Skip to main content

மலையாளத்தில் 'ஜோசப்' செய்த மேஜிக்கை தமிழில் செய்ததா 'விசித்திரன்' - விமர்சனம்

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

rk suresh visithiran movie review

 

2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தமிழில் வெளியாகியுள்ளது விசித்திரன். ஆர்.கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த விசித்திரன் மலையாளத்தில் ஜோசப் நிகழ்த்திய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளதா..? 

 

பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே ஒரு சம்பவத்தால் போலீஸில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு எந்நேரமும் குடியும் பீடியுமாக இருக்கிறார் நாயகன் ஆர்.கே சுரேஷ். எப்படிப்பட்ட வழக்கையும் சிபிஐ போலீஸாரை விட வேகமாகவும், விவேகமாகவும், மிக புத்திசாலித்தனமாகவும் கண்டுபிடிக்கும் திறமை கொண்ட ஆர்.கே சுரேஷ், தன் மனைவி பூர்ணா விபத்தில் இறந்ததை கொலை என கண்டுபிடிக்கிறார். இதையடுத்து அந்த கொலையை துப்பறியும் அவர், இந்தக் கொலைக்குப் பின் ஒரு மிகப்பெரிய மெடிக்கல் மாஃபியா இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அவர் எப்படி வெளி உலகுக்கு கொண்டு வருகிறார் என்பதே  படத்தின் மீதிக்கதை.

 

மலையாளத்தில் ஜோசப் படத்தை இயக்கிய அதே இயக்குநரான பத்மகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ளது விசித்திரன் படம். இப்படத்தை அதை இயக்குநர் இயக்கியதுதானோ என்னவோ மலையாள படம் மாதிரியே தமிழ் படமும் மிகவும் மெதுவாக நகர்ந்துள்ளது. எந்த ஒரு இடத்திலும் திரைக்கதை வேகம் எடுக்காமல் போனாலும், மாறாக எங்கேயேயும் தடம் மாறாமல் ஒரே நேர்கோட்டில் சிறப்பாக பயணித்து உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சியோடு படம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இருந்தும் தமிழ் ரசிகர்களை கொஞ்சம் மனதில் வைத்து ஆங்காங்கே சில எலமெண்ட்களை சேர்த்து இன்னும் கூட திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். இருந்தும் கதையில் இருக்கும் அழுத்தமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்த்துள்ளது. ஒரு திரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அவை எல்லாவற்றையும் சிறப்பாக கையாண்டு, எதிர்பாராத முடிவோடு நிறைவான படமாக விசித்திரனை கொடுத்துள்ளார் இயக்குநர். 

 

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு நியாயம் செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் ஆர்.கே சுரேஷ். ஆர்ப்பாட்டமில்லாத இவரது வசன உச்சரிப்பும், அமைதியான நேர்த்தியான நடிப்பும் படத்துக்கு வலு சேர்த்துள்ளது.  படத்தின் நாயகிகளாக நடித்திருக்கும் பூர்ணாவும், மதுஷாலினியும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். குறிப்பாக வயதான கதாபாத்திரத்தில் பூர்ணா அழகாக தெரிகிறார். அளவாக நடித்து சிறப்பு செய்துள்ளார். மது ஷாலினியின் சிறிது நேரமே வந்தாலும் கவனம் ஈர்த்துள்ளார். 

 

ஆர்.கே. சுரேஷின் போலீஸ் நண்பர்களாக வரும் இளவரசு, மாரிமுத்து ஆகியோர் நல்ல நண்பர்களாக நடித்து படத்திற்கு தூணாக அமைந்துள்ளனர். அதேபோல் படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்து காட்சிகளை சுவாரசியமாக நகர்த்த உதவி புரிந்துள்ளனர்.

 

படத்தின் இன்னொரு நாயகனாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்துள்ளது. பாடல்களைக் காட்டிலும் இவரது பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. செண்டிமெண்ட் காட்சிகளிலும் சரி, துப்பறியும் காட்சிகளிலும் சரி இவரது பின்னணி இசை சரியான கலவையில் அமைந்து ரசிக்க வைத்துள்ளன. ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரனின் ஒளிப்பதிவில் மலையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இண்டோர் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

 

படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்து பின் வேகமெடுத்து இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸோடு முடிந்து ஒரு நிறைவான திரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை தந்துள்ளது.

 

விசித்திரன் - விவரமானவன்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காடுவெட்டி படத்தின் ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh kaduvetti release update

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு படத்தின் முதல் பாடலாக ‘வீர பரம்பரடா...’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் கலந்து கொண்டார். ட்ரைலரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. சுரேஷ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
rk suresh then mavattam movie music director issue

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே. சுரேஷ் தற்போது காடுவெட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கத்தில் மஞ்சள் ஸ்கீரீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்த ஆர்.கே. சுரேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் நடந்த காடுவெட்டி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து பேசினார். 

இப்படத்தை அடுத்து தென் மாவட்டம் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது எக்ஸ் தள பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை எழுதி இயக்குவதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் யுவன் ஷங்கர் ராஜா தென் மாவட்டம் பட போஸ்டர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தென் மாவட்டம் படத்தில் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. யாரும் இது தொடர்பாக பேசவும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்து பதிவிட்ட ஆர்.கே சுரேஷ், “யுவன் சார் நீங்கள் எங்களுடன் ஒரு திரைப்படத்திற்கும் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் இசை அமைப்பாளர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தென் மாவட்டம் படத்தின் புதிய இசை அமைப்பாளர் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.