நம் பெற்றோர்களின் குணம், பொருளாதார வசதி, அவர்களின் ஒற்றுமை, உடல் ஆரோக்கியம், நாம் பிறந்து வசிக்கும் வீடு என, நாம் யாருக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறோம் என்பதிலேயே இப்பிறவியில் நம்முடைய ஜாதகத்தின் வலிமை தெரிந்துவிடும். வறுமையான குடும்பத்தில் பிறந்து, சிறுவயதுமுதல் அதிக கஷ்டங்களையே அனுபவிப்பவர்கள் பலருண்டு. சிலர் வசதியான குடும்பத்தில் பிறந்து கடைசிவரை வசதியான வாழ்க்கை வாழ்ந்தே ஜென்மத்தைப் பூர்த்திசெய்வர். சிலர் பணக்காரர்களாகப் பிறந்து, வளர வளர கஷ்டத்தை நோக்கிச்சென்று, வாழ்ந்து கெட்டவர்களாகப் போவதுண்டு. சிலர் வறுமையில் பிறந்து, வளர வளர குடும்பம் பெரிய முன்னேற்றத்தை அடையும். சிலருக்கு எந்த முன்னேற்றமுமின்றி, தாழ்வான நிலைக்கும் போகாமல் நடுத்தர வர்க்கமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கை முன்னேற்றகரமாக இருக்குமா? ஏற்ற- இறக்கத்துடன் இருக்குமா? கஷ்டத்தை நோக்கிச்செல்லுமா என்பதெல்லாம் ஒருவரது ஜாதகத்தின் நான்காமிட நிலையைப் பொருத்தே அமையும். நான்காமிடமான சுக ஸ்தானம் ஒருவருக்கு வலுத்துவிட்டால் வசதியான சொந்த வீடு, வாகனம், புகழ், செல்வச் சேர்க்கை தானா கக் கிடைத்துவிடும். ஏழையாகப் பிறந்து துன்பத்துடன் இருக்கும்போது, சுப வலுப் பெற்ற நான்காமிட அதிபதி தசை வந்தால், மாளிகை வீட்டுக்கு சொந்தகாரர், அந்த வீட்டை ஜாத கரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டில் இருப்பார்; ஜாதகர் சுகபோகத்தை அனுபவிப்பார்.
பொதுவாக சுபகிரகங்கள் எதிர்பாராத நன்மைகளையும், பாவகிரகங்கள் எதிர்பாராத தீமையையும் தரும். அதேநேரத்தில் லக்னத் திற்கு கெட்ட கிரகங்கள் கெட்டாலோ, வக்ரம் பெற்றாலோ, அஸ்தமனமானாலோ விபரீத ராஜ யோகத்தால் தன் தசையில் நன்மையைச் செய்யும். சுபகிரகங்கள் பலமிழந்தாலோ, பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலோ, பாவகிரக, பாதகாதிபதி, மாரகாதிபதி ஆறு, எட்டு, பன்னிரண்டாமதிபதி சாரம் பெற்றாலோ, தொடர்பு ஏற்பட்டாலோ நன்மைக்குப் புறம்பான தீமையையே தன் தசையில் செய்யும். நான்காமதிபதி நின்ற இடத்தைப் பொருத்து பலன்களில் மாற்றமுண்டு. தசை ஆரம்பித்ததும் சிலருக்கு நன்மை தரும்; சிலருக்கு சுயபுத்தி முடிந்ததும் நன்மை தரும் என்பதெல்லாம் தசாநாதனின் நிலையைப் பொருத்தே அமையும். தசாநாதனுக்கு புக்திநாதன் 3, 6, 8, 12-ல் மறையக்கூடாது. தசாநாதன் வலுவாக இருந்தும் தசாநாதன் நின்ற நட்சத்திரம் மறைவிட அதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதியாக இருந்தால், கிடைக்கவேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.
பொதுவாக ஒரு தசை முடியும் நேரத்தில் ஜாதகருக்கு மனமாற்றம் தெரிய ஆரம்பித்துவிடும். இருக்குமிடத்திலிருந்து காரணமே இன்றி பிடிக்காமலோ, சண்டை யிட்டோ, வெறுத்தோ, விரக்தியாலோ, பழிவாங்கப்பட்டோ வெளியேறிவிடுவோம். புதிய நட்பு, புதிய சிந்தனை தோன்றி அடுத்த தசைக்கான பலனுக்கு ஏற்றபடி செயல்படத் தொடங்குவோம். நல்ல தசையாக இல்லாமல் போய்விட்டால், இருக்கும் நிலையிலிருந்து இன்னல்களையும், நல்ல தசையானால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு சுக போகத்தையும் பெறுவர். அப்படி நான்காமதி பதி தசை சுபத்தன்மை பெற்று நடக்கத் தொடங்கினால் திடீரென்று மாளிகை வீடு, கார், புகழ், செல்வாக்கு என சுகத்தை வாரிவழங்கும். நான்காமதிபதி நின்ற இடத்தைப் பொருத்தும், நான்காமிடத்தைப் பார்த்த- சேர்ந்த கிரகத்தைப் பொருத்தும் கிரக வலிமையானது சுப, அசுப வலுப் பெறும். இனி நான்காமதிபதி நின்ற இடத்தின் பலன்களைப் பார்ப்போம்.
லக்னம்
நான்காமதிபதி லக்னத்தில் பலம்பெற்றால் வசதிமிக்க குடும்பத்தில் பிறப்பார்கள். ஆடம்பரமான வீடு, வாகன வசதி இருக்கும். ஜாதகர் வளர வளர குடும்பமும் பெரிய முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி பெறும். குடும்ப மகிழ்ச்சி, பெரிய பதவி, புகழ் கிடைக்கும். தாயார், தாயார்வழி குடும்ப உறவுகளால் நன்மை மற்றும் அனைத்துவித மான சுகத்தையும் பெறலாம். மேஷ லக்னத்தின் நான்காமதிபதி சந்திரன் லக்னத்தில் அமைவது நல்ல யோகத்தைத் தரும். ஆனாலும் அடிக்கடி ஏற்ற- இறக்கங்கள் இருந்துகொண்டே இருக்கும். ரிஷபத்திற்கு சூரியன், மிதுனத்திற்கு புதன், துலாமிற்கு சனி, தனுசுக்கு குரு லக்னத்திலிருந்து, சுப கிரகங்களின் பார்வை, சேர்க்கையின் நிலையை- சுபத் தன்மையைப் பொருத்து வசதிகளின் அளவிருக்கும். கடகம், கும்பத்திற்கு சுக்கிரன், மீனத்திற்கு புதன், மகரம், சிம்மத்திற்கு செவ்வாய், கன்னிக்கு குரு, விருச்சிகத்திற்கு சனி லக்னத்தில் இருந் தால், சுமாராகத்தான் இருக்கும். நான்காமதி பதி தசை நல்ல நிலையிலிருந்து தசை நடந்தால் பெரிய யோகமுண்டு.
இரண்டு
நான்காமதிபதி இரண்டில் இருந்தால் தாயார், வீடு, வாகனத்தால் குடும்பத்திற்கு வருமானம் தரும். நல்ல புகழ், செல்வச் சேர்க்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு லக்னத்திற்கும் நான்காமதிபதி இரண்டில் இருந்தாலும், அதன் நின்ற பலத்தைப் பொருத்தே நன்மை- தீமைகள் நடைபெறும். அன்பான தாயார், தாயாரால் நன்மை, தாய்வழி சொந்தங்களால் லாபம், வருமானம்,
குடும்பத்திற்கு ஏற்படும். சொந்த பந்தங்கள் ஒற்றுமை, தொழில்ரீதியான உதவிகள் பெறுவர்.
பாவகிரகங்களின் இணைவு, பார்வை சோதனை தரும். ஆறாமதிபதி தொடர்பானது குடும்பத்திற்கு அடிக்கடி மருத்துவச்செலவு, எதிரிகளால் தொல்லையை உண்டாகும். எட்டாமதிபதி தொடர்பானது கடன் தொந்தரவுகளையும், பன்னிரண்டாம் அதிபதி சம்பந்தம் வீணான விரயச் செலவு களையுமே தரும். குடும்ப ஸ்தானத்தில் நான்காமதிபதி அமர்ந்தால், ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமைந்தபின்பு சாதிக்கும் வேகம் அதிகரிக்கும். நிறைய உதவிகள், ஆதரவுகள் குடும்ப உறவுகளால் கிடைக்கும்.
மூன்று
நான்காமதிபதி மூன்றில் இருந்தால் ஜாதகரைவிட சகோதரர்கள் நல்ல நிலையிலிருப்பர். ஜாதகரின் சொத்துகளை உடன்பிறந்தோர் அபகரிப்பர். முறையாகக் கிடைக்கவேண்டிய சொத்துகள் கிடைக்காது. அதற்குக் காரணம் ஜாதகராகவே இருப்பார். ஜாதகர் சுயநலவாதியாக இருந்தால் இழப்பாகவே இருக்கும். ஜாதகர் உடன்பிறந்த வருக்கு நல்லது செய்யவேண்டுமென நினைத்தால் நிறைய லாபம் ஏற்படும். உடன்பிறந்தவருக்கு சொத்து தர நினைத் தால், அதைவிட மேலாக சொத்து கிடைக்கும். உடன்பிறந்தவருக்கு வீடுகட்டிக் கொடுக்க நினைத்தால் நிச்சயம் அதற்கு தேவைப்படுமளவு பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். தன்னைவிட உடன்பிறந்தவன் முன்னேறக் கூடாது என நினைத்தால், தானும் முன்னேறாமல் இருக்கும் சொத்துக்கு அடித்துக்கொள்வர். தாயார் உடல்நலம் பாதித்து அவதிப்படுவார். வருடங்கள் செல்லச் செல்ல கஷ்டங்களையே அதிகம் அனுபவிப்பார். நான்காமதிபதி மூன்றில் பலமிழந்தாலோ பாதிக்கப்பட்டாலோ அதன் தசையில் நன்மை நடக்கும்.
நான்கு
நான்காமதிபதி நான்கில் ஆட்சிபெறுவது அதிக நன்மையைத் தரும். வீடு, வாகனங்கள், சொத்துச் சேர்க்கை, பணம், பதவி, புகழ், அந்தஸ்து, பணியாட்கள், சொந்தபந்தம் என அனைத்துவித சுகமும் பெற்று வளமுடன் வாழ்வர். யாருக்கு நான்காமதிபதி வலுத்து நல்லமுறையில் இருந்து பலம்பெறுகிறதோ,
அவர்களின் இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மேஷ லக்னத்திற்கு நான்கில் சந்திரன் ஆட்சிபெறுவது அதிக சந்தோஷங் களைத் தரும். ஆனால் தாயாரை பாதிக்கும். ரிஷபத்திற்கு சூரியன் ஆட்சிபெறுவது கர்ப்பப்பை பிரச்சினைகளைத் தரும். மிதுனத்திற்கு புதன் நற்பலனையும், கடகத்திற்கு சுக்கிரன் சுகபோகங்களையும் கொடுத்தாலும், ஏதாவதொரு பெருங்குறையையும் தருவார். சிம்மத்திற்கு செவ்வாய் ஆட்சிபெறுவது உறவினர் தொல்லையைத் தரும். கன்னிக்கு குரு ஆட்சிபெறுதல் கடும் கஷ்டத்தையே தரும். துலாமிற்கு சனி அதிர்ஷ்ட யோகத்தை வாரிவழங்குவார். விருச்சிகச் சனி ஆட்சிபெறுதல் சுமாரான பலனையும், தனுசுக்கு குரு ஆட்சியானது பெருத்த யோகத்தையும் தரும். மகரத்திற்கு செவ்வாய் ஆட்சி தொல்லையே. கும்பத்திற்கு சுக்கிரன் ஆட்சி தாய்- தந்தையருக்கு ஆகாது. ஆனால் சுகபோகத்தைத் தருவார். மீனத் திற்கு புதன் தன் தசையில் நன்மை செய்ய இயலாதவராகிறார். நான்காமதிபதி பலம்பெறுவது பொதுவாக நல்ல சுகத்தையே தரும்.
ஐந்து
நான்காமதிபதி ஐந்தில் பலம்பெறுவது பூர்வபுண்ணிய பலத்தைத் தரும். முன்னோர் கள் ஆசிர்வாதம், பூர்வீக இடத்தில் வசிக்கும் யோகம், பரம்பரை சொத்துகளால் யோகம், குலதெய்வத்தால் நன்மை போன்றவை நடக்கும். குழந்தைகள் நன்கு படித்து முன்னேறி பெரும் புகழடைவர். பரம்பரை மானத்தைக் காப்பாற்றுவர். புத்திரர்களால் நல்ல வாழ்க்கை, குழந்தைகள் பிறந்தபின்பே பெரிய வளர்ச்சி அடைவர். பிள்ளைகளால் நிம்மதி, சந்தோஷம் பெறுவர். சொகுசான வீடு, வாகன வசதிபெற்று நான்குபேர் மதித்துப் போற்றும் நிலைக்கு வருவர். எதிலும் லாபம் பெறுவர். உலகமக்கள் சேவை, மக்களுக்கான சிறந்த கண்டுபிடிப்பு, மக்கள் விரும்பும் தலைவராகப் புகழ்பெறும் அதிர்ஷ்டம் ஏற்படும். மங்காத செல்வம், புகழ், கீர்த்தி உண்டு. மேஷ லக்னத்திற்கு பெண்குழந்தை பாக்கியத்தையும், ரிஷப லக்னத்திற்கு தாமத குழந்தைப் பிறப்பு, புத்திர தோஷத்தையும் ஏற்படுத்தும். மிதுனத்திற்கு அறிவால் யோகத்தைத் தரும். அறிவான குழந்தைகள் பிறக்கும். கடகத்திற்கு பெண் குழந்தைகளால் யோகமுண்டு. சிம்மத்திற்கு புத்திர தோஷத்தைத் தரும். கன்னிக்கு நீசகுரு நன்மை தருவார். துலாமிற்கு அதியோகப் பலன் தருவார். விருச்சிகத்தார் பெண் தெய்வத்தால் யோகம் பெறுவர். தனுசிற்கு அரசாங்க நன்மை கிட்டும். மகரத்திற்கு பெண்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக பலத்தால் அதிஷ்டம் கிட்டும். மீனத்திற்கு துன்பம் தந்து பின் நன்மை செய்வார்.
ஆறு
நான்காமதிபதி ஆறில் இருப்பது எப்போதும் அதிக தொல்லைகளைத் தரும். நிம்மதியற்ற வாழ்க்கையைத் தரும். சொந்தவீடு உள்ளவர்களுக்கு நோய், எதிரியால் கடன் ஏற்பட்டு, விற்கவேண்டிய சூழல் ஏற்படும். தாயாரால் அவப்பெயர், தாயாருக்கு கண்டம், தாயார்வழி சொந்தங்களால் தொல்லை, இழப்பு என அதிக துன்பங்களை அனுபவிக்க நேரும். பூர்வீக சொத்துகள் இழப்பு, பூர்வீக வீடு கைவிட்டுப் போதல், உடன் இருப்பவர்களாலோ, உடன்பிறந்த வர்களாலோ நஷ்டத்தை அனுபவிப்பர். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுதல் போன்ற மோசமான பலன்களைத் தருவார். சுபகிரகப் பார்வை, சேர்க்கையானது அதிமோசமான பலன்களைக் குறைத்து ஓரளவு நன்மை தரும். லக்னத்திற்கு கெட்ட கிரகம், பாவ கிரகம், பாவியாக இருந்து ஆறில் மறைந்தால் விபரீத ராஜயோகப் பலனைத் தந்துவிடுவார். நான்குக்குரியவன் ஆறில் நின்று ஆறாமதிபதி தசை நடக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். விபரீதமாக சில நன்மைகள் செய்தாலும், திடீரென்று சிலருக்கு மாரகத்தையும் செய்துவிடுவார். பணமின்றிக் கஷ்டப்படும் ஏழைகள் நோய், எதிரியின்றி இருப்பர். காரணமில்லாமல், காரணம் தெரியாமல் நோயின்றி, நோய் என்னவென்று தெரியாமல் மருந்து சாப்பிடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
ஏழு
நான்காமதிபதி களத்திர ஸ்தானமான ஏழில் நின்றால் திருமணத்திற்குப் பின்பு அதியோகப் பலன்கள் ஏற்படும். வீடு, வாகனம், மகிழ்ச்சி மனைவியால் கிடைக்கும். தாய்வழி உறவுகளில் திருமணம் நடைபெறும். மனைவிவழி உறவுகளால் நன்மைகள் உண்டு. பெண்டாட்டிதாசனாக வாழ்வார். மனைவிமேல் மரியாதை, பாசம், காதல் அதிகம் கொண்டவர். துணைவருக்கு இடம், வீடு, வாகனம் வாங்கித்தருவார். பொருளாதார வசதி யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வார். யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் புத்தி சாதுர்யம் அறிந்தவர். நல்ல மனிதரென பாராட்டப்படுவார். அசுப கிரகப் பார்வை, சேர்க்கை, நான்காமதிபதி பலமின்றி இருந்தால், தாயும் தாரமும் அடித்துக்கொள்வர். மாமியார்- மருமகள் சண்டையிட்டுக்கொண்டே இருப்பர். தாய், மனைவி இருவரும் நன்றியில்லாமல் நடப்பர். இருவருக்கும் பஞ்சாயத்து செய்யவே நேரம் போதாது. கூட்டாளிகளால் நஷ்டம் ஏற்படும். வீடு, வாகனத்தை அடிக்கடி மாற்றவேண்டிய நிலை இருக்கும். லாபமும் நஷ்டமும் உடனே வந்துபோகும். எந்தவொரு செயலும் இழுபறியாக நீண்டுகொண்டே போகும். சுபகிரகப் பார்வை இருந்தால் எல்லாம் சாத்தியம். நினைத்த காரியங்கள் நிறை வேறும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 96003 53748