/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Suragan.jpg)
கவனம் ஈர்க்கும் முயற்சியில் வாரம் குறைந்தபட்சம் இரண்டு மூன்று சிறு முதலீட்டு படங்கள் திரையுலகில் வெளியாகி அதில் சில படங்கள் வரவேற்பையும் பெறுகின்றன. அந்த வரிசையில் இணைய முயற்சி செய்து வெளியாகி இருக்கும் சூரகன் திரைப்படம் பார்ப்பவர்களை கவர்ந்ததா?
சில காரணங்களால் பணி நீக்கத்தில் இருக்கும் போலீஸ் நாயகன் கார்த்திகேயன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்பொழுது ரோட்டில் ஒரு பெண் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு கிடக்கிறார். அவரை நாயகன் கார்த்திகேயன் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார். போன இடத்தில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண்மணி இறந்துவிடுகிறார். அவர் எப்படி இறந்தார்? அந்தப் பெண்மணி இறப்பிற்கு யார் காரணம்? அது கொலையா? அல்லது விபத்தா? என்று துப்பறிய களம் இறங்குகிறார் சஸ்பென்ஷனில் இருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி கார்த்திகேயன். இறுதியில் அந்தப் பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பதை நாயகன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதிக் கதை.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய மர்டர் மிஸ்டரி கதையாக இது இருந்தாலும் அதை சற்றே விறுவிறுப்புடன் கூறி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கீதா குமார். ஒரு சிறிய பட்ஜெட்டில் எந்த அளவு விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு விறுவிறுப்பாக கொடுத்து முடிந்தவரை அயர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். படத்தில் நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து யூகிக்கும்படி இருப்பதை மட்டும் சற்றே தவிர்த்திருக்கலாம்.
புதுமுக நாயகன் கார்த்திகேயன் மிடுக்கான தோற்றத்துடன் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ்க்கு உண்டான ஆக்ரோஷமும் அதற்கான உடல் மொழியும் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்லும் நடிகை சுபிக்ஷா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை தனக்கு கிடைத்த ஸ்பேசில் சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லன் வின்சென்ட் அசோகன் எப்பொழுதும் போல் இந்த படத்திலும் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் பயமுறுத்தும்படி அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் சில பல காட்சிகளேவந்தாலும் இறுதிக்கட்ட காட்சிகளில் அதிரடியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், வினோதினி ஆகியோர் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அச்சு ராஜாமணி இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை ஓகே. கிரைம் திரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் சதீஷ் கீதா குமார் அதை சற்றே யூகிக்கும்படி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
சூரகன் - நேர்மையானவன்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)