Skip to main content

விஜய் மட்டும் போதுமா? பிகில் - விமர்சனம்

Published on 26/10/2019 | Edited on 27/10/2019

சென்ற தீபாவளி 'சர்கார்', அதற்கு முன்பு 'மெர்சல்' என தொடர்ந்து தமிழ் சினிமா தீபாவளியை தன் வசமாக்கும் முயற்சியில் இருக்கும் விஜய்யின் இந்த தீபாவளிப் பரிசு 'பிகில்'. இந்த தீபாவளி 'பிகில்' தீபாவளி என்ற குதூகலத்துடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி, கொண்டாட்டமா ஏமாற்றமா?

 

bigil vijay



வடசென்னை டான் மைக்கேல், ஐந்து நிமிடத்தில் அமைச்சரை புது அரசு ஆணை வெளியிட வைக்கும் அளவு கெத்து... எந்த நேரமும் அவரை சுற்றி இருக்கும் பாசக்கார 'புள்ளிங்கோ'தான் அவரது சொத்து. இதை அவருக்கு விட்டுச் சென்றவர் அவரது தந்தை 'ராயப்பன்'. ராயப்பனின் கனவு, தனது மகனின் ஃபுட்பால் திறமை அவனது வாழ்வை மட்டுமல்லாமல் அந்தப் பகுதி மக்களின் வாழ்வையும் அடையாளத்தையும் மாற்ற வேண்டும் என்பது. ஆனால், வில்லன்கள் சும்மா இருப்பார்களா? ராயப்பனை கொன்று மைக்கேலின் வாழ்க்கையில் 'டேக் டைவர்ஷன்' போடுகிறார்கள். தந்தையின் கனவு என்ன ஆனது? கண்டிப்பாக ஒரு மாஸ் ஹீரோவின் படத்தில் அந்தக் கனவு நனவாகிவிடும். எப்படி ஆகிறது என்பதுதான், ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் மசாலா 'பிகில்'.

 

kaithi ad



ஒரு டான் ஆக்ஷன் கதை, ஒரு ஸ்போர்ட்ஸ் கதை... இரண்டும் கலக்கப்பட்டிருக்கும் 'பிகில்'லை ஆக்கிரமித்திருப்பது நாயகன்தான். விஜய் ரசிகர்களுக்கு பல 'கூஸ் பம்ப் மொமெண்ட்'டுகளை பரிசளித்திருக்கிறார் அட்லி. ராயப்பனாகவும் மைக்கேலாகவும் சண்டைக் காட்சிகளில் மெர்சல் செய்கிறார், ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் கில்லி அடிக்கிறார், விஜய். அவற்றுக்கு 'வெறித்தனம், வெறித்தனம்' என இறங்கி அடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் கேமரா கோணங்களும் வலு சேர்க்கின்றன. ஹீரோயிசத்திற்கு அடுத்ததாகப் படத்தில் ஈர்ப்பது பல்வேறு காரணங்களால் முடங்கியிருக்கும் பெண்களை தங்கள் கனவுகளைத் தொடர, வாழ அழைக்கும் காட்சிகளும் 'சிங்கப் பெண்ணே' பாடலும்.

 

rayappan vijay



விஜய், ஒவ்வொரு படத்திலும் கூடிடும் எனர்ஜி, பொலிவுடன் செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார். அதுவும் அட்லி படங்களில் இன்னும் கொஞ்சம் பளிச்சென இருக்கிறார். கர கர குரல், ஃபிட்டான உடல் என வயதான ராயப்பன் பாத்திரத்திலும், கல கல பேச்சு, விறு விறு ஆக்ஷன் என மைக்கேல் பாத்திரத்திலும் தன்னால் முடிந்த வேரியேஷன் காட்டியிருக்கிறார். படத்தில், விஜய்யை தவிர்த்து நம் மனதில் இடம் பிடிப்பது வெகு சிலர்தான். ஒன்லைன் காமெடிகளால் யோகிபாபுவும் உருக்கமான ஃபிளாஷ்பேக்கால் கால்பந்து வீராங்கனையாக வரும் ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் கவனமீர்க்கிறார்கள். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சமீபத்திய பாத்திரங்களில் மிக சுமார் 'பிகில்'தான். எந்த சிறப்பும் இல்லாத பாத்திரம் என்றாலும் நயன் வரும் காட்சிகளில் அழகு சேர்க்கிறார். கதிர், இந்துஜா இருவரும் நன்றாக நடிக்கக் கூடியவர்கள். கதிர், குறைவாகப் பயன்பட்டிருக்கிறார், இந்துஜா சற்று அதிகமாக நடித்திருக்கிறார். வில்லன் ஜாக்கி ஷ்ராஃப், ஆழமில்லாத பாத்திரமென்றாலும் தனது அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி உள்ளிட்ட இன்னும் பலர் படத்தில் இருக்கின்றனர். விவேக், ஆங்காங்கே பழைய 90ஸ் மேஜிக்கை முயன்றிருக்கிறார், ஓரிரு இடங்களில் வொர்க்-அவுட் ஆகிறது.

இரண்டு விதமான கதைகளை மிக்ஸ் செய்த அட்லி, இரண்டிலுமே ஆழமும் அழுத்தமும் இல்லாமல் போனதை கவனித்திருக்க வேண்டும். நாயகன் விஜய் தவிர்த்த மற்ற எந்த பாத்திரங்களுக்கும் முழுமையான தன்மை என்பதே இல்லாமல் இருப்பது குறை. ஜாக்கி ஷ்ராஃப் என்ற பெரிய நடிகரை வில்லனாக நடிக்க அழைத்துவிட்டு அவரது பாத்திரத்தையும் இத்தனை பலவீனமாக எழுதியிருக்க வேண்டாம். இன்னொரு வில்லனான டேனியல் பாலாஜியும் எந்தப் புதுமையும் செய்யவில்லை.  விஜய்யின் பாத்திரங்களிலேயே கூட ராயப்பன் பாத்திரத்துக்கு பின்னணி, தன்மை என எல்லாம் மேலோட்டமாகவே இருக்கிறது. தொடக்கத்தில் சென்னை மொழி பேசும் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் போகப்போக அதை மறக்கின்றனர். நாயகன் வாழும் பகுதியில் மக்கள் கூட்டம், ஃபுட் பால் ஆட்டக் காட்சிகளில் மைதானம், அரங்கம் என அனைத்திலும் அதீதம் என பிரம்மாண்டம் காட்சி அளவில் மட்டுமே இருக்கிறது. கதைக்குள் அது இல்லாததால், இவை அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு செயற்கையாகத் தெரிகிறது. சென்னை முதல் டெல்லி வரை காவல்துறை கடமைக்கு வருகிறது. குறிப்பாக டெல்லி காவல் நிலையத்தில் மைக்கேல் செய்யும் அலப்பறைகளை காணும் போது இவ்வளவு பலம் பொருந்தியவரா மைக்கேல் என இயற்கையாய் கேள்வி எழுகிறது.
 

 

jackie



வழக்கமாக நம் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுத்துக்கொள்ளும் அத்தனை சுதந்திரங்களையும் அதிகமாகவே எடுத்துக்கொள்கிறார் அட்லி. ஃபுட்பாலுக்கே உண்டான நுணுக்கங்களோ, வார்த்தைகளோ கூட படத்தில் எங்கும் இல்லாதது குறை. வீரர்கள் தேர்வு, அணியின் அமைப்பு என அனைத்து முடிவுகளையும் நாயகனே எடுத்துவிடுகிறார். படம் நெடுக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சற்று தொய்வான இந்தத் திரைக்கதைக்கு மூன்று மணிநேரம் என்பது சற்று அதிகம்தான். நீளத்தை குறைத்திருந்தால் அது படத்துக்கோ பார்பவர்களுக்கோ  உதவியிருக்கக்கூடும்.


விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தும் பல வசனங்களை எழுதியுள்ள அட்லி - ரமணகிரிவாசன் கூட்டணி, திரைக்கதையில் கோல் அடிக்க மிஸ் பண்ணிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் 'வெறித்தனம்' பின்னணி இசையும் 'நெஞ்சுக்குள்ள' மற்றும் 'சிங்கப்பெண்ணே' பாடலும் படத்திற்கு பெரும் பலம். ஆனால், மற்ற இடங்களில் அவருமே சற்று அடக்கி வாசித்திருக்கிறார். 'சிங்கப்பெண்ணே' பாடலை மிக சிறப்பாகப் படமாக்கியிருப்பதில் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் பங்கு பெரியது. படம் முழுவதையும் வண்ணமயமாக ரிச்சாகக் காட்டியிருக்கிறார் விஷ்ணு. அதுவே சற்று அந்நியத்தன்மையையும் உண்டாக்கியிருக்கிறது.

அட்லி, விஜய்யை இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. ஒரு வெற்றிப் படத்திற்கு விஜய் மட்டுமே போதும் என்று முடிவு செய்தால் அது விஜய் ரசிகர்களுக்கே கூட சில நேரங்களில் ஏமாற்றத்தை தரும். அதை உணர்ந்து வடசென்னை பின்னணி, ஸ்போர்ட்ஸ், பெண் விடுதலை என பல வெடிகளை வைத்திருக்கிறார்.  தீபாவளி வெளியீடு என்பதால் சுமாராக வெடித்தும் இருக்கிறது பிகில்! 
                                       

 

 

சார்ந்த செய்திகள்