர்களின் அருளைப்பெற்ற ஒரு மோட்சப் பிறவியைப் பெற்றதால், பெற்றோர்களாகிய இவனும், இவன் மனைவியும், இந்த பிறவியிலேயே மோட்சம் அடைவார்கள். இவர்களுக்கும் இதுவே கடைசிப்பிறவி. முற்பிறவி பாட்டி, தந்தை, தாய் இறந்துபோன மகள் என இந்த நான்கு ஆத்மாக்களும் பிறவியை முடித்து மோட்சம் அடைவார்கள் என்பதை புரிந்துகொள்ளட்டும்.
இறந்த மகளுக்கு எந்தவிதமான சாஸ்திர, சம்பிரதாய, சடங்கு, திதி என எதுவும் செய்யத் தேவையில்லை. துறவிகளுக்கும், ஞானி களுக்கும், ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கும் இறந்தபின்பு பூஜை, படைப்பு, திதி என சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய தேவை யில்லை. இந்த மகள் இறப்பிற்கு, அவள் பிறப்பின் நிலைதான் காரணம். வேறு எந்த காரணமுமில்லை. மகளின் இறப்பினால் உண்டான சோகத்தை மறந்து, மற்றொரு மகளை நன்கு வளர்த்து வரவும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
என் மகளின் பிறப்பின் நிலையையும், மரணத்திற்கு காரணத்தையும் அறிந்தேன். என் மனதின் சோகத்தையும், பாரத்தையும் குழப்பத்தையும் அகத்தியர் தீர்த்து வைத்தார். என் பாட்டிதான் எனக்கு மகளாகப் பிறந் தாள் என்பதை அறிந்து தெளிவுபெற்றேன் என்று கூறிவிட்டு, என்னிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்.
ஒரு மனிதனின் பிறப்பிற்கான காரணத் தையும், அவன் ஆத்மாவின் நிலையினையும், ஆயுள் காலத்தையும், வேதமுறை கணித ஜோதிடம்மூலம் அறியமுடியாது, பக்தி, பரிகார பூஜைகளால் தீர்க்க முடியாது, ஜோதிடமும் ஜோதிடர்களும், எதனையும் மாற்றமுடியாது என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.
"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்- எதுவும்
தெரியாமல் போனாலே வேதாந்தம்''
என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் என் மனதில் இதுவே உண்மை என தோன்றியது.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/agathiyar-t.jpg)