Skip to main content

மசாலா படங்களுக்கு மத்தியில் ஒரு பான் இந்தியா காதல் காவியம் - சீதா ராமம் விமர்சனம் 

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

sita ramam movie review

 

மீண்டும் தெலுங்கிலிருந்து தமிழில் வெளியாகியிருக்கும் ஒரு பிரமாண்டமான பான் இந்தியா படம் சீதா ராமம். இந்த தடவை ஃபேண்டசி அல்லது ஆக்ஷன் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு காதல் காவியமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெளியான பிரம்மாண்ட படங்கள் கொடுத்த சிலிர்ப்பை இப்படமும் கொடுத்ததா?

 

1960களில் பாகிஸ்தானின் தலைமை இராணுவ அதிகாரியாக இருக்கும் சச்சின் கடேகர் 20 வருடங்களுக்குப் பிறகு தான் சாகும் தருவாயில் இருக்கும் போது ஒரு பழைய கடிதத்தை தன் பேத்தி ராஷ்மிகாவிடம் கொடுத்து அதை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் சென்று சேர்க்கும்படி கூறிவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதா மகாலட்சுமியை தேடி இந்தியாவில் சுற்றித் திரிகிறார் ராஷ்மிகா. முகவரியே இல்லாத சீதா மகாலட்சுமியை தேடி இந்தியா முழுவதும் அலைந்து திரியும் பயணத்தில் சீதா மகாலட்சுமிக்கும் இந்திய ராணுவ லெப்டினன்ட் (துல்கர் சல்மான்) ராமுக்கும் இடையேயான காதலைப் பற்றி ராஷ்மிகா தெரிந்து கொள்கிறார். இதையடுத்து முகவரியே இல்லாத சீதா லட்சுமியை ராஷ்மிகா கண்டுபிடித்து கடிதத்தை தாத்தாவின் ஆசைப்படி ஒப்படைத்தாரா, இல்லையா? லெப்டினன்ட் ராம் என்னவானார்? என்பதே இக்காதல் காவியத்தின் மீதி கதை. 

 

sita ramam movie review

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகச்சிறந்த ரொமான்டிக் லவ் ஸ்டோரியை கொடுத்துள்ளார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. ஆல் டைம் ஃபேவரிட் காதல் படங்கள் என ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டால் அதில் இடம் பிடிக்கும் திரைப்படங்களுக்குள் ஒரு படமாக இப்படம் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவு மனதை உருக வைக்கும் ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியை சிறப்பான முறையில் அழகான கவிதை போல் கொடுத்து பார்ப்பவர்கள் மனதை வருடி இருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. குறிப்பாக இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வை கொடுக்காமல் நேரடி தமிழ்ப்படம் போன்ற உணர்வை கொடுக்க வசனம், உதட்டசைவு என பலவற்றில் மெனகெட்டுள்ளது படக்குழு. ஒரு சிறந்த காதல் படத்திற்கு என்னென்ன தேவையோ அதை சரியான கலவையில் சிறப்பாக கொடுத்து, வசனமும் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் ரசிக்கத்தக்க வகையில் கச்சிதமாக அமைந்துள்ளன. மேலும், இப்படத்தின் கதாபாத்திர தேர்வும், கதை நடக்கும் காலத்திற்கு ஏற்ப அக்கதாபாத்திரங்களின் நடை உடை பாவனைகளை அமைத்த விதமும் பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது படத்தின் மேக்கிங். இதற்காக ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கலை இயக்குநரும் ஒருசேர போட்டிருக்கும் உழைப்பு படத்தை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதேபோல் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதை, வசனத்தையும் அழகாக அமைத்து கதைக்குள் இருக்கும் பிரம்மாண்டத்தையும் அழகாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். 

 

ராணுவ லெப்டினன்ட் ராமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக நடித்ததை காட்டிலும் லவ்வர் பாயாக நடித்திருக்கும் நடிப்பில் செஞ்சுரி அடித்துள்ளார். காதல் வந்த இளைஞரின் உணர்ச்சிகளை தன் முகபாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி ராம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிக்க வைத்துள்ளார். மிகவும் கடினமான காட்சிகளில் கூட இவரின் அசால்ட்டான நடிப்பு யதார்த்தமாக அமைந்து நடிப்பதே தெரியாத அளவிற்கு அழகாக அமைந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய பலமே நாயகி மிருணால் தாக்கூர் தான். இவர் எந்த காட்சியில், எந்த பிரேமில், எந்த உடையில் பார்த்தாலும் அழகாக தெரிகிறார், அம்சமாக நடித்திருக்கிறார். குறிப்பாக விண்டேஜ் காட்சிகளாக நகரும் இப்படத்தில், அந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களின் நடை உடை பாவனைகளை மிக அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறியிருக்கிறார். இவருக்கு விருதுகள் நிச்சயம்.

 

sita ramam movie review

 

பாகிஸ்தான் பெண்ணாக வரும் ராஷ்மிகா மந்தானா துடுக்கான பெண்ணாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் கோபப்படும் இடங்களில் சரியான அளவில் கோபப்பட்டும், இறக்கப்படும் இடங்களில் சரியான அளவில் இறக்கப்பட்டும், நெகிழ்ச்சி அடையும் இடங்களில் சரியான அளவில் நெகிழ்ச்சியாக நடித்தும் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். கூடவே இவரது நண்பராக நடித்திருக்கும் நடிகர் தருண் பாஸ்கர் ஆங்காங்கே சில கலகலப்பான பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். துல்கர் சல்மானின் நண்பராக வரும் வெண்ணிலா கிஷோர் தனக்கு கிடைத்த ஸ்பேசில் சரியாக விளையாடி நல்ல  நகைச்சுவை செய்து சிரிக்க வைத்துள்ளார். துல்கர் உடன் இன்னொரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் எர்லகட்டா சுமந்த் குமார் நடிப்பால் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பூமிகா, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர்.

 

விஷால் சந்திரசேகர் இசையில் சில பாடல்கள் மட்டும் தரம். பின்னணி இசை உலகத்தரம். பிஎஸ் வினோத் & ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்து பிரமிப்பை கூட்டியுள்ளது. குறிப்பாக ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மிருணாள் தாகூர் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகளும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும், அதேசமயம் மிக அழகாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இப்படm ஏற்படுத்தும் பிரமிப்புக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது இப்படத்தின் கலை இயக்கம். 1960-களில் ஆரம்பித்து 1980 களில் நடக்கும் கதையாக இருப்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் பிரதிபலிக்க சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார் கலை இயக்குநர். அதேபோல, அக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல் அழகான உடைகளை சரியான கலவையில் கொடுத்து படத்தை இன்னமும் மெருகேற்றி உள்ளார் காஸ்ட்யூம் டிசைனர்.

 

ஆக்ஷன் படங்கள், வரலாற்று படங்கள், கேங்ஸ்டர் படங்கள் என பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் பான் இந்தியா படங்களின் வரிசையில் பிரம்மாண்ட காதல் காவியமாக வெளியாகியிருக்கும் சீதாராமம் திரைப்படம் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது. படத்தின் பாடல்களும், படத்தின் நீளமும் படத்திற்கு சற்று மைனசாக பார்க்கப்பட்டாலும் காட்சிகளுக்குள்ளும், கதைக்குள்ளும், காதலுக்குள்ளும் இருந்த பிரம்மாண்டத்தை அழகாக வெளிப்படுத்தி மைனஸ் விஷயங்களை மறக்கடிக்கச் செய்துள்ளது இந்த சீதாராமம் திரைப்படம்.

 

சீதா ராமம் - காதல் காவியம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!