ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல். அதில் மூழ்கி முத்து எடுப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல. பிரபஞ்ச சக்தி ஒத்துழைத்தால் மட்டுமே ஒருவருக்கு ஜோதிடம் வயப்படும். பல்வேறு ரகசியங்களையும் தத்துவங்களையும் பண்புகளையும் தன்னுள் அடக்கிய ஜோதிடம் மானிடர்களுக்கு பிரபஞ்சம் வழங்கிய நற்கொடை. இதில் ஒரு சதவிகிதம் கற்று உணர்ந்தால்கூட பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக உள்ளது என்று அறியமுடியும். அதேபோல் ஜோதிடர் ஒருவருக்கு உரைக்கக்கூடிய பலன் பலிதமாக ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் பலம் பெறவேண்டும்.
அல்லது தசா புக்தியோ கோட்சாரமோ ஜாதகருக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
வருட கிரகங்களான குரு, சனி, ராகு- கேதுக்கள் ராசி கட்டத்தை ஒருமுறை வலம் வந்து அடுத்த சுற்று துவங்கும்முன்பு ஏதாவது ஒரு மாற்றம் நிச்சயம் நிகழும். அது சுய ஜாதகரீதியான தசாபுக்திக்கு ஏற்ப சுபமாகவோ- அசுபமாகவோ இருக்கும். உதாரணமாக நாம் கோட்சார குருவை எடுத்துக்கொள்ளலாம். ஒரு குழந்தை பிறக்கும்போது கோட்சாரத்தில் குரு பகவான் மேஷத்தில் உள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். வருடம் ஒரு ராசி வீதம் குருபகவான் பயணித்து மீனத்தை கடந்து மேஷத்தை அடையும் 12 வயது பூர்த்தியாகும்.
அந்த 12 வருட காலம்வரை குழந்தை களின் சுய கர்மா பெற்றோர் உடன் பிறந்தவர்களின் கர்மாவுடன் கலந்து இயங்கும். சில குழந்தைகளுக்கு தசாபுக்தி பாதிப்பு அதிகமாக இருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும். இக்காலக்கட்டத்தில் அவர்களை சுற்றியுள்ள பெரியவர்கள், உற்றார்- உறவினர்கள், ஆசிரியர்கள் என்ன போதிக்கின்றனரோ, அவர்கள் குழந்தைகள் முன்பு எப்படி நடந்து கொள்கிறார்களோ அவையே மனதில் பதிந்து பின்நாளில் எண்ணம், சொல் செயல்களைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைந்துவிடுகின்றன.
12 வயதுவரை அந்த குழந்தைக்கு சுயமாக இயங்க தெரியாது. பெற்றோர் களின் கைப்பிடியில் அதிகமாக இருப்பார்கள். தனக்கென்று சுய விருப்பு வெறுப்புகள் அப்பொழுதுதான் ஆரம்பிக்க துவங்கும். 12 வயதிற்கு மேல்தான் ஒரு குழந்தைக்கு சுய ஜாதகரீதியான இயக்கம் அதிகமாக துவங்கும். மேலும் புரியும்படி சொன் னால் இனப் பெருக்க உறுப்புகள் தன் செயலை துவங்கும் காலத்தில் சுய கர்மா அதிகமாக வேலை செய்யும். அதேபோல் இரண்டாம் சுற்று ராசி கட்டத்தை குரு வலம்வந்து முடிக்கும்போது 24 வயதாகும். இந்த காலகட்டத்தில் படித்து முடித்து தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை என வாழ்க்கை முக்கிய நிகழ்வுகள் பெரும்பான்மையோருக்கு நடந்து முடியும். 12 முதல் 24 வயதுவரை சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்த அதிக முயற்சி எடுக்கவேண்டிய காலம். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த குழந்தை விரும்பிய வெளியுலக கல்வியை கற்கும் காலம். குழந்தை தாயிடம் கற்ற ஞானத்தை கல்வி என்ற வித்தையால் வெளியுலகம் தெரிந்துகொள்ளும் காலம். 10 முதல் 20 வரை கற்கும் கல்வியே அவனுடை வாழ்வாதாரமாக அமையும். 24 முதல் 36 வரை குருவின் மூன்றாவது சுற்று.
ஆரோக்கியமான உடல், அழகான குடும்பம், போதுமென்ற மனம், வாழ்வை நடத்த தேவையான வசதி, இருக்க இடம், உடுக்க உடைகள், நல்ல உணவு, நல்ல நண்பர்கள், துரோகம் நினைக்காத உடன்பிறப்பு கள், உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாத உறவினர்கள் இவையனைத்தும் கிடைக்கப்பட்டால் மன நிறைவான- நிம்மதியான வாழ்க்கையாகும். இந்த நிலையில் அன்றாட மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு பிறரைச் சார்ந்திருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்கும். 36 முதல் 48 இது குருவின் 4-ஆவது சுற்று.மனித வாழ்க்கையின் உயர்வு என்பது பொருளாதாரத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் மன நிறைவான வாழ்க்கை வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையாமல் தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்க முடியாமல் இருப்பவர்கள் இந்த காலகட்டங்களில் மீளமுடியாத மன துயரத்தால் தன்னை சார்ந்தவர்களை துன்பப்படுத்துகிறார்கள். சிலர் தன்னைக் காப்பவர்களுக்கு உதவியாக இருந்து தனது வாழ்க்கையை நடத்துகிறார்கள். 48- 60 வயது குருவின் 5-ஆவது சுற்று. பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன்- பேத்தி யுடன் உலக இன்பங்களை அனுபவிக்கும் காலம்.
நிறைவான ஒரு வாழ்க்கையை இந்த ஐந்து நிலைகளை கடந்த பின்பே அடையமுடியும். குரு என்றால் பெரும் பணம் தங்கம். சுய ஜாதகத்தில் குருபலம் படைத்தவர்களுக்கு ஓரளவு நல்ல வாழ்வாதாரம் கிடைத்துவிடுகிறது. குருபலம் இழந்தவர்கள் வாழ முடியாமல் மீளவும் முடியாமல் இருக்கிறார்கள். சிலர் பிள்ளைகளால் இழந்த இன்பங்களை மீட்கிறார்கள். ஓரளவு நல்ல வாழ்க்கையை வயோதிகத்தில் அனுபவிக்கிறார்கள்.
இது இயல்பாக மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவமாகும். பெரும்பான்மையாக பெற்றோர்கள் உடன்பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காசு, காமம், சொத்து இவையே பிரதானமான காரணியாக உள்ளது.
இதில் முறையற்ற பாகப்பிரிவினை பல குடும்பங் களை கூறு போடுகிறது. இது 21-8-2023 அன்று பார்க்கப்பட்ட சோழிப் பிரசன்னம்.
நாள்: 21-8-2023 (ஆவணி 4)
நேரம்: பகல் 2.55
கிழமை: திங்கள்
நட்சத்திரம்: சித்திரை
திதி: வளர்பிறை பஞ்சமி
யோகம்: சுபம்
உதய லக்னம்: தனுசு
சோழி லக்னம்: கும்பம்
ஜாதகர் வந்த நேரம்
தனுசு லக்னம்
உதய லக்னாதிபதி குரு பூர்வபுண்ணிய ஸ்தானத் தில் ராகுவுடன் இணைந்திருந்தார். லக்னப்புள்ளி மாந்தியை நெருங்கிக் கொண்டிருந்தது. சோழி லக்னம் கும்பம். சோழி லக்னாதிபதி சனிபகவான் லக்னத்தில் ஆட்சி பலம் பெற்றிருந்தாலும் வக்ரகதியில் சஞ்சாரம் செய்தார். சனியின் 3-ஆம் பார்வை மூன்றாமிடத்தில் நின்ற குரு ராகுமீதும் ஏழாம் பார்வை ஏழாம் இடத்தில் நின்ற சூரியன் புதன்மீதும் பத்தாம் பார்வை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திலும் பதிந்தது. மூன்றாம் அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் நின்றார். தனது எட்டாம் பார்வையால் மூன்றாம் இடமான தன் வீட்டைத் தானே பார்த்தார். மூன்றாமிடத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்ததால் சொத்து தொடர்பாக உடன்பிறந்தவர்களுடன் மன சஞ்சலமுள்ள குடும்பம் என்று கூறப் பட்டது. மேலும் சோழி லக்னாதிபதி சனி வக்ரகதியில் இருந்ததால் பழைய சம்பவங்கள், பழைய குடும்ப பிரச்சினைகள் பற்றிய கேள்வி என்று கூறப்பட்டது. பிரசன்னம் பார்க்கவந்தவர் சுமார் பத்து வருடங்களுக்குமுன்பு எனது இளைய உடன்பிறந்த சகோதரர் 25 வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டார். மூன்று வருடங்களாக அவர் இருக்குமிடம் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். எங்கள் சகோதரர் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பியதால் குடும்பத்திற்கும் சொத்துகளுக்கு எதுவும் ஆபத்து வந்திடக்கூடாது என்பதற்காக அவரிடம் விடுதலை பத்திரம் எழுதி வாங்கினோம். அதனால் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட்டார். காதல் திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் கழித்து அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தது. நாங்கள் சென்று அழைத்தும் அவர்கள் வரவில்லை. ஆனால் அவர் குடும்பத்தைவிட்டு வெளியேறும்முன்பு விடுதலை பத்திரத்திலுள்ள கையெழுத்து நான் போடவில்லை என்று வழக்கு பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டார்.
தற்போது குடும்ப சொத்துகளை பிரிக்க முடியவில்லை. எந்த பயன்பாடும் இல்லை என்று கூறினார். இந்தப் பிரச்சினை எப்போது தீரும். அவர் குடும்பத் துடன் வந்து இணைவாரா என்று கேட்டார்கள். நாங்கள் அவருக்கு உரிய பங்கை தர தயாராக உள்ளோம் என்று கூறினார்.
சோழி லக்னாதிபதி சனி வக்ரகதியில் இருந்ததாலும் மூன்றாம் இடத்திற்கு சனி, குரு, செவ்வாய், ராகு சம்பந்தம் இருந்ததனால் அவர் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு குறைவு. பிரசன்னத்தின் நிவர்த்தி ஸ்தானமான 7-ஆமிடத்தின் அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து சோழி லக்னத்தையும் லக்னாதி பதியையும் பார்ப்பது கடுமையான தோஷம்.மேலும் வசிக்கும் வீட்டை குறிக்கும் நான்காம் அதிபதி சுக்கிரன் ஆறாம் இடத்தில் செல்வதால் குடும்பத்தாருடன் இணைந்து வாழமாட்டார். ஆனால் உங்கள் குடும்பத்தில் ஓராண்டிற்குமேல் நடக்கப் போகும் துக்க நிகழ்வில் கலந்துகொள்வார். அதன்பிறகு வழக்குகள் வாபஸ் பெறுவதற்கும் பேச்சுவார்த்தையில் முறையான பாகப்பிரிவினை நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
குரு வட்டம் என்று கூறப்படும் 12 ஆண்டுகள் முடியும் போது நிச்சயம் ஏதாவது ஒரு சுபம் மாற்றம் உண்டாகும் என்பதால் அவருக்கு குடும்ப சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு 36 வயதில் ராகுவும் கேதுவும் ஒன்றை ஒன்று கடப்பார்கள். ராகுவும் கேதுவும் ஒன்றை ஒன்றை கடக்கும் 36, 37 வயதுகளில் ராகு- கேது இழந்த ஏதாவது ஒரு இன்பத்தை மீட்டு தருவார்கள். அதிக சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு இழப்பை தருவார்கள்.
இனி வரும் வாரம் தொடர்ந்து சனி வட்டம் ராகு- கேது வட்டம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய சம்பவங்களைப் பார்க்கலாம்.