bala jothidam

பூசம்

27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி சனியாகும். இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை குரு. இதன் உருவம் புடலம் பூ எனவும் அம்பு எனவும் மூல நூல்களில் கொடுக் கப்பட்டிருக்கிறது இந்த நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குரு என்பதால் வியாதிகளுக்கு மருந்து உண்ண சிறந்த நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரம் நாளில் பெருமாளை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும்.

Advertisment

ஆலய திருப்பணிகள் தொடங்கவும் ஆலயங்களில் விக்ரக பிரதிஷ்டை, அஷ்ட பந்தனம், கும்பாபிஷேகம் போன்ற தெய்வ காரியங் களை செய்வதற்கு உகந்த நட்சத்திரமாகும். சித்த மருத்துவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் மூலிகை பறித்தால் அந்த மூலிகைகளில் விசேஷ சக்தி நிரம்பி இருக்கும். இந்த நாளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் பொதுஜன வசியம் ஏற்படும். மாந்திரீக தகடுகள் எழுதுபவர்கள் பூசம் உதிக்கும் நாளில் எழுதினால் அந்த தகடுகளில் ஜீவ ஓட்டம் எளிதில் ஏற்படும். இதன் உருவம் புடலம் பூ என்பதால் கொடி வகைகள், மலர்க்கொடி மற்றும் செடி வகைகளை நடுவதற்கு உரிய நட்சத்திரம் ஆகும். ஆன்மிக குருக்களை முதன் முதலாக சந்திக்கச் செல்லும்போது பூசம் நட்சத்திரம் நாளில் செல்லலாம். வேறு சாஸ்திர பயிற்சியை துவங்கலாம். வாஸ்து சாந்தி பரிகாரம் செய்வதற்கும் வித்யாரம்பம் செய்வதற்கும் பூசம் ஏற்ற நட்சத்திரமாகும் பூசம் நட்சத்திரத்தில் ஜென்ம நட்சத்திர நாளில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவையறிந்து உதவ வாழ்வியல் மாற்றம் ஏற்படும்.

ஆயில்யம்

27 நட்சத்திரங்களில் ஆயில்யம் ஒன்பதாவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் நீசம் அடையும் கிரகம் செவ்வாய். இதன் உருவம் அம்மி பாம்பு என்றும் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் தோற்றம் பாம்பு போல் காணப் படுவதால் சர்ப்ப நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. இதில் நீசமடையும் கிரகம் செவ்வாய் என்பதால் எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அவர்களை வீழ்த்த ஏற்ற நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். சத்ரு உபாதை கடன் தொல்லைகளால் துன்பப்படுபவர்கள் தொடர்ந்து ஆறு மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும்நாளில் இராமேஸ்வரம் சென்று சேது சமுத்திரத்தில் நீராடி இராமேஸ்வரரை வழிபட சத்ரு பாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கொலை பாவம் செய்தவர்கள் இந்த நட்சத்திரநாளில் சேது சமுத்திரத்தில் நீராடி இராமேஸ்வரரை மனதாரப் பிராத்தித்தால் பிரம்ம ஹத்தி தோஷம் போன்ற கொடூரமான பாவத்திலிருந்து மீளமுடியும். நவகிரக சாந்தி செய்ய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரநாளில் இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டினம் சென்று கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகங்களை வழிபட நவகிரங்களால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும்.

Advertisment

திருமணத் தடையை சந்திக்கும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று நவகிரக சாந்தி செய்தால் திருமணத்தடை அகலும். ஜாதகத்தில் நாக தோஷம், சர்ப தோஷம் உள்ளவர்கள் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று வரலாம். சந்திரனுடைய வீட்டில் அமர்ந்த நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இந்த நட்சத்திரநாளில் துர்க்கையை வழிபட மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கல்வியைக் குறிக்கும் கிரகம் புதன். கல்வியில் தடையை ஏற்படுத்தும் கிரகம் செவ்வாய். ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் நீசம் அடைவதால் கல்வியில் தடை ஏற்பட்டு மீண்டும் கல்வியை தொடர விரும்புபவர்கள் இந்த நட்சத்திரநாளில் துவங்கலாம். இந்த நட்சத்திரத்தின் தோற்றம் சர்ப்பம். இதில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் இரண்டு சர்ப்பங்கள் பிணைந்த சர்ப்ப சிலைகளை வழிபட பெயர், புகழுடன் வாழலாம்.

மகம்

27 நட்சத்திரங்களில் மகம் 10-ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி கேது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சுக்கிரன். இது கேதுவின் நட்சத்திரம் என்பதாலும் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஐந்தாம் இடமான சிம்மத்தில் ஞான காரகனான கேதுவின் நட்சத்திரம் அமைந்துள்ளதால் கேதுவின் காரகத்துவம் சம்பந்தமான மந்திரப் பிரயோகம், வாஸ்து சாந்தி, நவகிரக சாந்தி, விக்ரக பிரதிஷ்டை, மந்திர உபதேசம், தீட்சை குரு உபதேசம் பெறுவதற்கு உகந்த நட்சத்திரமாகும்.

இதன் உருவம் பல்லக்கு என்பதால் வாகனம் ஏற உகந்த நட்சத்திரமாகும். காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஐந்தாம் வீடு சிம்மம் ஆகும். இது புத்திர ஸ்தானம் எனப்படும். மகம் நட்சத்திரம் சிம்மத்தில்

அமைந்துள்ளது .மகம் கேதுவின் நட்சத்திரம் என்பதாலும் காலபுருஷ லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் அமைந்துள்ள நட்சத்திரம் என்பதாலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகம் நட்சத்திரத்தன்று விரதமிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்று விநாயகரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தின் வசிப்பிடம் நெற்கதிர் என்பதால் நெல் விதைக்கவும், கதிரருக்கவும் தானியங்களை வாங்கவும் உகந்த நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு சமுத்திர நட்சத்திரம், வாய்க்கால் என்ற பெயர்களும் உண்டு. எனவே கிணறு வெட்ட வாய்க்கால் தோண்ட சிறப்பான நட்சத்திரம் ஆகும். கயிறு நூல் இவற்றைக் குறிக்கும் கிரகம் கேது என்பதால் மகம் நட்சத்திரத்தில் அரைஞாண் கட்டுதல், பூணூல் அணிந்துகொள்ளுதல், விவாகம் நடத்துதல் முதலியவற்றை செய்யலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் சிவ வழிபாடு செய்துவர, பிரகாசமான வாழ்க்கை அமையும்.

பூரம்

27 நட்சத்திரங்களில் பூரம் 11-ஆவது நட்சத்திரம் ஆகும். இதன் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்துள்ளது. இதன் உருவம் கட்டில் கால்போலவும் சதுரம் போன்றும் தோற்றமளிக்கிறது. அதி தேவதை துர்க்கை ஆகும். ஆய்ஹய்க் நட்சத்திரத்தின் வசிப்பிடம் வீடு ஆகும். இதன் உருவம் கட்டில் கால் என்பதால் ஆடம்பரப் பொருட்களைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன் என்பதாலும் வீட்டிற்கு தேவையான கட்டில், மேஜை, சோபா நாற்காலி போன்ற சொகுசு பொருட்களை வாங்க, வீடு கட்ட, வீடு வாங்க, கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாள் தான் விரும்பிய பெருமாளை காதல் திருமணம் செய்து கொண்டாள். இந்த நட்சத்திரம் வரும்நாளில் பெருமாளை வழிபட, காதல் வெற்றிபெறும். விரும்பியவரை வாழ்க்கைத் துணையாக அடையலாம். ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று பெருமாளை வணங்கினால் நல்ல மணவாளன் அமைவான். இந்த நட்சத்திரம் காலபுருஷ 5-ஆம் வீடான சிம்ம ராசியில் இருப்பதால் குழந்தை பேறு இல்லாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் மங்களப் பொருட்கள் தானம் வழங்க காரிய சித்தி உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனைசெய்து வழிபட, பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.

உத்திரம்

உத்திரம் 12-ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4-ஆம் பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்துள்ளது. இதன் அதிபதி சூரியன் ஆகும். இது வானத்தில் தொட்டில்போலவும், ஊஞ்சல்போலவும், நீண்ட கோல்போலவும் காணப்படும். சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் வியாபித்து இருப்பதால் உத்திரம் ஒரு உடைந்த நட்சத்திரம் ஆகும். சூரியனின் சுயவீடான சிம்மத்தில் இருப்பதால் இது சிறப்பான நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் நீர்நிலைகள் ஆகும். இந்த நட்சத்திரத்தில் வீட்டிற்கு தேவையான கட்டில், மேஜை, நாற்காலி போன்ற சொகுசு பொருட்கள் வாங்கலாம்.

இது சாந்தி முகூர்த்தத்திற்கு உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் விரதமிருந்து மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு நீங்கும். வீட்டு விலங்கான நாய் வளர்க்க விரும்புபவர்கள் இந்த நட்சத்திரநாளில் நாய் வாங்கலாம். இந்த நட்சத்திரநாளில் ஆயுதம் பயிலலாம். காது குத்தலாம். இதன் வசிப்பிடம் நீர்நிலை என்பதால் கிணறு குளம் வெட்ட உகந்த நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து லக்னத்திற்கு கேந்திரத்தில் இருந்தால் ஜாதகம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான். இதனை புத ஆதித்ய யோகம் எனலாம். ராசி சக்கரத்தில் சூரியனுடைய வீடான சிம்மத்தையும் புதனுடைய வீடான கன்னியையும் இணைக்கும் நட்சத்திரம் என்பதால் சுய ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் இல்லாதவர்கள் உத்திர நட்சத்திரம் வரும்நாளில் சங்கரன்கோவில் சென்று சங்கரநாராயணரை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வித்யாரம்பம் சேர்வதற்கும் உகந்த நட்சத்திரமாகும்.

சூரியனின் அதி தேவதை சிவன். புதனின் அதி தேவதை விஷ்ணு.

ஜென்ம நட்சத்திரநாளில் சிவனும் விஷ்ணுவும் இணைந்த அம்சம் சங்கர நாராயணர் என்பதால் சங்கர நாராயணர் வழிபாடு புத ஆதித்ய யோகத்தை வலுப்படுத்தும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

ஜென்ம நட்சத்திரநாளில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், பேனா வழங்கவும், கல்வி உதவித்தொகை வழங்குவதன்மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.

தொடரும்....

செல்: 98652 20406