Skip to main content

அமைதி போலீசா? அதிரடி போலீசா? - 'திட்டம் இரண்டு' விமர்சனம்

 

bhdsgbds

 

ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்; ‘கனா’ படத்துக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம்; வித்தியாசமான டைட்டில் கொண்ட படம்; வழக்கமான திரில்லர் பட வரிசையில் வெளிவந்துள்ள படம்; ஓடிடி ரிலீஸ். இப்படி இந்தப் படத்தைக் காண பல காரணங்கள் இருந்தாலும், காரணங்களைத் தாண்டி கதைக் கரு கவர்ந்ததா என்றால்..?

 

திருச்சியில் இருந்து மாற்றலாகி சென்னைக்கு வரும் போலீஸ் ஆபீசர் ஐஸ்வர்யா ராஜேஷ், பஸ்சில் நாயகன் சுபாஷ் செல்வத்தை சந்திக்கிறார். இருவருக்குள்ளும் நட்பாகி, பின்னர் காதலாக மாறுகிறது. இதற்கிடையே, ஐஸ்வர்யா ராஜேஷின் தோழி அனன்யா ராம்பிரசாத் மர்மமான முறையில் காணாமல் போகிறார். அந்தக் கேஸைக் கையிலெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது தோழியை வலைவீசி தேடுகிறார். அப்போது ஒரு காட்டுப் பகுதியில் அனன்யா ராம்பிரசாத்தின் எலும்புக்கூடு, காருடன் எறிந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. இது விபத்து அல்ல கொலை என ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தேகப்படுகிறார். இதையடுத்து தீவிரமாக துப்பு துலக்க ஆரம்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இது கொலையா அல்லது விபத்தா என்பதைக் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே 'திட்டம் இரண்டு' படத்தின் மீதி கதை.

 

fvdgsdd

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டீசண்டான திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது இந்த 'திட்டம் இரண்டு'. அதுவும் படத்தின் கடைசியில் வரும் எதிர்பாராத, உணர்ச்சிப்பூர்வமான ட்விஸ்ட் படத்தின் வெற்றியை உறுதிசெய்துள்ளது. ஆரம்பத்தில் க்ளிஷேவான காட்சிகள் மூலம் நகரும் படம், போகப் போக வேகமெடுத்து நிறைவான கிளைமாக்ஸோடு முடிந்துள்ளது. அங்கங்கே சரியான நேரத்தில் ரசிக்கும்படி அமைந்த சின்னச் சின்ன ட்விஸ்டுகளோடு படம் முழுவதும் பயணிக்கவைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். லாஜிக் மீறல்கள் சில இடங்களில் தென்பட்டாலும், அவற்றை மறக்கடிக்கும்படி அமைந்துள்ள ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் படத்தைப் பாரபட்சம் பார்க்காமல் ரசிக்கவைத்துள்ளது.

 

மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், உடல் மொழியைக் காட்டிலும் முகபாவனை மூலம் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் போலீசுக்கே உரித்தான அந்தக் கம்பீரம் மிஸ்ஸிங்! மற்றபடி துப்பு துலக்கும் காட்சிகளில் தன் தோழி மீதான ஏக்கத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், காதல் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார்.

 

bhdfbd

 

அறிமுக நாயகன் சுபாஷ் செல்வம், ஏற்கனவே பார்த்துப் பழகிய முகமாக தெரிகிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் தன் எதார்த்தமான நடிப்பால் அனுபவ நடிகர் என்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார். குறைந்த காட்சிகளில் வந்தாலும் இவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகி இருக்கிறது.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் தோழியாக வரும் அனன்யா ராம் பிரசாத்துக்கு சிக்கலான வேடம். அதை அவர் சிறப்பாக செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. சீரியல் கில்லராக வரும் நடிகர் பாவல் நவகீதன், சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்னன், ஜீவா ரவி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். 

 

gfsbdfsbsd

 

இரவு காட்சிகளில் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு திகில் கூட்டியுள்ளது. சில முக்கியக் காட்சிகளில் இவர் வைத்த ஃபிரேம்கள் அழகாக பளிச்சிடுகிறது. சதிஷ் ரகுநந்தனின் பின்னணி இசை படத்துக்கு வேகத்தைக் கூட்டியுள்ளது. காதல் காட்சிகளில் மனதை வருடும் இசையையும், திரில்லர் காட்சிகளில் திகிலான இசையையும் கொடுத்து ரசிக்கவைத்துள்ளார்.

 

வழக்கமான க்ரைம் திரில்லர் படமோ என்று ஆரம்பத்தில் தோன்றவைத்தாலும், படம் முடியும் தருவாயில் அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்தெரியும்படியான கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ஒரு நல்ல காதல் க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக யாரும் யூகிக்க முடியாத கதைக் கருவைத் தேர்ந்தெடுத்ததற்கே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

 

'திட்டம் இரண்டு' - குறி தப்பவில்லை!