Skip to main content

தரமான சம்பவம்...? - ‘விடுதலை பாகம்-1’ விமர்சனம்!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

viduthalai part 1 movie review

 

தமிழ் சினிமாவில் தன் படங்கள் மூலம் சம்பவங்கள் செய்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று அதேசமயம் விருதுகளையும் குவிக்கும் வண்ணம் படங்களை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தி வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை படம் மூலம் அடுத்த சம்பவத்திற்கு ரெடியாகி இருக்கிறார். இது  அவரின் முந்தைய படங்களைப் போல் பேசப்படுகிறதா? இல்லையா?

 

1950களில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சுரங்கம் அமைத்து பாதை உருவாக்க அரசாங்கம் முடிவு எடுக்கிறது. இந்த சுரங்கத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விஜய்சேதுபதி மற்றும் போராளிகள் இணைந்து மக்கள் படை என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் அரசாங்கத்தை சுரங்கம் அமைக்க விடாமல் தடுக்கின்றனர். இவர்களை ஒழித்துக் கட்ட நினைக்கும் அரசாங்கம் சிறப்பு காவல் படை ஒன்றை உருவாக்கி அந்த கிராமத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே இந்த சிறப்பு காவல் படையில் டிரைவராக வந்து வேலைக்குச் சேருகிறார் போலீஸ் கான்ஸ்டபிள் சூரி. வந்த இடத்தில் இவருக்கும் மலைவாழ் பெண்மணியான பவானி ஸ்ரீ க்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் மக்கள் படையை சேர்ந்தவர்களும் விஜய் சேதுபதியும் எங்கே தங்கி இருக்கின்றனர் என்ற ரகசியம் இவருக்கு தெரிய வருகிறது. அந்த நேரம் சிறப்பு காவல் படையினர் விஜய் சேதுபதியை பிடிக்கும் முயற்சியில் அந்த மொத்த கிராமத்தில் இருக்கும் மக்களைப் பிடித்து வைத்துக்கொண்டு அவர்களைத் தங்கள் கஸ்டடியில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். அதில் சூரியின் காதலியும் மாட்டிக் கொள்கிறார். தன் காதலி மற்றும் ஊர்ப் பெண்களைக் காப்பாற்ற நினைக்கும் சூரி, விஜய் சேதுபதியை காட்டிக் கொடுக்க முடிவெடுக்கிறார். இதையடுத்து சூரி தன் காதலியை காப்பாற்றினாரா? இல்லையா? விஜய் சேதுபதி இவர்களிடம் பிடிபட்டாரா? இல்லையா? என்பதே விடுதலை பட முதல் பாகத்தின் கதை.

 

வழக்கம்போல் தன்னுடைய டிரேட் மார்க் காட்சி அமைப்புகள் கூஸ்பம்ப் மொமென்ட்ஸ்கள் மற்றும் ராவான அழுத்தம் நிறைந்த காட்சிகள் என தனக்கே உரித்தான விஷயங்களை இந்தப் படத்திலும் கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தின் முதல் பாகத்தைப் பொறுத்தவரை ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக எதையும் காட்டாமல் அந்த மலைவாழ் மக்களின் அன்றாட நிகழ்வுகள், மக்கள் படையின் புரட்சி நோக்கங்கள், சிறப்புப்படை போலீசாரின் இன்ப துன்பங்கள், அவர்கள் படும் சிரமங்கள் என அறிமுகப்படுத்தும் விஷயங்களை படம் முழுவதும் காட்டி ரசிகர்களை அடுத்த பாகத்திற்கான சம்பவத்திற்கு தயார்படுத்துவதன் நோக்கத்தில் இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். பெரிதாக எந்த ஒரு இடத்திலும் திருப்புமுனைகள் இல்லாமல் எதார்த்தமான காட்சி அமைப்புகள் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை பெரிய அளவில் எகிறச் செய்துள்ளார்.

 

v

 

முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் வெற்றிமாறனின் சம்பவங்கள் கொஞ்சம் குறைவுதான். இருந்தும் அடுத்த பாகத்திற்கான லீடுகள் அதைச் சரி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதைப் போல் காண்பித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்று படத்தைக் கரை சேர்த்திருக்கிறார்.

 

போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வரும் சூரி தனது இரண்டாவது இன்னிங்ஸை இப்படத்தின் மூலம் ஸ்டார்ட் செய்துள்ளார். பல இடங்களில் இவரின் அனுதாபமான நடிப்பும், ஐயோ பாவம் போன்ற முக பாவனைகளும், போலீசாரிடம் எந்த சூழ்நிலையிலும் நியாயத்திற்காகவே போராடும் அழுத்தமான குணத்தையும் காட்டி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். தன் கரியரிலேயே சிறப்பான படமாக சூரிக்கு இப்படம் அமைந்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நாயகி பவானி ஸ்ரீ. இவரின் சின்னச் சின்ன முக பாவனைகளும், எதார்த்தமான நடிப்பும் கவர்ந்துள்ளது. போலீஸ் குரூப்பில் போலீசாக இருந்து கொண்டு வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார் நடிகர் சேத்தன். எரிச்சலூட்டும் படியான இவரது நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது.

 

சூரி உடன் நடித்திருக்கும் போலீசார் அனைவருமே தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளனர். மக்கள் படை இயக்கத்தின் தலைவனாக வரும் வாத்தியார் விஜய் சேதுபதி சில காட்சிகளே வந்தாலும் தியேட்டரில் விசில்களைப் பறக்கச் செய்கிறார். இவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இப்படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது. டிஎஸ்பியாக நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் வழக்கம் போல் தனது ட்ரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவருடன் மேல் அதிகாரியாக நடித்திருக்கும் அதுவும் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் நிறைவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு தூணாக அமைந்துள்ளனர்.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறப்பான பாடல்களையும் தரமான பின்னணி இசையும் கொடுத்து மீண்டும் ஒருமுறை தான் ஒரு இசை அரசர் என்பதை நிரூபித்துள்ளார் இசைஞானி இளையராஜா. இவருடைய மெலடி பாடல்கள் நம் காதுகளை வருடுகிறது. அதேபோல் சிறப்பான பின்னணி இசை மூலம் படத்திற்கு ஜீவன் கொடுத்துள்ளார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 

 

எளிய மக்கள் மீது அரசாங்கம் செய்யும் அட்டூழியங்கள், சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் செய்யும் கொடுமைகள் என அரசாங்கம் மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எதார்த்த உலகை மீண்டும் ஒருமுறை சிறப்பாக காட்டி தனது அக்மார்க் வசனங்கள், திரைக்கதை மூலம் ஆங்காங்கே சில இடங்களில் அயற்சி கொடுத்தாலும் தியேட்டரில் கைத் தட்டல்கள், விசில்கள் பறக்கும் அளவிற்கு வசனங்களை கொடுத்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இது விடுதலை முதல் பாகம் என்பதால் இந்தக் கதையின் கருவிற்கான அறிமுகமாய் இப்படத்தை கொடுத்து ரசிகர்களை அடுத்த பாகத்திற்குத் தயார் செய்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்து படத்தை முடித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

 

விடுதலை - வெற்றிமாறன் அடுத்த சம்பவம் Loading ...


 

சார்ந்த செய்திகள்