"என்னப்பா... நீ உப்பு போட்டுதான் சாப்பிடுறியா?' என சிலர் கேட்பதைப் பார்த் திருப்போம். சிலர், அவர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம் நாம் செய்வது போல திரித்துப்பேசுவார்கள். மற்றவர்களை யும் அப்படியே நம்பவைக்க முயற்சிசெய் வார்கள். "அதுசரி; இவர்கள் எல்லாம் உப்பு போட்டுதான் சாப்பிடுகிறார்களா' என்று நமக்குக் கேட்கத்தோன்றும்.
உணவில் ஒருநாள் உப்புபோட மறந்து விட்டால், சிலர் வீடுகளில் தட்டுகள் பறக்கும்.
அன்றையபொழுது வீடே அலங்கோலமாக இருக்கும்.
"தம்மாத்துண்டு சோறு- அதில தம்மாத் துண்டு உப்பு. அதுக்குன்னு இப்படியா?' என்று கேட்காதீர்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று அன்று சொன்னவர்கள், இன்று உப்பில்லா பண்டமானாலும் அவை தொப்பையிலே என்பதுபோல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
"இது என்னங்க உப்புபெறாத விஷயம். இதுக்குக் போய்...' என நீங்கள் அந்த டிவி பேட்டியைப் பார்த்துவிட்டு சிரிக்கிறீர்கள்; புரிகிறது. அந்த உப்பைப் பற்றிதான் இந்த வாரம் சொல்லவருகிறேன்.
இந்த "உப்புன்னா என்னங்க?' என்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? நாம் சாப்பிடும் உப்பு சோடியம் குளோரைடு என்று வேதியல் ஃபார்முலாவை உங்களுக்கு சொல்லப் போவதில்லை.
விவரமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். உப்பென்றால் "அன்பு' என்றுதான் பொருள்.
உப்புக்கும் அன்புக்கும் என்ன தொடர்பென்று யோசிக்காதீர்கள்.
"ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.'
என்ற திருக்குறளை ஒருமுறை படித்துப் பொருள்தெரிந்து பாருங்கள். உங்களுக்கும் புரியும்.
இதை வைத்துதான் உப்பு (அன்பு) இல்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லி வைத்தது. இதன்பொருள், அன்பில்லாமல் உள்ள உணவுப்பண்டம் பரிமாறப்படுமானால் அவற்றைக் குப்பையில் போடவேண்டும் என்பதுதான் கருத்து. நம் மக்கள் வழக்கம் போல அதை "உப்பு'க்கு என எடுத்துக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
பொதுவாக காலில் வீக்கம் வந்தால் "உப்பி இருக்கு' என்பார்கள். அதாவது அன்பு பெருகிப் பொங்குவதுபோல வீங்கியிருக்கிறது என்பது பொருள்.
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டு மென்றால், சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவுக்கு உப்பு அவசியமே இல்லை. ஆனால் நாம் தெரிந்தோ தெரியாமலோ இப்படி சாப்பிட்டுப் பழக்கப்பட்டுவிட்டோம் என்பதுதான் உண்மை.
நீங்கள் Free Flow உப்பு பயன்படுத்துபவர் என்றால், அது உப்பே இல்லை. இதுபற்றி இன்னொரு சிந்தனையில் வாய்ப்பு கிடைக்கும்போது சிந்திப்போம். இப்போது தொடங்கிய சிந்தனைக்கு வரலாம்.
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற பழமொழியை நாம் அறிந்திருப்போம். இங்கே அன்பைவைத்து சிந்திக்க வேண்டும். அன்புள்ளவர் களை உயிர் உள்ளளவும் நினைக்கவேண்டும் என்பதுதான் பொருள்.
"உப்பு போட்டு சோறு போட்டவரை' என்று தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறீர் கள்.
உப்பு வைத்த பானை நீர் கசியும். அதுபோலதான் அன்பிருந்தால் அது கண்ணீரால் வெளிப்படும். இதனைதான் வள்ளுவரும், "புன்கணீர் பூசல் தரும்' என்று சொன்னார்.
நமது தமிழர் கலாச்சாரத்திலும் பாருங்கள்... புதிய வீடுகட்டி கிரகப் பிரவேசம் போகும்போது, உப்பைதான் முதலில் எடுத்துவைப்பார்கள்- அன்பு கசியவேண்டும் என்பதற்காக...
தமிழர் சாப்பாட்டில் இலையில் முதலில் உப்பைதான் வைப்பார்கள்-
அன்புடன் விருந்து படைக்கிறோம் என்பதை குறிப்பால் சொல்வதற்காக. ஆக, உப்பு என்றால் சாப்பிடுகிற உப்பல்ல. அது "அன்பு' என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இதைவைத்து சோதிட சிந்தனை சொல்லிவிடலாமே என்றுதான் சிந்தனைக்கு வந்தது உப்பு. இல்லையில்லை... அன்பு.
அன்புள்ளவர்கள் நமக்கு வாழ்க்கைத் துணையாக வந்துவிட்டால், அப்புறமென்ன- மற்றது தானே வருமல்லவா? இந்தக் குறிப்பு சரியாக உள்ளதா சொல்லுங்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனும் புதனும் சேர்ந்தோ, பலமாகவோ, கோணாதி பதியாகவோ இருந்துவிட்டால், அவ்வளவு தான்; அன்புமழை ஆனந்தமாகப் பொழியும். அன்பில் சிறந்தவர்கள் இவர்கள்தான் என்று அடையாளம் காட்டிவிடலாம். திருக்குறளில் அன்புடைமை அதிகாரமே இவர்கள்தான் என்று சொல்லும்படி இருப்பார்கள்.
இயல்பான நிலையில் சொல்லவேண்டும் என்றால், மூக்கிற்குக் கீழே இவர்களுக்கு வியர்வை இருக்கும் அல்லது ஈரக் கசிவிருக்கும். இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் என்பதை அவரவர் ஜாதகத்தைக் கொண்டு அல்லது அனுபவத்தைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
"அது சரிங்க அய்யா, தசை, புக்தி என்று மாறிக்கிட்டே வருமே... அப்போது இந்த அன்பும் மாறிவிடாதா?' என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. உண்மைதான். அன்பு என்பது உணர்வு. அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வராமலிருக்க, இங்கேதான் கேது தொடர்பைப் பார்க்கவேண்டும். இதுவும் சேர்ந்துவிட்டால், பிறவி குணத்தை மாற்றமுடியாதென்று சொல்வதுபோல அமைந்துவிடும்.
"அன்பகத்து இல்லாத உயிர் வாழ்க்கை' என்று திருக்குறள் சொல்லியிருப்பதுபோல அமைந்துவிடாமல் இருக்கவேண்டும், இந்த குறிப்புகளைத் திருமணப் பொருத்தத்தில் மட்டுமல்ல; காதல் பொருத்தத்திலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அன்பு உதட்டிலிருந்து வழியக்கூடாது. உள்ளத்திலிருந்து பொங்கவேண்டும். அதனால்தான் "உப்பு' என்றால் "அன்பு' என்று பொருள் என, உலகப் புகழ்பெற்ற வின்ஸ்லோ அகராதியும் சொல்லும். உப்பு கசியும் என்பதுபோல அன்பும் கசியவேண்டும்.
நல்லதே நினைப் போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172