(30) அந்த வீரசபதம்
காஜ்பூர் என்பது டெல்லியையொட்டி அமைந்த விவசாயிகளின் போராட்டக் களங்களில் ஒன்று. டெல்லியிலிருந்து மெட்ரோ ரயில் மூலம் போராட்டக் களத்திற்கு சென்றுவிட முடியும். பனி மிகுந்த ஒருநாளில் காஜ்பூர் பயணமாகிறேன். நான் உடனடியாக பயணத் தைத் தொடங்கியதற்கு ஒரு காரணமும் இருந்தது.
முதல்நாள் பத்திரிகையில் ஒரு செய்தி. போராட்டக் களத்தில் தலைமை தாங்கி செயல்பட்ட விவசாய சங்க தலைவர்களின் மீது தேசத்துரோக வழக்கு. அவர்களை கைது செய்யச் சென்ற டெல்லி போலீசாரை கைதுசெய்ய விடாமல் தடுத்தனர். தடுத்த விவசாயிகளை, பா.ஜ.க.வைச் சார்ந்த எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு கும்பல் தாக்கி, அவர்களின் டெண்டுகளுக்கு சேதம் விளைவித்துவிட்டார்கள். இதனால் பதட்டம் ஏற்பட்டு கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தேன்.
அந்த தருணத்தில்தான் அந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பார்த்தவுடன் நான் துடித்துப் போனேன். அவர் இந்தியில் பேசியிருந்தார். அதை டெல்லி நண்பர்களிடம் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
"நாங்கள் விவசாயிகள், இந்த மண்ணின் மைந்தர்கள். நாங்கள் இந்த மண்ணில் உயிரை இழப்போமேயன்றி இந்த மண்ணைவிட்டு வெளியேறமாட்டோம்... இது உறுதி'’ என்று அவர் பேசியதை மொழிபெயர்த்துச் சொன்னார்கள். பேசும்போது அவரது கண்கள் சிவந்திருந்தன. அவருடைய உறுதிப்பாடு கண்ணீர்த் துளிகளாக கண்ணில் நிரம்பி வழிந்து நின்றது. இவையெல்லாம் என்னை கலங்க வைத்துவிட்டது. நான் உணர்ச்சிவயப்பட்டேன். ஒரு போராட்டக்காரரை இவ்வாறு அவமானப்படுத்துவதா என்று. நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு அந்த கணமே என்னிடம் தோன்றிவிட்டது.
அவரைப் பற்றிய விபரங்களைத் திரட்டுகிறேன். ராகேஷ் திகாயத், மகேந்திரசிங் திகாயத்தின் மகன். டெல்லி காவல்துறை பணியில் சேர்ந்து, அந்தப் பணியில் விருப்பம் இல்லை என்று வெளியேறியவர். அவரது தந்தை மகேந்திரசிங் திகாயத் பற்றி மிகவும் நன்றாக அறிவேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் "பாரதீய கிசான் சபா' என்னும் அமைப்பை உருவாக்கியவர். 75 ஆண்டுகள்வரை உயிர் வாழ்ந்த அவர், இந்திய விவசாயிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமமும் இவரை நன்றாக அறியும்.
இந்திய சமூகம் அடிப்படையில், ஒரு சாதி சமூகமாகத்தான் செயல்படுகிறது. மகேந்திரசிங் திகாயத், ஜாட் சமூகத்தைச் சார்ந்தவர். மேற்கு உத்தரப்பிரதேசம் அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஆகிய மாநிலங்களில் ஜாட் சமூகம் குறிப்பிடத்தக்க எண் ணிக்கையில் வாழ்கிறார்கள். இதில் மற்றொரு தகவல் என்னவென்றால் பாகிஸ்தான் மாகாணத்தில் பஞ்சாப், சிந்து மாகாணங்களிலும் இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்பதாகும். இதில் திகாயத் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள மனம் பெரிதும் விரும்புகிறது.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் முசாப்பர் மாவட்டம் கிசிலி என்னும் பகுதியைச் சுற்றிய 80 கிராமங்களில் ஜாட் இன மக்கள் வாழுகிறார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, இவர்கள் ஒரு இனக்குழு சமூகமாக வாழ்ந்து வருவதாக வரலாறு கூறுகிறது. இவர்களில் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களுக்கு திகாயத் என்று பட்டம் தரப்படுவதாக அறிகிறேன். இதனால் மகேந்திரசிங் திகாயத்தின் மகன் ராகேஷ், திகாயத் சமூகத்தின் தலைமைத்துவமாக அறியப்பட்டு, போராட்டக்களத்தில் முன்னணியில் இருக்கிறார்.
ராகேஷ் திகாயத் வீரசபதம் எடுத்த வீடியோ காட்டுத் தீயைவிட வேகமாக பரவியது. விவசாயம் சார்ந்த இந்திய வாழ்க்கையில் ஒவ்வொரு இடங்களில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சாதிகள் கிராமப்புற ஆதிக்கத்தை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்ற போதிலும், கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் இவர்கள் முன்னணிக்கு வந்துவிடு கிறார்கள். பல நேரங்களில் தாங்கள் கொண்டிருக்கும் பழமைவாதங்களி லிருந்து விடுபட இவ்வாறான போராட்ட அனுபவங்கள் மிகச்சிறந்த வாய்ப்பை தந்துவிடுகிறது. ஜாட் இன மக்களிடமும் இவ்வாறான ஒரு மாற்றம் இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அரியானாவில் பி.ஜே.பி.யை ஆட்சியில் அமர்த்திய ஜாட் இன மக்கள் இன்று விவசாயிகளின் போராட்டத்தில் களம் இறங்கி, முன்னணியில் இருக்கிறார்கள். பி.ஜே.பி.யின் முதல்வர் மனோகர்லால் கட்டாரி விவசாயிகளுக்கு எதிராக எதையும் பேச முடியாதவராகிவிட்டார். அவரை விவசாயிகள் வீட்டுச் சிறைக்குள் வைத்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
இந்தச் சூழலில் திகாயத் சபதம் ஏற்கும் வீடியோ, ஜாட் மக்களின் ஒதுக்குப்புற கிராமங்களைக் கூட சென்றடைந்துவிட்டது. ரௌடிகள் தங்களையும் தங்கள் தலைவரையும் தாக்க முயற்சிப்பதா என்ற கோபக்கனல் அந்த மக்களிடம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். உத்தரப் பிரதேச காவல்துறையால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அமித்ஷாவின் உளவுத்துறை விழி பிதுங்கி நின்றது. பஞ்சாப் விவ சாயிகளிடம் நடந்ததுதான், மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகளிடமும் நடந்தது.
இரவோடு இரவாக புற்றீசல் களைப்போல டிராக்டர்கள் காஜ்பூரை நோக்கிப் புறப்பட்டன. உத்தரப்பிரதேச அரசு அவசரம் அவசரமாக தடை களை எழுப்பிப் பார்த்தது. அவை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்த டிராக்டர்கள், காஜ்பூர் எல்லை வந்து சேர்ந்தன. இன்று போராட்டக் களம் அசைக்க முடியாத இரும்பு கோட்டை யாக மாறிவிட்டது.
ஒரு மாபெரும் அரசியல் உண்மையை போராட்டக் களம் இப்பொழுது நிரூபித்துவிட்டது. இன்றைய காலங்களில் போராட் டங்களை மக்களும் அலட்சியமாகப் பார்க்கிறார்கள். ஊக்கம் கொண்டு போராடுவதில் போராட்டக்காரர்களும் அலட்சியம் காட்டுகிறார்கள். இதை மாற்றி அமைத்துள்ளது டெல்லி போராட்டம். மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கி வருகிறது இந்த போராட்டம்.
போராட்டக் களத்தை கூர்ந்து கவனிக்கும் வேளையில், ஒரு ஆட்சி மாற்றம் நிகழப் போவதற்கான அறிகுறிகள் அங்குள்ளதை நான் உணர்ந்துகொண்டேன். நாடு தழுவிய அளவில் இந்த அடையாளத்திற்கான ஆதாரங்கள் இருப்பதையும் ஊடகங்கள் எழுதுகின்றன. இதற்கிடையில் டெல்லியில் வெளிவரும் ல்ழ்ண்ய்ற் பத்திரிக்கையின் அந்த ஆய்வுக் கட்டுரையையும் வாசித்தேன். அது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சேகர் குப்தா என்ற புகழ் மிக்க பத்திரிகையாளர், அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மொத்தம் 11 மாவட்டங்கள் இருக்கின்றன. இதன் வெற்றியை ஜாட் வாக்காளர்கள் மட்டுமே நிர்ணயித்து வந்தார்கள். சென்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் பி.ஜே.பி.க்கு வாக்களித்து வெற்றியைத் தேடித் தந்தார்கள். இப்பொழுது, இவர்களிடம் இந்தப் போராட்டம் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கி ஒன்றிய அரசு கார்ப்பரேட்களின் கைக்கூலிகள் என்பதை புரிய வைத்துவிட்டது.
அந்த ஆய்வுக் கட்டுரை மேலும் சில விபரங்களை கூறுகிறது. அரியானாவில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள். இதில் 47 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை ஜாட் இன மக்கள்தான் முடிவு செய்கிறார்கள். அரியானாவில் ஜாட் மக்களும் சீக்கியர்களும் இணைந்தால் அது பெரும் வாக்கு வங்கியாக மாறிவிடும் என்கிறது ஆய்வு. இப்பொழுது நடைபெறும் போராட்டம் இந்த இரண்டு சமூகங் களுக்கிடையே ஆழமான ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. இதைப்போலவே ராஜஸ்தானிலும் பல தொகுதிகளில் ஜாட் மக்களின் வாக்குகள் நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்று கட்டுரை குறிப்பிடுகிறது.
வாக்குகளை மட்டும் ஆய்வு செய்திருந்த அந்தக் கட்டுரை, வித்தியாசமான வேறொரு தகவலையும் வெளியிட்டிருந்தது. அது எனக்கு ரொம்பவும் புதிதாக இருந்தது. ஜாட் இன மக்களில் 55 சதவிகிதம் இந்து மதத்தில் இருப்பதாகவும் 35 சதவிகிதம் மூஸ்லீம் மதத்தில் இருப்பதாகவும், 20 சதவிகிதம் சீக்கிய மதத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த பகுப்பாய்வில் இந்த மூன்று மதம் சார்ந்த ஜாட் இன மக்களும் பி.ஜே.பி.யை எதிர்ப்பதாக கட்டுரை கூறுகிறது.
காஜ்பூரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் டிராக்டர்கள் படையெடுத்து வந்ததைப்போல இளைஞர்களும் வரத் தொடங்கினர். இவர்கள், களத்தில் முன்னர் தங்கியிருந்த இளைஞர்களுடன் இணைந்து பல புதிய பணிகளைச் செய்தனர்.
(புரட்சிப் பயணம் தொடரும்)