Skip to main content

விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஆசை! சங்கத்தமிழன் - விமர்சனம்

Published on 19/11/2019 | Edited on 21/11/2019

நம் மனதிற்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர் என்ன செய்தாலும் பிடிக்கும். தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமீபத்தில் அப்படியாகிவிட்டார் விஜய் சேதுபதி. அந்த அன்பையும் அபிமானத்தையும் எந்த அளவு நம்பலாம், பயன்படுத்தலாம்? விஜய் சேதுபதிக்கு உருவாகி, பெருகி வரும் மாஸ், ரசிகர் கூட்டத்தை முழுமையாக நம்பி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர். எப்படி இருக்கிறது 'சங்கத்தமிழன்'?

 

vijay sethupathiசென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வரும் விஜய் சேதுபதி (முருகன்), ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரை பெரும் பணக்காரரின் மகளான ராஷி கண்ணா காதல் செய்கிறார். இருவரும் ஒன்றாய் நேரம் கழிப்பதை அறியும் ராஷி கண்ணாவின் தந்தை இடைவேளைக்கு சற்று முன் விஜய் சேதுபதியை பார்க்க வருகிறார். விஜய் சேதுபதியை பார்த்து அதிர்ச்சியடையும் அவர், "இவன் முருகன் இல்லடா... சங்கத்தமிழன்டா..." என்கிறார். பிறகு என்ன? என்னவெல்லாம் வருமென்று நம் மனது சொல்கிறதோ அதெல்லாவற்றையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.


முதல் காட்சியில் ஒரு வில்லன் கும்பலால் பெண் ஒருவர் பலவந்தப்படுத்தப்படும்போது என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி, பெண்ணை காப்பாற்றி, "கீழ அத்தனை பேர் இருக்கும்போது எப்படிடா மேல வந்த?" என்று கேட்டவருக்கு, "அதை கீழ இருக்கவன்கிட்ட கேளுடா, நான்தான் மேல வந்துட்டேன்ல" என்று பன்ச் சொல்கிறார். திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்கச் செல்லும் பெண்ணுக்கு அறிவுரை சொல்கிறார், அவரது தந்தைக்கு அறிவுரை சொல்கிறார், சினிமா முயற்சி செய்வோருக்கு அறிவுரை சொல்கிறார், கிராம மக்களுக்கு அறிவுரை,  விவசாய அறிவுரை என பாசிட்டிவ் விஷயங்களை பாதையெங்கும் தூவிச் செல்கிறார் விஜய் சேதுபதி. வழியில் ஆங்காங்கே அரசியல் டச், காதல், சண்டை என ஒரு முழு மாஸ் நாயகனாக உருமாறி முழு மாஸ் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் போல... தவறான ஆசையில்லை. இத்தனையும் வெற்றி பெற அடித்தளமான நல்ல கதை, திரைக்கதை இருக்கிறதா என்பதை உறுதி செய்திருக்கலாம்.

 

 

vijay sethupathi sooriவிஜய் சேதுபதி, தனது ஸ்டைல் வசனம், மேனரிசம்களால் நாம் பார்த்துப் பழகிய நாயகன் பாத்திரத்தை வித்தியாசப்படுத்தி கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். அவருடன் வரும் சூரி, சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். நாயகிகளில் ராஷி கண்ணா, ஹீரோவை லவ் பண்ணும் பணக்காரத் தந்தையின் மகளாக எந்த சிறப்புமில்லாத பாத்திரத்தில் உலா வருகிறார். இன்னொரு நாயகி நிவேதா பெத்துராஜ், தைரியமான கிராமத்துப் பெண்ணாக துடிப்பான பேச்சுடன் கவனம் ஈர்க்கிறார். நாசர், மைம் கோபி, ஸ்ரீமன், கல்லூரி வினோத், இன்னும் பலரென எக்கச்சக்க நடிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், எந்த நடிகருக்கும் புதிதாக, பெரிதாக மனதில் நிற்கும் பாத்திரம் இல்லாதது குறை. மிரட்டலான வில்லன்களாக வரும் இருவரையும் பார்த்து பயத்திற்கு பதில் பாவ உணர்வே வருகிறது.


அறிமுகக் காட்சியில் பெண்ணை காப்பாற்றும் ஹீரோ, திருவிழாவில் தீவைக்கும் வில்லன், ஹீரோவை பழிவாங்க ஊர் மக்களை தாக்கும் டெக்னிக், அடிக்கடி ஸ்லோ மோஷனில் நடை, அடிக்கு அடி ஸ்லோ மோஷன் என படத்தில் எங்கெங்கு காணினும் பார்த்துப்பழகிய விஷயங்களை நச்சு ஆலைக்கு எதிராகப் போராட நாயகன் தலைமையில் இணையும் கிராமம் என்ற சமீபத்திய ட்ரெண்டில் கலந்து கொடுத்திருக்கிறார் விஜய் சந்தர். ஆனால் அது சரியாகப் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.மக்கள் போராட்டங்களை 'ட்ரெண்ட்' என்று சொல்வது தவறுதான். ஆனால், அந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன தொடர்ந்து அத்தகைய காட்சிகளை, கதையை கொண்டு வரும் படங்கள். குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் நாயகன் மட்டுமே போதும், அவரை 'மாஸ்'ஸாகக் காட்டினால் போதுமென்று அவர் திருப்தியடைந்துவிட்டார் போல... படம் பார்த்தவர்கள் திருப்தியடையவில்லை. இந்தப் படத்தின் நோக்கத்திற்குத் தங்களால் இயன்ற அளவு உதவியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும், இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இரட்டையர்களும். 'கமலா கலாசா' பாடல் கலகலப்பாகக் கடக்கிறது.

 

 

rashi kanna2000ஆம் ஆண்டு தொடங்கி பல வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் வணிக ரீதியான பொழுதுபோக்குப் படங்களுக்கென ஒரு டெம்ப்லேட் உருவானது. தில், தூள், கில்லி, திருப்பாச்சி, ஏய், சாமி... இப்படி பல படங்களில் சில சில மாற்றங்கள் இருந்தாலும் நாயகனுக்கான தன்மை, பன்ச் வசனங்கள், சண்டை காட்சிகள், வில்லனின் தன்மைகள், பாடல்கள் உள்ளிட்ட பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமையை உணரலாம். அந்த ஒற்றுமையை தாண்டி அந்தந்தப் படங்களின் சுவாரஸ்யங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவை, பாடல்கள் என பலவும் சேர்ந்து அந்தப் படங்களை வெற்றிப்படங்களாக்கின. பின்னர் இந்த டெம்ப்லேட் படங்கள் குறைந்துவிட்டன. அந்த டெம்ப்லேட்டை மட்டும் கொண்டு வந்திருக்கிறது 'சங்கத்தமிழன்'. விஜய் சேதுபதி மீதான ரசிகர்களின் அன்பும் அபிமானமும் எப்படிப்பட்ட படங்களால், பாத்திரங்களால் உருவானது என்பதையும் அவர் திரும்பிப்பார்க்கவேண்டும்.                     
        

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகார்த்திகேயன் - சூரியின் ‘கொட்டுக்காளி’ ; ரிலீஸ் அப்டேட்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
soori kottukkaali release update

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, விடுதலை படத்திற்கு பிறகு நாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹீரோவாக அவர் நடித்த கருடன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். மலையாள நடிகையான அன்னாபென் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து தி லிட்டில் வேவ் புரொடெக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகியும் விருதுகளையும் குவித்து வருகிறது. பி.எஸ் வினோத்ராஜ் இப்படத்துக்கு முன்பாக இயக்கிய கூழாங்கல் படமும் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு விருது வாங்கியது. அதோடு 94வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 23ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.   

Next Story

ஆக்ரோஷமும்... அன்பும்... - வெளியான விடுதலை 2 அப்டேட்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vetrimaaran soori vijay sethupathi viduthalai 2 first look released

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.   


இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒன்றில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி மட்டும் இடம் பெறுகிறார். கதை நாயகனான சூரி இரண்டு போஸ்டரிலும் இடம் பெறவில்லை. முன்னதாக சூரியை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம் பெறும் என வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.